Language Selection

01_2006.jpg"சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் வாங்கச் சென்ற 42 பேர் பலியான சம்பவம், விபத்து அல்ல, படுகொலை! இதற்குக் காரணமான குற்றவாளிகளான போலீசுத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்; அவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்'' ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தும் நிவாரணம் பெறவந்த மக்களைப் பலியிட்ட அரசின் அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) மதுரை மாவட்டக் கிளையின் சார்பில் 22.12.05 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கிளைத் தலவர் ஆர். நல்லகாமன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வழக்கறிஞர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சின்னராசா, தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினரான வழக்குரைஞர் கி.மகேந்திரன் மற்றும் பல முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக, நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று போலீசு அதிகாரிகள் அடாவடி செய்தனர். ""அனுமதி கேட்டுத்தான் துண்டறிக்கை அச்சிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்; அனுமதி இல்லை என்றால் எழுத்துப்பூர்வமாகக் கொடு; இல்லாவிட்டால், நாங்கள் நடத்துவோம்'' என்று வழக்குரைஞர்கள் ஒருமித்து எச்சரித்ததும் போலீசுத்துறை பின்வாங்கிக் கொண்டது. மனித உரிமைக்கான இயக்கத்தினருக்கும் வழக்குரைஞர்களுக்குமே இவ்வளவு கெடுபிடி என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என்று போலீசாரின் அடாவடித்தனத்தை திரண்டிருந்த மக்கள் கண்டித்தனர்.

 

நாமக்கல் மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, 21.12.05 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொலைக் குற்றவாளிகளான போலீசுத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளைக் கைது செய்து தண்டிக்கக் கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட அமைப்பாளர் எம்.குணசேகரன் தலைமை தாங்கினர். கோரிக்கைகளை முன்வைத்தும் மக்களைப் பலியிட்ட அரசின்அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்.

 

தருமபுரி மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் 21.12.05 அன்று தருமபுரி இராசகோபால் பூங்கா அருகில், சென்னையில் 42 பேர் பலியான சம்பவத்துக்குக் காரணமான கொலைக் குற்றவாளிகளான போலீசுத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளைக் கைது செய்து தண்டிக்கக் கோரியும் அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்குரைஞர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்.

 

கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில், விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே 21.12.05 அன்று கொலைக்குக் காரணமான அதிகாரிகள் போலீசாரைத் தண்டிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலர் சி.ராஜு தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்குரைஞர்கள் திரளாகப் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

 

வதந்தியால் ஏற்பட்ட பலி என்று ஆட்சியாளர்கள் கொலைகாரர்களை மூடி மறைத்துவரும் நிலையில், குற்றவாளிகளை இனம் காட்டுவதாக இந்த ஆர்ப்பாட்டங்கள் அமைந்தன.

 

— பு.ஜ.

செய்தியாளர்கள்.