Language Selection

புதிய ஜனநாயகம் 2005

09_2005.jpg"நக்சல்பாரி'' என்ற வார்த்தையைக் கூட தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குள் உச்சரிக்கக் கூடாது என்று உத்தரவு போட்டு வரும் போலீசுத்துறைக்குப் பெரும் சவாலாக அமைந்தது, புரட்சிகர அமைப்புகளின் சுவரெழுத்துக்கள். ""தண்ணீரைத் தனியார்மயமாக்காதே! தண்ணீரை வியாபாரமாக்காதே! தாமிரவருணியை உறிஞ்சவரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்! நக்சல்பாரி பாதையில் அணிதிரள்வோம்!'' என்று

 தருமபுரி மாவட்ட நெடுஞ்சாலைகளில் கொட்டை எழுத்துக்களைக் கொண்ட சுவரெழுத்துக்களைக் கண்டு போலீசுத்துறை ஆத்திரமடைந்தது. கடந்த 24.6.05 அன்று அதியமான் கோட்டை போலீசார், வி.வி.மு.; பு.மா.இ.மு. அமைப்புகளைச் சேர்ந்த 4 முன்னணித் தோழர்களை "தீவிரவாதிகள் பயங்கரவாதிகள்' என்று குற்றம் சாட்டி பொய் வழக்கு சோடித்து கைது செய்தது.

 

தர்மபுரி குற்றவியல் நீதிமன்றமும், மாவட்ட அமர்வு நீதிமன்றமும் இத்தோழர்களுக்குப் பிணை வழங்க மறுத்ததால், அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை உயர்நீதி மன்றமும் பிணை வழங்க மறுத்து, பின்னர் இருமாத காலமாக நீண்ட போராட்டத்திற்குப் பிறகே பிணை வழங்கி தோழர்களை விடுதலை செய்தது.

 

முன்னணியாளர்களைக் கைது செய்து அடக்குமுறையை ஏவுவதன் மூலம் பிரச்சார இயக்கத்தை முடக்கிவிடலாம் என்று இறுமாந்திருந்த போலீசுக்கு, தமது சோர்வில்லாப் பிரச்சாரத்தின் மூலம் அமைப்பின் இதர தோழர்கள் பதிலடி கொடுத்தனர். துண்டறிக்கைகள் மூலம் வீடுவீடாகப் பிரச்சாரம் செய்த தோழர்கள் 17.8.05 அன்று தருமபுரி நகரின் மையப் பகுதியில் நெல்லையில் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தை அறிவிக்கும் மிகப் பெரிய விளம்பரத் தட்டியைக் கட்டினர். அதிலும் கொட்டை எழுத்தில் ""நக்சல்பாரி'' என்ற வார்த்தை இருக்கவும், பீதியடைந்த உள்ளூர் போலீசு ஆய்வாளர், அதிரடிப் படை போலீசாருக்குத் தகவல் கொடுத்து, ""உடனடியாக இத்தீவிரவாதிகளைக் கைது செய்யுங்கள்'' என்று கோரினர்.

 

அதன்படி, சிறிது நேரத்தில் வாகனங்களில் சீறிக் கொண்டு வந்த அதிரடிப் படையினர் 22 பேர், தோழர்களையும் விளம்பரத் தட்டிகளையும் பார்த்து, ""இந்த விளம்பரம் தமிழகமெங்கும் இருக்கிறதே! இதுல எங்கே தீவிரவாதம் இருக்கு?'' என்று உள்ளூர் போலீசிடம் கேட்டனர். அதிரடிப்படை ஆய்வாளரோ ""இது தீவிரவாதமல்ல் இவர்கள் தீவிரவாதிகளுமல்ல் இவர்களை தீவிரவாத சட்டப்பிரிவின் கீழ் நான் கைது செய்யவும் மாட்டேன். இந்த மாதிரியான சாதாரண விவகாரங்களுக்கெல்லாம் எங்களைக் கூப்பிடக் கூடாது'' என்று உள்ளூர் போலீசிடம் கூறிவிட்டு, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தட்டியைக் கட்டுங்கள் என்று தோழர்களுக்கு ஆலோசனை கூறிவிட்டுச் சென்றார். சூரத்தனம் காட்டிய உள்ளூர் போலீசோ, மேலிடத்துக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விக்கித்து நிற்கிறது.


மு