Language Selection

09_2005.jpg"தாமிரவருணியை உறிஞ்சவரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்!'' என்ற முழக்கத்துடன் தண்ணீரைத் தனியார்மயமாக்கும் மறுகாலனியாதிக்கக் கொள்கையை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள் நடத்திவரும் பிரச்சார இயக்கத்தைத் தடுக்க, நெல்லை மாவட்ட போலீசுத்துறை கீழ்த்தரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுக் கூட்டங்களுக்கு மட்டுமின்றி, தெருமுனைக் கூட்டங்கள், தட்டுவண்டிப் பிரச்சாரம் முதலானவற்றும் அனுமதி மறுத்து அடாவடித்தனம் செய்து வருகிறது, நெல்லை போலீசு.

 

இந்த இடர்ப்பாடுகள் இருந்த போதிலும், நெல்லை மாவட்டத்தின் கிராமங்கள் தோறும், ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து தோழர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நெல்லை நகரின் இரண்டு பேருந்து நிலையங்களிலும் தினமும் காலை முதல் மாலை வரை துண்டறிக்கைகளை விநியோகித்தும் அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், கடைவீதிகள் என மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் இவ்வியக்கத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள கருத்துப்படங்கள் கேலிச் சித்திரங்களைக் காட்சிக்கு வைத்தும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மறியல் போராட்டத்தை விளக்கி 50,000க்கும் மேற்பட்ட துண்டறிக்கைகள் நெல்லை மாவட்ட மக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளன. ""தண்ணீர்: தாகத்திற்கா, இலாபத்திற்கா?'' என்ற சிறு வெளியீடு ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நெல்லை பாளையங்கோட்டை வட்டாரத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான சுவரெழுத்துப் பிரச்சாரத்தை இவ்வமைப்புகள் செய்துள்ளன.

 

இவற்றைக் கண்டு பீதியடைந்த போலீசு, இப்பிரச்சார இயக்கத்தை முடக்கும் வகையில் அரசு சுவர்களில் செய்யப்பட்டிருந்த சில சுவரெழுத்து விளம்பரங்களை தானே நேரில் சென்று அழித்துள்ளது. சுவரெழுத்துக்களைப் புகைப்படமெடுத்து, "குடியரசு'த் தலைவரையும் நீதிபதிகளையும் அரசியல் கட்சித் தலைவர்களையும் பிரதமரையும் மாநில முதல்வரையும் இச்சுவரெழுத்துக்கள் இழிவுபடுத்துவதாகவும், தீவிரவாதத்தைத் தூண்டுவதாகவும், எனவே தேசத்துரோக குற்ற பிரிவுகளின்கீழ் இவ்வமைப்பினரைக் கைது செய்ய வேண்டும் என்று நெல்லை குற்றவியல் நடுவர் மன்றத்தில் மாவட்டப் போலீசுத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

மேலும், நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தின் காவல் உதவி மையத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலம், ""கோக் ஆலைக்கு எதிராக நக்சல்பாரிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்களைப் பொதுமக்கள் பார்த்தால், காவல்துறையிடம் பிடித்துக் கொடுங்கள்!'' என்று போலீசார் கோக்கிற்கு ஆதரவாக வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்துள்ளனர். போலீசு கொடுத்த அறிக்கையை அப்படியே வாந்தியெடுத்து பீதியூட்டி செய்தி வெளியிட்டுள்ளது தினகரன் நாளேடு.

 

சட்டப்படி இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை ஜனநாயக உரிமைகளை நசுக்கும் போலீசின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், அமெரிக்க "கோக்'கிற்கு நெல்லை போலீசு அடியாளாகச் செயல்படுவதை அம்பலப்படுத்தியும் இப்புரட்சிகர அமைப்புகள் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. போலீசின் அச்சுறுத்தல் அடாவடித்தனங்களைக் கண்டு அசராமல் இவ்வமைப்புகளின் தோழர்கள் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.