11_2005.jpgநகரத்தை அழகுபடுத்துவதாக கூறிக் கொண்டு, உலக வங்கியிடம் வாங்கிய கடனுக்காக ""போக்குவரத்து நெருக்கடி'' என்ற பொய்க் காரணத்தைக் காட்டி, பண்டிகைக் காலத்திலும் தரைக் கடைகள் போடத் தடை விதித்துள்ளது, திருச்சி மாநகராட்சி. என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம் பகுதியில் பல தலைமுறைகளாக தரைக்கடை போட்டு வியாபாரம் செய்து வந்த சிறுவியாபாரிகள் போலீசாராலும் மாநகராட்சியாலும் தடுத்து விரட்டப்பட்டதை எதிர்த்தும், மீண்டும் தரைக்கடைகள் போட அனுமதி கோரியும் கடந்த ஐந்தாண்டுகளாக தரைக்கடை வியாபாரிகள் போராடி வருகின்றனர். தற்போது பண்டிகைக் கால சூழலிலும் கூட இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

போக்குவரத்து நெருக்கடி என்று காரணம் காட்டி தரைக்கடை வியாபாரிகளை விரட்டும் மாநகராட்சி ""சாரதாஸ்'', ""மங்கள் அண்டு மங்கள்'', ""சென்னை சில்க்ஸ்'' முதலான நிறுவனங்கள் சாலையையே மறித்து வாடிக்கையாளர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றியுள்ளதைத் தடுப்பதில்லை. நடவடிக்கையும் எடுப்பதில்லை. தரைக்கடை வியாபாரிகள், சிறு வியாபாரிகளை ஒழித்துக் கட்டிவிட்டு பன்னாட்டு கம்பெனிகளின் பொருட்களை விற்பவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பதே நகரை அழகுபடுத்துவது என்ற பெயரில் வந்துள்ள உலக வங்கியின் உத்தரவு. அதை விசுவாசமாகச் செயல்படுத்தும் அதிகார வர்க்கமும் போலீசும் போக்குவரத்துக்கு இடையூறு என்று தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கின்றன. கோடிக்கணக்கான உழைக்கும் மக்களால் உருவான நகரங்கள், இன்று பத்து சதவீத பணக்காரர்களுக்கானதாக மாறி வருகின்றன. ஏழைகள் நகரத்தை விட்டே விரட்டப்படுகின்றனர். இது தரைக்கடை வியாபாரிகளின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. உழைக்கும் மக்கள் மீது, தனியார்மயம் தாராளமயம் உலகமயம் தோற்றுவித்துள்ள கொடிய தாக்குதல். இதனை உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும்.

 

இதனடிப்படையில், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் துண்டுப் பிரசுரம் வெளியிட்டு மக்களிடம் விநியோகித்து ""தரைக்கடைகள் போட அனுமதி கோரியும், பெருந் துணிக் கடைகள் அருகே சட்ட விரோதமாக கார்களை நிறுத்த அனுமதிக்கும் போலீசையும் மாநகராட்சி அதிகாரிகளையும் கண்டித்தும்'' குடும்பத்தோடு நூற்றுக்கணக்கான வியாபாரிகள் 17.10.05 அன்று மாலை திருச்சி அண்ணாசிலை அருகே எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தமது வாழ்வுரிமைக்காகத் தொடர்ந்து போராடிவரும் இச்சங்கத்தினர் உழைக்கும் மக்களின் ஆதரவுடன் அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

தகவல்: அனைத்து

 

தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், திருச்சி.