12_2005.jpgசென்ற ஆண்டு சுனாமி. இந்த ஆண்டு பெருமழை வெள்ளம். இயற்கைப் பேரிடர் இழப்புகளுக்கு இருக்கின்ற வாழ்வும் இலக்காகி, உழைக்கும் மக்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படும் கொடுமை நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு வீடும் தனித்தனி தீவுகளாக மாறி துயர வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தண்ணீருக்காக ஏங்கித் தவித்த தமிழகம் தண்ணீரிலேயே மூழ்கி அழிகிறது.

 

சென்ற மாத இறுதியில் தொடங்கிய தொடர் மழையில் சென்னை, திருச்சி முதலான நகரங்களும் காவிரிக் கரையோரப் பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அந்தப் பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கு முன்னரே, அடுத்த மழை தமிழகத்தை வெள்ளக் காடாக்கியுள்ளது. எல்லா மாவட்டங்களிலும் உள்ள ஏரிகள், கண்மாய்கள், ஆறுகள் என அனைத்திலும் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே இவ்வளவு பெரிய பேரழிவை மக்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

 

"பேய்மழை' என்று இயற்கையை எதிரியாகச் சித்தரிப்பதன் மூலம் இந்தப் பேரழிவைத் தோற்றுவித்த "உண்மையான பேய்களாகிய' ஆளும் வர்க்கங்களும் அரசும் மக்களின் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள எத்தணிக்கின்றன. முறையான தடுப்பணைகள் கட்டியும், ஏரிகள்கால்வாய்களைத் தூர்வாரியும், வடிகால்கள் அமைத்தும், புதிய குளங்கள் ஏரிகளை உருவாக்கியும் இருந்தால், இந்த மழையே இயற்கை அளித்த பெருங்கொடையாக மாறியிருக்கும். மக்கள் பல நூற்றாண்டுகளாக உருவாக்கிப் பராமரித்து வந்திருந்த நீர்நிலைகளை நாசமாக்கிய அரசும் ஆளும் வர்க்கங்களும் வீட்டு மனைகளாக்கி ஆதாயமடைந்த நில முதலைகளும்தான் இந்தப் பேரழிவின் குற்றவாளிகள்.

 

வெள்ளத்தால் சூழப்பட்டு, உணவில்லாமல், குடிக்கத் தண்ணீர் இல்லாமல், குளிரில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவாரில்லை. சுனாமி பேரழிவின்போது கடலோரப் பகுதிகளைத் திரும்பியும் பார்க்காமல் புறக்கணித்த அதிகார வர்க்கம், இப்பொழுது வெள்ளம் சூழ்ந்த நகரங்களில் பாதுகாப்பான வீடுகளிலும் அலுவலகங்களிலும் அமர்ந்தபடி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது. முதல்வர் அமைச்சர்களின் வருகைக்கு அணிவகுத்த நிற்கும் போலீசும், தண்ணீர் கேட்டுப் போராடினால் அடுத்த நிமிடமே தாக்குவதற்கு வந்து நிற்கும் அதிரடிப்படையும் அதிகார வர்க்கமும் இராணுவமும் பாதுகாப்பாகப் படுத்துறங்கி விட்டு வெள்ளம் வடியும் இடங்களில் நின்று புகைப்படத்துக்கு ""போஸ்'' கொடுக்கின்றனர். சுனாமியின் போதாவது மக்களால் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள முடிந்தது. தற்போது மக்கள் தனித்தனி தீவுகளாக ஆக்கப்பட்டு விட்டதால், செய்வதறியாது அனாதரவாய்க் குமுறுகின்றனர்.

 

அரிசி, வேட்டிசேலை, நிவாரணத் தொகை என்று அரசிடம் கையேந்தி நிற்பதற்கும், அதிகார வர்க்கத்திடம் கெஞ்சுவதற்கும், இதற்காக ஓட்டுப் பொறுக்கிகளின் பின்னால் அலைவதற்குமே மக்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னைவியாசர்பாடியில் நிவாரண உதவியைப் பெற நெரிசலில் சிக்கி 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் அ.தி.மு.க. குண்டர்கள் ரூ. 500ஃ வரை விழுங்கிவிட்டு எஞ்சியதையே அம்மாவின் கருணையாக கொடுக்கின்றனர்.

 

பெருமழையும் வெள்ளமும் ஓரிரு வாரங்களுக்கு நீடித்த போதிலும், அதன் பிறகு ஆட்சியாளர்களின் கிரிமினல் புறக்கணிப்பு காரணமாகத் தொடரும் கொடூரங்கள் பல காலம் நீடிக்கக் கூடியவை. உயிர்ப் பலிகள், அழிந்து போன வீடுகள் உடைமைகள் தொழில்கள், பல லட்சம் ஏக்கரில் அழுகிப் போன விவசாயம் என அனைத்திற்கும் இந்த அரசுதான் பொறுப்பு என்பதை மக்களை உணரச் செய்ய வேண்டியுள்ளது. மறுபுறம், அரசு வழங்கும் அற்ப நிவாரணத்தைக் கூட கொள்ளையிடவும், குடியிருப்பு சாலை அமைப்பு போன்றவற்றில் இலாபமீட்டவும் பிணந்தின்னிக் கழுகுகளாக வட்டமிடும் ஆளுங்கட்சிக் குண்டர்களையும் ஒப்பந்தக்காரர் இடைத்தரகர்கள் கூட்டத்தையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. கவர்ச்சிவாத விளம்பர மழையில் நிவாரண மறுவாழ்வுப் பணிகளைப் புறக்கணிக்கும் அரசுக்கும் முதலைக் கண்ணீர் வடிக்கும் ஓட்டுப் பொறுக்கிகளும் எதிராக மக்கள் குமுறலை ஒருமுகப்படுத்திப் போராட வேண்டியுள்ளது.

 

அற்ப நிவாரணங்கள் மட்டுமல்ல் மறுவாழ்வும் எங்களுக்குத் தேவை என்ற மக்களின் குமுறலை எதிரொலிக்கும் வகையில் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான நிவாரணப் பணி; அரசியல் பணி; போராட்டப் பணி.