Language Selection

புதிய ஜனநாயகம் 2006

மறுகாலனியத் தாக்குதல் மூர்க்கமாக அரங்கேறி வருகிறது. அரசுத்துறைகளைத் தாரை வார்ப்பதற்கு கூறப்பட்ட பொய்க் காரணங்கள் கூட இல்லாமல், இப்போது லாபமீட்டும் அரசுத்துறை நிறுவனங்களான விமான நிலைய ஆணையகத்தின் கீழுள்ள தில்லி, மும்பை விமான நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. இக்கொடுமைக்கெதிராகப் போராடும் விமானநிலைய ஊழியர்கள் மீது மும்பை போலீசு காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளது. விமான நிலையங்கள் விமானப்படையைக் கொண்டு

 இயக்கப்படுகின்றன. முன்னணியாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அத்தியாவசியப் பணித்துறை சட்டம் பாயும் என்று எச்சரிக்கிறது அரசு. இந்த அச்சுறுத்தல்களையும் அடக்குமுறைகளையும் மீறி விமான நிலைய ஊழியர்களின் போராட்டம் உறுதியுடன் தொடர்கிறது.

 

இந்தியாவில் மொத்தமுள்ள 126 விமான நிலையங்களில் லாபகரமாகச் செயல்படுபவை தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா முதலான ஒருசில விமான நிலையங்கள் மட்டும்தான். இவற்றின் வருவாய் மூலம்தான் மற்ற விமான நிலையங்கள் செயல்படுகின்றன. மொத்த வருவாயில் 65மூ அளவுக்கு ஈட்டித் தருபவை தில்லி, மும்பை ஆகிய இரு விமான நிலையங்கள்தான். இவை தனியார்மயமாக்கப்பட்டதன் விளைவாக, மீதி 35மூ வருவாயைக் கொண்டு இயங்க முடியாமல் இதர விமான நிலையங்கள் நட்டப்பட்டு, பின்னர் அவையும் தனியார்மயமாக்கப்படும். அடுத்த குறி சென்னையும் கொல்கத்தாவும்தான் என்பது நிச்சயமாகி விட்டது.

 

தில்லி, மும்பை விமான நிலையங்களைக் கைப்பற்றுவதற்கான அந்நிய தரகு முதலாளிகளின் போட்டா போட்டியில், ஒப்பந்தப் புள்ளிகளைப் பரிசீலிப்பதிலும் தேர்வு செய்வதிலும் மோசடிகள் முறைகேடுகள் நடந்து, தாங்கள் போட்டியிலிருந்து கழித்துக் கட்டப்பட்டுள்ளோம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறது, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம். அந்நிய முதலீடு இல்லாத அரசும் தனியாரும் கொண்ட கூட்டுப்பங்கு நிறுவனமாகக் கொண்டு விமான நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்று விமான நிலைய ஊழியர் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை விமானப் போக்குவரத்து அமைச்சகம் எவ்வித விளக்கமும் தராமல் நிராகரித்துள்ளது. தனியார்மயமாக்கும் முடிவை எதிர்த்து கடந்த செப்டம்பரில் விமான நிலைய அதிகாரிகள் சங்கம், தில்லி உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு தடாலடியாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், அவசரமாகக் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டம் இத்தனியார்மயமாக்கலுக்கு ஒப்புதல் அளித்து அங்கீகரித்துள்ளது.

 

ஊழியர் சங்கத்தின் மாற்றுத் திட்டத்துக்கு பதிலளிக்கவில்லை, ஒப்பந்தப்புள்ளிகள் விதிப்படி முறையாகப் பரிசீலிக்கப்படவில்லை, லாபமீட்டும் அரசுத்துறையை தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டிய அவசியம் பற்றி விளக்கமில்லை, ஊழியர்களுக்கு வேலை உத்தரவாதமில்லை என்றெல்லாம் புலம்புகிறார்கள், விமான நிலைய ஊழியர் போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் போலி கம்யூனிஸ்டுகள். ஆம்; எதுவும் இல்லைதான்! உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்துவதுதான் ஒரே முடிவு என்று தனது அடுத்தடுத்த தாக்குதல்கள் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது, கைக்கூலி காங்கிரசு அரசு. மனித முகத்துடன் கூடிய தனியார்மயம் எனும் அதன் பித்தலாட்ட முகமூடி கிழிந்து கந்தலாகி நிற்கிறது. இத்தனைக்கும் பிறகும் இந்தக் கைக்கூலி அரசை போலி கம்யூனிஸ்டுகள் முட்டுக் கொடுத்து ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

நாட்டை மீண்டும் காலனியாக்கும் இத்தாக்குதலை எதிர்த்துப் போராடுவதை விட்டு, போராடும் ஊழியர்களுடன் மைய அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்; ஊழியர் சங்கம் முன்வைத்துள்ள மாற்றுத் திட்டத்தை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்று இத்தேசத் துரோக கும்பலிடம் காவடி தூக்குகின்றனர் போலி கம்யூனிஸ்டுகள். ஆயிரக்கணக்கான ஊழியர்களின் எதிர்கால வாழ்வு பறிக்கப்பட்டுள்ளதைப் பற்றி அக்கறை காட்டாத மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வர், ஊழியர் போராட்டத்தால் கொல்கத்தா விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அம்மாநில அரசோ, போராடும் ஊழியர்களைச் சமரசப்படுத்தி இடையூறு ஏற்படுத்தாமல் போராடச் சொல்கிறது.

 

இத்துரோகிகள்தான் விமான நிலைய ஊழியர் போராட்டத்துக்கும் தலைமை தாங்குகிறார்கள். இத்துரோகத் தலைமையைத் தூக்கியெறியாமல் விமான நிலைய ஊழியர்கள் தமது போராட்டத்தில் ஒரு அடிகூட முன்னேற முடியாது. பரந்துபட்ட மக்களுடன் ஐக்கியப்பட்டு மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடாமல் தனியார்மயமாக்கலை வீழ்த்தவும் முடியாது.

 

மு வசந்தன்