10_2005.jpgபொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பதைத் தங்களது பிறப்புரிமையாக கருதிக் கொண்டு கொட்டமடிக்கும் அ.தி.மு.க. பொறுக்கி கும்பல், கழிப்பறையைக்கூட விட்டு வைப்பதில்லை. சிவகிரி ஊராட்சியில் பெண்களுக்கென புதிதாக ஒரு கழிப்பறை கட்டப்பட்டது. இது அ.தி.மு.க. சார்பான மகளிர் சுய உதவிக் குழுவுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை எடுத்த அக்குழு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத் தொகையைவிட கூடுதலாக வசூலித்தது. இதனை எதிர்த்துக் கேட்ட பெண்களைக் கேவலமாகத் திட்டுவது, கழிப்பறையை இழுத்துப் பூட்டி விடுவது என அராஜக ஆட்டம் போட்டது.

 

பகுதிவாழ் உழைக்கும் பெண்கள் இது பற்றி இப்பகுதியில் இயங்கிவரும் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியிடம் முறையிட்டனர். பு.மா.இ.மு. தோழர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 24.8.05 அன்று பொதுமக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டத்துக்கு பு.மா.இ.மு. தோழர்கள் அறைகூவல் விடுத்தனர். உடனே, கழிப்பறையைக் குத்தகைக்கு விட்டதை ரத்து செய்தது, ஊராட்சி நிர்வாகம். ஆரம்ப முதலே "மக்கள் நலக் கமிட்டி' என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்துவரும் ஜோதிராமலிங்கம், கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் செயலாளர் சூரியமூர்த்தி ஆகியோர் தலைமையிலான கும்பல் மகளிர் சுய உதவிக் குழுவின் கழிப்பறைக் கொள்ளைக்குப் பக்கபலமாக இருந்து ஆதாயமடைந்து வந்தது. பு.மா.இ.மு. இப்பிரச்சினையில் தலையிடுவதைக் கண்டு ஆத்திரமடைந்த இக்கும்பல், தோழர்களை மிரட்டி வந்தது.

 

இப்பிரச்சினைக்கு முன்பாக, சிவகிரிக்கு வரும் தனியார் பேருந்துகளை இலாபம் அதிகம் வரும் வழித்தடங்களுக்கு மாற்றிக் கொண்டு சில தனியார் பேருந்து முதலாளிகள் ஆதாயமடைந்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. அமைச்சர் பி.சி.இராமசாமி, அதிகார வர்க்கத்தை ஏவிவிட்டு தனது சாதிய வர்க்க விசுவாசத்தைக் காட்டி வந்தார். சிவகிரியில் பழையபடி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட அனைத்து கட்சிகள் அமைப்புகளைக் கொண்ட கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது. அமைச்சர் இராமசாமியின் கைத்தடிகளாக ஏவல் நாய்களாகச் செயல்பட்டுவரும் சூரியமூர்த்தியும் ஜோதி ராமலிங்கமும் பிற கட்சிகள் அமைப்புகளை மிரட்டி இக்கமிட்டியையே கலைத்ததோடு, அமைச்சரின் செயலை ஆதரித்து சுவரொட்டிகளை நகரில் ஒட்டினர்.

 

மேற்கூறிய இரு சம்பவங்கள் மட்டுமின்றி, இவ்விருவரும் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனங்களில் ஈடுபட்டு வருவது ஊரறிந்த ரகசியம். கவுண்டர் சாதி இளைஞர்களை ""மச்சான்'', ""மாப்பிள்ளை'' என்று உறவு சொல்லி இழுத்து, சாதிவெறியூட்டி தமது அடியாட்களாகப் பயன்படுத்தி வரும் இவர்களின் கேடுகெட்ட கிரிமினல் நடவடிக்கைகளையும், அமைச்சர் பி.சி.இராமசாமியின் மக்கள் விரோதச் செயல்களையும் 26.8.05 அன்று நடந்த தெருமுனைக் கூட்டத்தில் பு.மா.இ.மு. தோழர்கள் அம்பலப்படுத்திப் பேசினர்.

 

இதைக் கண்டு ஆத்திரமடைந்த இக்கும்பல், பு.மா.இ.மு. தோழர்களை அடிக்கடி மிரட்டி வந்தது. 5.9.05 அன்று இரவு 10 மணியளவில், தோழர்கள் புஷ்பராஜ், சசி, பழனிச்சாமி, கோவிந்தசாமி ஆகிய நால்வரையும் 15க்கும் மேற்பட்ட இக்கும்பல் வீண்வம்புக்கிழுத்து மிருகத்தனமாகத் தாக்கியது. அவர்களை விரட்டியடித்துவிட்டு, வீண் தகராறு செய்து தாக்கிய ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தோழர்கள் போலீசிடம் புகார் மனு கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட சிவகிரி காவல் நிலைய ஆய்வாளர் மனோகரன், மருத்துவமனைக்குப் போகச் சொல்லி ""மெமோ'' கொடுத்துள்ளார்.

 

சிவகிரியிலிருந்து ஈரோடு மருத்துவமனைக்கு இரவுப் பேருந்து இல்லாததால் செந்தில்குமார் என்ற தோழரையும் உடனழைத்துக் கொண்டு தோழர்கள் வாடகைக் கார் பிடித்து ஈரோட்டுக்குப் புறப்பட்டனர். விளக்கேந்தி என்ற இடத்திற்கருகே கார் வந்து கொண்டிருந்தபோது, இரவு சுமார் 12.30 மணி இருக்கும். அப்போது இரண்டு கார்கள், ஆறு ஏழு மோட்டார் சைக்கிள்களில் 20க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் வந்த ஜோதிராமலிங்கமும் சூரியமூர்த்தியும் தோழர்கள் சென்ற காரை வழிமறித்தனர். அரிவாள், இரும்புக்கம்பி, இரும்புக்குழாய், உருட்டுக் கட்டைகளுடன் சூழ்ந்த அக்கும்பல் வாடகைக் காரை அடித்து நொறுக்கியதோடு, தோழர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு கொலைவெறியோடு தாக்கியது. இதில் பழனிச்சாமி, செந்தில்குமார் ஆகிய இரு தோழர்களுக்கு கை எலும்பு முறிந்தது. செந்தில்குமாருக்கு தலையில் ஏழு இடங்களில் அரிவாள் வெட்டுக் காயம். தோழர்கள் புஷ்பராஜ், சசி, கோவிந்தசாமி ஆகிய மூவருக்கும் உடலெங்கும் உள்காயங்கள், அரிவாள் கீறல்கள். இந்த அளவுக்குத் தாக்கிய பின்னரும் வெறி அடங்காத இக்கொலைகார கும்பல், தோழர்கள் மருத்துவமனை சென்று விடாதிருக்க, அவர்களைக் காரில் தூக்கிப் போட்டு சிவகிரிக்குக் கொண்டு சென்றது.

இக்கொலைவெறித் தாக்குதல் திட்டத்தினைப் பற்றி முன்பே அறிந்திருந்த போலீசு, நிலைமை கைமீறிப் போய்விடாதிருக்க, எதிரே வேனில் வந்து தோழர்களைக் கைப்பற்றி தமது வாகனத்தில் ஏற்றிக் கொண்டது. தோழர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், சிவகிரி போலீசு நிலையத்திலேயே வாகனத்தை நிறுத்திப் போட்டது. தோழர்கள், கடுமையாக எச்சரித்த பிறகே, வாகனத்தைக் கிளப்பி அதிகாலை 2.30 மணியளவில் ஈரோடு மருத்துவமனையில் சேர்த்தது.

 

இதற்கிடையில் தலையில் வெட்டுப் பட்டு, கை எலும்பு முறிந்து, மயங்கி விழுந்து இருட்டில் தனியாகக் கிடந்துள்ளார் தோழர் செந்தில்குமார். இவரை இறந்துவிட்டதாகக் கருதி, காரில் ஏற்றாமல் தாக்குதல் நடந்த இடத்திலேயே இருட்டில் போட்டு விட்டுச் சென்றுள்ளது இந்தக் கொலைகாரக் கும்பல். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து தட்டுத்தடுமாறிச் சென்று தொலைபேசி மூலம் தனது வீட்டிற்குத் தகவல் தெரிவித்துள்ளார், அவர். அதன்பிறகு வந்த போலீசார் தோழரை வாகனத்தில் ஏற்றி அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

இவ்வளவுக்குப் பின்னரும் தோழர்களிடம் வாக்குமூலம் பெறவோ, எதிரிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யவோ போலீசு முயற்சிக்கவில்லை. தோழர்களும் வழக்குரைஞர்களும் மேல்மட்ட கீழ்மட்ட போலீசு அதிகாரிகளைத் தொடர்ந்து வலியுறுத்திய பின்னரே, இக்கிரிமினல் கொலைகார கும்பல் மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கணக்கு காட்டினர். ஊருக்குள் போலீசு கண்முன்னாலேயே திரியும் ஜோதிராமலிங்கம், சூரியமூர்த்தி ஆகியோர் உள்ளிட்ட இக்கும்பலைக் கைது செய்யாமல், தேடிக் கொண்டிருப்பதாகப் போலீசார் பசப்புகின்றனர். முக்கியத்துவமற்ற 5 பேரைக் கைது செய்து உடனே பிணையில் விடுவித்து விட்டனர்.

 

ஆனால், கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாகி, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த தோழர்கள் மீது மூன்று பொய் வழக்குகள் போலீசாரால் சோடிக்கப்பட்டன. அமைச்சர் இராமசாமி நேரடியாகவே ஈரோடு அரசு மருத்துவமனையின் இணை இயக்குனரான நாகராஜனிடம் வலியுறுத்தி உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் தோழர்களைக் கட்டாயமாக ""டிஸ்சார்ஜ்'' செய்ய வைத்துள்ளார்.

 

உடனே, சோடிக்கப்பட்ட பொய் வழக்குகளின் அடிப்படையில், மருத்துவமனையிலிருந்து நள்ளிரவில் தோழர்களைக் கொண்டு சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளது, கிரிமினல்களின் ஏவல்படையான போலீசு. இப்பிரச்சினையை ஒட்டி நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகளான கொடுமுடி போலீசு ஆய்வாளர் முத்தழகன், பெருந்துறை போலீசு கண்காணிப்பாளர் சின்னப்பன் ஆகிய இருவரும் வெளிப்படையாகவே ஜோதிராமலிங்கம் சூரியமூர்த்தி கும்பலுக்கு ஆதரவாகப் பேசியும் செயல்பட்டும் வருகின்றனர்.

 

கொலைகார கிரிமினல் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் போலீசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் பு.மா.இ.மு. சார்பாக தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளும் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டன. போலீசாரோ, ஜோதிராமலிங்கம் சூரியமூர்த்தி கும்பலைத் தூண்டிவிட்டு ""வன்முறையை தூண்டும் புரட்சிகர அமைப்புகளைத் தடைசெய்!'' என சுவரொட்டி ஒட்டச் செய்தது. பு.மா.இ.மு.; த.ஒ.வி.இ.; ஆ.த.பே ஆகிய அமைப்புகள் கூட்டாக 21.9.05 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியபோது, முதலில் அனுமதிப்பதாகக் கூறிய போலீசு, கடைசி நேரத்தில் ஆர்ப்பாட்டத்துக்குத் தடைவிதித்தது.

 

ஓட்டுப் பொறுக்கிகள், சாதிவெறியர்கள், கிரிமினல்கள், போலீசு ஆகியவற்றின் கூட்டணி ஆட்சிக்கும், மக்கள் மீது அனைத்துவகை சுரண்டல் ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கும் இன்னுமொரு இரத்த சாட்சியம்தான் பு.மா.இ.மு. தோழர்கள் மீதான இக்கொலைவெறித் தாக்குதல்! ""இக்கிரிமினல் கும்பலின் கோழைத்தனமான தாக்குதலுக்கு அஞ்சமாட்டோம்! இவர்களின் அயோக்கியத்தனங்களையும் ஆதிக்கத் திமிரையும் எதிர்த்துத் தொடர்ந்து போராடுவோம்!'' என்று சிவகிரி ஈரோடு பு.மா.இ.மு. தோழர்கள் துண்டறிக்கை வெளியிட்டு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழகமெங்கும் அமைச்சர் இராமசாமி மற்றும் அவரது எடுபிடி கிரிமினல் கும்பலை அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளன.

போலீசும் அதிகார வர்க்கமும் இக்கிரிமினல் கும்பலைப் பாதுகாத்தாலும், மக்களின் வெஞ்சினத்திலிருந்த இக்கும்பல் ஒருக்காலும் தப்பிவிட முடியாது என்பது திண்ணம்.

 

புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, சிவகிரிஈரோடு.