Language Selection

புதிய ஜனநாயகம் 2006

02_2006.jpgஜனவரி இதழின் அட்டைப்பட விளம்பரமே அரசியல் ஆர்வலர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் வகையில் அருமையாக வெளிவந்துள்ளது. இப்""புத்தாண்டு சிறப்புத் தள்ளுபடி'' விளம்பரத்தையும் அட்டைப்படக் கட்டுரையையும் விளக்கிப் பிரச்சாரம் செய்தபோது பேருந்துகளில் பு.ஜ. இதழ் பரபரப்பாக விற்பனையாகியது. ஜெகந்நாபாத் சிறைத் தகர்ப்பு பற்றிய சி.பி.எம். தலைவர் யெச்சூரியின் துரோகத்தனத்தையும் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்திக் காட்டிய ""சிவப்பென்றால் சிலருக்கு பயம்! பயம்!!'' எனும் கட்டுரை சிறப்பு.

வாசகர்கள், திருப்பூர்.

 

நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தின் லட்சணத்தையும், எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளும் இந்த அழுகிய பிணத்தை ஏன் கட்டிக் காத்து வருகின்றன என்பதையும் எடுப்பாக உணர்த்திய அட்டைப்படக் கட்டுரை சிறப்பு. எம்.ஜி.ஆர். நகரில் 42 பேரைப் படுகொலை செய்த பாசிச ஜெயாவின் கோரமுகத்தைக் கிழித்துக் காட்டிய புதிய ஜனநாயகப் புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகள் உணர்வூட்டி நம்பிக்கையளிக்கின்றன.

சுரேஷ்குமார், சென்னை.

 

எம்.ஜி.ஆர். நகரில் 42 பேர் பலியான சம்பவத்தை ஒரு சாதாரண விபத்தாகவும், மக்களின் பணத்தாசையால் ஏற்பட்ட சாவு என்றும் பத்திரிகைகள் அவதூறு செய்து மூடிமறைத்த வேளையில், இது பச்சைப் படுகொலை என்று உணர்த்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரிப் போராடிய புரட்சிகர அமைப்புகளுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

ஜியேநேசன், குள்ளம்பட்டி.

 

நேரம் கிடைக்கும்போதெல்லாம் மார்க்சிய பெரியாரிய சிந்தனைகளையும், புரட்சிகர இயக்கங்களையும் அவதூறு செய்து கொச்சைப்படுத்துவதையே பிழைப்பாக்கிக் கொண்டுள்ள தலித்திய "மாமேதை' ரவிக்குமார், ""காலச்சுவடு'' என்ற பார்ப்பன இலக்கியப் பத்திரிகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மார்க்சிய லெனினிய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் வழியாக வரும் ஏகாதிபத்திய சதியை எச்சரித்து துண்டறிக்கை வெளியிட்டதைப் பற்றி குறிப்பிட்டு, வேறெதுவும் செய்யாதது போல் ஏளனம் செய்திருக்கிறார். ஆனால், ரவிக்குமாரைப் போல வெறுமனே பேசுவதையும் எழுதுவதையும் மட்டுமே பிழைப்பாக்கிக் கொள்ளாமல், களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்றவரை நிவாரண உதவிகள் செய்து அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிராக அம்மக்களைத் திரட்டிப் போராடி வருவது மார்க்சியலெனினிய புரட்சிகர அமைப்புகள் மட்டும்தான். இந்த உண்மைகளை ""நிவாரணப் பணிகள் போராட்டப் பணிகள்'' என்னும் செய்தித் தொகுப்பு எடுப்பாக உணர்த்தி ""காலச்சுவடு'' புரோக்கர் ரவிக்குமாரின் அண்டப்புளுகை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மணிகோ. பன்னீர்செல்வம், நாகம்பட்டி.

 

நையாண்டி பாணியில் அமைந்த அட்டைப்படம் மிக அருமை. நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை மக்களுக்குப் படம் பிடித்துக் காட்டிய, கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய பன்றிகளுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.

நாகராசன், கீழச்சீவல்பட்டி.

 

முதலாளித்துவ அறிவுஜீவிகளும், நாடாளுமன்ற மோசடி ஜனநாயகத்தை ஏற்றிப் போற்றும் ஓட்டுக் கட்சிகளும் எவ்வளவுதான் மூடிமறைத்தாலும் அதன் அழுகல் நாற்றத்தை தடுத்துவிட முடியாது என்பதை நெத்தியடியாய் விளக்கியது அட்டைப்படக் கட்டுரை. புரட்சிகர அரசியலுக்கே உரித்தான நையாண்டித்தனத்துடன் அட்டைப் படம் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

யாழினி, சென்னை.

 

அரசியலே வேண்டாம், எந்தவொரு துயரத்தையும் அரசியலாக்குகிறார்கள் என்ற நடுத்தர வர்க்கத்தின் தவறான கருத்தை முறியடித்து, அரசியல் பண்ணப்படுவதால்தான் அரைகுறையாகவாவது ஊழல் வெளியே வருகிறது என்ற உண்மையை தலையங்கக் கட்டுரை எடுப்பாக உணர்த்தியது.

நிர்மலா, திருச்சி.

 

நாளேட்டில் வரும் விளம்பரம் போல பு.ஜ. அட்டைப்படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற சி.பி.எம். கட்சியின் விவசாயப் பிரிவு மாநாட்டில், அணிகளை ஏமாற்றும் விதமாக கொல்கத்தாவில் இந்திய அமெரிக்க போர் விமானக் கூட்டுப் பயிற்சியை எதிர்த்துப் போராடியதாக தலைவர்கள் சவடால் அடித்தனர். ஆனால், மறுநாள் தினத்தந்தி தஞ்சை பதிப்பில் (8.1.06) அமெரிக்கப் போர் விமானக் கூட்டுப் பயிற்சிக்கு மே.வங்க முதல்வர் பாதுகாப்பு அளித்து ஒத்துழைத்த செய்தி வெளிவந்து சி.பி.எம்.இன் புரட்சி முகமூடி கிழிந்தது. போதாக்குறைக்கு இம்மாநாட்டில், திரிபுரா மாநில முதல்வரான மாணிக் சர்க்கார், "தமிழகப் புரட்சிக் கவிஞர்' ""மன்மதராசா'' யுகபாரதிக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினார். தஞ்சை நகர சி.பி.எம். செயலாளர் மகன்தான் யுகபாரதி என்று மாநாடு பெருமைப்பட்டுக் கொண்டது. இதர ஓட்டுக் கட்சிகளைப் போலவே பிழைப்புவாத பித்தலாட்டத்தில் மூழ்கி முத்துக் குளிக்கும் இப்போலி கம்யூனிஸ்டுகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும்.

கரிகாலன், தஞ்சை.

 

பின் அட்டையில் வெள்ள நிவாரணத்தில் பலியானோரின் படத்தை அக்கோரத்தைக் காட்டும் வகையில் அமைத்திருக்க வேண்டும். அரசியல் பண்ணுவது தவறா? எனும் கட்டுரையில், பலியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை பாசிச ஜெயா கட்டிப் பிடித்து ஆறுதல் நாடகமாடும் படத்தை வெளியிட்டிருக்கலாம். கட்டுரை ஏற்படுத்தும் உணர்வுக்கு ஏற்ப பொருத்தமான படங்களை வெளியிட முயற்சிக்க வேண்டும்.

கவிதாசன், வல்லம்.

 

கடந்த டிசம்பர் 31ஆம் தேதியன்று மாலை எமது அமைப்பின் சார்பாக பேருந்துகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, அரசு ஊழியர் ஒருவர், எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கியது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார். ""நாடாளுமன்றம் பன்றித் தொழுவம்; நாடாளுமன்றம் ஏமாற்று; மக்கள் சர்வாதிகார மன்றமே ஒரே மாற்று'' என்று நாங்கள் விளக்கிப் பிரச்சாரம் செய்தோம். மறுநாள், புதிய ஜனநாயகம் இத ழின் அட்டைப்படம் ""நாடாளுமன்றம் விற்பனைக்கு! மலிவு விலையில் எம்.பி.க்கள்!'' என்ற விளம்பர முகப்புடன் வெளிவந்து அரசு ஊழியர்களிடம் பரபரப்புடன் வரவேற்பைப் பெற்றது. உரிய தருணத்தில் எடுப்பான அரசியல் அம்பலப்படுத்தலுடன் வெளியான பு.ஜ.வுக்கு எமது வாழ்த்துக்கள்!

தமிழ்ச்செல்வி, வி.வி.மு.,
பென்னாகரம்

 

அட்டைப்பட விளம்பர வாசகங்களைப் படித்து, சிரித்து பலர் ஆர்வத்தோடு பு.ஜ. இதழை வாங்கி, நீங்கள் சொல்வது சரிதான் என்று பாராட்டியுள்ளார்கள். சுனாமி, வெள்ளம் முதலான இயற்கை பேரிடர் ஏற்படும்போது அரசியல் பண்ணுவது தவறு; மனிதாபிமானம் தான் சரியானது என்றிருந்த எமது தவறான கருத்துக்களைக் களைந்து கொள்ள தலையங்கக் கட்டுரை பெரிதும் உதவியது.

வாசகர்கள், பாடாலூர்.

 

எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கியது சரியா, தவறா என்று பத்திரிகைகள் சூடாக விவாதித்த நேரத்தில், நாடாளுமன்ற ஜனநாயகமே எப்படி மோசடியானது என்று புதிய கோணத்தில் அம்பலப்படுத்திய அட்டைப்படமும் கட்டுரையும் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.

வாசகர் வட்டம், திருச்சி.