Language Selection

புதிய ஜனநாயகம் 2006

02_2006.jpgசில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பை ஜனவரி 25ஆம் தேதியன்று காங்கிரசு அரசு வெளியிட்டுள்ளது. மதுபானம், பெட்ரோலிய கட்டுமானம், தானியக் கிட்டங்கிகள், பருத்திரப்பர் வணிகம், வைரம் உள்ளிட்ட கனிமச் சுரங்கங்கள், தொழில்துறைக்கான வெடி மருந்துகள், விமான நிலையங்கள், மின்சாரத்தை வாங்கி விற்கும் வணிகம் போன்றவற்றில் இனி 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவதாகவும் இந்த அறிவிப்பு கூறுகிறது. பன்னாட்டு

 நிறுவனங்களுக்கு ஒவ்வொரு துறையாக விற்பதை விட சுனாமியைப் போல கொத்துக் கொத்தாக அள்ளிச் செல்ல ஏற்பாடு செய்வதுதான் மக்களைத் திக்குமுக்காடச் செய்யவும், செயலிழக்கச் செய்யவும் வழி என்று காங்கிரசு கயவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

 

""சில்லறை வணிகம் குறித்து நாம் விவாதித்துக் கொண்டிருக்கும்போதே தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட உங்களைத் தூண்டியது எது?'' என்று ஜனவரி 31ஆம் தேதி பிரதமரிடம் நேரில் கேள்வி எழுப்பியிருக்கிறார் "மார்க்சிஸ்டு' கட்சித் தலைவர் பிரகாஷ்காரத் (இந்து, பிப்.1). ""டாவோஸ் மாநாட்டில் பன்னாட்டு முதலாளிகளை மகிழ்விக்கத்தான் இந்த அவசர அறிவிப்பு'' என்று காரத்தின் கேள்விக்கு 26ஆம் தேதியே பதிலளித்துவிட்டார் யெச்சூரி. எனவே, இனி குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து "மார்க்சிஸ்டு'கள் மன்மோகனிடம் விவாதிப்பதைவிட நேரடியாகப் பன்னாட்டு முதலாளிகளிடமே விவாதித்து விடலாம்.

 

கூட்டணிக்குள் விவாதம், தேசிய விவாதம் என்ற பேச்சுகள் எல்லாமே முழு மோசடிகள். ""முதலீடு போட பணமில்லை, தொழில்நுட்பம் இல்லை'' என்று மற்ற துறைகளை தாரை வார்ப்பதற்குக் கூறப்படும் வாதங்களையும் நொண்டிச் சாக்குகளையும் கூட இதற்குச் சொல்ல முடியாது. சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழையவிருப்பது பற்றி செப். 2005 புதிய ஜனநாயகத்தில் எழுதியிருக்கிறோம்.

 

ஆண்டொன்றுக்கு இந்தியாவில் நடைபெறும் சில்லறை வணிகத்தின் மதிப்பு சுமார் 11 லட்சம் கோடி ரூபாய். இது 2010ஆம் ஆண்டில் 13.5 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்பது பன்னாட்டு நிறுவனங்களின் கணிப்பு. 2005ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த விற்பனையில் 94மூ சதவீதம், சிறு வணிகர்களின் கையில் இருக்கிறது. அரசுக் கணக்கெடுப்பின்படியே சுமார் 4.3 கோடிப் பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிக்கிறார்கள். அவர்களைச் சார்ந்து இருக்கும் குடும்பங்களையும் சேர்த்து கணக்கிட்டால் சுமார் 20 கோடிப் பேருக்கு சிறு வணிகம்தான் சோறு போடுகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடி மிக அதிகமான மக்கள் சார்ந்திருக்கும் தொழில் சிறு வணிகம். விவசாயத்தின் அழிவு, வேலையின்மை, ஆட்குறைப்பு, ஆளெடுப்புத் தடை, சிறு தொழில்களின் அழிவு ஆகிய இவையனைத்தும், மேலும் மேலும் அதிகமான மக்களை இந்தத் தொழிலை நோக்கித் தள்ளிவருகின்றன. 20 கோடி மக்கள் ஈட்டி வரும் வருமானத்தை 10, 20 முதலாளிகள் மட்டுமே அபகரித்துக் கொள்வதற்கான சதித்திட்டம்தான் சில்லறை விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு!

 

கொள்ளை லாபமடிப்பதற்கான தங்களுடைய பேய்ப்பசியை பன்னாட்டு முதலாளிகளும் அவர்களது கூட்டாளிகளான இந்தியத் தரகு முதலாளிகளும் கடுகளவும் மறைத்துக் கொள்ளவில்லை. உலகின் வளர்ந்து வரும் 30 சந்தைகளில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது என்று சப்புக் கொட்டுகிறார்கள். ""மளிகைக் கடைக்காரர்களையும் சிறு வணிகர்களையும் பாதுகாக்கும் சட்டங்களை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது'' என்று எச்சரிக்கிறார் ""அஸோசெம்'' என்ற இந்தியத் தரகு முதலாளிகள் சங்கத் தலைவர் அனில் அகர்வால். ""அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். சீக்கிரமே உணவு தானிய சில்லறை விற்பனை திறந்து விடப்பட இருப்பதால், எல்லா சில்லறை வணிகத்திலும் 100மூ அந்நிய முதலீட்டை அரசு அனுமதித்துத்தான் ஆகவேண்டும்'' என்கிறார் எஃப்.ஐ.சி.சி.ஐ எனும் மற்றுமொரு தரகு முதலாளிகள் சங்கத் தலைவர் போதார்.

 

அமெரிக்க வால் மார்ட் நிறுவனத்தின் தலைவர் சென்ற ஆண்டே மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசியதும், சென்ற மாதம் மலேசியாவில் நடந்த பன்னாட்டு முதலாளிகள் மாநாட்டில் ""சில்லறை வணிகத்தைத் திறந்துவிட்டே தீருவோம், இடதுசாரிகளின் எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்து விடுவோம்'' என்று மன்மோகன் பேசியதும் பழைய கதைகள். சில்லறை வணிகத்தையும் பென்சன் நிதியையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விட்டால்தான், நம் நாட்டுக் கணினி வல்லுநர்களுக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேலை கொடுப்பார்கள் என்பதை இடதுசாரிகளுக்குப் புரிய வைக்கப் போகிறாராம் சிதம்பரம் (எகனாமிக் டைம்ஸ், ஜன. 23). இது புதிய செய்தி. சொந்தமாக முதல் போட்டுத் தொழில் நடத்தும் 4 கோடி சிறு வணிகர்களையும், 2 கோடி தொழிலாளர்கள் உழைத்து சம்பாதித்த ஓய்வுக்கால நிதியையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காவு கொடுத்தால்தான் நம் நாட்டு இளைஞர்களுக்கு வேலை கேட்டு அமெரிக்காவிடம் பிச்சை எடுக்க முடியுமாம்! கேட்ட மாத்திரத்தில் செருப்பால் அடிக்கத் தோன்றும் சிதம்பரத்தின் சிந்தனையை விஞ்சுகிறார் உணவு பதப்படுத்தும் துறைக்கான மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சகாய். ""சில்லறை வணிகத்தில் 100மூ பன்னாட்டு கம்பெனிகளை அனுமதித்தால்தான், தாங்கள் விற்பனை செய்யும் உணவுப் பொருட்களைத் தாங்களே உற்பத்தி செய்யும் பொருட்டு அவர்கள் விவசாயத்திலும் ஈடுபடுவார்கள்; அப்போதுதான் நம் நாட்டு விவசாயிகளுக்கு நிறைய வேலை வாய்ப்பு கிடைக்கும்'' என்று விவசாயத்திற்கும் சேர்த்துக் கொள்ளி வைக்க வழி சொல்கிறார்.

 

""வெறும் 51மூ மட்டும்தான் அந்நிய மூலதனத்தை அனுமதிக்கிறோம்; அதுவும் தமது சொந்த பிராண்டுகளை (ஆணூச்ணஞீ) மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியும்'' என்று தன்னைச் சந்தித்த போலி கம்யூனிஸ்டு தலைவர்களிடம் சமாதானம் சொல்லியிருக்கிறார் மன்மோகன். போராடுவோம் என்று ஒருபுறம் சவடால் அடித்துக் கொண்டே, ""அறிவிப்பின் உள் விவரங்களை அரசு சரியாகத் தெளிவுபடுத்தவில்லை'' என்று சந்தில் புகுந்து ஜகா வாங்குகிறார்கள், "மார்க்சிஸ்டு'கள்.

 

வர்த்தக அமைச்சர் கமல்நாத், அரசின் கொள்கையை "மார்க்சிஸ்டு'களுக்குத் தெளிவுபடுத்துகிறார். ""51மூ அந்நிய நேரடி முதலீட்டை (ஊஈஐ) அனுமதித்திருக்கிறோம்; மீதி 49 சதவீதத்தை அந்நிய நிதி நிறுவனங்கள் (ஊஐஐ) வாங்கலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை; 100 சதவீதமும் அனுமதிக்கலாம் என்பதே என் கருத்து'' என்று டாவோஸ் மாநாட்டில் பன்னாட்டு முதலாளிகளுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார். ""வலது காலை 51மூ உள்ளே வைக்கலாம், இடது காலை 49மூ வைக்க அனுமதிக்கலாமா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை'' என்று கூறுவதன் பொருளை மரமண்டைகள் கூட விளங்கிக் கொள்ள முடியும்; "மார்க்சிஸ்டு'களுக்குத்தான் பாவம், விளங்கவில்லை.

 

உண்மையில் 51மூ என்ற அறிவிப்பே ஒரு முழு மோசடி. ஏற்கெனவே பல பன்னாட்டு நிறுவனங்கள் தமது பினாமி முகவர்கள் (ஊணூச்ணஞிடடிண்ழூழூ) மூலம் 100மூ தமக்குச் சொந்தமான கடைகளையே வைத்திருக்கிறார்கள். பாட்டா, அடிடாஸ், சோனி, நோக்கியா போன்ற ஒரு பிராண்டு விற்கும் கடைகள் மட்டுமின்றி, பல்பொருள் அங்காடிகளையும் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. ""ஜெர்மனியின் மெட்ரோ சில்லறை வணிக நிறுவனம், கொல்கத்தாவில் தனது சங்கிலித் தொடர் உணவகங்களைத் திறக்க இருக்கிறது என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறோம்'' என்று நவ. 28ஆம் தேதியன்றே பேட்டி கொடுத்திருக்கிறார் மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யா (பைனான்சியல் எக்ஸ்பிரஸ், 29.11.05). ஆகவே, இதுநாள்வரை கொல்லைப்புறம் வழியாக கள்ளத்தனமாக நுழைந்து வந்த பன்னாட்டுக் கம்பெனிகளை, தற்போதைய அறிவிப்பின் மூலம் வாயிற்கதவைத் திறந்து வரவேற்றிருக்கிறார் மன்மோகன் சிங் என்பதே உண்மை.

 

இதனை இன்னொரு எளிய உதாரணம் மூலமும் புரியவைக்க முடியும். பிரபல சங்கிலித் தொடர் அங்காடியான ஃபுட் வேர்ல்ட், ஆர்.பி.ஜி என்ற இந்தியத் தரகு முதலாளிய நிறுவனமும் டயரி ஃபார்ம் என்ற ஜெர்மன் பன்னாட்டு நிறுவனமும் இணைந்து நடத்தும் கடையாகும். தற்போது இருவரும் பிரிந்துவிட்டபடியால், ஆர்.பி.ஜி தனது கடைகளை ""ஸ்பென்சர் டெய்லி'' என்ற பெயரிலும், டயரி ஃபார்ம் தனது கடைகளை ""ஃபுட்வேர்ல்ட்'' என்ற பெயரிலும் நடத்தி வருகின்றன. இப்படியொரு பன்னாட்டு நிறுவனக் கூட்டு இருப்பதே இந்தப் பிரிவுக்குப் பிறகுதான் தெரிய வருகிறது. ஆகவே 51மூ மட்டுமே அந்நியக் கூட்டு என்பதும் சரி, ஒரு பிராண்டு பொருளை மட்டுமே விற்கலாமென்பதும் சரி, சிறு வணிகத்தைக் காப்பாற்றும் பொருட்டு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அல்ல் அவர்களுடைய எதிர்ப்பை மழுங்கச் செய்வதற்காகவே செய்யப்பட்டுள்ள ஏமாற்றுகள்.

 

ஒரு பிராண்டு மட்டுமே விற்கலாமென்ற "கட்டுப்பாட்டிற்கு' சட்டரீதியான விளக்கம் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்கிறார் கமல்நாத். பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியான முறையில் அவர்களைக் கலந்தாலோசித்து இந்த விளக்கம் தயாரிக்கப்படும். சொல்லப் போனால் இந்த "ஒரு பிராண்டு' என்ற ஏற்பாடு உலகின் மிகப்பெரிய சில்லறை வணிக நிறுவனமான அமெரிக்காவின் ""வால் மார்ட்''டுக்குத்தான் பெரிதும் பயனளிக்கக்கூடியது. திருப்பூரில் தயாரித்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பனியன்கள் முதல் சீனாவிலிருந்து தயாரித்தனுப்பப்படும் டி.வி. பெட்டிகள் வரை அனைத்துமே ""வால் மார்ட்'' என்ற பிராண்டு அச்சிடப்பட்டுத்தான் அனுப்பப்படுகின்றன. சொந்தத் தொழிற்சாலையோ, உற்பத்தியோ இல்லாமல், விவசாயிகளிடமிருந்தும் சிறு உற்பத்தியாளர்களிடமிருந்தும் அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்கி, அவற்றின் மீது தன்னுடைய பெயரைப் பொறித்துக் கொள்ளும் வேலையைத்தான் ""வால் மார்ட்'' உலகெங்கும் செய்து வருகிறது. ஐ.டி.சி நிறுவனத்தின் "ஆசீர்வாத்' ஆட்டாவைப் போல, இனி வால் மார்ட் அரிசி, ஸ்பென்சர் கத்தரிக்காய், மெட்ரோ அப்பளம் ஆகியவற்றை இனி நாம் சந்தையில் பார்க்கலாம்.

 

ஓட்டுக் கட்சிகளின் அறிவிப்புகள் மற்றும் வாக்குறுதிகளிலிருந்து நாம் ஒருபோதும் உண்மையைக் கண்டறிய முடியாது. அவர்களுடைய நடவடிக்கைகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். சில்லறை வணிகத்தைத் திறந்து விடுவதற்கான அடித்தளம் பா.ஜ.க. ஆட்சியிலேயே போடப்பட்டு விட்டது. நகர்ப்புற நில உச்சவரம்பை பா.ஜ.க. நீக்கியது; ரியல் எஸ்டேட் தொழிலில் 100மூ அந்நிய மூலதனத்தை காங்கிரசு அரசு அனுமதித்தது. வாஜ்பாய் அரசு தங்க நாற்கரச் சாலை திட்டத்தை அறிவித்தது. 1.5 லட்சம் ரூபாய்க்கான சாலை அமைப்பு ஒப்பந்தத்தை பன்னாட்டு, தரகு முதலாளிகளுக்கு வழங்கியிருக்கிறது காங்கிரசு அரசு. இவையிரண்டும் வால் மார்ட் போன்ற பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கோரிக்கைகள். இந்த அடித்தளத்தின் மீதுதான் பல லட்சம் சதுர அடிப் பரப்பிலான ""ஷாப்பிங் மால்''கள் கட்டப்பட இருக்கின்றன. இந்தியாவின் 200 நகரங்களில் 50,000 கோடி செலவில் ""ஷாப்பிங் மால்''கள் கட்டும் பணி அடுத்த 5 ஆண்டுகளில் முடிந்து விடும் என்றும், சில்லறை வணிகத்தில் 100மூ பன்னாட்டுக் கம்பெனிகளை அனுமதித்தால் தங்கள் தொழில் மேலும் செழிக்குமென்றும் இந்திய ரியல் எஸ்டேட் முதலாளிகள் சங்கம் அரசைக் கோரியுள்ளது. சில்லறை வணிகர்களை ஒழிக்கத்தான் ""வாட்'' வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்பது ஏற்கெனவே தெரிந்த விசயம்.

 

சில்லறை வணிகத்தில் 51மூ பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி என்ற அறிவிப்பை ஜனவரி 25ஆம் தேதி அரசு வெளியிட்டது; 24ஆம் தேதி அது குறித்து அமைச்சரவை விவாதித்தது; ஆனால், இந்த முடிவை முன்னறிந்து சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் குதிக்கப் போவதாவும், 3000 கோடி முதலீடு செய்யப்போவதாகவும் ஜனவரி 23ஆம் தேதியன்றே அறிவித்தார் முகேஷ் அம்பானி. பாந்தலூன், ஷாப்பர்ஸ் ஸ்டாப், ஸ்பென்சர், ஃபுட்வேர்ல்ட், மெட்ரோ, வால் மார்ட் போன்ற நிறுவனங்கள் எல்லா நகரங்களிலும் நிலத்தை வளைத்து கட்டுமானப்பணிகளையும் தொடங்கி விட்டன. காய் கனி பால் முட்டை விற்கவும், மளிகை மருந்து ஸ்டேசனரி விற்கவும், இரும்பு மின்சார சாதனங்கள் இன்ன பிற பொருட்கள் விற்கவும் தனித்தனிக் கடைகள், துணி மணிகள் நகைகள் உள்ளிட்ட நுகர்பொருட்கள் விற்க பிரம்மாண்டமான மால்கள்... எனத் தங்களது திட்டத்தையும் இவர்கள் அறிவித்து விட்டார்கள். சென்னை தி.நகரில் ""நில்கிரிஸ்'' என்ற உள்நாட்டுப் பல்பொருள் அங்காடி இருந்த இடத்தில் ""மை டாலர்'' என்ற அமெரிக்க நிறுவனமும் திரிநேத்ரா என்ற இந்திய நிறுவனமும் இணைந்த கடை வந்துவிட்டது. விவேக், வசந்த் அண்டு கோ போன்ற நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனக் கூட்டுக்காகக் காத்திருக்கின்றன.

 

ஒரு பேரழிவின் விளிம்பில் நிற்கிறது நாடு. இது சிறு வணிகர்களுக்கு மட்டுமேயான பிரச்சினை என்று யாரேனும் கருதினால் அது மடமை. விநியோகத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் பன்னாட்டு ஏகபோகங்கள், நமது நாட்டின் விவசாய உற்பத்தியையும் சிறு தொழில் உற்பத்தியையும் முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அழித்து விடும். பரம்பரை பரம்பரையாகத் தமது சொந்த உழைப்பால் விவசாயத்தையும், தொழிலையும், வணிகத்தையும் உருவாக்கிய மக்கள் கொத்தடிமைகளாக, கூலிகளாக, அதுவும் கிடைக்காத திக்கற்றவர்களாக மடிய நேரிடும். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில்கூடக் காணமுடியாத இந்தக் கொடுமைக்குப் பெயர்தான் மறுகாலனியாதிக்கம். இதனை முறியடிக்கத் தேவைப்படுவது முன்னிலும் வீரியமிக்க விடுதலைப் போராட்டம்!

 

மு பாலன்