Language Selection

12_2005.jpgதிருச்சியில் தொன்மை வாய்ந்த செயிண்ட் ஜோசப் கல்லூரி தனது கல்விச் சேவையால் ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்தது. இன்று, அக்கல்லூரியில் நடக்கும் ஊழல் கொள்ளையும் மோசடியும் அடாவடித்தனங்களும் மெதுவாகக் கசியத் தொடங்கி நகரெங்கும் நாறி வருகிறது.

 

இக்கல்லூரியில் வரலாறு, ஆங்கிலம், வேதியல் துறைகளுக்கான ஆய்வுக் கூடங்களைக் கட்டுவதற்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் பல்கலைக் கழக மானியக் குழு கொடுத்துள்ளது. இதில் ஆங்கிலத் துறைக்கு மட்டும் மொழிப் பயிற்சிக் கூடத்தைக் கட்டி,

 மூடி வைத்திருந்தனர். மற்ற இரு துறைகளுக்கான தொகை எங்கே போனது என்பது பரமபிதாவுக்கே வெளிச்சம். மாணவர்களுக்கு இலவசமாக மொழிப் பயிற்சி அளிக்க நிறுவப்பட்ட இக்கூடம் ஒரு பாதிரியாரிடம் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. மொழிப் பயிற்சியளிக்க இங்கு மாணவர்களிடம் கட்டணம் வசூலித்துக் கொள்ளையடிப்பது கேள்வி முறையின்றித் தொடர்கிறது. கட்டணம் செலுத்தாதவர்களுக்கு, ஏசுவேயானாலும் தட்டினாலும் கதவைத் திறக்க மாட்டார்கள்.

 

கல்லூரி நிர்வாகம், ""அருள் தந்தை'' லாசர் மூலமாக பல நாடுகளின் புரவலர்களிடமிருந்து நூலகம் கட்ட பல கோடி ரூபாய்களைத் திரட்டியுள்ளது. இதற்காக அடிக்கல் நாட்டி விட்டு, மாநகராட்சியில் அனுமதி வாங்குவதற்கான செலவு என்ற பெயரில் கல்லூரி நிர்வாகச் செயலர் செல்வநாயகம் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார். இம்மோசடியை மூடிமறைக்கவும் "தேவ அப்பத்தை'ப் பங்கிடுவதில் ஏற்பட்ட சண்டையிலிருந்து தப்பிக்கவும் மருத்துவ விடுப்பு என்ற பெயரில் இரு மாத காலத்துக்குத் தலைமறைவானார். பின்னர், சமாதான "அருள்' கிடைத்து மீண்டும் கல்லூரிக்குள் வந்துள்ளார்.

 

இக்கல்லூரியில் உள்ள செப்பேடு துறையில் மாணவர்களைக் கிராமப்புற சமூக சேவைக்கு காரில் அழைத்துச் சென்றதாகக் கணக்கு காட்டி பல ஆயிரங்களைச் சுருட்டியுள்ளனர். உண்மையில், மாணவர்களை நகரப் பேருந்திலும், சைக்கிளிலும் தான் அழைத்துச் சென்றனர்.

 

இவை வெளியே கசிந்த ஒருசில ஊழல் மோசடிகள்தான். பாதிரிகளின் வெள்ளை அங்கிக்குள் மூடி மறைக்கப்பட்ட மோசடிகள் ஏராளம். இக்கல்லூரி ஆசிரியர்களும்மாணவர்களும் ஆதாரபூர்வமாக அளித்த தகவல்களின் அடிப்படையில், ""பாதிரிகளின் பகற்கொள்ளை; ஊழலின் உறைவிடமாக ஜோசப் கல்லூரி'' என்று தலைப்பிட்ட சுவரொட்டி பிரச்சாரத்தை கடந்த அக்டோபரில் இப்பகுதியில் இயங்கும் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி மேற்கொண்டது.

இச்சுவரொட்டிகளைக் கண்டு அரண்டு போன பாதிரி பெருச்சாளிகள், தமது அடியாட்களை ஏவி இவற்றைக் கிழித்தெறிய உத்தரவிட்டனர். நள்ளிரவில் இரகசியமாக சுவரொட்டிகளைக் கிழிக்க வந்த இந்த அடியாட்களை பு.மா.இ.மு.

 

வினர் விரட்டியடித்தனர். பின்னர், போலீசாரை உரிய முறையில் கவனித்து இச்சுவரொட்டிகளை கிழித்தெறிய நிர்வாகம் முயற்சித்தது. அதன்படி, சுவரொட்டிகளைக் கிழிக்க வந்த போலீசாரிடம் செஞ்சட்டைப் படையாகத் திரண்ட பு.மா.இ.மு.வினர் இப்பிரச்சாரத்தின் அவசியத்தை விளக்கியதும் அவர்களும் பின்வாங்கிக் கொண்டனர். பின்னர், இரண்டு விசுவாச பேராசிரியர்களையும் ஒரு மாணவரையும் அனுப்பி சுவரொட்டிகளைக் கிழிக்க நிர்வாகம் முயற்சித்தது. பு.மா.இ.மு.வினர் அவர்களைப் புகைப்படம் எடுக்க முற்பட்டதும், அவர்கள் தலைதெறிக்க ஓடிவிட்டனர். அதன்பிறகு, தமது பணியாளர்கள் இருவரை சுவரொட்டிகளைக் கிழிக்க நிர்வாகம் அனுப்பியது. அவர்கள் தயங்கித் தயங்கி கிழிக்க முற்பட்டபோது, ""கழுதைதான் பேப்பர் தின்னும்; உங்க பாதிரியாரும் கூடவா பேப்பர் தின்கிறார்?'' என்று ஒரு தோழர் கேட்டு எச்சரிக்கவும் அவர்கள் ஓடிப் போயினர்.

 

தேவ ஊழியம் செய்வதாகக் கூறிக் கொள்ளும் இப்பாதிரிகள், ஊழலை அம்பலப்படுத்திய சுவரொட்டிகளைக் கிழிக்கக் கிளம்பிய இழிசெயலானது, அவர்களது ஊழல்மோசடிகளை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. கல்லூரியை நிர்வகிக்கும் இப்பாதிரிகள் தமது பாவக் கறைகளைக் கழுவி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரை பு.மா.இ.மு.வின் போராட்டம் ஓயாது. பெற்றோர் ஆசிரியர் மாணவர்களின் பேராதரவோடு அடுத்தக் கட்டப் போராட்டத்தைத் தொடங்க பு.மா.இ.மு. தயங்காது.

 

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,

திருச்சி.