நாட்டிலுள்ள கல்வித்துறைப் பெருமுதலாளிகளுக்கு இந்த ஆண்டு "சுதந்திர தின'ப் பரிசொன்றை உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கிறது. அவர்கள் தமது பகற்கொள்ளையை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதற்கு கட்டற்ற சட்டபூர்வ உரிமம் வழங்கும் தீர்ப்பு மூலம் அவ்வாறு செய்துள்ளது. சிறுபான்மைப் பிரிவு மற்றும் சிறுபான்மைப் பிரிவுக்கானவை அல்லாத, அரசு உதவி பெறாத எந்தவொரு தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனமானாலும் அரசுக்கான இடஒதுக்கீடு மற்றும் சமூக ரீதியிலான (தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள், பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய சாதிகளுக்கான) இட ஒதுக்கீடுகளை இரத்து செய்து விட்டது. அரசின் கொள்கைப்படியான இடஒதுக்கீடு முறையைத் "திணிப்பது' அவற்றின் உரிமையிலும் தன்னாட்சியிலும் கடுமையான ஆக்கிரமிப்புச் செய்வதாகும் என்று பாய்ந்திருக்கிறது, உச்சநீதிமன்றம்.
""தொழிற்கல்வி தருவதற்கான அரசு நிதி ஆதாரங்கள் வரம்புக்குட்பட்டுள்ளது என்பதற்காகவே, அதைவிடச் சிறந்த தொழிற்கல்வி வழங்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மீது குறைவான தகுதியுடைய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்து தரும் கொள்கையை அரசு திணிக்க முடியாது'' என்று கல்வித்துறைப் பகற்கொள்ளையர்களுக்காகவும், மேல்சாதிக் கும்பலுக்காகவும் உச்சநீதி மன்றத்தின் ஏழு நீதிபதிகள், பச்சையாக வக்காலத்து வாங்கி ஏகமனதாக வாதாடியிருக்கிறார்கள். மேலும், ""இந்தத் தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் அரசிடமிருந்து எவ்வித நிதியுதவியும் பெறாததால் நியாயமாகவும், வெளிப்படையாகவும், சுரண்டலற்ற முறையிலும் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளவும், அதற்கான தேர்வு முறையைத் தெரிவு செய்து கொள்ளவும் தளையற்ற அடிப்படை உரிமை உண்டு. சிறுபான்மைப் பிரிவுக்கான கல்வி நிறுவனங்கள், தங்கள் சிறுபான்மைத் தன்மை பாதிக்காதவாறு சிறுபான்மை பிரிவு அல்லாத யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளவும் உரிமை உண்டு. தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிக்கக் கூடாது; அதேசமயம் கல்விக் கட்டணங்களைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையும் உண்டு'' என்று தாராள தயாள அனுமதியும் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது. அரசு மற்றும் சமூக ரீதியிலான இடஒதுக்கீடுகளை இரத்து செய்த உச்சநீதி மன்றம், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு நியாயவாதம் புரிந்து அனுமதித்துள்ளது; இதன் மூலம் வரைமுறையில்லாத வசூல் கொள்ளைக்கு வசதி செய்து கொடுத்துள்ளது. மொத்தத்தில், உச்சநீதி மன்றத்தின் இத்தீர்ப்பு ""வழங்கப்பட்ட தீர்ப்பு'' அல்ல் ""வாங்கப்பட்ட தீர்ப்பு'' என்பதில் சந்தேகமில்லை.
நீதிமன்றச் செயற்பாடுகளை உன்னிப்பாகவும் தொடர்ந்தும் கவனித்து வரும் யாருக்கும் இத்தீர்ப்பு ஒன்றும் அதிர்ச்சிகரமானதோ, வியப்புக்குரியதோ கிடையாது. இதுபோன்ற முன்கூட்டித் தீர்மானிக்கப்பட்ட நோக்கிலேயே, வழமையான தீர்ப்புகளையே அது வழங்கி வருகின்றது. நீதிமன்றம் நேர்மையான ""நடுநிலை''யான நியாயாதிபதிகளைக் கொண்டிருக்கவில்லை. போலீசுத்துறையைப் போன்றே அரசு எந்திரத்தின் இன்னொரு கொடூர அங்கமாகவே உள்ளது. இவை பாசிச பயங்கரவாதப் பாம்புகளும் கோட்டான்களும் பதுங்கியுள்ள இருட்குகைகள் என்பதை மீண்டும் நிரூபிக்கும் எடுத்துக்காட்டுதான் இத்தீர்ப்பு. இந்துத்துவத்திற்கு மதச் சார்பு மதவெறி விளக்கமளித்தது; பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்பதை நியாயப்படுத்தியது; ஆலைகளை மூடவும் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யவும் முதலாளிகளுக்கு உரிமை அதிகாரம் வழங்குவது; அதேசமயம், தொழிலாளிகள் அரசு அலுவலர்களின் வேலைநிறுத்த அடிப்படை உரிமையை மறுப்பது, பொதுமக்கள் இயக்கங்களின் போராட்ட உரிமைக்குத் தடைவிதிப்பது; "கோக்' போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பளிப்பது; கிரிமினல் அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்பளிப்பது; அரசு பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவது என்று பல வகையிலும் பிற்போக்கு பாசிசத் தீர்ப்பு வழங்கி வந்திருக்கின்றது உச்சநீதி மன்றம். இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், சாதிமத ஆதிக்கத்துக்கு ஆதரவாகவுமே எப்போதும் செயல்பட்டு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வந்திருப்பதுதான் சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு குறித்த இந்தத் தீர்ப்பும் ஆகும்.
உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் புறம்பான பல மோசடியும் பித்தலாட்டமும் நிறைந்த வாதங்களை முன்வைத்து, நீதிபதிகள் இத்தீர்ப்புக்கு முட்டுக் கொடுத்துள்ளார்கள். முதலாவதாக, சுயநிதிக் கல்லூரிகள் முற்றும் முழுதாக அந்தரத்தில்தொடங்கி நடத்தப்படுவதில்லை. இந்திய சமூக அமைப்பில்தான் இயங்கி வருகின்றன. இங்கே சமூக ரீதியாகவும், சாதிமத ரீதியாகவும் அனைத்து உரிமைகளும் மறுத்து ஒடுக்கப்பட்ட மக்களே பெரும்பான்மையாக வாழுகின்றனர். "ஜனநாயக நாடு' என்று சொல்லிக் கொண்டு பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை தர மறுப்பது எந்தவகையில் நீதியானது? இரண்டாவதாக, சுயநிதிக் கல்லூரிகளுக்கு அரசு நிதியுதவி செய்யாததால், அது தனது இட ஒதுக்கீட்டுக் கொள்கையை இவற்றின் மீது திணிக்கக் கூடாது என்று உச்சநீதி மன்றம் வாதாடியிருக்கிறது. சுயநிதிக் கல்லூரிகளுக்கு அரசு நேரடி நிதி உதவி செய்வதில்லை என்றாலும், அவை கட்டப்பட்டிருக்கும் இடங்கள் பெரும்பாலும் அரசு புறம்போக்குகள் என்பதிலிருந்து, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய சலுகைகளை ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் பெறுகின்றன.
இந்தத் தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் தரம் வாய்ந்த சிறந்த கல்வி வழங்குவதாக உச்சநீதி மன்றம் நற்சான்று வேறு வழங்கியிருக்கிறது. தகுதியான வகுப்பறைகள் கூட இல்லாமல் சிமெண்டு அட்டை மற்றும் கீற்றுக் கொட்டகைகளை வைத்தும், கழிப்பறை, விளையாட்டு மைதானம் முதல் நூலகம், அறிவியல் ஆய்வுக் கூடங்கள் வரை எதுவும் இல்லாமலும் இக்கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுவதாக தொழில் கல்விக் கழகங்கள் சாடி, தகுதிச் சான்றிதழ்கள் பறிக்கப்படுகின்றன அல்லது பலமுறை எச்சரிக்கப்படுகின்றன. அற்ப ஊதியம் கொடுத்து கொத்தடிமைகளை, துறைக்குப் பொருத்தமில்லாத தகுதியற்ற ஆசிரியர்களை வைத்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தேர்வுகளிலும் பல்வேறு மோசடிகள் தில்லுமுல்லுகள் செய்கிறார்கள். இதனாலும், அதீத கட்டணம் நன்கொடை காரணமாகவும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உட்பட சுயநி திக் கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தும் மாணவர்கள் சேர மறுத்து விடுகிறார்கள்; ஆயிரக்கணக்கான "சீட்டுகள்' காலியாகக் கிடக்கின்றன.
நடப்பு நிலைமைகள் குறித்து அறிவே இல்லாத கருத்துக் குருடர்களாக உள்ளவர்கள் அல்லது கல்வித்துறை பெருமுதலாளிகளின் கூட்டுக் கொள்ளையர்கள் மட்டுமே சிந்திக்கக் கூடிய வகையில் அவர்களுக்கு சில பரிந்துரைகளை உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கிறது. மாணவர் சேர்க்கையில் நியாயமான, வெளிப்படையான, சுரண்டலற்ற வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்கிறது. சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் என்றாலே அநியாய வழிமுறைகள், இரகசிய நிழல் நடவடிக்கைகள், வரைமுறையற்ற சுரண்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவை என்பது நாடறிந்த உண்மை. தகுந்த உரிமம் இல்லாமலேயே, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படுவதும், தேர்வு எழுத முடியாமல் அவர்கள் தெருவில் அலைவதும் திரும்பத் திரும்ப நடக்கின்றன. மேல்நிலைப் பள்ளித் தேர்வு முடிந்த மறுநாளே, தேர்வு முடிவும் மதிப்பெண் பட்டியலும் வழங்கப்படுவதற்கு முன்பேயும், மேல்நிலைப்பள்ளி தேர்வில் தோல்வியடைந்த, தகுதி மதிப்பெண் பெறாத மாணவர்களையும் கூட இரகசியமாகவும் போலி சான்றிதழ்களை வைத்தும் சேர்த்துக் கொள்கிறார்கள்.
சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் சுரண்டுவதாகக் கூறுவதே பொருத்தமற்றதாகும்; அவை வழிப்பறி செய்யும். பகற்கொள்ளையடிக்கும் முகமூடித் திருடர்களால் நடத்தப்படுகின்றன. சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் விற்பதில் தொடங்கி படிப்பு முடிந்து சான்றிதழ் பெறுவது வரை எத்தனையோ வகையில் பணம் பிடுங்குகிறார்கள். இவற்றில் நன்கொடையும் கல்விக் கட்டணமும் தெட்டத்தெளிவானது. கொள்ளை இல்லையென்றால், கீற்றுக் கொட்டகையில் தொடங்கப்பட்ட ஒரு சுயநிதிக் கல்வி நிறுவனத்தை வைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வரை பல பத்து கல்லூரிகளாக விரிவுபடுத்தி கொள்ளும் அளவு கள்ளச் சாராய வியாபாரிகள் கூட ""கல்வித் தந்தைகளாக'' வளர்ந்தது எப்படி?
சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் வைத்து நடத்துவது சமூக சேவைக்கான தன்னார்வச் செயல் அல்ல. ஓட்டுக் கட்சி அரசியலைப் போலவே கோடி கோடியாகப் பணம் கொழிக்கும் தொழில்தான்; வேண்டுமானால் ""சேவைத் தொழில்'' என்று கூறிக் கொள்ளலாம்! எனவேதான், அரசியல் கிரிமினல்கள், கள்ளப் பணம், கள்ளச் சந்தை, கருப்புப் பண முதலைகள் அதிகரித்த அளவில் இத்தொழிலில் குதிக்கின்றனர். சுயநிதிக் கல்லூரிகள் வைத்து நடத்தும் முன்னாள் இன்னாள் ஓட்டுக் கட்சிப் பிரமுகர்கள் முக்கிய ஆளும் கட்சிகள் அனைத்திலும் உள்ளனர். தி.மு.க.வின் மைய அமைச்சர்களான டி.ஆர்.பாலு, ரகுபதி, அ.தி.மு.க.வின் ஜெயலலிதா சசிகலா பினாமிகள், உறவினர்கள், காங்கிரசு எம்.பி.கள் தங்கபாலு, ஜெயமோகன், வி.தண்டாயுதபாணி, எம்.எல்.ஏ.யசோதா, எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளைகளான தம்பித்துரை, ஜேப்பியார், ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம், ஜி.விசுவநாதன் என்று இப்படிப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது. இவர்கள் போதாதென்று ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற நடிகர்கள், சங்கரமடம், மேல்மருவத்தூர் பீடம் ஆகியவையும் சுயநிதிக் கல்வி நிறுவனங்களைத் திறந்துள்ளனர். தம்பித்துரை, நடராஜன் சசிகலா, மாயாவதியின் சீடர் தேவநாதன் போன்றவர்கள் உ.பி., டெல்லி, அரியானாவில் கூட சுயநிதிக் கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர். இந்தப் பட்டியல் விவரங்களே போதும், சமூக சேவைக்காக இவர்கள் கல்வி நிறுவனங்களை நடத்தவில்லை என்பதை நிரூபிக்கின்றன.
இருந்தாலும், ஓட்டுச்சீட்டு அரசியல் நோக்கில் இருந்து பெரும்பாலான கட்சிகளின் தலைமை, உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்க்கின்றன. தேவையான சட்டத்திருத்தம் கொண்டு வந்து உச்சநீதி மன்றத் தீர்ப்பைச் செயலிழக்கச் செய்யும் செல்லுபடியாகாததாக்கும் வகையில் சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பது என்றும் அவை முடிவு செய்துள்ளன. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும், கிறித்தவர்களாக மதம் மாறிய "தலித்'துகளுக்காக இடஒதுக்கீடு கோரும் வழக்கின் விசாரணையில் குறுக்கிட்ட உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ஆத்திரம் கொண்டு வெடித்திருக்கிறார். தமது தீர்ப்பைப் புரிந்து கொள்ளாத அரசியல்வாதிகள் உச்சநீதி மன்றத்தை விமர்சிப்பதை சகிப்புத் தன்மையற்ற செயல் என்றும், வேண்டுமானால் வழக்கு மன்றங்களை மூடிவிடலாம் என்றுகூறி ஆத்திரப்பட்டிருக்கிறார். ஒரு வாதப்படி பார்த்தால் கூட, சம்பளத்துக்கு வேலைசெய்யும் வெறும் அதிகாரியாகிய நீதிபதிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளை விட எந்தவகையிலும் மேலானவர்களாக வைக்க முடியாது; கூடாது. எவ்வாறாயினும் சரி, உச்சநீதி மன்றத்தின் இந்தப் போக்கு, சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு என்பதோடு நிற்காது; தனியார்துறைத் தொழில் நிறுவனங்களில் இடஒதுக்கீடு கோருவதை அடியோடு நிராகரிப்பது என்பதில் இருந்து நாட்டின் தரகு பெரும் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் பாசிச ஏகபோக ஆதிக்கத்தை சட்டப்பூர்வமான அடிப்படை உரிமையாக அளிப்பதாகவும் நீளும்!