10_2005.jpg'நாங்கள் எங்கள் கொள்கையைத் தலைகீழாக 180 டிகிரிக்கு மாற்றிக் கொண்டு விட்டோம்" என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்த மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, இப்போது இன்னும் ஒருபடி முன்னேறி உலகமயத்துக்கு வெளிப்படையாகவே பக்கமேளம் வாசிக்கக் கிளம்பிவிட்டார்.

 

தமிழகத்தைத் தொழில்மயமாக்க ஹ_ண்டாய் கார் தொழிற்சாலையைக் கொண்டு வந்தேன்; நோக்கியா செல்போன் ஆலையைக் கொண்டு வந்தேன் என்றெல்லாம் கருணாநிதியும் ஜெயலலிதாவும்

 போட்டா போட்டி போடுவதைப் போல, மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வரும் அம்மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் அன்னிய முதலீடுகளுக்கு போட்டிபோட்டுக் கொண்டு சிவப்புக் கம்பளம் விரித்து வருகிறார். ஏற்கெனவே மிட்சுபிஷி, ஐ.பி.எம்.; பெப்சி முதலான அன்னிய நிறுவனங்கள் மே.வங்கத்தில் முதலீடு செய்திருப்பது போதாதென்று இப்போது சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தேசங்கடந்த தொழிற்கழகங்களை மே.வங்கத்தில் முதலீடு செய்ய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

அண்மையில் தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்ற அவர், இந்தோனேஷியாவின் மிகப் பெரிய தரகு முதலாளித்துவ நிறுவனமான சலீம் குழுமத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, மேற்கு வங்கத்தின் 24 பர்கானா மாவட்டத்தின் தென்பகுதியில் ஒரு புதிய தொழில் நகரத்தை 5100 ஏக்கர் பரப்பளவில் சலீம் கம்பெனி அமைக்கும். அங்கு இரு சக்கர மோட்டார் வாகன உற்பத்தி, உதிரிப் பாக உற்பத்தியைத் தொடங்கும். இது தவிர ஒரு மருத்துவ நகரத்தையும் சர்வதேசத் தரத்துடன் உருவாக்கும். இதற்காக 80 கி.மீ. நீள அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும். இதற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் நடத்தப்படும்.

 

சலீம் குழுமம் மட்டுமின்றி, சிபுத்ரா நிறுவனமும் மே.வங்கத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இந்தோனேஷியாவின் பாக்ரீ நிறுவனம் நிலக்கரி சுரங்கத் திட்டத்தில் முதலீடு செய்யத் தீர்மானித்துள்ளது. சிங்கப்பூரின் ஏப்ரல் ஃபைன் நிறுவனம் காகித ஆலையைத் தொடங்க முன்வந்துள்ளது.

 

இந்தச் 'சாதனை"களைக் கண்டு பூரிப்படைந்த புத்ததேவ், ' "உலகமயமாக்கத்தை ஏற்று செயல்படுத்தியே தீர வேண்டும். அதை யாரும் தடுத்து நிறுத்திட முடியாது. பொருளாதார சீர்திருத்தத்தை மேற்கொள்வதா அல்லது அழிவுக்கு ஆளாவதா என்ற இரு வாய்ப்புகளே மே.வங்கத்தின் முன்னே உள்ளன. நாங்கள் அழிவுப் பாதையில் செல்ல ஒருபோதும் தயாராக இல்லை. நாம் உலகமய போக்கைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. நாம் அதனுடன் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதேசமயம் நமது நலன்களை நாம் விட்டுக் கொடுக்கவும் கூடாது. சீனாவைப் பாருங்கள். சீனாவின் விரைவான பொருளாதார மாற்றங்களிலிருந்து நாங்களும் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டுள்ளோம்" என்று பேட்டியளித்துள்ளார்.

 

சி.பி.எம். கட்சி உலகமயமாக்கலை எதிர்க்கிறதே! நீங்கள் அதன் கொள்கைக்கு மாறாகப் பேசுகிறீர்களே! என்று கேட்டால், 'நான் கட்சியின் கொள்கையைத்தான் பேசுகிறேன். மாற்றம் நிரந்தரமானது. மாறிய காலத்துக்கேற்ப நாமும் மாறவேண்டும். பழைய கொள்கைகோட்பாடுகளையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது" என்று ஒரே போடாகப் போடுகிறார் இப்போலி கம்யூனிஸ்டு முதல்வர். கடுங்கோட்பாட்டுவாதியாகச் சித்தரிக்கப்படும் சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளரான பிரகாஷ்கரத், புத்ததேவின் கருத்தை வெறும் உளறல் என்று சாடவில்லை. மாறாக, புத்ததேவ் கூற்றில் தவறேதுமில்லை என்கிறார். இதில் கொள்கை முரண்பாடு ஏதுமில்லை என்று புத்ததேவுக்கு துணைநிற்கிறார் சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிபாசு.

 

இது ஒருபுறமிருக்கட்டும். மே.வங்கத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ள சலீம் கம்பெனியானது, இந்தோனேஷியாவைச் சூறையாடிய பாசிச சர்வாதிகாரியான சுகார்டோவின் நெருங்கிய கூட்டாளி நிறுவனமாகும். கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய கொலைகார சுகார்டோ, அமெரிக்காவின் விசுவாசமான கைக்கூலி என்று உலகெங்கும் பிரபலமானவர். கம்யூனிஸ்டுகளை ஒழிக்க சுகார்டோவுக்கு துணையாக நின்ற சலீம் கம்பெனியை மே.வங்கத்தில் அனுமதிப்பது எப்படி நியாயமாகும்? என்று கேட்டால், ""எனக்கு முதலீடுகள் தேவை. பணத்துக்கு நிறமில்லை; தேசிய அடையாளமுமில்லை. அந்தப் பணம் கருப்புப் பணமாக, கடத்தல்காரர்களின் பணமாக இல்லாதவரை எங்களுக்குப் பிரச்சினை ஏதுமில்லை. நாங்கள் கடந்த காலத்தைத் தோண்டித் துருவ விரும்பவில்லை'' என்று கொலைகார கம்பெனிக்கு வக்காலத்து வாங்குகிறார் புத்ததேவ்.

 

சில்லறை வியாபாரத்தில் அன்னிய முதலீடுகளை எதிர்ப்பதாக சி.பி.எம். கட்சி கூறிக் கொள்கிறது. ஆனால் இந்தோனேஷிய நிறுவனம் கொல்கத்தாவில் மிகப்பெரிய 'ஷாப்பிங் மால்" திறக்க புத்ததேவ் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளார். மேலும், புதிய துறைமுகங்கள் விமான நிலையங்களை மே.வங்கத்தில் நிறுவ 100 சதவீகித அன்னிய முதலீடுகளை வரவேற்பதாகவும் கூறியுள்ளார். கொல்கத்தா நகரை தென்கிழக்காசியாவின் வர்த்தக நுழைவாயிலாக மாற்றுவேன் என்றும் சூளுரைத்துள்ளார். இப்படி வெளிப்படையாகவே 100 சதவீகித அன்னிய முதலீடுகளை வெறிபிடித்து வரவேற்பதைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, முற்றாக அம்பலப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள, 'இத்துறைகளில் 49 சதவீகித அன்னிய முதலீட்டை மட்டுமே இந்திய அரசு அனுமதிப்பதாகக் கொள்கை வகுத்திருக்கும்போது, நான் எப்படி 100 சதவீகித அன்னிய முதலீட்டைப் பற்றிப் பேசியிருக்க முடியும்?" என்று தென்னை மரத்தில் ஏறி புல்புடுங்கப் போனவன் கதையாகப் பூசி மெழுகுகிறார். இதன் மூலம், 'இந்திய அரசு இத்துறைகளில் 100 சதவீகித அன்னிய முதலீட்டை அனுமதிப்பதாகக் கொள்கை வகுத்தால், நாங்களும் மே.வங்கத்தை தொழில்மயமாக்குவது என்ற பெயரில் 100 சதவீகித அன்னிய முதலீட்டை இத்துறைகளில் வரவேற்போம்" என்று சொல்லாமல் சொல்கிறார்.

 

மேலும், இதர மாநிலங்களைப் போலவே, மே.வங்கத்தில் சலீம் குழுமம் நிறுவ உள்ள ஆலைக்கு, நிலம், நீர், மின்சாரம், போக்குவரத்து முதலான சலுகைகளோடு வரிச் சலுகைகளும் அளிக்கப்படவுள்ளன. 24 பர்கானா மாவட்டத்தில் இந்த ஆலை அமையவுள்ள பகுதியிலிருந்து 45,000 விவசாயக் குடும்பங்கள் வெளியேற்றப்பட உள்ளன என்று செய்திகள் கசிந்துள்ளன. இதைத் தொடர்ந்து "இடதுசாரி' கூட்டணியிலுள்ள வலது கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சி சோசலிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அவ்வாறு விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டால், நாங்கள் மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்துவோம் என்று எச்சரித்துள்ளன. சி.பி.எம். கட்சியிலுள்ள அதிருப்தியாளர்கள் திரிணாமுல் காங்கிரசு கட்சியுடன் சேர்ந்து இப்போதே போராடப் போவதாகக் கூறி வருகின்றனர்.

 

இவற்றைக் கண்டு பீதியடைந்த புத்ததேவ், 'இவை விவசாய நிலங்கள் அல்ல் தரிசு நிலங்கள். எனினும், பாதிக்கப்படும் விவசாயக் குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் வேலைவாய்ப்பும் அளிப்போம்" என்று இதர மாநிலங்களின் முதல்வர்களைப் போலவே வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.

 

அன்னிய முதலீடுகளை ஆதரித்து அதற்கு விசுவாசமாகச் சேவை செய்துவரும் புத்ததேவின் நடவடிக்கைகளைக் கண்டு பூரிப்படைந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், 'புத்ததேவிடமிருந்து இடதுசாரிகள் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று உபதேசிக்கிறார். ஆனால், 'அவர் இடதுசாரியா? அல்லது இடதுசாரி கட்சிக்குள் இருக்கும் வலதுசாரியா?" என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே கேள்வி எழுப்புகின்றன.

 

குரங்கு தன் குட்டியின் கையைப் பிடித்து சூடான உணவுப் பொருட்களின் மீது வைத்து பதம் பார்த்து, அதைக் கொண்டு அந்த உணவு சூடாக இருக்கிறதா, ஆறிவிட்டதா, சாப்பிடலாமா என்று சோதித்துப் பார்க்குமாம். அப்படித்தான் சி.பி.எம். கட்சியும் புத்ததேவை வைத்து அன்னிய முதலீடுகளை ஆதரித்து மறுகாலனியாக்கத்துக்கு விசுவாசமாகச் சேவை செய்வதைப் பற்றி மெதுவாக சோதித்துப் பார்க்கிறது. நிலைமை சூடாக இருந்தால், ஆறப்போடலாம்; பதமாக இருந்தால் செயல்படுத்தலாம் என்று கணக்கு போட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது சி.பி.எம். கட்சியின் துரோகத் தலைமை. கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் கொள்கைகளோடு வரும் மறுகாலனியாதிக்கத்தை சி.பி.எம். கட்சி எதிர்த்துப் போராடும் என்று இன்னமும் யாராவது நம்பிக் கொண்டிருந்தால், அதுவும் மூடநம்பிக்கைதான்!

 

மு குமார்