Language Selection

புதிய ஜனநாயகம் 2005

10_2005.jpg'இது நாலுவழிச்சாலை மட்டுமல்ல. பொருளாதார முன்னேற்றத்துக்கான நல்வழிச்சாலை" என்று கடந்த செப்டம்பர் 18ஆம் தேதியன்று நாங்குநேரி கிருஷ்ணன் புதூரில் நடந்த நான்கு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. காசியையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் (எண்:7) கோவில்பட்டியிலிருந்து நெல்லை வழியாக பணகுடி வரையிலான 123 கி.மீ. நீள இருவழிச் சாலையானது ரூ. 630 கோடியே 42 லட்சம் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான விழாவில் கலந்து கொண்டு அடிக்கல்லைத் திறந்து வைத்த கருணாநிதி, இது நல்வழிச்சாலைக்கான கால்கோள் விழா என்றும் குறிப்பிட்டார்.

 

இந்த நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தால் வேலை வாய்ப்பு பெருகும்; பயண நேரம் குறையும்; வணிகர்களும் விவசாயிகளும் பயனடைவர்; ஏற்றுமதிப் பொருட்கள் பெரிய துறைமுகங்களை விரைவில் சென்றடையும்; சுற்றுலாத்துறை வளரும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. 'இத்தகைய அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள்தான் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம்" என்கிறார் நிதியமைச்சர் ப.சிதம்பரம். 'ஆனால், இந்தியாவில் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களில் முதலீட்டுப் பற்றாக்குறை பூதாகரமாக உள்ளது" என்று வேதனைப்படும் அவர், 'இத்தகைய திட்டங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரவேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களில் 1500 கோடி டாலர் (ஏறத்தாழ ரூ. 67 லட்சம் கோடி) அளவுக்கு முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன என்று அறிவித்துள்ள அவர், பாரத ஸ்டேட் வங்கியும், மெரில் லிஞ்ச் என்ற நிதி நிறுவனமும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த செப்டம்பரில் நடத்திய அன்னிய முதலீட்டாளர் கூட்டத்திலும் பங்கேற்று, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

 

பொருளாதார வளர்ச்சிக்கு நீர்ப்பாசனம், அணைக்கட்டுகள், போக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு முதலான அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் முதலீடுகள் அவசியமானதுதான். இருப்பினும் என்ன வகையான அடிப்படைக் கட்டமைப்புத் துறை நாட்டுக்கும் மக்களுக்கும் தேவை? என்ன வகையான பொருளாதார வளர்ச்சி தேவை என்பதுதான் மையமான கேள்வி. தாராளமய பொருளாதாரத்தின் தாசர்களும் முதலாளித்துவப் பத்திரிகைகளும் அமைச்சர் பெருமக்களும் அடிப்படைக் கட்டமைப்புத் துறையின் வளர்ச்சி என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்?

 

இதற்கு, எடுப்பானதொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

 

'கர்நாடக மாநிலம், மழைகுறைவாகப் பெய்யும் மாநிலம். பெரும்பாலான பகுதிகள் மானாவாரி நிலங்கள். வறுமையும் வேலையின்மையும் அதிக அளவில் உள்ள மாநிலம். இத்தகைய இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும், இம்மாநிலம் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைவதற்கு தகவல் தொழில்நுட்ப மையங்களை உருவாக்குவது மிக அவசியம். அடிப்படைக் கட்டமைப்புத் துறையின் வளர்ச்சி இல்லாமல் இதைச் சாதிக்க முடியாது". (இந்தியன் எக்ஸ்பிரஸ், 16.5.05)

 

முதலில் உள்ள மூன்று வரிகளுக்குப் பின்னால் உள்ள வரிகளுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? முதலில் உள்ள மூன்று வரிகள் கர்நாடக மாநிலம் மழையும் பாசன வசதியுமின்றி விவசாயிகள் வறுமையில் உழலும் அவலத்தைக் குறிக்கிறது. எனவே, நீர்ப்பாசனத் திட்டங்கள், சிறிய அணைகள் கட்டுதல் முதலான அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் அரசு முதலீடு செய்து, விவசாய உற்பத்தி நடவடிக்கைகளுக்கு உதவவேண்டும் என்றுதான் ஒருவர் கருதுவார். ஆனால், ஆட்சியாளர்களும் முதலாளித்துவப் பத்திரிகைகளும் கிராமப்புற வறுமையைக் களைவதாக அடிப்படைக் கட்டமைப்புத் துறையின் வளர்ச்சியும் முதலீடுகளும் அமைய வேண்டியதில்லை என்கின்றனர். உற்பத்தியின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அடிப்படைக் கட்டமைப்புத் துறைகள் அமைய வேண்டிய அவசியமில்லை என்கின்றனர். அதாவது, ஏற்றுமதிக்கான பொருட்கள் பெரிய துறைமுகங்களை, விமான நிலையங்களைச் சென்றடைவதற்காக போக்குவரத்துதொலைத்தொடர்பு முதலான அடிப்படைக் கட்டமைப்புத் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதும், அதில் பெருமளவு முதலீடு செய்வதும் அவசியம் என்கின்றனர். ஏகாதிபத்திய நாடுகளுக்கு கணினி மென்பொருள் ஏற்றுமதி செய்யும் தொழிலுக்கு வாய்ப்புகள் இருப்பதால், கணினி மென்பொருள் தொழில் நுட்பப் பூங்காக்கள் தொலைதொடர்பு வசதி முதலான அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டும் என்கின்றனர். இத்தகைய திட்டங்களில் முதலீட்டுப் பற்றாக்குறை நிலவுவதால், அன்னிய ஏகாதிபத்திய நிறுவனங்களை முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கின்றனர்.

 

வெள்ளைக்காரனின் காலனிய ஆட்சிக் காலத்திலும் இப்படித்தான் நடந்தது. அன்றைய காலனிய ஆட்சி விவசாயத்தையும் கைத்தொழிலையும் நாசமாக்கியது. பாசன மராமத்துப் பணிகளை அறவே புறக்கணித்தது. அதேசமயம், நாடெங்கும் இருப்புப் பாதைகளும் சாலைகளும் துறைமுகங்களும் நிறுவப்பட்டன. காலனியாதிக்கவாதிகளுக்குத் தேவையான உற்பத்திப் பொருட்கள் துறைமுகங்களுக்கு விரைவாகக் கொண்டு செல்லப்படுவதற்காக இவை அமைக்கப்பட்டன. காலனிய ஆட்சிக் காலத்தைப் போலவே இப்போது நான்கு வழி நெடுஞ்சாலைகளும், தொழில்நுட்பப் பூங்காக்களும், அதிவிரைவு ரயில் பாதைகளும், புதிய துறைமுகங்களும் நிறுவப்படுகின்றன. இது மறுகாலனியாதிக்கம்.

 

கடந்த ஐந்தாண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு (நான்கு பெரு நகரங்களுக்கிடையிலான தங்க நாற்கரண சாலைத் திட்டத்திற்கு) ரூ.24,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், சாலை வசதியற்ற 1,70,000 கிராமங்களுக்கு பிரதமரின் கிராம வளர்ச்சிக்கான 'பாரத் நிர்மாண்" திட்டத்தின் கீழ் ரூ.11,500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் செயலூக்கத்துக்கும் தொலைபேசியும் இணையதள இணைப்பும் அவசியமானது என்று கண்டுபிடித்துள்ள ஆட்சியாளர்கள், நடப்பு பட்ஜெட்டில் ரூ.1,200 கோடியை ஒதுக்கியுள்ளனர். ஏற்கெனவே பல தனியார் நிறுவனங்கள், கிராமப்புற தொலைத்தொடர்பு திட்டத்தில் முதலீடு செய்வதாகக் கூறி கோடிகோடியாய் மோசடி செய்து கொழுத்துள்ளன. இதுவும் போதாதென்று இன்னும் பல கோடிகளை இத்திட்டத்திற்கென மைய அரசு வாரியிறைத்து தொலைபேசி வசதியில்லாத 67,000 கிராமங்களுக்கு அச்சேவையை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

 

ஆனால், 1,25,000 கிராமங்களில் இன்னும் மின்சார வசதியே இல்லை. தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, 46சதவீதிதம் கிராமப்புற குடும்பங்கள் இன்னமும் லாந்தர் விளக்குகளையே சார்ந்துள்ளன. மாநில மின்வாரியங்கள் தனியார்மயமாக்கப்படுவதாலும் மின் கட்டண உயர்வினாலும் இந்த எண்ணிக்கை வருமாண்டுகளில் மேலும் அதிகரிக்கவே செய்யும். மேலும் கடந்த பத்தாண்டுகளாக கிராமப்புற வேலை வாய்ப்பின் வளர்ச்சி ஆண்டுக்கு வெறும் ஒரு சதவிகிதம் என்ற அளவுக்குச் சுருங்கி, இப்போது பூஜ்ஜியத்தை எட்டிவிட்டாதக அரசாங்கப் புள்ளிவிவரங்களே கூறுகின்றன. கும்பி கூழுக்கு அழுகையில் கொண்டைக்குப் பூ வைத்த கதையாக தொலைபேசி இணைப்புக்கு கோடிகோடியாய் வாரியிறைத்து, இதுதான் பொருளாதார வளர்ச்சி என்று ஆட்சியாளர்கள் காதில் பூ சுற்றுகின்றனர்.

 

கிராமப்புற வறுமையைக் களைவதாகவோ உற்பத்தியின் நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவோ அமையாத இத்தகைய அடிப்படைக் கட்டுமானத் துறைகள், தாராளமயத்தின் கீழ் தனியார்அந்நிய நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான துறைகளாக வளர்ந்துள்ளன. இதற்காகவே சேது சமுத்திர திட்டம், மகாநதி இணைப்புத் திட்டம், பெருநகரங்களில் சுரங்க ரயில் திட்டம், நகரங்களில் போக்குவரத்துக்கான மேம்பாலங்கள், மின்சார சுரங்கத் திட்டங்கள் என்று பலப்பலத் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இவற்றில் அன்னிய முதலீடுகளும் குவிகின்றன. அல்லது முதலீட்டு பற்றாக்குறையைக் காரணம் காட்டி அன்னிய நிதி நிறுவனங்களிடம் பல்லாயிரம் கோடிக்கு கடன்கள் வாங்கப்படுகின்றன.

 

முன்பு வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட இந்திய ரயில்வே துறை, இப்படித்தான் அன்னிய தனியார் முதலாளிகளின் இலாபவேட்டைக்கான துறையாக இயங்கியது. இந்திய ரயில்வே துறையில் முதலீடு செய்யும் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு இலாப உத்தரவாதத்துடன் அசலைத் திருப்பித் தருவதாக அன்றைய காலனிய அரசு உறுதியளித்தது. காலனிய இந்திய நாட்டைச் சூறையாடுவதற்கான முதன்மையான அடிப்படைக் கட்டமைப்புத் துறையாக அன்றைய ரயில்வே துறை அமைந்தது.

 

அதேபோலத்தான் தாராளமயத்தின்கீழ் மின்சார உற்பத்தி, சுரங்கத் தொழில், எண்ணெய் எரிவாயு துரப்பன வேலைகள், நான்குவழி அதிவிரைவுச் சாலைகள், தொலைத்தொடர்பு என பல்வேறு அடிப்படைக் கட்டமைப்புத் துறைகளிலும் இலாப உத்தரவாதத்துடன் அன்னிய தனியார் முதலீடுகள் தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன. இப்படி இலாப உத்தரவாதத்துடன் அமெரிக்க என்ரான் மின் உற்பத்தி நிறுவனம் அனுமதிக்கப்பட்டு, அது மகாராஷ்டிர மாநில மின்சார வாரியத்தை திவாலாக்கிய கதையை நாடே நன்கறியும்.

 

இரயில்வே மேம்பாலங்கள், நான்கு வழிச்சாலைகள், கணினி தொழில்நுட்பப் பூங்காக்கள், விரைந்து செல்லும் வாகனங்கள் இவற்றையெல்லாம் பார்த்து நாடு ரொம்பவும் முன்னேறிவிட்டதாக நாமும் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அடிப்படைக் கட்டமைப்புத் துறையின் வளர்ச்சிமுன்னேற்றம் என்ற மாய்மாலங்களுக்குப் பின்னே மறைந்திருப்பது மறுகாலனியாதிக்கக் கொள்ளை. இது நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கான நல்வழிச்சாலை அல்ல. நாட்டையும் மக்களையும் சூறையாடும் மறுகாலனியாதிக்கத்தின் சுடுகாட்டுச் சாலை!


மு மனோகரன்