Language Selection

புதிய ஜனநாயகம் 2005

11_2005.jpgநோக்கியா, ஹ_ண்டாய், ஃபோர்டு முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க உடனடியாக நிலம் ஒதுக்கிக் கொடுத்து, பல்வேறு சலுகைகளையும் செய்து தரும் தமிழக அரசு, கடந்த 23 ஆண்டுகளாக வீட்டுமனை கோரிப் போராடும் தாழ்த்தப்பட்ட மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகிலுள்ள நாட்றாம்பாளையம், காட்டுப் பகுதியைச் சார்ந்த ஓர் ஊராட்சி. கூலி விவசாயிகளான இக்கிராமத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் பல்லாண்டு காலமாக பல்வேறு சாதிய அடக்குமுறைகளை அனுபவித்து வந்துள்ளனர். 1982இல் நாட்றாம்பாளையம் தாழ்த்தப்பட்ட மக்கள், தாங்கள் பாதுகாப்பாகக் குடியிருக்க தொகுப்பு வீடுகள் கட்டித் தரக்கோரி விண்ணப்பித்து, பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டு பல அதிகாரிகளிடம் மனு கொடுத்துப் போராடிய பிறகு, 1996இல் தான் அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் உள்ள இப்பகுதியில் வெறும் 55 குடும்பங்களுக்கு மட்டுமே பட்டா தரப்பட்டது. ஆனால், வீட்டுமனை தரப்படவில்லை. தொகுப்பு வீடுகளும் கட்டப்படவில்லை.

 

அவசர கதியில் மல்லேசு என்பவரின் நிலத்தை அளந்து காட்டி பட்டா வழங்கிய அதிகாரிகள் மல்லேசிடமிருந்து நிலத்தை வாங்கவில்லை. தனது நிலத்துக்கு உகந்த விலை கிடைக்கவில்லை என்றும், எனவே அரசு இதைக் கையகப்படுத்தக் கூடாது என்றும் மல்லேசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை பெற்றார். இத்தடையாணையை நீக்கி, விரைவில் வீட்டுமனை வழங்கக் கோரி தாழ்த்தப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில் பலமுறை மனு கொடுத்து ஓய்ந்து விட்டனர். பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோரும் மல்லேசும் நீதிமன்றத்துக்கு அலைந்ததுதான் மிச்சம். எந்த தீர்வும் இல்லாமல் போனதோடு, இப்போது நிலத்தின் மதிப்பும் உயர்ந்து புதிய சிக்கலை ஏற்படுத்தி விட்டது.

 

அதிகாரிகளையும் நீதிமன்றத்தையும் இனியும் நம்பி ஏமாறத் தயாராக இல்லாத தாழ்த்தப்பட்ட மக்கள், இப்ப குதியில் இயங்கும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் துணையோடு கடந்த செப்.20ஆம் தேதியன்று தங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள நிலத்தில் குடிசைகள் போட்டு, ""பகத்சிங் நகர்'' என்று பெயர்ப்பலகையும் வைத்தனர். பீதியடைந்த அதிகார வர்க்கம் போலீசை ஏவியது. வி.வி.மு. தோழர்கள் உள்ளிட்டு 15 பேர் மீது பொய் வழக்குகளைச் சோடித்தது போலீசு.

 

போலீசு அராஜகத்தை எதிர்த்தும், உடனடியாக வீட்டுமனை வழங்கக் கோரியும் போராடும் மக்கள், வி.வி.மு. தலைமையில் அக்.14ஆம் தேதியன்று தேன்கனிக் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து, துண்டறிக்கை சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதைக் கண்டு அரண்டு போன அதிகாரிகள் அக்.13ஆம் தேதியன்று நாட்றாம்பாளையம் மக்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தனர். அக்.14ஆம் தேதியன்று மாவட்ட துணை ஆட்சியர், போலீசு துணை கண்காணிப்பாளர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், கிராம நிர்வாக அதிகாரியை இடமாற்றம் செய்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். அதனடிப்படையில் நாட்றாம்பாளையம் தாழ்த்தப்பட்ட மக்கள், தற்காலிகமாக ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைப்பதாக முடிவு செய்தனர்.

 

ஆனால் மறுநாளே, அஞ்செட்டி போலீசு துணை ஆய்வாளர் தலைமையில் வந்த போலீசார், பட்டா நிலத்தில் போடப்பட்ட குடிசைகளை பிய்த்தெறியத் தொடங்கினர். இக்கொடுஞ்செயலைக் கண்டு வெகுண்டெழுந்த மக்கள், போலீசாரை முற்றுகையிட்டு கேள்வி கேட்டு முழக்கமிடத் தொடங்கியதும், போலீசுப் படை பின்வாங்கிச் சென்றது. குடிசைகளைப் பிய்த்தெறிந்து அடக்குமுறையை ஏவுவது, மல்லேசுவுடன் தாழ்த்தப்பட்ட மக்களை மோதவிட்டு பிரச்சினையைத் திசைதிருப்புவது, வி.வி.மு.வினரை தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து பீதியூட்டி போராடும் மக்கள் மீது பொய் வழக்குகளைச் சோடிப்பது என்று பல்வேறு சதிகளில் போலீசும் அதிகார வர்க்கமும் இறங்கியுள்ளன.

 

விவசாயிகள் விடுதலை முன்னணி, கிருஷ்ணகிரி மாவட்டம்.