Language Selection

11_2005.jpgகூலித் தொழிலாளர்களை ஒரு சங்கமாகத் திரட்டுவதென்பது மிகவும் இடர்ப்பாடுகள் நிறைந்த பணி. அப்படியே சங்கமாகத் திரண்டாலும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் சீரழிவுப் போக்குகளிலிருந்து மீட்டு அரசியல் ரீதியாகவும் அமைப்புக் கட்டுப்பாட்டுடனும் சங்கத்தைக் கட்டி வளர்ப்பதென்பது மிகவும் கடினமான பணி. இத்தகைய பெருஞ்சுமையைத் தோள்களில் தாங்கி, சென்னை ஆலந்தூர் அரிசி மண்டிசுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமாக கடந்த ஓராண்டாகச் செயல்பட்டு வருகின்றனர்.

 

இச்சங்கத்தின் முதலாம் ஆண்டுவிழா சங்கத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் ஆலந்தூர் எம்.கே.என்.சாலையில் (மார்க்கெட்) 4.10.05 அன்று மாலை நடைபெற்றது. ஆண்டு விழா என்றாலே ஆட்டம், பாட்டம், சீமைச் சாராய தள்ளாட்டம் என்று இதர பிழைப்புவாத சங்கங்கள் கொண்டாடும் வேளையில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வர்க்க உணர்வோடு அரிவாள் சுத்தியல் சின்னம் பொறித்த சிவப்பு பனியனை உறுப்பினர்களுக்கு வழங்கி தாங்கள் கம்யூனிச இயக்கத்தின் ஓர் அங்கம் என்பதைப் பறைசாற்றினார்கள்.

 

ஆலந்தூர் வியாபாரிகள் சங்கத் தலைவர்களை முன்னிலைப்படுத்தி நடந்த இந்த ஆண்டுவிழாவில் சங்க முன்னணியாளர்கள் உரையாற்றிய பிறகு, ம.க.இ.க. மையக் கலைக் குழுவினர் நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சி நூற்றுக்கணக்கான மக்களை ஈர்த்து போராட்ட உணர்வூட்டியது. முன்னுதாரணமாக நடந்த இந்த ஆண்டுவிழா நிகழ்ச்சியால் உணர்வு பெற்ற இதர அமைப்புசாரா தொழிலாளர்களும் சங்கத்தில் இணைய ஆர்வத்துடன் முன்வந்திருப்பது, இவ்விழாவின் வெற்றியைப் பறைசாற்றுகிறது.

 

புதிய ஜனநாயகத் தொழிலாளர்

முன்னணி, சென்னை.