Language Selection

11_2005.jpg செப்டம்பர் 12ஆம் நாள்! மறுகாலனியாக்கத்தின் கொடிய வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும், அதன் துலக்கமான சான்றான அமெரிக்க கோக்கிற்கு எதிராகவும் கடந்த மூன்று மாதங்களாக புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் மேற்கொண்ட பிரச்சார இயக்கத்தின் இறுதிக் கட்டமாக நெல்லையில் அமைந்த பேரணியும் மறியல் போராட்டமும், இம்மூன்று மாத இயக்கத்தின் வீச்சிற்கும் வீரியத்திற்கும் மிகப் பொருத்தமாக அமைந்தனவென்றால் மிகையல்ல.

 

ஆயிரக்கணக்கில் செங்கொடிகள் விண்ணில் உயர்ந்திருக்க, போராட அழைக்கும் நெடிய பதாகைகள் காற்றில் அசைய, அமெரிக்க ஏகாதிபத்திய கோக்கின் உருவ பொம்மையை நோக்கி உழைக்கும் வர்க்கத்தின் ஈட்டிமுனை குறிவைத்து காத்திருக்க, பறை ஒலி முழங்க காலை 10 மணிக்கு தொடங்கியது ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளின் பேரணி. பேரணிக்கு தோழர் முகுந்தன் தலைமை தாங்க தோழர் ஜெயகாந்த் சிங் பேரணியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். மக்களை அச்சுறுத்தும் நோக்குடன் அதிரடிப்படை, நவீன ஆயுதம் தாங்கிய அதிரடிப்படை, அதிவேக அதிரடிப்படை, வஜ்ரா வாகனம், ஆண் போலீசு, பெண் போலீசு என எல்லா வகையான போலீசும் உயர் அதிகாரிகளின் தலைமையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த அச்சுறுத்தும் தோற்றத்தை கேலிக்குரியதாக மாற்றியபடி முன்னே சென்று கொண்டிருந்தது பறையொலி எழுப்பிய ம.க.இ.க. கலைக்குழு.

 

பயணம் செய்த களைப்பையும் பொருட்படுத்தாமல் ஒரு கையில் பையும் இன்னொரு கையில் கொடியுமாக, இடுப்பில் குழந்தையும், கையில் முழக்க அட்டையுமாக தளர்வின்றி முழக்கமிட்டு சென்ற பெண்களையும், உற்சாகமாக முன்வரிசையில் நின்ற சிறுவர்களையும் வியப்புடன் பார்த்தது நெல்லை நகரம். நெரிசலான போக்குவரத்துள்ள வீதிகள் வழியே மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் முன்னேறிச் சென்ற 3000 பேரைக் கொண்ட பேரணியைப் பார்த்து பொதுமக்கள் பாராட்டினர். பல இடங்களில் வீட்டு வாசலில் நின்ற பெண்கள், முழக்கமிட்டு நாவறண்ட தோழர்களுக்கு தண்ணீர் கொடுத்தனர். இது "எங்கள் முழக்கம்' என்பதை மக்கள் தம் செயலால் உணர்த்தினர்.

 

அச்சிடப்பட்ட முழக்க அட்டைகள், துணிப் பதாகைகள், ஓவியங்கள் அனைத்தையும் மக்கள் பேரார்வத்துடன் கவனித்தனர். வ.உ.சி. திடலில் தொடங்கிய பேரணி, ஜவகர் திடலில் குறித்த நேரத்தில் சென்றடைந்தத. தோழர் காளியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கங்கைகொண்டான் மானூர் ஒன்றிய கவுன்சிலர் மணி, மதுரை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் வாஞ்சிநாதன், கர்நாடக மாநில பு.மா.இ.மு.வைச் சேர்ந்த கிராந்தி கோவிந்தன் ஆகியோர் எழுச்சி உரையாற்றினர். பயணக் களைப்பையும், நடந்து வந்த களைப்பையும் எள்ளளவும் பொருட்படுத்தாமல் சுமார் இரண்டு மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் கால்கடுக்க நின்றபடியே முழக்கம் எழுப்பிய தோழர்களின் அர்ப்பணிப்பும், ஈடுபாடும் பாராட்டுக்குரியது. பேச்சாளர்களின் உரைகளுக்குப் பின் போராட்ட முழக்கத்தையே இசையாக்கி கலைக்குழுத் தோழர்கள் வழங்கிய போது, அத்தனை தோழர்களும் சேர்ந்து உணர்ச்சிகரமாக பாடினர்.

 

நெல்லை மக்களுக்கு பெரிய அளவில் அறிமுகம் இல்லாத இப்புரட்சிகர அமைப்புகள், இந்த நிகழ்ச்சிகள் மூலம் அவர்களுடைய மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டன. பேரணி தொடங்கிய இடத்திலிருந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடம் வரை ஒரு பத்திரிகையாளர் கூட அகலவில்லை. இதைத் தங்களுடைய நிகழ்ச்சியாகவே கருதி எந்தக் கோணங்களில் கொடிகள், பதாகைகள் இருந்தால் புகைப்படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கினர். நூற்றுக்கணக்கில் திரண்டு வந்திருந்த பெண்களையும் குழந்தைகளையும் கண்டு நெகிழ்ந்தனர். தாமிரவருணித் தண்ணீருக்காக முதியவர்களும், தாய்மார்களும், குழந்தைகளும் நெல்லைக்கு வந்து போராடும் போது, நெல்லை மக்கள் இதில் முன்வந்து பங்களிக்கவில்லையே என ஆதங்கப்பட்டனர். கலைக்குழு பெண் தோழர்களை பேட்டி எடுத்தனர். சாதாரணமாகத் தோற்றமளித்த பெண்கள் அளித்த பதில்களை கண்டு வியந்தனர்.

 

அரசியல் கட்சிக் கூட்டங்களில் அராஜகத்தையும், கட்டுப்பாடின்மையையும், கூலிக்கு மாரடிக்கும் உணர்வற்ற தன்மையையும், பொறுக்கிக் கலாச்சாரத்தையும் மட்டுமே பார்த்துப் பார்த்துப் பழகியிருக்கும் மக்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இப்புரட்சிகர அமைப்புகளின் தோழர்களின் கட்டுப்பாடும், வெளிப்படுத்திய இயல்பான புரட்சிகர உணர்வும் அரசியல் முழக்கங்களும் அதிசயமானதாக இருந்தன. தீவிரவாதிகள் என்றும், ஆபத்தானவர்கள் என்றும் ஊடகங்கள் மூலம் நிகழ்த்திய பொய்ப்பிரச்சாரமும், அதற்காகவே கொண்டு வந்து இறக்கப்பட்ட படைகள் ஏற்படுத்த விரும்பிய பீதியும் மூன்று மணி நேரத்தில் நொறுங்கிச் சரிந்தன.

 

தாகம் தீர்க்கும் தண்ணீரை லாபம் பார்க்கும் சரக்காகவும், விடுதலையின் வண்ணமான சிவப்பை சுரண்டலின் நிறமாகவும் மாற்ற முனையும் அமெரிக்க கோக்கை எதிர்த்து, உழைக்கும் வர்க்கத்தின் உதிரத்தில் தோய்ந்த செங்கொடி, நெல்லை நகரெங்கும் சுழன்று வீசியது. நெல்லையே சிவந்தது. 'தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்" என்ற முழக்கம், நினைவில் அகலாது ஓர் இசையைப்போல நெல்லை மக்களின் நெஞ்சங்களில் பதிந்தது.

 

ஆர்ப்பாட்டம் முடிந்து இப்புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் ஏறத்தாழ 1200 பேர் மறியலுக்காகப் புறப்பட்டனர். மறியல் நடைபெறவிருந்த கங்கை கொண்டானில் சிப்காட் வளாகத்தைச் சுற்றிலும் இராணுவம்தான் பாக்கி என்று கூறுமளவிற்கு எல்லா வண்ணப் 'படைகளும்" குவிக்கப்பட்டிருந்தன. கங்கை கொண்டான் கிராமத்துக்குச் செல்லும் மூன்று சாலைகளும் காலை முதலே அடைக்கப்பட்டு விட்டன. வங்கிகள், பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை விடப்பட்டது. இத்தனை 'ஏற்பாடு"களுக்குமிடையில் தொடங்கியது மறியல் போராட்டம். ஆவேசமாக முழக்கமிட்டு முன்னேறி வந்த தோழர்கள், ஒரு போரை நடத்தாமல் நெடுஞ்சாலையைத் தொட முடியாது என்ற அளவிற்கு போலீசு தடையரண் அமைத்திருந்தது. எக்காரணம் கொண்டும் அமெரிக்க மூலதனத்தின் மீது புரட்சிகர அமைப்புகளின் நிழல் கூடப் பட்டுவிடக் கூடாது என்ற அச்சம்தான் போலீசின் படைபலம் மற்றும் இத்தகைய "ஏற்பாடு'களுக்குக் காரணமாக இருந்தது. தடையை மீறி மறியல் செய்ய முற்பட்ட தோழர்கள் அனைவரையும் கைக்குழந்தைகள், சிறுவர் சிறுமிகளோடு கைது செய்த போலீசு, பின்னர் இரவு 10 மணியளவில் விடுதலை செய்தது.

 

'வெளிநாட்டு குளிர்பான கம்பெனிக்கு எதிர்ப்பு திணறியது நெல்லை" என்று விளம்பரச் சுவரொட்டிகளில் மறியல் போராட்டத்தின் படத்துடன் செய்தி வெளியிட்டது தினமலர். தினமணி, தினகரன், தினத்தந்தி என எல்லா நாளேடுகளின் நெல்லைப் பதிப்புகளும் போராட்டப் படங்களால் சிவப்பு வண்ணத்தில் நிரம்பியிருந்தன.


போராட்டத்திற்குமுன் தோழர்களில் ஒரு குழுவினர் இரண்டு நாட்கள் திருவனந்தபுரத்தில் பிரச்சாரம் செய்தனர். மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட துண்டறிக்கைகள் மற்றும் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட பிளக்ஸ் கேலிச் சித்திரங்கள் ஆகியவற்றுடன் அங்கே இரண்டு நாட்கள் நடைபெற்ற பிரச்சாரம் பல்வேறு மலையான நாளிதழ்களில் வெளியாகி உள்ளது. நெல்லை போராட்டம் குறித்த செய்திகளையும் இந்நாளேடுகள் வெளியிட்டுள்ளன. ஏற்கெனவே பிளாச்சிமடா போராட்டத்தினூடாக கோக் எதிர்ப்பு உணர்வு பெற்றிருக்கும் கேரளத்து மக்களிடம் இப்போராட்டம் வரவேற்பு பெற்றுள்ளது.

 

****

 

பேரணி, ஆர்ப்பாட்டம் குறித்து இப்புரட்சிகர அமைப்புகள் முன்னதாகவே விண்ணப்பித்திருந்த போதிலும் போலீசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இப்பிரச்சாரம் கோக்கின் ஏஜெண்டாக செயல்பட்ட நெல்லை சரக டி.ஐ.ஜி.யால் இம்மூன்று மாவட்டப் பகுதிகளில் பெரிதும் முடக்கப்பட்டது. இதை எதிர்த்த போராட்டத்தின் ஊடாகத்தான் இப்பகுதிகளில் பிரச்சாரத்தைக் கொண்டுச் சென்றன இவ்வமைப்புகள். ஆகஸ்டு 20 முதல் 'நக்சலைட்டுகள், தீவிரவாதிகள் ஊடுருவல்" என்கிற பிரச்சாரத்தை கிளப்பிவிட்டு மக்களை பீதியூட்ட முயற்சித்தது உளவுத்துறை. 'சுவர் எழுத்துக்காக பொய் வழக்குகள், தடுப்புக் காவல் கைது குறித்த அச்சுறுத்தல்கள், கண்காணிப்புகள்" இவையனைத்தும் போராட்ட நாள் நெருங்க நெருங்க போலீசால் தீவிரப்படுத்தப்பட்டன.

 

அதேநேரத்தில் 'கங்கை கொண்டான் கோக் ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், தண்ணீர் தனியார்மயத்தை தடுக்க வேண்டும்" என்ற கோரிக்கைகளுடன் ஆயிரம் வழக்குரைஞர் தனித்தனியே கையொப்பமிட்டு வழங்கிய மனு, ஊடகங்களில் விரிவாக இடம்பெற்றது. கம்சனின் மரணம் குறித்து நீதி விசாரணை கோரி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அளித்த அறிக்கையும், நெல்லை நகரில் விரிவாக விநியோகித்த புரட்சிகர அமைப்புகளின் பிரசுரங்களும் சுவரொட்டியும் எதிரிகளிடம் அச்சத்தை தோற்றுவித்தன. 'ம.க.இ.க.வினரால் தமது உயிருக்கு ஆபத்து" என்று கோக் ஆலை நிர்வாகிகள் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுத்திருக்கின்றனர்.

 

கம்சன் மரணம் குறித்த புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு உடனே தெரிந்தது. 'இயற்கை மரணம்" என்று போலீசு கூறியபோதும், அரசு இப்போது ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதேபோல "கோக் ஆலைக்கு எதிர்ப்பு பெருகி வருவதால் 'ஆதரவு எதிர்ப்பு பிரிவினரிடம் கருத்துக் கேட்பதற்காக" டி.ஆர்.ஓ. விசாரணைக்கும் அரசு ஆணையிட்டுள்ளது. ம.க.இ.க. உள்ளிட்ட அனைவரிடமும் கருத்து கேட்போம் என டி.ஆர்.ஓ. செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இவையெல்லாம் கண்துடைப்பு வேலைதான் எனினும் இவற்றைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை புரட்சிகர அமைப்புகளின் பணிகள் உருவாக்கியுள்ளன.

 

****

 

அமெரிக்க 'கோக்"கிற்கு எதிராகவும், தண்ணீர் தனியார்மயத்துக்கு எதிராகவும் நடந்த இம்மிகப்பெரிய போராட்டம், நெல்லை மக்கள் மத்தியில், குறிப்பாக கங்கை கொண்டான் வட்டார மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போராட்டத்தைத் தொடர்ந்து கோக் ஆலைக்கு அருகில் உள்ள ராஜபதி எனும் கிராமத்து மக்கள் ஒருநாள் கடையடைப்பும் உண்ணாவிரதமும் நடத்தியுள்ளனர்.

 

கிராமமே திரண்டு பங்கேற்ற இந்த உண்ணாவிரதத்தில் சுமார் 1000 மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மற்ற சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் இத்தகைய போராட்டங்களை நடத்த மக்கள் விரும்புகின்றனர். கோக் ஆலையைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற உணர்வு மக்களிடையே பற்றிப் படர்ந்து வருகிறது.

நெல்லையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் கோக் அடிவருடியான தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையாவுக்கு கலைஞர் விருது வழங்கப்படுவதை அம்பலப்படுத்தி நகரெங்கும் புரட்சிகர அமைப்புகள் சுவரொட்டி ஒட்டியிருந்தன. 'கோக் ஆலை குறித்து தி.மு.க.வின் நிலை என்ன?" என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்த்திருக்கிறார் கருணாநிதி.

 

பெயரளவிற்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்த 'மார்க்சிஸ்டுகள்" புரட்சிகர அமைப்புகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, கங்கை கொண்டானில் மறியல் நடத்தியுள்ளனர். 'வங்காளத்தில் கோக் பெப்சி ஆலைகள் நான்கு இருக்கும் போது இங்கே மறியல் செய்வது என்ன நியாயம் கங்கை கொண்டான் மக்கள்" என்று சுவரொட்டி அடித்து ஒட்டி 'மார்க்சிஸ்டு"களை ஏளனம் செய்திருக்கிறது கோக் நிர்வாகம். செப்.12 போராட்டத்தைத் தொடர்ந்து, 'சைக்கிள் பேரணி" அறிவித்திருக்கிறார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி. இந்தப் பிரச்சினை மீது கருத்து கூற வேண்டிய நிர்ப்பந்தத்தையும், ஏதேனும் செய்தாக வேண்டிய கட்டாயத்தையும் இப்போராட்டம் ஏற்படுத்தி வருகிறது.

 

போராட்டம் முடிந்து விட்ட போதிலும், கோக்கிற்கு எதிரான புரட்சிகர அமைப்புகளின் வேலைகள் தொடர்கின்றன. கம்சன் மரணத்தை "இயற்கை மரணம்' என்று கூறி அமுக்கப் பார்க்கின்றன அரசும் ஆலை நிர்வாகமும்.

 

இதனை அம்பலப்படுத்தும் விதத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் ஒரு உண்மை அறியும் குழு, கம்சன் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரிடமும் விவரங்கள் திரட்டியுள்ளது. இவற்றை ஒரு அறிக்கையாக வெளியிடுவதுடன், இம்மரணம் குறித்து விசாரிக்க, குற்ற வழக்கொன்றைப் பதிவு செய்யவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கும் தொடரவுள்ளது. இதுவன்றி, கோக் ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்யக் கோரி பொதுநல வழக்கொன்றைத் தொடர்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

 

அக்டோபரில் உற்பத்தியைத் தொடங்குவோமெனத் திமிராக அறிவித்திருக்கிறது கோக் நிர்வாகம். ஆலையின் கட்டுமானப் பணி முடியும் தறுவாயில் உள்ளது. மக்களின் போராட்டமோ கட்டியமைக்கப்படக் காத்து நிற்கிறது. ஒரு மிகப் பெரிய ஆலையை ஆறே மாதங்களில் கட்டிமுடித்துத் தன் பணபலத்தையும் அதிகார பலத்தையும் காட்டியிருக்கிறது இந்த அமெரிக்க ஏகாதிபத்திய நிறுவனம். அதற்கெதிராக மக்கள் பலத்தைத் திரட்டி நிறுத்திக் காட்டவேண்டியது தமிழக மக்களின் போராட்டக் கடமை. நமது கடமை.


பு.ஜ. செய்தியாளர்கள்