11_2005.jpg

"வீரன் போராடுகிறான்; கோழை சரணடைகிறான்; துரோகி காட்டிக் கொடுக்கிறான்'' என்று நறுக்குத் தெறித்தாற்போல் கூறினார், செக். நாட்டு கம்யூனிச புரட்சியாளரான தியாகத் தோழர் ஜூலியஸ் ஃபூசிக்.

 

காட்டிக் கொடுக்கும் துரோகிகள் கருங்காலிகள் ஏராளமானோரை வரலாறு கண்டிருக்கிறது; அவர்களது துரோகத்தனம் அம்பலமாகும்போது குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தும் இருக்கிறது. ஆனால், துரோகி என்று அம்பலமான பின்னரும் ஒருவர் "தோழர்' என்று அவரது கட்சியினரால் சித்தரிக்கப்படுகிறார். அவர்தான் மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.

அவரது மகாத்மியங்கள் ஒன்றா, இரண்டா? அன்னிய முதலீடுகளைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதில் அவர் காட்டும் பணிவு என்ன! பன்னாட்டு முதலாளிகளிடம் அவர் காட்டும் குழைவு என்ன! தொழிலாளர்களின் முற்றுகை (கெரோ) போராட்டத்துக்குத் தடைவிதித்து அவர் காட்டிய "வீரம்'தான் என்ன! எங்கள் கொள்கையைத் தலைகீழாக மாற்றி விட்டோம் என்று பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் அவரது துணிவுதான் என்ன! உலகமயமாக்கலுக்கு ஆதரவாக பக்கமேளம் வாசிக்கும் பாங்குதான் என்ன! இப்படி கே.பி.சுந்தராம்பாள் பாடியதைப் போல, புத்ததேவின் அருமை பெருமைகளை ""என்ன, என்ன!'' என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அதற்குப் பக்கங்கள் போதாது. இருப்பினும் கடந்த செப்.29 அன்று நடந்த நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் போது, அவர் காட்டிய "கடமையுணர்ச்சி'யைக் கண்டு மெய்சிலிர்த்து முதலாளித்துவப் பத்திரிகைகளே அதிசயித்து வாய் பிளந்து நிற்பதால், நாமும் நமது பங்குக்குச் சுருக்கமாக அதனைத் தொகுத்தளிப்பது அவசியமாகி விட்டது

 

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதியன்று சி.பி.எம். கட்சி தலைமை தாங்கும் சி.ஐ.டி.யு.வும் அதன் தோழமைச் சங்கங்களும், பொதுத்துறையைத் தனியார்மயமாக்கும் காங்கிரசு கூட்டணி அரசின் சூழ்ச்சிகளை எதிர்த்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தன. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும், தொழிலாளி வர்க்கத்தின் பொதுக்கோரிக்கையை ஆதரித்து இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றன. போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தில் அரசு அலுவலகங்கள், வங்கி, பொதுத்துறை நிறுவனங்களும் பல தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டு, தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலங்களும் ஆலைவாயிற் கூட்டங்களும் நடத்தினர்.

 

சி.ஐ.டி.யு.வுக்குத் தலைமை தாங்கும் சி.பி.எம். கட்சியின் தலைவர்களில் ஒருவரும், மே.வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா அன்று என்ன செய்தார் தெரியுமா? தொழிலாளர்களின் போராட்டத்தில் முன்னணியில் நின்று முழக்கமிட்டாரா? அல்லது தொழிலாளர்களுக்கு அரசியல் வகுப்புதான் நடத்திக் கொண்டிருந்தாரா? அப்படியெல்லாம் இல்லை. அன்று அவர் தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் துரோகமிழைத்துவிட்டு, தலைமைச் செயலகத்துக்குச் சென்று "கடமையுணர்வோடு' அலுவல்களைக் கவனிக்கத் தொடங்கினார். தான் மட்டும் இப்படி துரோகமிழைப்பது போதாதென்று, எல்லா "இடதுசாரி' அமைச்சர்களையும் கட்டாயம் வேலைக்கு வருமாறு உத்தரவும் போட்டார்.

 

புத்ததேவ் மட்டுமின்றி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அவரது மனைவியான மீரா, பொது வேலை நிறுத்தம் நடந்த போது கடமையுணர்ச்சியோடு தனது காரில் அலுவலகத்துக்குச் சென்றார். வழியில் அவரது காரை வழிமறித்து நிறுத்திய சி.ஐ.டி.யு. சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம், ""அலுவலகத்துக்குச் சென்று உழைக்க நினைக்கும் எனது விருப்பத்துக்குத் தடையாக நிற்க யாருக்கும் உரிமையில்லை'' என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்.

 

இந்த விசயம் முதல்வரின் காதுக்கு எட்டியதும், தலைமைச் செயலகத்துக்கு செல்லும் சாலையில் திரண்ட தொழிலாளர்கள் ஊழியர்களைப் பார்த்து ""வேலைக்குச் செல்வோரைத் தடுக்காதீர்கள்; கும்பலாக சாலையில் செல்லாதீர்கள்; ஒற்றை சாரியாக ஊர்வலமாகச் செல்லுங்கள். உங்களுக்குப் போராட உரிமையுண்டு. அந்தஉரிமையைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள். வேலைக்குச் செல்ல விரும்புவோரைத் தடுக்காதீர்கள்'' என்று உபதேசம் செய்தார்.

 

சி.பி.எம். கட்சியின் மே.வங்க மாநிலச் செயலாளரான அனில் பிஸ்வாஸ், ""தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும்போது, வேலைக்குச் செல்ல விரும்புவோரைத் தடுக்கக் கூடாது. தனியார் வாகனங்களை மறித்து நிறுத்தக் கூடாது. முதல்வரின் துணைவியார் காரை வழிமறித்து தடுத்தவர்களைக் கண்டுபிடித்து எச்சரித்துள்ளோம்'' என்று சீறுகிறார்.

 

தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் இந்த துரோகத்தைப் பற்றி புத்ததேவ் என்ன சொல்கிறார்? ""மே.வங்கத்தைப் பற்றிய தவறான சித்திரத்தை மாற்றி, இது தொழில் அமைதி நிலவும் மாநிலம் என்று நிரூபித்துக் காட்டி, அன்னிய முதலீடுகளை சிரமப்பட்டு கொண்டு வந்துள்ளேன். இந்நிலையில், தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமானால், அன்னிய முதலீட்டாளர்களுக்குத் தவறான கருத்துதான் ஏற்படும். எனவேதான் நானும் எனது அமைச்சர்களும் வேலை நிறுத்தம் நடந்த போதிலும் வேலைக்குச் சென்றோம். வேலைக்குச் செல்ல விரும்புவோரைத் தடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டோம். மற்றபடி இந்த ""பந்த்''ஐ நான் எதிர்க்கவில்லை; நிராகரிக்கவுமில்லை'' என்று வாக்குமூலம் அளித்து பகிரங்கமாகவே தனது ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்துக்கு நியாயவாதம் புரிகிறார்.

 

புத்ததேவின் துரோகத்தனம் இதோடு நின்று விடவில்லை. தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சிறப்புத் தகுதியளித்து, அத்துறைகளில் வேலை நிறுத்தமே கூடாது என்று உத்தரவிட்டுள்ளார் புத்ததேவ். பொது வேலை நிறுத்தத்தின் போது, இத்துறையின் பல நிறுவனங்களை கட்டாயமாக மூடவைத்ததும், வேலைக்குச் சென்ற இத்துறையின் ஊழியர்களைத் தடுத்ததும் தவறான அராஜகமான செயல் என்று தனது சி.ஐ.டி.யு. சங்கத்தினரையே எச்சரித்துள்ளார்.

 

புத்ததேவின் துரோகத்தனத்தைக் கண்டு பொருமும் சி.ஐ.டி.யு. செயலாளரான எம்.கே. பாண்டே, ""வேலை நிறுத்தத்தின் போது வேலைக்குச் செல்லும் ஊழியர்களைத் தடுப்பது தவறான செயல் அல்ல் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சிறப்புத் தகுதி அளிப்பதுதான் தவறானது. டாடா கன்சல்டன்சி, காக்னிசன்ட் டெக்னாலாஜி, ப்ரைஸ் வாட்டர் ஹவுஸ் முதலான நிறுவனங்கள் இல்லாமல் போனால் ஒன்றும் குடி முழுகி விடாது. இவை ஒன்றும் அத்தியாவசியப் பணித்துறைகள் அல்ல. இந்நிறுவனங்களில் படித்த இளைஞர்கள் எந்த உரிமையுமின்றி கொத்தடிமைகளாக 12 மணிநேரம் கடுமையாக வேலை வாங்கப்பட்டுச் சுரண்டப்படுகிறார்கள். வேலை உத்தரவாதமின்றிப் பழிவாங்கப்படுகிறார்கள். இத்தகைய நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகையும் தகுதியும் அளிப்பது தவறானது'' என்கிறார்.

 

மே.வங்க தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான மனாப் முகர்ஜி, ""இத்துறையில் கால் பதித்துள்ள இந்திய அந்நிய நிறுவனங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதன்மையானவை. எனவேதான் எவ்விதத் தடையுமின்றி எல்லா நாட்களும் இயங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இத்துறையில் சுரண்டலோ, உரிமை பறிப்போ இல்லை'' என்று ஒரே போடாகப் போடுகிறார்.

 

""தகவல் தொழில்நுட்பத் துறை என்பது அத்தியாவசியத் துறை அல்ல. மாநில தொழிலாளர் துறையும் அவ்வாறு வரையறுக்கவில்லை. அவ்வாறிருக்க மாநில அரசு தகவல் தொழில் நுட்பத் துறைக்கு சிறப்புத் தகுதி அளிப்பதும், வேலை நிறுத்தமே கூடாது என்பதும் சட்ட விரோதமானது'' என்று சாடுகிறார், மே.வங்க சி.ஐ.டி.யு. செயலாளரான காளிகோஷ்.

 

இதைக் கண்டு ஆத்திரமடைந்த புத்ததேவ், ""இன்றைய உலகமயமாக்க சூழலில் தொழிற்சங்கங்கள் சுயகட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். நீங்கள் எல்லை மீறுவது சரியல்ல. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை நிறுத்தங்களே கூடாது. இதுபற்றி கட்சியின் மத்தியக் கமிட்டியில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப் போகிறேன்'' என்று "அருள்' வந்து இறங்கியவர் போல சாமியாடுகிறார்.

 

தொழிற்சங்க உரிமைகளைப் பறித்து தொழிலாளர்களின் முதுகில் குத்தும் மே.வங்க "இடதுசாரி' அரசின் துரோகத்தனத்தைக் கண்டு குமுறும் சி.ஐ.டி.யு. சங்கத்தினர், இத்துரோகக் கும்பலை எதிர்த்துப் போராடுவார்களா, அல்லது கட்சியின் கட்டுப்பாடு என்ற பெயரில் சமரசமாகிப் போவார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கச் சூழலில், போலி கம்யூனிஸ்டுகளின் "இடதுசாரி' அரசானது தொழிலாளர் விரோத துரோக அரசாகவே இருக்கும். மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற மாய்மாலங்களால் அது உழைக்கும் மக்களை ஒடுக்கவே செய்யும் என்ற உண்மையை மே.வங்கம் மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.

 

குமார்

 

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கையை முறுக்கி இடதுசாரிகள் காரியம் சாதித்துக் கொள்கிறார்கள் என்று முதலாளித்துவப் பத்திரிகைகள் எச்சரித்து பூச்சாண்டி காட்டுகின்றன. ஆனால், "இடதுசாரிகள்' என்று மார்தட்டிக் கொள்ளும் போலி கம்யூனிஸ்டுகளோ, காங்கிரசு கூட்டணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டு நடைமுறையில் அதற்குப் பக்கமேளம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

""பொதுத்துறையைப் பாதுகாப்போம்'' என்று முழங்கி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது நவரத்தினங்கள் எனப்படும் 9 பெரும் அரசுத்துறை நிறுவனங்களை மட்டும் பாதுகாப்போம்; மற்ற அரசுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதைத் தடுக்க மாட்டோம்!'' என்று காங்கிரசு கூட்டணி அரசின் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பிறகு கமுக்கமாக முழக்கமிட ஆரம்பித்துவிட்டது.

 

சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளரான பிரகாஷ் கரத், ""நலிவடைந்த, நட்டமேற்படுத்துகிற அரசுத்துறை நிறுவனங்களை மூடிவிட்டு அதன் பங்குகளைத் தனியாருக்கு விற்று விடலாம்'' என்று இப்போது உபதேசம் செய்கிறார்.

 

நவரத்தினங்கள் எனப்படும் 9 மிகப் பெரிய நிறுவனங்கள் உள்ளிட்டு ஏறத்தாழ 240 அரசுத்துறை நிறுவனங்கள் நாட்டில் இயங்கி வருகின்றன. இவற்றில் ஏறத்தாழ 88 நிறுவனங்கள் மட்டுமே தற்காலிகமாக நட்டத்தில் இயங்குகின்றன. இவற்றை நட்டக்கணக்கு காட்டி தனியாருக்கு விற்பதில் தவறேதுமில்லை; இந்நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் வீசியெறியப்பட்டாலும் பரவாயில்லை என்கிறார் திருவாளர் கரத்.

 

தனியார்மயத்தை எதிர்க்கும் சி.பி.எம்.இன் "புரட்சி' எப்படியிருக்கிறது, பாருங்கள்.