Language Selection

புதிய ஜனநாயகம் 2005

10_2005.jpgமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோக் நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்த சி.எஸ்.மணி, 'கோக், கங்கைகொண்டானுக்கு வருவது வெளியே தெரிந்தவுடனேயே, பல்வேறு அமைப்பினரும், அறிஞர்களும் எங்கள் பகுதிக்கு வந்து, இதனால் ஏற்படும் கேடுகளைச் சொன்னபோது, அதை நாங்கள் நம்பவில்லை. அதேசமயம், எங்கள் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் என 40 பேர் சேர்ந்து

 கேரளாவிலுள்ள பிளாச்சிமடாவுக்கும், சிவகங்கைக்கு அருகிலுள்ள படமாத்தூருக்கும் நேரடியாகப் போய் விசாரித்தோம். பிளாச்சிமடாவில் இந்த கோக் ஏற்படுத்தியிருக்கும் கேடுகளைப் பார்த்த பிறகுதான், இந்த ஆலையை எதிர்த்துத் தீர வேண்டும் என முடிவு செய்து, கடந்த ஏழு மாதங்களாகப் போராடி வருகிறோம்" எனத் தமது போராட்ட அனுபவத்தை முன்வைத்தார்.

 

'சீவலப்பேரி குடிநீர் திட்டம் திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி வரை போகிறது. இந்தக் குழாய் போகும் வழியில் உள்ள கிராமங்களில் இதுவரை மேல்நிலைத் தண்ணீர் தொட்டி இருந்தது கிடையாது. கிராமத்து மக்கள் குடிநீரை பைப்பில் இருந்து நேரடியாகப் பிடித்துக் கொள்வார்கள். இப்பொழுது, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகளைக் கிராமங்களில் கட்டுகிறார்கள். கிராமத்திற்குத் தண்ணீர் இவ்வளவுதான். மீதமெல்லாம் கோக்கிற்கு என்பதுதான் இதன் பொருள்."

 

'கோக்கிற்கு ஆதரவாகப் பேசும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களைக் கூட்டி வைத்து, ஆர்.டி.ஓ. இரகசியமாக கங்கை கொண்டானில் கூட்டம் போட்டார். விசயம் தெரிந்து கோக்கை எதிர்க்கும் நாங்களும் கூட்டத்திற்குப் போனபொழுது, அடிதடி நடக்கப் போவதாக ஃபோன் போட்டு போலீசைக் கூப்பிட்டார்கள்."

 

'நாங்கள் பெட்டிக்காகத்தான் கோக்கை எதிர்த்துப் போராடுவதாகவும்; நாங்கள் 25 இலட்ச ரூபாய் கேட்பதாகவும்; கோக் 15 இலட்சம் தரத் தயாராக இருப்பதாகவும் ஒரு அவதூற்றை கோக் பரப்பி வருகிறது. பெட்டிக்காகப் போராடும் தந்திரமான கூட்டம் நாங்கள் இல்லை. நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம். எங்கள் பகுதியிலேயே தொடர்ந்து வாழனும் என்பதற்காகப் போராடுகிறோம். எங்கள் பகுதி பாலைவனமாகி விடக்கூடாது என்பதற்காகப் போராடுகிறோம்."

 

'கங்கை கொண்டான் குளத்தை ஐந்து இலட்ச ரூபாய் செலவில் தூர்வார ஆரம்பித்தது கோக். பி.டபிள்யு.டி. செய்ய வேண்டிய வேலையை நீ ஏன் செய்யணும்? மறைந்த கங்கை கொண்டான் ஊராட்சி மன்றத் தலைவர் கம்சன், கோக்கிற்கு எதிராக பஞ்சாயத்தில் தீர்மானம் கொண்டு வந்தவுடன், இந்த தூர்வாரும் வேலையை கோக் நிறுத்திவிட்டது. இலாபநட்டக் கணக்குப் போட்டு 'சேவை" செய்வது யார் என்பது இதிலிருந்து தெரியவில்லையா?

 

'அரசாங்கம் ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டு வருகிறது. இது போதாதென்று, இப்பொழுது கோக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி முகாம் ஏன் நடத்தணும்? கோக் ஆலை வந்த பிறகு பிளாச்சிமடாவில் மஞ்சள் காமாலை, ஆஸ்துமா, மாதவிடாய் பிரச்சினை, போலியோ போன்ற வியாதிகள் தீவிரமாகப் பரவியிருப்பதை நாங்கள் நேரடியாகவே பார்த்தோம். நாளைக்கு இந்தப் பகுதியிலும், மஞ்சள் காமாலை பரவும் என்பதால், இப்பொழுதே கோக் தடுப்பூசி போடுகிறது"

 

'நோயாளிக்கு மருந்துதான் வாங்கி கொடுப்பார்கள். ஆனால், கோக் நிர்வாகமோ, மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த கங்கை கொண்டான் ஊராட்சி மன்றத் தலைவர் கம்சனைக் குற்றாலத்திற்குக் கூட்டிப் போய் சீமை சாராயத்தால் குளிப்பாட்டியிருக்கிறது. குற்றாலத்துக்குப் போக கம்சனுக்கு வழி தெரியாதா? நோயாளிக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுப்பது, விஷத்தை ஊற்றிக் கொடுப்பதற்குச் சமமாகாதா?" எனச் சாம, பேத, தான, தண்டங்களைப் பயன்படுத்தி கோக் நிர்வாகம், கங்கை கொண்டானில் ஆலையை நிறுவ முயல்வதை எடுத்துக் கூறினார்,


சி.எஸ்.மணி.