Language Selection

09_2005.jpg "மக்கள் கண்காணிப்பகம்' என்ற ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனத்தை அம்பலப்படுத்தி பு.ஜ. இதழில் ஆதாரத்தை வெளியிடும் போதே, ""இதற்கும் சேர்த்து அப்பாவி ஊழியர்களைச் சித்திரவதை செய்யும் முன், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா என்பது பற்றி சிந்தியுங்கள், ஹென்றி டிபேன்'' என்று முடித்திருந்தோம். நாம் சொன்னது போலவே, ஊழியர்களிடம் விசாரணைகளும் பழிவாங்கல்களும் தொடங்கி விட்டன. பு.ஜ. எழுதியவை பொய் என்றால், ஒரு ஆதாரத்தை வெளியிட்டதுமே அரண்டு போயிருப்பது எதற்காக?

 

மோகன் குமார் என்பவர் 15.9.04 முதல் ஹென்றி டிபேனிடம் ஓட்டுனராகப் பணி புரிந்து வந்தார். வேலையில் சேரும் போதே ஓட்டுநர் உரிமத்தை வாங்கி வைத்துக் கொண்டார் ஹென்றி டிபேன். மக்கள் கண்காணிப்பகம் நடத்திய கலை இரவு நிகழ்ச்சியின்போது, மோகன் குமார் ம.க.இ.க. தோழர்களிடம் பேசியதைப் பார்த்து விட்டு, அவரிடம் விசாரணை செய்துள்ளார், திருவாளர் ஹென்றி டிபேன்.

 

தான் பேசும் போது யாரும் எதிர்த்துப் பேசக் கூடாது என பண்ணையார்த்தனமாக நடந்து கொள்ளும் ஹென்றி டிபேனுக்கு, விசாரணையின் போது சுயமரியாதைமிக்க மோகன் குமார் அளித்த பதில்கள் ஆத்திரமூட்டியுள்ளன. இதன்பின் மோகன் குமாரைத் தொடர்ந்து இழிவுபடுத்தத் தொடங்கினார், ஹென்றி டிபேன்.

 

13.7.05 முதல் தொடர்ந்து வீட்டிற்குக் கூடப் போகாமல் புதுக்கோட்டை நாகமலையில் இரவு பகலாக வேலை செய்தார் மோகன் குமார். 15ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் வேலை செய்தவர், 9 மணிக்கு காலை உணவைச் சாப்பிடத் தொடங்கினார். அவரை அழைத்த ஹென்றி டிபேன், வேலை நேரத்தில் எப்படி சாப்பிடலாம் என இழிவுபடுத்தியதைச் சகித்துக் கொள்ள முடியாமல் மோகன் குமார் பதில் கூறவே, அவரைக் கேவலமாகத் திட்டி, ஓடு என விரட்டிவிட்டார்.

 

சுயமரியாதை இழந்து வேலை செய்ய தயாரில்லாத மோகன் குமார், வேலையை விட்டு விலகி விட்டு, ஓட்டுநர் உரிமத்தையும், சம்பளத்தையும் கேட்க, இன்று வரை தர மறுக்கிறார் "மனித உரிமை'க் காவலர் ஹென்றி டிபேன். ஓட்டுனர் உரிமம் இன்றி வேறு வேலைக்குப் போவதோ, குடும்பத்தைப் பராமரிப்பதோ சிரமம் எனத் தெரிந்தே இப்படி அடாவடி செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறல் அல்லவா? இடையில் திராவிடர் கழக வழக்கறிஞர் திரு.மகேந்திரன் மூலம் பேசியும் தராததால், தற்போது மதுரை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார், மோகன் குமார்.ù

 

இதேபோல, அமுதா என்ற பெண் ஊழியரை ""பு.ஜ.விற்கு புகைப்படம் கொடுத்தவர் இவர்தான்'' என சக ஊழியர்கள் மத்தியில் வைத்து இழிவுபடுத்தியுள்ளார். இதை மறுத்த அமுதா, அழுது கொண்டே அலுவலகத்தை விட்டு வெளியேறியவர், இன்று வரை வேலைக்குத் திரும்பவில்லை. ஒரு அப்பாவிப் பெண்ணை இப்படி நான்கு பேர் மத்தியில் கேவலப்படுத்துவது சித்திரவதையல்லவா?

 

சராசரி மனிதாபிமான அடிப்படையில், அப்பெண்ணுக்கு என்ன ஆனதோ என பார்க்கச் சென்ற ராபர்ட் (வழக்கறிஞர்), வின்சென்ட் (உயர்நீதி மன்ற வழக்கறிஞர்), முருகப்பன் என்ற மூவரையும் இடை நீக்கம் செய்துள்ளார் ஹென்றி டிபேன். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல ஹென்றி டிபேன் கண்களுக்கு எல்லோருமே ம.க.இ.க.காரர்களைப் போல் தெரிகிறது. பின்னர், ராபர்ட்டை வேலையை விட்டே நீக்கிவிட்டார். தற்போது மக்கள் கண்காணிப்பகத்தில் யாரும் யாரோடும் பேசக் கூடாது, பழகக் கூடாது, ""சீட்''டைவிட்டு நகரக் கூடாது எனப் பல கட்டுப்பாடுகள் போட்டுள்ளார்.

 

பு.ஜ. அவதூறு செய்கிறதென்றால் அதை மக்கள் முன் மறுத்து உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டியதுதானே! அதைவிடுத்து யாரிடமிருந்து செய்தி கசிந்தது என்று ஊழியர்களிடம் விசாரணைகள் எதற்கு? சதிகாரர்களும் கைக்கூலிகளும் தனது நிழலைக் கூட கண்டு அஞ்சுவார்கள் என்பதையே திருவாளர் ஹென்றி டிபேனின் நடவடிக்கைகள் நிரூபித்துக் காட்டுகின்றன. சக ஊழியர்களிடமே மனித உரிமையையும் ஜனநாயகத்தையும் மதித்து நடக்காத இந்தக் கும்பல், மனித உரிமை பற்றி சவடால் அடிக்க கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?


- பு.ஜ. செய்தியாளர்கள், மதுரை.