01_2006.jpgதெருக்கள்தோறும் சடலங்கள், திரும்பிய பக்கமெல்லாம் அழுகுரல்கள், கதறித் துடிக்கும் உறவுகள் என்று டிசம்பர் 18ஆம் தேதியன்று சென்னை எம்.ஜி.ஆர். நகர் எங்கும் துயரமும் சோகமும் கவ்வியது. நிவாரணம் வாங்கச் சென்ற 42 பேர் நெரிசலில் சிக்கி மாண்டு போன செய்தியை அறிந்து தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போனது. கட்டிடத் தொழிலாளிகள், ஓட்டல் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வீட்டு வேலை செய்யும் பெண்கள்... என கொல்லப்பட்டோ

 அனைவரும் எளிய உழைக்கும் மக்கள். இறந்தவர்களில் 25 பேர் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்கள். கணவனைப் பறிகொடுத்த மனைவி, மனைவியைப் பறிகொடுத்த கணவன், பெற்றோரை இழந்து அனாதைகளாக நிற்கும் குழந்தைகள் என நிவாரணத் தொகை வாங்கப் போய் வாழ்க்கையையே தொலைத்து விட்டுப் பரிதவிக்கும் குடும்பங்களின் சோகத்தைச் சொல்லி மாளாது.

 

""மழை, உடைமைகளைத்தான் கொண்டு போச்சு; இந்த நிவாரணம் உயிரையே கொண்டு போயிருச்சே'' என்று சுடுகாடாகியிருக்கும் எம்.ஜி.ஆர். நகரிலிருந்து கதறுகிறாள் ஒரு தாய். துயரத்தைத் துடைப்பதற்கான நிவாரணமே துயரத்தை உருவாக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறது பாசிச ஜெயலலிதா அரசு. டிசம்பர் 18ஆம் தேதியன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 42 உயிர்களைக் காவு வாங்கியுள்ள சம்பவம் ஒரு விபத்தல்ல் படுகொலை!

 

டிசம்பர் 17ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை முதல் நிவாரணம் வாங்க கால்கடுக்க வரிசையில் நின்றார்கள் மக்கள். போலீசுக்கு ரூ. 400 500 என லஞ்சம் கொடுத்து டோக்கன் பெறமுடியாததால் வெறுங்கையோடு திரும்பினார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நிவாரணம் வழங்கப்படும் என்று மட்டும்தான் சொல்லப்பட்டிருந்தது. ""ஞாயிற்றுக்கிழமைதான் நிவாரணம் வாங்க கடைசி நாள்'' என்று ஒலிபெருக்கி வைத்து போலீசும் அறிவித்தது. படுகொலைகளுக்குப் பிறகு இப்போது ஜெயா கூறுவதுபோல, அதற்கடுத்த நாளும் நிவாரணம் வழங்கப்படும் என்றோ, எல்லோருக்கும் வழங்கப்படும் என்றோ அறிவிக்கப்படவில்லை. இலஞ்சம் கொடுக்க இயலாத ஏழைகள் வேறென்ன செய்ய முடியும்?

 

எம்.ஜி.ஆர். நகர் பகுதியிலுள்ள ஏழைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்பது அவர்களது ஒருமாதச் சம்பளத் தொகை. ஏற்கெனவே ஒருமாத காலமாக பெய்த தொடர் மழையால் வேலையின்றித் தவித்த தினக்கூலிகளான அவர்கள், அரசின் நிவாரணத்தைப் பெற முண்டியடிப்பதில் தவறேதும் இருக்க முடியாது. எனவேதான் நள்ளிரவிலிருந்து கொட்டும் மழையில், டோக்கன் வாங்க மாநகராட்சிப் பள்ளி முன்பாகத் தவமிருந்தார்கள். ""ஞாயிறு காலை 9 மணிக்கு மேல்தான் நிவாரணம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்திருக்கும்போது, நீங்கள் ஏன் நள்ளிரவிலேயே வந்தீர்கள்?'' என்று பாதிக்கப்பட்ட மக்களிடம் திமிராகக் கேட்கிறார் ஜெயலலிதா. ""என்னுடைய ஆட்சிக்குக் களங்கம் கற்பிக்க விஷமிகள் கிளப்பிய புரளி'' என்று குற்றம் சாட்டுகிறார். ""உங்களுடைய முடிவை நீங்களே தேடிக் கொண்டீர்கள்; அதற்கு நான் என்ன செய்ய முடியும்?'' என்பதுதான் இந்தத் திமிர்ப் பேச்சின் பொருள்.

 

புரளியாம்! வதந்தியாம்! தண்ணீர் லாரி வருமா, வராதா என்று கூடக் தெரியாமல் இரவு முழுவதும் காத்து நிற்கிறார்களே மக்கள், அது யார் கிளப்பிய புரளி? நாள் முழுவதும் ரேசன் கடைவாசலில் மண்ணெண்ணெய்க்காகத் தவமாய் தவமிருந்து மாலையில் காலி கேன்களுடன் வீடு திரும்புகிறார்களே மக்கள், அங்கே வதந்தியைப் பரப்பிய விஷமியார்?

 

உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை வதைக்கும் விஷமிகளான அதிகாரிகளும் போலீசும் அ.தி.மு.க. முதலான ஓட்டுப் பொறுக்கிகளும்தான் இந்தப் படுகொலையையும் நடத்தியிருக்கிறார்கள். மக்களுக்கான நிவாரணத் தொகையைச் சூறையாடுவதற்கு ஏற்ற வகையில்தான் நிவாரணம் வழங்கும் முறையையே திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள்.

 

முதலில் ஒரு இடத்தில் வரிசையில் நின்று போலீசாரிடம் ஒரு டோக்கன் வாங்க வேண்டுமாம். பிறகு, இன்னொரு இடத்திற்குச் சென்று அந்த டோக்கனைக் காட்டி ரேசன் அட்டையில் முத்திரை பெற்று, வேட்டிசேலை, அரிசிபணத்திற்கு 4 டோக்கன் வாங்க வேண்டுமாம். அதற்குப் பின் வரிசையில் நின்று ஒவ்வொன்றையும் ஒவ்வொரு டோக்கன் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டுமாம்.

 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இப்படி ஒரு சிக்கலான சதிவலைக்குள் ஜெயா அரசு ஏன் தள்ள வேண்டும்? இதற்குப் பின்னால் ஒரு பெரிய திட்டமே இருக்கிறது. வெள்ள நிவாரணப் பணத்தை அ.தி.மு.க.வினர் சுருட்டிக் கொள்வதற்கும், போலீசு திருடித் தின்பதற்கும் ஏற்ப செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. மிச்சமிருக்கும் நிவாரணத் தொகையை அடுத்த தேர்தலுக்கான லஞ்சமாக மாற்றி மக்களுடைய ஓட்டுக்களை விலைபேசும் திட்டம் இது. இந்தக் கொடுமையைப் பார்த்து நிவாரணமே வேண்டாமென்று ஒதுக்கிக் கொள்ளும் மக்களுக்குச் சேர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை அதிகாரிகளும் அமைச்சர்களும் ஒரேயடியாகச் சுருட்டிக் கொள்வதற்கும் ஏற்ற முறையில்தான் இந்த நிவாரணம் வழங்கும் முறை அமைக்கப்பட்டிருக்கிறது. சுனாமி நிவாரணத்தைச் சுருட்டி ருசி கண்டவர்கள் வெள்ள நிவாரணத்தை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் போய்ச் சேர வேண்டும் என்பது இந்த அரசின் நோக்கமாக இருந்தால், அவரவர்க்குரிய ரேசன் கடையில் நிவாரணத் தொகையை மக்களுக்கு வழங்கியிருக்கலாம். வீடு வீடாகவோ, தெருத்தெருவாகவோ அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை வைத்து விநியோகித்திருக்கலாம். டோக்கன், லஞ்சம், கூட்டம், நெரிசல் இவை எதற்குமே இடமில்லாமல் செய்திருக்கலாம். அப்படி எதுவும் செய்யாமல், ""எம்.ஜி.ஆர். நகர் போலீசு நிலையம்'' என்ற முத்திரை குத்தி போலி டோக்கன்களை போலீசார் விற்றது ஏன்?

 

இந்த விவகாரம் ஆதாரங்களுடன் அம்பலப்படத் தொடங்கியதும், தேங்காய் திருடப் போனவன் தென்னை மரத்தில் புல் பிடுங்கப் போனதாகக் கூறியதைப் போல, சென்னை போலீசு கமிஷனர் நடராஜ், ""அவை போலி டோக்கன் அல்ல் நிவாரணத் தொகை வாங்க வந்தவர்கள் வரிசையில் நின்றார்கள் என்பதற்கான அடையாள டோக்கன். அந்த டோக்கனை வாங்கிக் கொண்டால் நீண்ட ""கியூ''வில் நிற்க வேண்டியதில்லை. வசதிப்படும் நேரத்தில் நேராக கவுன்ட்டரில் கொடுத்து நிவாரணப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். கூட்ட நெரிசலை முறைப்படுத்த போலீசார் செய்த ஏற்பாடு இது'' என்கிறார்.

 

பத்தாயிரம் பேருக்கு இரண்டே நாளில் நிவாரணம், அதுவும் ஒரே பள்ளியில் டோக்கன் விநியோகம் என்ற இந்தச் சதித்திட்டம்தான் லஞ்சம் தலைவிரித்தாடுவதற்கும், லஞ்சம் கொடுக்க முடியாத மக்கள் மிதிபட்டுச் சாவதற்கும் வழிவகுத்திருக்கிறது. எனவேதான், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 42 உயிர்களைக் காவு வாங்கியுள்ள சம்பவம் ஒரு விபத்தல்ல் படுகொலை! வதந்தி, விஷமிகள் பரப்பிய புரளி, நெரிசல், மக்களின் பணத்தாசை, ஒழுங்கீனம், எதிர்பாராத விபத்து என்ற வார்த்தைகளால் மூடி மறைக்கப்படும் படுகொலை! சுயமரியாதையுடன் உழைத்து வாழும் மக்களை, லஞ்சம் வாங்கியே வயிறு வளர்க்கும் இந்த மானம் கெட்ட கூட்டம் பிச்சைக்காரர்களாக நடத்தியிருக்கிறது; அதன் விளைவுதான் இந்தப் படுகொலை!

 

இந்தப் படுகொலையை நடத்திய குற்றவாளிகள் யார்? டோக்கனை கள்ளத்தனமாக விற்ற போலீசு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்; லஞ்சம் கொடுக்க மறுத்த மக்களைத் தடியடி நடத்தி விரட்டிய போலீசார், நிவாரணத் தொகையில் கமிசன் அடித்ததோடு, தன் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்களைக் கூறுபோட்டு டோக்கன் விநியோகித்த அ.தி.மு.க.வினர், வெள்ள நிவாரணம் என்ற பெயரில் அடுத்த தேர்தலைக் குறிவைத்து இந்தக் கிரிமினல் திட்டத்தை வகுத்தளித்த ஜெயலலிதா.... இவர்கள் அனைவரும்தான் இந்தப் படுகொலைக்குப் பொறுப்பான குற்றவாளிகள்!

 

எதிர்கட்சிகள் நடத்திய மௌன அஞ்சலி கறுப்புக் கொடி ஊர்வலமும், ஜெ. பதவி விலக வேண்டுமென்ற அவர்களது கோரிக்கையும் இந்தக் குற்றவாளிகளைத் தண்டிக்கப் போவதில்லை. அவ்வாறு தண்டிக்க வேண்டுமென்று அவர்கள் கோரவுமில்லை. மாறாக, வெள்ள நிவாரணம் வழங்க சர்வ கட்சிக் குழு அமைக்க வேண்டுமென்பதும், ஊழலில் தமக்கும் பங்கு வழங்க வேண்டுமென்பதுதான் அவர்களுடைய கோரிக்கை.

 

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்திரசேகரனைப் பொறுப்பிலிருந்து மாற்றியதைத் தவிர வேறு எந்த அதிகாரி மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எந்தவொரு போலீசுக்காரன் மீதும் இன்றுவரை எந்த நடவடிக்கையுமில்லை. அதேசமயம், வதந்தியைப் பரப்பினார் புரளியைக் கிளப்பினார் என்று எதிர்க்கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்படுகிறார்கள்; விசாரணைக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள். ""நகரத்தில் வாழும் மக்களுக்கு எதிலும் பொறுமை கிடையாது; இது மக்களின் பணத்தாசையால் ஏற்பட்ட பலி; இலவச வேட்டிசேலை வழங்குவதையே கொள்கையாகக் கொண்டு மக்களைப் பிச்சைக்காரர்களாக நடத்தும் கழகங்களின் கவர்ச்சிவாத அரசியல்தான் காரணம்; 30,000 பேருக்கு ஒரேநாளில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நிவாரணப் பொருட்களை விநியோகித்துள்ள நிலையில், அதை விடக் குறைவான எம்.ஜி.ஆர். நகர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நடந்த துயரச் சம்பவத்துக்கு காரணம் வதந்தியும் புரளியும்தான்'' என்றெல்லாம் அதிகார வர்க்கத்தினரும் போலீசு அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் ஆளுக்கொரு கோணத்தில் குற்றவாளிகளைத் தப்புவிக்க முயற்சிக்கிறார்கள்.

 

இலவச சேலைக்காக மிதிபட்டுச் சாவு, கஞ்சித் தொட்டியின் முன் தடியடி, வியாசர்பாடியில் படுகொலை, இன்று எம்.ஜி.ஆர். நகர் படுகொலை... என்று தொடரும் இந்த அநீதிக்கு முடிவு கட்ட வேண்டுமானால், 42 பேரைச் சாவுக்குத் தள்ளிய பாசிச ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டாக வேண்டும். அதற்காகப் போராடுவதன்மூலம்தான் இந்தக் கிரிமினல்களின் திமிருக்கு முடிவு கட்ட முடியும்.