Language Selection

புதிய ஜனநாயகம் 2005

10_2005.jpgமறுகாலனியாதிக்கத்தின் கொடிய வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும், அதன் துலக்கமான வெளிப்பாடான 'கோக்"கிற்கு எதிராகவும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழகமெங்கும் கடந்த மூன்று மாதங்களாக நடத்திவந்த பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக,

 செப்.3 அன்று, திருநெல்வேலி, கொக்கிரக்குளம் பகுதியில் அமைந்துள்ள ரோஸ் மகாலில், 'தண்ணீரைத் தனியார்மயமாக்காதே!" 'தாமிரவருணியை 'கோக்"கிற்கு விற்காதே!" எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

 

ம.க.இ.க. பொதுச் செயலர் தோழர் மருதையன் தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில், மலையாள மொழி நாளிதழ் 'மாத்ருபூமி"யின் நிர்வாக இயக்குநரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எம்.பி. வீரேந்திர குமார் தவிர, பிற பேச்சாளர்கள் அனைவரும் வாக்களித்தபடி கலந்து கொண்டனர். திரு. வீரேந்திரகுமார் தனது சொந்த அலுவல் காரணமாக கலந்து கொள்ள இயலவில்லை எனக் கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டது. அதேபொழுதில், நெல்லை வழக்குரைஞர் சங்கத் தலைவர் தங்கசாமி பேச்சாளராக அறிவிக்கப்படாத போதிலும், இப்போராட்டத்தின் அவசியத்தைக் கருதி, தானே முன்வந்து சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் அறிஞர்களின் சிறப்புரையோடு, ம.க.இ.க. மையக் குழுவின் புரட்சிகரக் கலை நிகழ்ச்சியும், நாடகங்களும், ஓவியக் கண்காட்சியும் நடத்தப்பட்டன.

 

'தண்ணீர் வியாபாரத்தை, ஏதோவொரு தவறான பொருளாதாரக் கொள்கை எனச் சுருக்கிப் பார்க்காமல், அதனை மனிதகுலத்திற்கு எதிரான பயங்கரவாதமாகவும்; மறுகாலனியாக்கத்தின் கோர வடிவமாகவும் பார்க்க வேண்டும்" என வலியுறுத்தியது இக்கருத்தரங்கம். கருத்தரங்கை நடத்திய இப்புரட்சிகர அமைப்புகள் மட்டுமின்றி, பேச்சாளர்கள் அனைவருமே இந்த அரசியல் கருத்தை வலியுறுத்திப் பேசியதுதான் இக்கருத்தரங்கின் வெற்றியாக அமைந்தது.

 

தோழர் மருதையன் கருத்தரங்கின் இறுதியில் தனது தொகுப்புரையில், ' "யாரோ செய்வார்கள்; ஏதாவது நல்லது நடக்கும் எனச் செயலற்று இருப்பது அவநம்பிக்கை" எனக் குறிப்பிட்டார். அந்த அவநம்பிக்கையை உடைத்தெறியும் விதத்தில், இக்கருத்தரங்கம் நடந்து முடிந்தது. புதிய ஜனநாயகம் வாசகர்களுக்காக, இக்கருத்தரங்கின் சிறப்புரைகளைச் சுருக்கமாகத் தொகுத்து வெளியிடுகிறோம்.


- ஆசிரியர் குழு