Language Selection

புதிய ஜனநாயகம் 2005

11_2005.jpgஇந்தியாவின் அணுசக்தி கொள்கையை, இனி அமெரிக்காதான் தீர்மானிக்கப் போகிறது என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. இது போனால் கூட, மற்ற கொள்கைகளைத் தீர்மானிக்கும் உரிமையும், சுதந்திரமும் இந்திய அரசிற்கு இருக்கிறா என்றால், இந்தியாவில் ஓடும் சாக்கடைகளைச் சுத்தப்படுத்துவதைக் கூட நாங்கள்தான் தீர்மானிப்போம் என்கிறது உலக வங்கி. இந்திய அரசு, தனது குடிமக்களுக்குக் குடிநீர் வழங்குவது; கழிவுநீர் அகற்றுவது போன்ற சுகாதாரப் பணிகளைச் செய்வதை எதிர்காலத்தில் எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்; என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்

 என்பது குறித்து ""இந்தியாவின் தண்ணீர் பொருளாதாரம்'', ""இந்தியாவின் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரம்'' என்ற இரு அறிக்கைகளை உலக வங்கி, சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

 

""இந்தியாவின் நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்குக் குடிநீர் வழங்குவது விரிவடைந்து கொண்டே போனாலும், இது நம்பக் கூடியதாக இல்லை'' எனக் குறைபட்டுக் கொள்கிறது உலக வங்கியின் அறிக்கை. குழாயைத் திறந்தால் காற்று வருமா, தண்ணீர் வருமா? தண்ணீர் வந்தாலும் சுத்தமாக வருமா, சாக்கடைத் தண்ணீருடன் கலந்து வருமா? எனத் தினம் தினம் பொது மக்கள் சந்திக்கும் பிரச்சினையைத்தான் உலக வங்கியும் குறிப்பிடுகிறது.

 

இந்தக் குறைபாடு நிலவுவதற்குக் காரணம், ""இந்தியாவிற்கு தண்ணீரை ஒழுங்காக நிர்வாகம் செய்யத் தெரியவில்லை; நீர் ஆதார உரிமைகள்; தனியாருக்கு அனுமதி கொடுப்பது; போட்டி; ஒளிவுமறைவற்ற தன்மை; பதில் சொல்லும் பொறுப்பு ஆகிய விசயங்களில் இந்தியா அக்கறை செலுத்த மறுப்பதால்தான், நிர்வாகமும் ஒழுங்காக நடப்பதில்லை'' என உலக வங்கி குற்றம் சுமத்துகிறது.

 

இப்படி வர்த்தைகளைப் பின்னி பின்னிப் போட்டு உலக வங்கி சொல்ல வருவது இதைத்தான்: ""குடிநீர் விநியோகிப்பதில் தனியார்மயம் இல்லை; அதனால் நிர்வாகம் சரியில்லை''. இதனை, உலக வங்கி மிகவும் சூசகமாகத் தனது அறிக்கையில், ""1991இல் புகுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், நிதித்துறையில் இருந்து கீழ் இறங்கி, இன்னும் ஆழமாக பெரும்பான்மையான துறைகளுக்குச் செல்ல வேண்டும்'' எனச் சுட்டிக் காட்டியுள்ளது; மேலும், ""குடிநீர் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டாம்; இருப்பதை நல்ல முறையில் நிர்வகிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்'' என இந்திய அரசிற்கு அறிவுரை கூறியிருக்கிறது.

 

""எங்கள் கிராமத்திற்குக் குடிநீர் தொட்டி கட்டிக் கொடுங்கள்; எங்கள் தெருவுக்குப் பொதுக் குழாய் போட்டுக் கொடுங்கள் எனப் பொது மக்கள் கேட்டால், மறுத்துவிடுங்கள்; ஏற்கெனவே போடப்பட்ட குடிநீர் திட்டங்களைத் தனியாரிடம் ஒப்படைத்து விடுங்கள்'' என்பதுதான் இதன் பொருள்.

 

இந்திய மக்கள் சந்திக்கும் குடிநீர் பிரச்சினை, பாசன நீர் பிரச்சினை, வறட்சி ஆகியவற்றைச் சமாளிக்க இந்தியாவில் ஓடும் நதிகளைத் தேசியமயமாக்குவதுதான் ஒரே தீர்வு என ஓட்டுக் கட்சிகள் ஒப்பாரி வைக்கும் பொழுது, உலக வங்கியின் அறிக்கை, ""அது தவறு'' எனக் குறிப்பிடுகிறது; அதற்கு மாறாக, ""குடிநீர், பாசனத் திட்டங்களைக் கட்டுவது, அதைக் கட்டுப்படுத்துவது போன்ற பொறுப்புகளை வகிக்கும் அரசு, அதில் இருந்து விலகிக் கொண்டு, அந்தப் பொறுப்புகளை பெரிய கம்பெனிகள், சிறிய விவசாயிகள் போன்று தண்ணீரைப் பயன்படுத்துவோரிடம் விட்டுவிட வேண்டும்; அந்தச் சூழலை விரைவில் ஏற்படுத்த வேண்டும்'' என அறிவுறுத்துகிறது.

 

""இந்திய மக்களுக்கும், இந்தியப் பொருளாதாரத்துக்கும் தேவைப்படும் தண்ணீர் வழங்குவதற்குரிய திட்டங்களை நிறைவேற்றும் அளவிற்கு இந்திய அரசிடம் பணம் இல்லை; கலவரம் நிறைந்த எதிர்காலத்தை இந்தியா எதிர்நோக்கியிருக்கிறது'' எனப் பயமுறுத்தும் இந்த அறிக்கை, இதற்குக் காரணம், ""தண்ணீரைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கிறது; குடிநீர் திட்டங்களைப் பராமரிக்கும் அளவிற்குக் கூட வருவாய் கிடைப்பதில்லை. திட்டச் செலவிற்கும், கட்டணத்திற்கும் இடையேயுள்ள இடைவெளி, ஊழலை உருவாக்குகிறது; திட்டத்திற்கு எவ்வளவு செலவானது; எவ்ளவு மானியம் வழங்கப்பட்டது என்ற விவரங்கள் கூட, வெளிப்படையாக இல்லாமல் இரகசியமாக வைக்கப்படுகின்றன'' எனக் குறிப்பிடுகிறது.

 

""கிராமப்புறங்களுக்குக் குடிநீர் வழங்க போடப்பட்டுள்ள ""ஸ்வஜல்தாரா'' திட்டத்திற்கான மூலதனச் செலவில் ஒரு பகுதியை, அத்திட்டத்தால் பயன் அடைபவர்களிடமி ருந்து வசூலிக்க வேண்டும்; விவசாயிகளாக இருந்தாலும், வறுமை கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளாக இருந்தாலும், தண்ணீருக்கு உரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும்; இந்தக் கட்டணம் பொதுவான வரி என்றில்லாமல், திட்டச் செலவைத் திரும்ப எடுக்கும் வகையில் இருக்க வேண்டும்; போட்ட மூலதனத்தைத் திரும்ப எடுக்கக் கூடிய குடிநீர் திட்டங்களைத்தான் செயல்படுத்த வேண்டும். தனியார் பங்கெடுப்பதை அனுமதிக்க வேண்டும். தற்பொழுது குடிநீர் வழங்குதலை நிர்வகிப்பதைப் போல, இனியும் நிர்வகிக்காமல் அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள வேண்டும். இதற்குத் தகுந்தபடி இந்திய மக்களின் மனப் போக்கையும் மாற்ற வேண்டும்'' எனத் தீர்வுகளை அடுக்கியிருக்கிறது, உலகவங்கி.

 

குடிநீர் வழங்குவது இனியும் சேவையாக இருக்கக் கூடாது; அது அரசாங்கத்தின் கைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, இலாபத்தை அள்ளித் தரும் வியாபாரமாக மாற வேண்டும் என்பதுதான் உலக வங்கியின் ஆலோசனை.

 

இதனை, வெறும் காகித அறிக்கை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இந்தியாவின் குடிநீர் கொள்கையும், விவசாயப் பாசனக் கொள்கையும் தனியார்மயமாவதை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், உலக வங்கி அடுத்த நான்கு ஆண்டுகளில், இந்தியாவின் குடிநீர் திட்டங்களுக்கு வழங்கும் கடனை 20 கோடி அமெரிக்க டாலரில் இருந்து 80 கோடி அமெரிக்க டாலராக உயர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்தக் கடனை வாங்க இந்திய அரசு கைநீட்டும் பொழுது, இந்த அறிவுரைகள், கட்டாயம் செயல்படுத்த வேண்டிய நிபந்தனைகளாக மாறிவிடும்.

 

பிரதமர் மன்மோகன் சிங், இந்த ஆண்டு "சுதந்திர' தின உரையில், ""மின்சாரம் உள்ளிட்டு எதனையும் இலவசமாக வழங்க முடியாது'' எனக் கூறினார். இது உலக வங்கியின் மொழி. கிளிப்பிள்ளை சொன்னதைத் திருப்பிச் சொல்லும். ""பொருளாதாரப் புலி'' மன்மோகன் சிங்,உலக வங்கியின் அறிவுரையை நடைமுறைப்படுத்துவார்.

 

அழகு