10_2005.jpgமன்மோகன் சிங் இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக அமெரிக்காவுக்குப் போயிருந்தபோது அறிவித்தார்: 'இந்தியாவை விற்பதற்காக வந்திருக்கிறேன்!" அப்போது யாரும் அந்தச் சொற்களை நேரடிப் பொருளில் எடுத்துக் கொள்ளவில்லை. பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சியைத்தான் அப்படிச் சொல்கிறார் என்றே பலரும் நம்பினார்கள். ஈரானுடனான இந்தியாவின் இயற்கை எரிவாயு இறக்குமதி ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்த்தபோது, அதே மன்மோகன் சிங் தனது போலி கம்யூனிஸ்டு கூட்டாளிகளுக்கு வாக்குறுதி கொடுத்துச் சொன்னார், 'இந்தியா விற்பனைக்கு

 அல்ல" என்று. அமெரிக்காவிற்கு விமானம் ஏறும் முன்பு இப்படிச் சவடாலடித்த மன்மோகன் சிங் அங்கே போய் இறங்கியவுடன், பொருட்களை மட்டுமல்ல் நாட்டையே பேரம்பேசி விலைக்கு விற்கக் கூடிய, உலகிலேயே மிகவும் சூழ்ச்சிகார மோசடித் தரகு பெரும் வியாபாரிதானேயென்று காட்டிவிட்டார்.

 

உலக மேலாதிக்க மேல்நிலை வல்லரசும், போர்வெறி பிடித்த ஏகாதிபத்திய நாடுமாகிய அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம்; அதனுடன் சிவிலியன் அணுசக்தி ஒப்பந்தம்; அந்தச் சமயத்திலே பேரம் பேசி முடித்து இரகசியமாக வைக்கப்பட்ட எழுதப்படாத இன்னொரு ஒப்பந்தம் ஆகியவற்றை கடந்த ஜூலை மாத அமெரிக்கப் பயணத்தின்போதே மன்மோகன் சிங் கும்பல் முடித்து விட்டது. துண்டைப் போட்டு மூடிக் கொண்டு, கைவிரல்களாலேயே பேரம் பேசி முடிக்கும் கால்நடைத் தரகு வியாபாரிகளைப் போல, அவமானகரமாகவும், அசிங்கமாகவும், கேவலமாகவும் செய்திருக்கிறார்கள். அடுத்து நடக்கவிருந்த, அனைத்து நாட்டு அணுசக்தி முகாமையின் இயக்குநர்கள் வாரியத்தின் வியன்னா சந்திப்பில், ஈரானுக்கு எதிரான ஐரோப்பிய நாடுகளின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதுதான் இரகசியமாக வைக்கப்பட்ட, எழுதப்படாத அந்த மூன்றாவது ஒப்பந்தம். இது ஏதோ இவ்வளவு காலமும் கூட்டுச் சேரா நாடுகளின் பக்கம் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைக் கைவிட்டு அமெரிக்கச் சார்பு நிலையெடுத்து, தன்னைப்போலவே வளரும் நாடாகிய ஈரானுக்கு எதிராக வாக்களித்துவிட்ட ஒரே தவறு என்று பார்க்கக்கூடாது.

 

இந்த ஒப்பந்தங்களின் சாரங்களையும், முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டாலே மன்மோகன் சிங் சோனியா கும்பல் எவ்வளவு பெரிய துரோகம் செய்துள்ளது என்பதை முழுமையாக அறிய முடியும். இன்றைய உலகின் பெட்ரோலிய எண்ணெய் இயற்கை எரிவாயு மிக்க நாடுகளில் ஒன்று ஈரான். ஆனாலும் அந்நாட்டின் இயற்கை எரிபொருள் பயன்பாடு தற்போதைய விகிதத்தில் தொடர்ந்தால் கூட, இன்னும் 20 ஆண்டுகளில் தானே பெட்ரோலிய எண்ணெய் இறக்குமதி நாடாகிவிடும். இயற்கை எரிசக்தியின் உலக அளவும் கூட வரம்புக்குட்பட்டதே; புதிதாக எண்ணெய் எரிவாயு ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட இன்னும் சில பத்தாண்டுகளில் வேறு பிற எரிசக்திகளின் மூலாதாரங்களைத் தேடிக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு உலகின் பல நாடுகள் தள்ளப்பட்டு விடும். மூலாதாரம் அணுசக்திதான் அத்தகைய மலிவான மாற்று எரிசக்தி. அந்த வசதியை உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தினால் ஏற்கெனவே அந்த வசதி பெற்றுள்ள அமெரிக்கா, ரசியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வரிசையில் சேருவதற்கு ஈரான், வடகொரியா போன்ற சில நாடுகளும் முயற்சிக்கின்றன.

 

தற்போதைய முதன்மை எரிசக்தியாகிய பெட்ரோலிய எண்ணெய் வளமிக்கதாக வேறு சில நாடுகள் உலகில் இருப்பினும், அமெரிக்காதான் அந்த வர்த்தகத்தில் ஏகபோக ஆதிக்கம் பெற்றுள்ளது; அதேபோல வருங்கால முதன்மை எரிசக்தியாகிய அணுசக்திப் பயன்பாட்டில் வேறு சில நாடுகளும் முன்னேறியிருந்தாலும், அமெரிக்காதான் அணுசக்தி, அணு ஆயுதத் தயாரிப்புகளில் முன்னணியாகவும் ஏகபோக நிலையிலும் உள்ளது. உலகின் வேறு எந்த நாடும் தன்னைப் பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் விஞ்சிவிடக் கூடாது, சுயசார்பு நிலையை அடைந்து விடக் கூடாது என்ற மேலாதிக்க வெறியில் அமெரிக்கா துடிக்கிறது. அதற்காகவே எண்ணெய்வளமிக்க மத்தியமேற்கு ஆசிய நாடுகளைத் தனது மேலாதிக்கத்தில் வைத்துக் கொள்வதற்காக ஆப்கானின் தாலிபான் அல்கொய்தா பயங்கரவாதத்தையும் ஈராக்கின் சதாம் உசேனின் பாசிச ஆட்சியையும் காரணம் காட்டி, முறையே பயங்கரவாதம் மற்றும் மக்கள் பெருந்திரள் அழிவு ஆயுதக் குவிப்பு பீதியூட்டி அந்நாடுகள் மீது பேரழிவுப் போர்நடத்தி ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

 

மாற்று எரிசக்தியாக அணுசக்தியைப் பெற்று, சுயசார்புத் தொழில் முயற்சியில் ஈடுபடும் நாடுகள் மீது அணுஆயுதத் தயாரிப்புகளைச் செய்வதாகப் பழிபோட்டு, தனிமைப்படுத்தும் முயற்சியையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இந்தியாவும் பாக்.கும் இருதரப்புப் பகை காரணமாக அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டபோது, அது உலக நாடுகளுக்கே எதிரானது என்று மிரட்டிப் பணியவைத்தது.

 

ஈரானில் அமெரிக்கக் கைக்கூலி ஷாவின் பாசிச மன்னராட்சியைப் புரட்சி நடத்தித் தூக்கியெறிந்த மத குருமார்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய சுயசார்பை இன்னமும் பேணுகின்றனர். அதேபோல சோவியத் ஒன்றியமும் சீனாவும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டபோதும், வடகொரியா அதற்கு அடிபணிய மறுக்கிறது. இவ்விரு நாடுகளும் சுயசார்பு நோக்கத்திற்கு அணுசக்தியை பயன்படுத்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பு முயற்சிகளில் இறங்கியுள்ளன. ஈரான் 1974இல் கையொப்பமிட்டுள்ள அணுஆயுதத் தடுப்பு ஒப்பந்தப்படியே அதற்கான உரிமை ஈரானுக்குண்டு.

 

ஆனால், அதையே அணுஆயுதத் தயாரிப்பு முயற்சி என்று புளுகி ஆக்கிரமிப்புப் போர் தொடுக்க அமெரிக்கா எத்தணிக்கிறது. இதன் ஒரு பகுதியாக தான் உலக அணுஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தை மீறி விட்டதாகவும் அந்நாட்டின் அணுசக்தி கட்டுமானங்களைப் பார்வையிடுவதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும் புகார் கூறி ஐரோப்பிய நாடுகளை முன்னிறுத்தி சர்வதேச அணுசக்தி முகாமை இயக்குநர் வாரியத்தில் தீர்மானம் நிறைவேற்ற செய்திருக்கிறது, அமெரிக்கா. ஈராக்கில் பேரழிவுப் பேராயுதங்கள் குவித்து வைத்திருப்பதாகப் புளுகி, ஐ.நா. மேற்பார்வையாளர்களை அனுப்பி நாடகமாடி ஆக்கிரமிப்புப் போர் தொடுத்ததைப் போன்றே, ஈரானுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு ஒரு முகாந்திரம் தேடிக் கொள்ளும் முயற்சிதான் இது. இம்முயற்சிக்கு மன்மோகன் சிங் கும்பல் துணை போகும் வகையிலே அத்தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருக்கிறது.

 

மன்மோகன் சிங் கும்பலின் இச்செய்கை, இதுவரை இந்தியா பின்பற்றி வந்த கூட்டுச் சேராக் கொள்கையில் இருந்து விலகிப் போவதாகவும், ஈரானில் இருந்து மலிவு விலையில் எண்ணெய் இறக்குமதி செய்யும் திட்டத்தைப் பாதிக்கும் என்றும் புலம்புகிறார்கள், எச்சரிக்கிறார்கள், போலி கம்யூனிஸ்டுகள். புலம்புவதும், எச்சரிப்பதும் பின்னர் பா.ஜ.க. ஆதரவை காட்டி சரணடைவதுமே வழக்கமாக்கிக் கொண்டார்கள். ஆனால், இந்தியாவின் நிலை இத்தகையதாகத்தான் எப்பாதுமே இருந்து வந்திருக்கிறது. முன்பு சோவியத் ஒன்றியம், அமெரிக்கா இரண்டையும் மாறி மாறிச் சார்ந்திருந்த இந்தியா வெறுமனே கூட்டுச் சேராக் கொள்கை என்று நாடகமாடி வந்திருக்கிறது. குறிப்பாக, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்துக்கு துணை போவதே எந்த ஆட்சி நடந்தாலும் இந்தியாவின் நிலையாக இருக்கிறது.

 

இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்கது, மன்மோகன் சிங் கும்பலின் நம்பவைத்துக் கழுத்தறுக்கும் துரோகத்தனம்தான். அதன் ஜூலை மாத அமெரிக்கப் பயணத்தின் போதே அந்நாட்டுடனான இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கான பேரங்களின் போதே, ஈரானுக்கு எதிராக வாக்களிக்கும்படியான அமெரிக்கக் கட்டளையை இந்தியா ஏற்றுக் கொண்டு விட்டது. ஆனால், ஓட்டெடுப்புக்கு முதல் நாளிரவு வரை ஈரானை ஆதரிக்கப் போவதாகக் கூறி கழுத்தறுப்பு வேலை செய்துவிட்டது. நாட்டையே மறுகாலனியாக்கும் துரோகிகள், இத்தகு கழுத்தறுப்பு வேலைகளில் ஈடுபடுவது வியப்புக்குரியதல்ல் வெறுக்கத்தக்கது!