01_2006.jpgதுயரத்தை துடைப்பதற்கான நிவாரணமே துயரத்தை உருவாக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறது, ஜெயலலிதா அரசு. டிசம்பர் 18ஆம் தேதியன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 42 உயிர்களைக் காவு வாங்கியுள்ள சம்பவம் ஒரு விபத்தல்ல. படுகொலை!

 

வதந்தி, விஷமிகள் பரப்பிய புரளி, நெரிசல், மக்களின் பணத்தாசை, ஒழுங்கீனம், எதிர்பாராத விபத்து என்ற வார்த்தைகளால் மறைக்கப்படும் படுகொலை.

 

மறைக்கப்படும் இந்த உண்மையை வெளிக் கொணர்ந்தும் கொலைக்குற்றவாளிகளைத் தண்டிக்கவும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் பாசிச ஜெயாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன.

 

சென்னையில், 42 பேர் பலியான துயரச் செய்தியுடன் விடிந்த கறுப்பு ஞாயிறன்று காலையில் எம்.ஜி.ஆர். நகருக்கு விரைந்த ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. தோழர்கள், பலியானோர் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, உடனடியாக, ""இது விபத்து அல்ல படுகொலை! கொலைக் குற்றவாளிகளைத் தண்டிப்போம்! கொலைகார போலீசையும் அதிகாரிகளையும் ஏவிவிட்ட ஜெயா அரசைத் தூக்கியெறிவோம்!'' எனும் முழக்கங்களைக் கொண்ட சுவரொட்டிகளை அப்பகுதியெங்கும் ஒட்டினர். அன்று மாலை 5 மணியளவில் எம்.ஜி.ஆர். நகர் 100 அடி சாலையில் முழக்கமிட்டபடியே ஊர்வலமாக வந்த தோழர்கள் பாசிச ஜெயாவின் கொடும்பாவியை எரித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இப்போராட்டம் மிகச்சரியானது என எதிரொலித்தனர். பின்னர் தோழர்கள், கொலைகார ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டபடியே ஊர்வலமாகச் சென்று, பலியானோர் வீடுகளின் முன்பாகத் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர். நகர் மக்கள் பலர் உணர்வோடு கலந்து கொண்டனர்.

 

பெரும்படையாக போலீசாரும் அதிரடிப்படைகளும் எம்.ஜி.ஆர். நகரில் ஞாயிறன்று குவிக்கப்பட்டிருந்த போதிலும், கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தின் போதும் ஊர்வலத்தின் போதும் போலீசார் இவற்றைத் தடுக்க முடியாமல் கண்காணித்தபடியே நின்றனர். இப்போராட்டத்தைத் தடுத்தாலோ, தாக்கினாலோ ஏற்கெனவே ஆத்திரத்தில் இருக்கும் மக்கள் தம்மைத் தாக்கி அழித்து விடுவார்கள் என்ற போலீசாரின் அச்சமே இதற்குக் காரணம். எனவேதான், போராட்டத்தின்போது அமைதி காத்த போலீசு, போராட்டத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய முன்னணியாளர்களை தனித்தனியே நள்ளிரவில் கைது செய்து சிறையிலடைத்தது.

பின்னர் 22.12.05 அன்று மாலை எம்.ஜி.ஆர். நகரில் புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் நினைவஞ்சலி ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம், படுகொலை நடந்த மாநகராட்சி மைதானத்தை அடைந்ததும், அங்கு தோழர்கள் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். அங்கு நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் பு.ஜ.தொ.மு. மாநிலச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு உரையாற்றினார். பின்னர் கருப்புக் கொடிகள் பதாகைகளுடன் எம்.ஜி.ஆர். நகரின் தெருக்கள் வழியே ஊர்வலமாகச் சென்ற தோழர்கள், இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறினர். இந்த ஊர்வலத்தில் நிவாரணம் வாங்கச் சென்று பலியானோரின் உறவினர்களும் நண்பர்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு பங்கேற்றனர். ஊர்வலம் சென்ற பாதையெங்கும் உழைக்கும் மக்களும் வியாபாரிகளும் எழுந்து நின்று மரியாதை செலுத்தி தமது துயரத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

 

தஞ்சையில், ம.க.இ.க., பு.மா.இ.மு. சார்பில் கொலைகார போலீசையும் அதிகாரிகளையும் ஏவிவிட்டு 42 பேரின் உயிரைப் பறித்த பாசிச ஜெயாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் 19.12.05 அன்று ரயிலடியில் நடைபெற்றது. தமிழகத்தின் எதிர்க்கட்சியினரான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அமைதி ஊர்வலம் நடத்த அன்று ரயிலடியில் கூடியிருந்த வேளையில், போலீசு தடைகளை மீறி நடந்த இக்கொடும்பாவி எரிப்புப் போராட்டம் அனைவராலும் பரபரப்பாக வரவேற்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணித் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டனர். பின்னர், 22.12.05 அன்று பனகல் கட்டிட நுழைவாயிலருகே, கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலைச் செய்யக் கோரியும், கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. திரளான உழைக்கும் மக்கள் திரண்டு நின்று கொலைகார அரசுக்கு எதிரான தமது வெஞ்சினத்தை வெளிப்படுத்தினர்.

 

திருச்சியில் 19.12.05 அன்று காலை புத்தூர் நாலு ரோட்டில் கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்து தண்டிக்கக் கோரியும் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கக் கோரியும் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி, கொலைகார ஜெயாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தையும் நடத்தினர். திருச்சி நகரையே அதிர வைத்த இந்த ஆர்ப்பாட்டம் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தைத் தடுத்த போலீசு, 6 பெண் தோழர்கள் உள்ளிட்டு 20 தோழர்களைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது.

 

மதுரையில், ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக, வெள்ள நிவாரணப் படுகொலைக்குக் காரணமான அதிகாரிகள், போலீசாரைக் கைது செய்து தண்டிக்க கோரி 19.12.05 அன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாசிச ஜெயாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இக்கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தின் பொழுது முன்னணியாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டனர்.

 

கடலூரில் 19.12.05 அன்று மதியம் பு.மா.இ.மு. தோழர்கள் சுப்பராயலு பூங்கா எதிரில் உள்ள நாலுமுனைச் சாலையில் கொலைகார ஜெயா அரசை எதிர்த்து, ஜெயலலிதாவின் உருவப் பொம்மை எரிப்புப் போராட்டத்தை நடத்தினர். கொலைக் குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரி விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்தக் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களைத் தாக்கிய போலீசு, முன்னணியாளர்களைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது.

 

நெய்வேலியில், 19.12.05 அன்று மாலை மந்தாரக்குப்பம் நாலுமுனை ரோடு அருகே, பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து, கொலைக் குற்றவாளிகளான பாசிச ஜெயா உள்ளிட்டு போலீசுத்துறை வருவாய்த்துறை அதிகாரிகளைக் கைது செய்து தண்டிக்கக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தின. தொழிலாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் தமது குடும்பத்தோடு திரண்டு வந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், கொலைக் குற்றவாளிகளுக்கு எதிரான வெஞ்சினத்தை உழைக்கும் மக்களிடையே மூண்டெழச் செய்வதாக அமைந்தது.

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில், ""42 பேர் பலியான சம்பவம் விபத்து அல்ல் படுகொலை! கொலைகார போலீசையும் அதிகாரிகளையும் ஏவிவிட்ட ஜெயா அரசைத் தூக்கியெறிவோம்!'' என்ற முழக்கங்களுடன் வி.வி.மு. உடனடியாக சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதைக் கண்டு பீதியடைந்த போலீசுத்துறை, மறுநாள் ஒரு போலீசுக்காரரை ஏவி, அவற்றைக் கிழித்தெறிய முயற்சித்தது. தோழர்கள் அப்போலீசுக்காரரைச் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பியதும், இது எங்க மேலதிகாரி உத்தரவுங்க என்று கூறிவிட்டுத் தவறுக்கு வருத்தம் தெரிவித்து நழுவிச் சென்றார். இச்சுவரொட்டி இயக்கமும், கொலைக் குற்றவாளிகளைத் தண்டிப்போம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுர பிரச்சாரமும் பகுதி வாழ் மக்களைப் போராட அறைகூவுவதாக அமைந்தன.

 

கோவையில், 21.12.05 அன்று மாலையில் காந்திபுரம் தமிழ்நாடு உணவகம் முன்பாக ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து ""கொலைக் குற்றவாளிகளைத் தண்டிப்போம்! கொலைகார ஜெயா அரசைத் தூக்கியெறிவோம்!'' எனும் மைய முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தின. எந்தவொரு அரசியல் கட்சியும் இப்படுகொலையைக் கண்டித்து மக்களைத் திரட்டிப் போராடாத நிலையில், பெண்கள்குழந்தைகளுடன் செங்கொடி ஏந்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டம் மக்களின் தயக்கத்தை உடைத்துப் போராட அறைகூவுவதாக அமைந்தது.

 

விழுப்புரத்தில் 21.12.05 அன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பு.மா.இ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து ""42 பேர் பலியான சம்பவம் விபத்து அல்ல் போலீசுதுறை அதிகார வர்க்கத்தின் கூட்டுக் கொள்ளைக்காக நடந்த படுகொலை! கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்!'' எனும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நட்டஈடு வழங்கக் கோரியும், வெள்ளத்தால் பயிர்கள் அழிந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்கக் கோரியும், வெள்ள நிவாரணத்தை வரவிருக்கும் தேர்தலுக்கான லஞ்சமாக மாற்றியுள்ள பாசிச ஜெயா அரசை எதிர்த்தும் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்.

 

தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் செயல்படும் பகுதிகளில் கொலைகார அரசுக்கு எதிராகவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காகவும் போராட்டங்கள் தொடர்கின்றன.

 

பு.ஜ. செய்தியாளர்கள்