Language Selection

புதிய ஜனநாயகம் 2005
12_2005.jpgபாசிச முறையில் பயிற்றுவிக்கப்பட்டு நன்கு அமைப்பாக்கப்பட்டு இயங்கும் சட்டபூர்வ ரௌடிகளின் பாசறைதான் போலீசு துறை என்பதைத் தலையங்கம் விரிவாக விளக்கியது. எந்தக் கோரிக்கைக்காக மக்கள் போராடினாலும் ""சட்டம் ஒழுங்கு'' என்ற காரணத்தைக் காட்டி அடக்கி ஒடுக்கும் போலீசு துறையையே கலைக்க வேண்டும் என உழைக்கும் மக்கள் இனி போராட வேண்டும்.

ச. மதியழகன், ஊற்றங்கரை.

 

குஷ்பு தங்கர் விவகாரத்தில் நாம் மையமாக நின்று பேச வேண்டிய களம் எது என்பதை உணர்த்திய கண்ணோட்டமானது, பு.ஜ.வை கைவிளக்காகக் கொண்டு எந்தப் பிரச்சினையையும் அணுக முடியும் என்பதை நிரூபித்துள்ளது. பாலியல் விடுதலையை மட்டும் பெண்களின் பிரச்சினையாகப் பேசி வரும் அ.மார்க்ஸ், சாருநிவேதிதா முதலானோர், தாராளமயத்தின் இன்னொரு ஆபாசமுகம்தான் என்பதை யாவரும் அறியலாம். அதேபோல, தங்கரின் ஆண்டைத்தனத்தை மறைத்துவிட்டு, கற்பு நெறி பற்றி உபதேசிக்கும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் பிழைப்புவாத பித்தலாட்டத்தையும் நடந்தேறி வரும் நிகழ்ச்சிகள் நிரூபித்துக் காட்டுகின்றன. கட்டுரையில் ""கீழ்சாதி'' என்ற சொல்லாடல் நெருடலாக உள்ளது. அதற்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட ஃ ஒடுக்கப்பட்ட உழைக்கும் பெண்கள் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

மணிகோ. பன்னீர்செல்வம்,நாகம்பட்டி.

 

(வாசகத் தோழர் குறிப்பிட்டுள்ளதைப் போன்றே இன்னும் சில தோழர்கள் ""கீழ்சாதி'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டாம் என்றும் அது தவறான பொருள் கொள்வதாகி விடக் கூடும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். தோழர்கள் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதென ஏற்கிறோம். எமது கவனக்குறைவால் நேர்ந்து விட்ட இத்தவறுக்காக சுயவிமர்சனம் ஏற்கிறோம்.

— ஆசிரியர் குழு)

 

குஷ்புதங்கர் விவகாரத்தில் குழப்பமாக இருந்த எனக்கு, பு.ஜ. இதழ் சரியான நேரத்தில வெளிவந்து சரியான பார்வையைக் கொடுத்தது. இன்றைய "தேர்தல்' முறையும் சட்டமன்ற நாடாளுமன்ற "ஜனநாயக' மும் எவ்வளவு கேலிக் கூத்தானது என்பதை ""கராத்தே'' விவகாரம் தெளிவுபடுத்திக் காட்டுகிறது.

மு. பாண்டியன், திருப்பூர்.

 

மே.வங்கத்தில் புத்ததேவ் தலைமையில் போலி கம்யூனிஸ்டுகள் புதிய வரலாற்றைப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது கம்யூனிச வரலாற்றில் பெரும் துரோகத்தின் அத்தியாயமாகவே இருக்கும் என்பதை பு.ஜ. கட்டுரை எடுப்பாக உணர்த்தியது. திருமாவும் ராமதாசும் பண்பாட்டுத் தளத்தில் ""கற்பு'' என்பதைக் காக்கப் போராடுவதன் மூலம் அடித்தட்டு மக்களை பார்ப்பனமயமாக்கும் சேவையில் இறங்கியுள்ளனர் என்ற புதிய கண்ணோட்டத்தை பு.ஜ. வழங்கியிருப்பது சிறப்பு. திருமாவும் ராமதாசும் ""இந்தியா டுடே''யை எதிர்க்காமல் இருப்பதன் மர்மம் என்ன என்பதை கட்டுரை மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.

புரட்சித் தூயன், தருமபுரி.

 

குஷ்புதங்கர் விவகாரத்தில், ""தமிழ்க் கலாச்சாரம் பெண்ணடிமைத்தனமற்ற ஒழுக்கம்'' என்ற சொல்லாடல்களுடன் தமிழ்த்தேச கம்யூனிசம் பேசும் கும்பலையும் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். சாராம்சத்தில், இந்த கும்பலும் ""கண்ணகிகற்பு'' என்று அதே பார்ப்பனியத்தைத்தான் தூக்கிப் பிடிக்கிறது. தாராளமயத்தை எதிர்க்காமல், ஒழுக்கநெறி பற்றி உபதேசிக்கும் இத்தமிழின பித்தலாட்டப் பேர்வழிகளையும் தோலுரிக்க வேண்டும்.

ராஜகுரு, ஈரோடு

 

ஸ்டாலின், மாவோ காலத்திய சோசலிச ரஷ்யசீன அரசுகளைக் கண்டு குலைநடுங்கிய ஏகாதிபத்தியங்கள், இப்போது மே.வங்க "இடதுசாரி' ஆட்சியில் குளிர் காய்கின்றன. மறுகாலனியாக்கத்துக்கு "மனித' முகமூடி மாட்டிவிடும் இடது வலது போலி கம்யூனிஸ்டுகளின் சிவப்பு முகமூடி கிழித்தெறியப்படாதவரை, தொழிலாளி வர்க்கத்தின் அவலநிலை தொடரவே செய்யும் என்பதை பு.ஜ. எடுப்பாக உணர்த்தி வருகின்றது.

கதிரவன், சென்னை.

 

போலீசின் அதிகார மீறல்களையும் அட்டூழியங்களையும் மூடிமறைத்து, ஏதோ புனிதமான கடமையாற்றுவதாக பார்ப்பன பத்திரிகைகள் சித்தரித்து வரும் வேளையில், எங்கெங்கும் போலீசு அதிகாரமும் ஆதிக்கமும் வேகமாகப் பரவி வருவதை தலையங்கம் எடுப்பாகச் சித்தரித்தது. பீகாரில் அண்மையில் நடந்த சிறை தகர்ப்பையொட்டி ஆட்சியாளர்களும், பத்திரிகைகளும் போலீசுக்கு இன்னும் வரம்பற்ற அதிகாரம் அளிக்க வேண்டுமென கொம்பு சீவி விடும் வேளையில் அதற்குப் பதிலடி கொடுப்பது போல் தலையங்கக் கட்டுரை அமைந்திருப்பது, சிறப்புக்குரியது.

பிரியதர்ஷினி, சென்னை.

 

ஹோண்டா தொழிலாளர்கள் போராட்டம் பற்றிய செய்திகள், நாளேடுகளிலிருந்து மறைந்த பின்னர், அப்போராட்டம் பற்றிய சிந்தனை அன்றாட வேலைகளினூடாக மறந்து போயிருந்த என்னைப் போன்றவர்களுக்கு சாட்டையடி கொடுத்து எழுப்புவதாக பு.ஜ. கட்டுரை அமைந்துள்ளது. மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு புதிய வகைப்பட்ட போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை இக்கட்டுரை உணர்த்தியுள்ளது.

ஜீவா, சென்னை.

 

த.தே.பொ.க.வின் சந்தர்ப்பவாதத்தைத் தோலுரித்துக் காட்டிய ""கலக்கல்'' கட்டுரை சிறப்பு. ம.க.இ.க.வின் அரசியலையும், புரட் சிகர அமைப்புகள் நடத்திவரும் போராட் டங்களையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் சரியான பாதை என்று அணிதிரண்டு வருகிறார்கள். ஆனால் த.தே.பொ.க. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறது. இக்கட்டுரையின் இறுதியில், ம.க.இ.க. மீது த.தே. பொ.க. வைத்துள்ள விமர்சனத்தைப் படித்தவுடன் எங்களுக்குச் சிரிப்புதான் வந்தது.

சண்முகவேல், சங்கங்குளம்.

 

பரபரப்புக்குப் பின் இருட்டடிப்பு செய்யப்பட்ட குர்கான் தொழிலாளர் போராட்டச் செய்தியும் படிப்பினைகளும், இனி தொழிலாளர்கள் எவ்வாறு போராட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. ஆள்வது அதிகாரவர்க்கம் தான்; அதை மூடிமறைக்கும் நாடகம்தான் தேர்தலும் சட்டமன்ற மாநகராட்சிகளும் என்பதை ""கராத்தே'' விவகாரம் மீண்டும் நாடறிய நிரூபித்துக் காட்டிவிட்டது.

அலாவுதீன், புதுக்கோட்டை.

 

பாலியல் உறவுகளைச் சந்தைச் சரக்காக "இந்தியா டுடே' சித்தரிக்கிறது. எதிர்க்க யாருமற்ற சூழலில், பன்னாட்டுக் கம்பெனிகளின் பத்திரிகைகளின் விபச்சாரம் தன்னை நியாயப்படுத்துகிறது. ஆணாதிக்கவாதிகளும், பெண்ணியவாதிகளும் மட்டுமல்ல் எதிர்க்கப்பட வேண்டியது சந்தைப் பத்திரிகைகளும் தான்.

தளபதி சண்முகம், சென்னை.

 

"கற்பு'க்காகப் போராடும் ராமதாசு திருமாவின் பித்தலாட்டம் சந்தி சிரிக்கிறது. தமிழன் பண்பாடு என்ற பெயரில் பார்ப்பன பிற்போக்குத்தனத்தையே இவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்.

நீலமேகம், வேணாநல்லூர்

 

புத்ததேவ் பட்டாச்சார்யாவை அம்பலப்படுத்திய கட்டுரையில் ஜூலியஸ் ஃபூசிக்கின் செம்மொழியோடு தொடங்கியிருப்பது சிறப்பு. குஷ்புதங்கர் விவகாரத்தில் பெண்ணியவாதிகளின் பித்தலாட்டங்களை விரிவாக அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.

வாசகர் வட்டம், தஞ்சை.

 

ஹோண்டா தொழிலாளர் போராட்டப் படிப்பினை பற்றிய கட்டுரையில், இனி தொழிலாளர்கள் எவ்வாறு போராட வேண்டும் என்று மாற்றுவழியை சுருக்கமாக எழுதியிருக்க வேண்டும். புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகள் மீது புழுதிவாரி இறைத்துக் கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும் த.தே.பொ.க.வை அம்பலப்படுத்திய "கலக்கல்' கட்டுரை சிறப்பு. வர்க்கக் கண்ணோட்டமின்றி, பொதுப் பண்பாடு என்ற பெயரில் தனியார்மயம் தாராளமயத்தை தாங்கிப் பிடிக்கும் இரு தரப்பையும் தோலுரித்துக் காட்டுவதாக குஷ்புதங்கர் விவகாரம் பற்றிய கட்டுரை அமைந்துள்ளது.

வாசகர் வட்டம், ஓசூர்.