12_2005.jpgவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்ட வி.வி.மு. தோழர் கதிர்வேலனின் மகள் கனல் அவர்களுக்கும் கோவையைச் சேர்ந்த குமார் ப்ராங்க்ளின் அவர்களுக்கும் 6.11.05 அன்று சங்கராபுரத்தில் புரட்சிகர மணவிழா நடைபெற்றது. இதர ஓட்டுக் கட்சிகள், ""அண்ணன் அவர்களின் இல்லத் திருமண விழாவுக்கு வருகை தரும் தளபதியே வருக!'' என்று சுவரொட்டி விளம்பரம் செய்து வரும் வேளையில், ""அறிவும் நாகரிகமும்மிக்க மக்கள் வெட்கித் தலைகுனியும் சாதி, மதம், சடங்குகள், வரதட்சிணை மற்றும் பெண்ணடிமைச் சின்னமான தாலி ஆகிய அனைத்தையும் ஒழித்துவிட்டு நடக்கும் இப்புரட்சிகர மணவிழாவுக்கு உழைக்கும் மக்களே, அணிதிரண்டு வருக! புதிய சமுதாயம் காண இப்புரட்சிகர திருமணத்தை ஆதரிப்பீர்!'' என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் தட்டிகள் மூலம் வி.வி.மு. தோழர்கள் இப்பகுதியெங்கும் பிரச்சாரம் செய்து புரட்சிகரப் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்க அறைகூவி அழைத்தனர்.

திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்க, தோழர் பொன்னையன் தலைமையில் நடைபெற்ற இப்புரட்சிகர மணவிழாவில் வி.வி.மு. தோழர்களும் நண்பரும் உறவினர்களும் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் உரையாற்றிய தோழர் கதிர்வேலன், ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் புரட்சிகரத் திருமணம் செய்து கொண்டதையும், 20க்கும் மேற்பட்ட புரட்சிகர திருமணங்களை தோழர்களுக்கு நடத்தி வைத்ததையும் பெருமையுடன் நினைவு கூர்ந்ததோடு, புரட்சிகர வாழ்வை மேற்கொள்வதில் தன்னிடம் இன்னமும் குறைகள் இருப்பதை திறந்த மனதுடன் சுயவிமர்சனமாக முன்வைத்தார். சீரழிவு பிற்போக்கு கலாச்சாரத்துக்கு எதிராக மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டி வரும் மகத்தான பணியை இடைவிடாமல் செய்து வரும் ""புதிய ஜனநாயகம்'', ""புதிய கலாச்சாரம்'' ஆகிய பத்திரிகைகளுக்கு தலா ரூ. 5000ஃ வீதம் மணமக்களின் சார்பில் வழங்கினார். அரங்கம் எங்கும் நிரம்பி வழிந்த மக்கள் கரவொலி எழுப்பி உற்சாகத்துடன் இதை வரவேற்று ஆதரித்தனர்.

 

புரட்சிகரப் பண்பாட்டைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்துவரும் தோழர் கதிர்வேலன் குடும்பத்தாருக்கும் வி.வி.மு. தோழர்களுக்கும் மணமக்களுக்கும் எமது புரட்சிகர வாழ்த்துக்கள்!

 

ஆசிரியர் குழு