10_2005.jpgஅரியானா மாநிலத்தில் ஜாட் சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்பு பகுதியில் புகுந்து பகற் கொள்ளையில் ஈடுபட்டதோடு, அப்பகுதியையே கொளுத்திச் சாம்பல் மேடாக்கியது.

 

அரியானா மாநிலத்தின் பாணிபட் மாவட்டத்தில் உள்ள நகரம், கோஹனா. அந்நகரத்தின் நெரிசல் மிகுந்த வர்த்தகப் பகுதியில் உள்ளது தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வால்மீகி மற்றும் ஆர்யா என்ற இரு குடியிருப்புப் பகுதிகள். கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந் தேதி மதியம் பட்டப்பகலில் 1500க்கும் மேற்பட்ட ஜாட் சாதிவெறிக் கும்பல் ஒவ்வொரு வீடாகச் சென்று கொள்ளையடித்தது. முடிவில், குடியிருப்புகளின் மீது பெட்ரோல் டின்களை வீசி மொத்தமாகக் கொளுத்தியது.

 

தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்புகளில் இருந்த இரண்டு சக்கர வாகனங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், சமையல் எரிவாயு சாதனங்கள், நவீன மின்னணுக் கருவிகள் மற்றும் கணிப்பொறிகள் ஆகியவற்றைக் கூச்சமின்றிக் கொள்ளையடித்ததோடு, மாடி வீடுகளை தூக்கிச் செல்லமுடியவில்லையே என்ற ஆத்திரத்தில் அவற்றுக்குள் இருந்த மரச்சாமான்களையும் சேர்த்து தீ வைத்தது.

 

'என்ன இது? தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் குடிசை என்றால், சட்டியும் பானையும் சாம்பல் அடுப்பும்தானே இருக்கும்? ஆனால், இங்கு சலவை இயந்திரங்கள், கணிப்பொறிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் இவற்றோடு அழகான மாடி வீடுகள் கட்டிக் கொண்டு 'கீழ்சாதி"க் கூட்டம் வசிப்பதா? அவர்கள் அனுபவிக்க நாம் வேடிக்கைப் பார்ப்பதா? மலத்தைச் சுமக்கும் தோட்டி கும்பல் மச்சு வீட்டில் வாழ்வதா?" என்ற உயர்சாதி கொழுப்பு ஜாட் சாதிவெறியர்களிடம் கொழுந்து விட்டு எரிந்தது.

 

விளைவு; தலித் மக்களின் 50 ஆண்டுகால ரத்தமும் வேர்வையும், கனவும், உழைப்பும் வெறும் அரைமணி நேரத்தில் ஜாட் சாதிவெறிக் கும்பலால் சாம்பல் மேடாக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதை தன்மானத்தின் குறியீடாக நிமிர்ந்து நின்ற அவர்களின் மாடி வீடுகளை ஜாட் சாதிவெறிக் கும்பல் குறிவைத்துத் தகர்த்தது. ""மாடி வீட்டில் வாழும் அவர்கள் தங்களைத் தலித்துகள் என்று ஏன் இன்னும் கூறிக் கொள்கிறார்கள்?'' என்று, தாழ்த்தப்பட்டோரைச் சக மனிதர்கள் என்று ஏற்றுக் கொள்ளவே மனம் ஒப்பாமல் பொருமுகிறார்கள் கோஹனா நகர நடுத்தர வர்க்கத்தினர். இதில் ஜாட் சாதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் பள்ளி ஆசிரியர் முதல் சிறுகடை வியாபாரிகள் வரை பலரும் அடக்கம். தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தையும் அவர்கள் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டதையும் 'தவிர்க்க முடியாதது", 'வேறு வழியில்லை" என்று வக்காலத்து வாங்கி வக்கிரமாக தங்கள் மகிழ்ச்சியை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். அந்த அளவு சாதி இந்துக்களிடம் தாழ்த்தப்பட்டோர் மீதான வெறுப்பு உயர்சாதி திமிராக அருவருப்பாக வழிகிறது.

 

தாழ்த்தப்பட்டோர் மீதான ஜாட் சாதிவெறியர்களின் வன்முறை வெறியாட்டத்திற்குத் துவக்கப் புள்ளியாக போலீசு சொல்லும் காரணம் வழக்கம்போல் சாதிவெறியர்களுக்கு குடைபிடிப்பதாகவே உள்ளது. பல்ஜுத் ஷிவாக் என்ற ஜாட் சாதிய இளைஞனை தலித்துகள் அடித்துக் கொன்றனர். அதுதான் இக்கலவரத்திற்கு விதை என்கிறது போலீசு.

 

உண்மையில் பல்ஜுத் ஷிவாக் என்பவன் ஊரறிந்த ரௌடி. பொம்பளை பொறுக்கி. இவனுடைய பொறுக்கித்தனத்தை தாழ்த்தப்பட்டோர் பலமுறை எச்சரித்துள்ளனர். திருமணமான இளம் தாழ்த்தப்பட்ட பெண்ணை இவன் வழிமறித்து வக்கிரமாக ஆபாச சைகை காட்ட, அதைப் பார்த்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அவனைத் தாக்க, மோதலில் அவன் இறந்து போனான். மோதலில் ஈடுபட்ட 4 தாழ்த்தப்பட்ட இளைஞர்களை போலீசு உடனே கைது செய்து, வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. இருந்தும், தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டதற்கு இதுதான் காரணம் என்று கரடி விடுகிறது, போலீசு.


ஆதிக்க சாதிவெறியர்களிடம் வழியும் அதிகார சாதிக் கொழுப்பை போலீசு எந்த அளவுக்கு நக்கி சுவைக்கிறது என்று தெரிகிறதா?

 

'ஒரு தாழ்த்தப்பட்டவனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை குற்றவாளிக்கு மட்டுமல்ல் அவன் சார்ந்த சமூகம் முழுவதும் அந்த தண்டனையைச் சுமக்க வேண்டும்" என்று பகிரங்கமாக சாதி வெறியர்கள் கொக்கரிக்கிறார்கள்.

 

இந்து சாதிவெறியர்களுக்கு எதிராக ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவர் போராட்டத்தில் இறங்கினாலும் உடனடியாக அடிமைக்கால தண்டனைகளை ஏவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை மொத்தமாகப் பழிதீர்க்கிறார்கள், உயர்சாதி வெறியர்கள். இதற்கு சமீபத்திய உதாரணம், ஒரிசா மாநிலத்தில் பூரி மாவட்டம், புபன்பதி என்ற கிராமத்தில் செப்டம்பர் 19ந் தேதி நடந்த குரூரம்!

 

கண்டாயித் என்ற இந்து ஆதிக்கச்சாதி திருமணத்தில் மாப்பிள்ளையின் காலை கழுவும் அடிமை வேலையை செய்ய மறுத்த தாழ்த்தப்பட்டோரைத் தண்டிக்க, அக்கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட பெண்கள் அனைவரையும் நிர்வாணமாக்கி நடத்திச் சென்றனர் இந்து சாதிவெறியர்கள்.

 

ஆட்சி அதிகாரத்தை அதன் அடிவரை சுவைக்கும் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் மனிதர்களே அல்ல! எனவே, சக மனிதர்கள் அனுபவிக்கும் எந்த உரிமையும் அவர்களுக்கு இல்லை. அதுமட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டம் வழங்கும் இடஒதுக்கீட்டு 'சலுகை"கள் கூட அவர்கள் அனுபவிப்பதை மேல்சாதி வெறியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

 

கோஹனா நகரத்தின் வர்த்தக மையத்தில் மாடி வீட்டில் வாழ்ந்து கொண்டு, கலர் டி.வி. பார்த்துக் கொண்டு, மோட்டார் பைக்கில் பறந்து கொண்டு, "லேப்டாப்' கம்ப்யூட்டரைத் தட்டிக் கொண்டு, கூடவே தங்களை 'தலித்" என்று கூறிக் கொண்டு இடஒதுக்கீட்டைப் பெற்று அரசு வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். சமயத்தில் வெளி நாட்டுக்கும் பறந்து விடுகிறார்கள்; என்ற "பொச்சரிப்பை' பரப்பித் தான் தாழ்த்தப்பட்டோரின் சொற்ப சொத்துக்களையும் தீவைத்து கொளுத்தினார்கள், ஜாட் சாதிவெறியர்கள்.

 

ஆனால், கோஹனா நகரத்து தலித்துகள், சினிமா கழிசடைகள் போன்றோ, ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் போன்றோ அல்லது கந்துவட்டி, மணல் திருட்டு, கள்ளச்சாராயம் காய்ச்சும் திடீர் பணக்கார பொறுக்கிகள் போன்ற கூட்டம் அல்ல. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நகரத்தில் அவர்கள் செலுத்திய கடுமையான உழைப்பும், கட்டுப்பாடான வாழ்க்கைமுறையும் தங்களின் குழந்தைகளின் கல்விக்காகவும் எதிர்கால வாழ்க்கைக்காகவும் மிக நீண்டகாலத்திற்குத் திட்டமிடும் அவர்கள் பாங்கும் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.

 

பணம் படைத்த ஜாட் ஆதிக்க சாதி கும்பல்களே இவர்களைக் கண்டு மிரளும் அளவுக்கு தங்களுக்குள் ஒன்றுபட்டு, பலம் பொருந்திய அமைப்பாக திரண்டு ஜாட் ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளை முளையிலேயே கிள்ளி எறிகிறார்கள். இங்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தலைமுறை நபர்களும் ஒரு படி முன்னேற்றத்தில் நிற்கிறார்கள். தாத்தா, நகராட்சியில் தெரு கூட்டுபவர்; அப்பா, ரயில்வேயில் எழுத்தர்; மகன், எம்.சி.ஏ., மாணவன், கூடுதலாக பகுதிநேர வேலையில் வருமானம். பிள்ளைகள் பெரும்பாலும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்களாகவும், ஏதாவது ஒரு தொழிற்பயிற்சியில் தேர்ச்சி அடைந்தவர்களாகவும் வளர்கிறார்கள். தாத்தா பார்க்கும் தெருக்கூட்டும் வேலையை வரும் தலைமுறையினர் இனிமேலும் தொடரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

 

தாழ்த்தப்பட்டோர் என்றால் உதிரிகள், தலைசொரிந்து நின்று மீதம்மிச்சத்தை வாங்கிக் கொள்பவர்கள், பிறரின் கருணைக்கு ஏங்குபவர்கள் என்ற ஆதிக்க சாதியினரின் சித்திரத்தை நிர்மூலமாக்குகிறார்கள். கோஹனா நகரத்தில் உருக்கு போன்ற அமைப்பாக திரண்டு இருக்கும் உழைக்கும் தாழ்த்தப்பட்டோரைக் கண்டு தீக்குள் விரலை விட்டவர்கள் போல் நடுங்குகிறார்கள், ஜாட் ஆதிக்க சாதிவெறியர்கள்.


கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவதும் ஏவிய வேலையை செய்து முடிப்பதும் அதிகபட்சம் போனால், ஆடுமாடுகள் போல் அடிமை வேலைக்குப் படைக்கப்பட்டவர்கள்தான் 'தாழ்த்தப்பட்டோர்" என்ற உயர்சாதி திமிர் கோஹனா நகரத்து தாழ்த்தப்பட்டோரிடம் செல்லுபடியாகவில்லை.

 

"கோஹனா நகரத்து" தாழ்த்தப்பட்டோர் வளமான எதிர்காலத்தைப் பற்றி கனவுகள் காண்பது குற்றம்! அவர்களுக்கு சொத்துக்கள் இருப்பது குற்றம் 'அவர்களுக்கு சுயமரியாதை தன்மானம் இருந்தால் பெருங்குற்றம்! அவர்கள் மனிதர்களாக அல்ல, மனிதர்கள் மாதிரி நடந்துக் கொண்டாலே அது மன்னிக்க முடியாத குற்றம்!" என்று கொக்கரிக்கிறது, ஜாட் ஆதிக்க சாதிவெறி கும்பல்.

 

இன்று நேற்றல்ல. இரண்டாயிரம் ஆண்டுகாலமாக இந்த உயர்சாதி இறுமாப்பில்தான் தாழ்த்தப்பட்டோரைக் கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆதிக்க இந்துசாதி வெறியர்கள். இதற்கு முடிவுகட்ட ஆதிக்க சாதிவெறியர்களின் வழியிலேயே அவர்களுக்கு நாம் பாடம் புகட்டுவோம்! ஜாட் ஆதிக்க சாதிவெறி கும்பலைத் தனிமைப்படுத்த வாக்குரிமை உள்பட அனைத்து சிவில் உரிமைகளையும் அக்கும்பலுக்கு ரத்து செய்யுமாறு தெருப் போராட்டங்களை கட்டவிழ்த்து விடுவோம்.

 

மு குணசேகரன்