09_2005.jpgநெல்லை கங்கை கொண்டானில் கொக்கோ கோலா ஆலை நிறுவப்படவுள்ளதை எதிர்த்து மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து செப்.12ஆம் தேதியன்று மறியல் போராட்டத்தை நடத்தவுள்ளன. இப்போராட்டத்தை விளக்கி தமிழகமெங்கும் இவ்வமைப்புகள் கடந்த இரு மாதங்களாக வீச்சாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

 நாடு மீண்டும் காலனியாக்கப்பட்டு வருகிறது என்பதை இந்த அமைப்புகள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தமிழக மக்களிடம் எச்சரிக்கை செய்து வருவதோடு, மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களையும் நடத்தி மக்களை அணிதிரட்டி வந்துள்ளன. இறால் பண்ணை அழிப்புப் போராட்டம், தேக்குப் பண்ணை அழிப்புப் போராட்டம், அமெரிக்க மான்சாண்டோ விதைக் கம்பெனிக்கு எதிரான போராட்டம், நெய்வேலி மின்நிலையத்தை அமெரிக்கக் கம்பெனிக்கு விற்க முயற்சிப்பதை எதிர்த்த போராட்டம் ஆகியன இவ்வமைப்புகள் நடத்திய குறிப்பிடத்தக்க போராட்டங்களாகும்.

 

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கையின் பெயரால், நம் நாட்டின் தொழிலும் விவசாயமும் நாசமாக்கப்பட்டு வருவதோடு, அனைத்து இயற்கை மூல வளங்களும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டு வருகிறது. இப்போது, ஆறு, குளம், ஏரி முதலான நீராதாரங்களும் குடிநீர் விநியோகமும் பன்னாட்டுக் கம்பெனிகளிடமும் தரகுப் பெருமுதலாளிகளிடமும் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே அமெரிக்க கோக் நிறுவனத்துக்கு தாமிரவருணி நீரை வரைமுறையின்றி உறிஞ்சிக் கொள்ள தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் விளைவாக தாமிரவருணி ஆறு கட்டாந்தரையாகிப் போகும்; நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் நீரின்றிப் பாலைவனமாகிப் போகும். இப்பேரழிவைத் தடுக்கவே இம்மறியல் போராட்டம்.

 

இது வெறுமனே அமெரிக்க கோக் நிறுவனத்துக்கு எதிரான போராட்டமல்ல. தண்ணீரைத் தனியார்மயமாக்கி, வியாபாரச் சரக்காக்கும் மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிரான போராட்டம். நமது நாட்டின் நீராதாரங்களைக் கைப்பற்றி நாட்டையே முழுமையாக அடிமையாக்க வரும் ஏகாதிபத்தியவா திகளுக்கு எதிரான போராட்டம். கோக் நிறுவனம், வியாபார நிறுவனம் மட்டுமல்ல் இது அமெரிக்க ஆக்கிரமிப்பின் அடையாளம். இதனை தமிழக மக்கள் அனைவரும் உணரும் வகையில் கடந்த இரு மாதங்களாக பல்வேறு வடிவங்களில் இவ்வமைப்புகள் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

 

தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், வட்ட நகரங்கள், சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் என மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் இவ்வமைப்புகள் எடுப்பாக சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்துள்ளன. முழக்கங்களும் கருத்துப் படங்களும் கொண்ட இச்சுவரெழுத்துக்கள் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் மலையாள மொழியிலும், கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் கன்னட மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சென்னை, மாமல்லபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் ஆங்கிலத்திலும் இச்சுவரெழுத்துக்கள் அமைந்துள்ளன.

 

சுவரெழுத்து விளம்பரங்கள் சிலவற்றை ஒருசில ஓட்டுக்கட்சிகளும் ரசிகர் மன்றத்தினரும் அழித்துள்ளனர். அவை இப்புரட்சிகர அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு, அழித்தவர்களே தவறுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் எழுதிக் கொடுத்துள்ளனர். விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு கிராமத்தில் எழுதப்பட்ட சுவரெழுத்தை தி.மு.க.வினர் அழித்துவிட்டதும், சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு அவர்கள் வருத்தம் தெரிவித்த பின், மீண்டும் தோழர்கள் எழுத முற்பட்டபோது, புதுவை எம்.எல்.ஏ. சிவாவின் மைத்துனரான மகேஷ், தனது அடியாள்படையுடன் வந்து மிரட்டிப் பார்த்தும் தோழர்கள் உறுதியாக நிற்கவே, ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசாரை அழைத்துக் கொண்டு வந்து பூச்சாண்டி காட்டிப் பார்த்தார். ஆனால், உண்மை அம்பலமானதும் பொதுமக்கள் முன்னிலையிலேயே தவறுக்கு வருத்தம் தெரிவித்து, தி.மு.க. மாநாடு முடிந்தவுடன் மீண்டும் எழுதித் தர ஒப்புக் கொண்டார். எங்களை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று திமிராக வலம் வந்து சுவரெழுத்துக்களை அழித்தவர்கள், புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரத்துக்கு மக்களிடம் பேராதரவு இருப்பதையும், தோழர்களின் உறுதியையும் கண்டு பின்வாங்கிக் கொண்டுள்ளனர்.

 

அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், பேருந்து நிலையம், அரசு அலுவலகம், மக்கள் கூடும் சந்தை என அனைத்து இடங்களிலும், வண்ண ஓவியங்களுடன் பிரச்சாரத் தட்டிகளை இவ்வமைப்பினர் வைத்துள்ளனர். நவீன டிஜிட்டல் தட்டிகள் பல இடங்களில் உள்ளன. தண்ணீருக்கு மக்கள் படும் துயரம், அதேநேரத்தில் தண்ணீரை தானமாக வெளிநாட்டு கம்பெனிக்கு தாரைவார்க்கும் பிரதமரை அம்பலப்படுத்தும் கேலிச் சித்திரங்களைக் கொண்ட ஓவியக் காட்சிகளாக, மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் நடத்துகின்றனர்.

 

நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட துண்டறிக்கைகள், ரூ. 5 விலையில், சிறு வெளியீடு 55,000 பிரதிகள் என மக்கள் மத்தியில் விநியோகித்துள்ளனர். சிறு வெளியீட்டை நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், நடுவர்மன்ற நடுவர்கள், அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் என பல இடங்களிலும் விற்பனை செய்துள்ளனர்.

 

ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் முதல் 10 நாட்களில், தமிழகத்தின் எல்லாப் பேருந்து நிலையத்திலும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். மக்கள் தங்களால் இயன்ற நிதியை இவர்களுக்கு வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தினசரி மாலை நேரங்களில், மக்களை வீடு வீடாக சென்று சந்திப்பது, தெருமுனைச் சந்திப்புகளில் நின்று பிரச்சாரம் செய்வது போன்ற வடிவங்களில், லட்சக்கணக்கான மக்களிடம், தங்களின் கருத்தைக் கொண்டு சென்றுள்ளனர். மேலும், தட்டு வண்டி, ஆட்டோ போன்ற வாகனங்களில், ஓவியங்களைக் காட்சிக்கு வைத்து, மக்கள் கூடும் இடங்களில் நிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

 

உளுந்தூர்பேட்டை, ஆம்பூர், போன்ற இடங்களில், தேசிய நெடுஞ்சாலையில் இருப்புப் பாதை சந்திப்புகளில் நின்று போகும் வாகனங்களை நிறுத்தி துண்டறிக்கைகள் வெளியீடுகள் விநியோகித்துள்ளனர். வாகனங்களில் வந்தவர்கள் கருத்துக்களை ஆதரித்து நன்கொடையும் வழங்கியுள்ளனர்.

 

கடலூர், விழுப்புரம், ஓசூர், சேலம், பாளையங்கோட்டை, விளாத்திகுளம், கரூர், காங்கேயம், அதிராம்பட்டினம், சிவகங்கை, சென்னை, திருச்சி, அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் கலைநிகழ்ச்சி நாடகங்களுடன் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளனர். ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


போராட்டக் களமான நெல்லை மாவட்டத்தில், மேற்கண்ட வடிவங்கள் அனைத்திலும், வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.


இப்பிரச்சாரங்களை கண்டு பீதியடைந்த தமிழக போலீசுத்துறை, இந்த அமைப்புகள் மீது "தீவிரவாதிகள்' என்ற முத்திரையைக் குத்தி மக்களைப் பீதியூட்டும் வகையில் தினசரி பத்திரிக்கைகள் வாயிலாக எதிர்ப்பிரச்சாரத்தை நெல்லை மாவட்டத்தில் செய்து வருகிறது. பொதுக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், வாகனப் பிரச்சாரங்கள் ஆகியவற்றுக்குத் தடைவிதித்து பிரச்சாரத்தின் வேகத்தை முடக்க முயற்சித்து வருகிறது.

 

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி, வீர மரணம் தழுவிய வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி. போன்றவர்கள் தோன்றிய மண் தாமிரவருணி மண். அதன் பாரம்பரியத்தைக் காக்கும் போராட்டம், செப்.12 நடக்கும் மறியல் போராட்டம்.

 

இப்போராட்டத்தை காக்கிச் சட்டைகளின் அச்சுறுத்தல், பீதியூட்டல், மற்றும் கைது போன்ற அடக்குமுறைகளால் ஒடுக்கி விடமுடியாது என சூளுரைக்கின்றனர் இவ்வமைப்பைச் சார்ந்த தோழர்கள்.

 

இப்புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் புரட்சிப் புயலாக தமிழகமெங்கும் சுழன்றடிக்கிறது. மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள இப்போராட்டம், அமெரிக்க "கோக்'கை அடித்துவிரட்டாமல் ஒருபோதும் ஓய்ந்துவிடாது.


- பு.ஜ .செய்தியாளர்கள்