Language Selection

புதிய ஜனநாயகம் 2006

02_2006.jpg"கொடுமை, கொடுமை என்று கோயிலுக்குப் போனால், அங்கே ஏழு கொடுமை எதிரிலே வந்ததாம்!'' என்று ஒரு சொலவடை உண்டு. அந்தக் கதையாக, கடன் சுமையால் தத்தளிக்கும் விவசாயிகள் வேறுவழியின்றி ஒப்பந்த விவசாயம் செய்தால், அங்கேயும் வஞ்சிக்கப்பட்டு போண்டியாக்கப்பட்டு வருகிறார்கள்.

 

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டம், பாலியாபூரைச் சேர்ந்த பல்தேவ்சிங்கும் அக்கிராமத்தைச் சேர்ந்த 12 விவசாயிகளும் பன்னாட்டு குளிர்பான நிறுவனமான பெப்சியுடன் கடந்த ஆண்டில் பாசுமதி நெல் உற்பத்திக்கு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். ஒப்பந்தப்படி, பெப்சி நிறுவனம் வழங்கிய விதை நெல், உரம் பூச்சி மருந்துகளைக் கொண்டு அந்நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி விவசாயம் செய்தார்கள். அறுவடையானதும், விளைச்சலைக் கொண்டு வந்தபோது, பெப்சி நிறுவனமோ ஒப்பந்தப்படி விலை கொடுக்க மறுத்து, அவற்றைத் தரமற்றது என்று கூறியது. பெப்சி கொடுத்த விதை நெல் மற்றும் இடுபொருட்களைக் கொண்டு பயிரிட்டும் கூட, விளைச்சலைத் தரமற்றது என்றால், அந்த விவசாயிகள் என்ன செய்ய முடியும்? ஒப்பந்தப்படி விளைந்த நெல்லை வெளிச்சந்தையிலும் விற்கக் கூடாது என்றால், அந்த விவசாயிகள் என்ன செய்ய முடியும்? வேறுவழியின்றி பெப்சி நிறுவனம் தீர்மானித்த அடிமாட்டு விலைக்கு அந்த நெல்லைக் கொடுத்துவிட்டு, அந்த விவசாயிகள் போண்டியாகிப் பரிதவிக்கிறார்கள்.

 

இதேபோல, கடந்த ஆண்டில் பெப்சியுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு உருளைக்கிழங்கு உற்பத்தி செய்த பாட்டியாலா மாவட்ட விவசாயிகள், டிராக்டர்களில் அவற்றை பெப்சி ஆலைக்குக் கொண்டு வந்தபோது, மூன்று நாட்கள் அவர்களைக் காத்திருக்கச் செய்து விட்டு, இக்கிழங்குகளில் இனிப்புத்தன்மை அதிகமாக உள்ளது என்று பெப்சி நிறுவனம் கொள்முதல் செய்ய மறுத்துவிட்டது. ஒப்பந்தப்படி கிலோ ரூ.4.50க்கு வாங்கிக் கொள்வதாகக் கூறிய பெப்சி, தரமற்றது என்று பொய்க்குற்றச்சாட்டுடன் கொள்முதல் செய்ய மறுத்த இந்த உருளைக்கிழங்குகளை கிலோ ரூ. 1.00 வீதம் கொள்முதல் செய்து விவசாயிகளின் வயிற்றில் அடித்தது.

 

உணவு தானியக் கொள்முதலை அரசு கைகழுவி விட்டதாலும், உரம் பூச்சி மருந்து முதலான இடுபொருட்களின் விலை உயர்வாலும், தாராளமயத்தால் அன்னிய இறக்குமதி காரணமாக விலை வீழ்ச்சியாலும் திவாலாகிப் போன விவசாயிகள் கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்; அல்லது அன்னிய பெருமுதலாளித்துவ நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் விவசாயம் செய்கிறார்கள். பஞ்சாபில், இத்தகைய ஒப்பந்த முறையிலான விவசாயம் படிப்படியாக விரிவடைந்து ஏறத்தாழ 3 லட்சம் ஏக்கர் அளவுக்கு வேர் விட்டுள்ளது. இந்த ஒப்பந்த விவசாயத்தில், இந்துஸ்தான் லீவர், கார்கில், மான்சாண்டோ, நெஸ்லே, பெப்சி, பி.ஹெச்.சி. முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும், டாடா, ரிலையன்ஸ், ஐ.டி.சி. மகேந்திரா, கோத்ரெஜ் முதலான தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களும் இறங்கியுள்ளன. விவசாய உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தும் புதிய திட்டம் என்று இந்த ஒப்பந்த விவசாயத்தை தீவிரமாகச் செயல்படுத்திவரும் ஆட்சியாளர்கள், இந்த ஒப்பந்த விவசாயத்துக்காக மானியங்களையும் சலுகைகளையும் வாரியிறைத்து வருகின்றனர். ஆனால், அந்தச் சலுகைகளையும் சுருட்டிக் கொண்டு ஒப்பந்த நிறுவனங்கள் விவசாயிகளை மோசடி செய்கின்றன.

 

உதாரணமாக, தொழில்நுட்பச் சேவை மற்றும் திறனுக்கான தொகை என்ற பெயரில் ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 100 வீதம் மானியம் தரப்படுகிறது. ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கரில் பாசுமதி நெல் பயிரிடப்பட்டால், அரசாங்கம் ஒரு கோடி ரூபாயை இவ்வொப்பந்த நிறுவனங்களுக்கு தொழில்நுட்பச் சேவை என்ற பெயரில் அள்ளிக் கொடுக்கிறது. இத்தொகையை விவசாயிகளுக்கு அளித்து விட்டதாகக் கணக்குக் காட்டி இந்நிறுவனங்கள் ஏப்பம் விடுகின்றன. இதுதவிர, மண்டிக் கட்டணம், கிராமப்புற மேம்பாட்டு வரி, கொள்முதல் வரி முதலான எவையும் ஒப்பந்த விவசாய நிறுவனங்களுக்குக் கிடையாது. இவற்றையும் சுருட்டிக் கொள்ளும் இந்நிறுவனங்கள், ஒப்பந்தப்படி விவசாயிகளுக்கு விளைச்சலுக்கான தொகையைத் தராமல் ஏய்த்து வருகின்றன. இன்னொருபுறம் இந்நிறுவனங்களிடம் விதை வாங்கும்போதே, தொழில்நுட்பச் சேவை என்ற பெயரில் விவசாயிகளிடம் ஏக்கருக்கு இவ்வளவு என்று கட்டணம் வசூலிக்கின்றன. அரசாங்க மானியத்திலும் கொள்ளை, விவசாயிகளிடமும் பகற்கொள்ளை என்று இரண்டு வழிகளில் இந்நிறுவனங்கள் மோசடி செய்கின்றன.

 

இத்தனை மோசடிகளுக்கும் அரசு நிறுவனமான பஞ்சாப் உணவு தானியக் கழகம் உடந்தையாகவும் ஒப்பந்த விவசாயத்துக்கான முகமை நிறுவனமாகவும் செயல்படுகிறது. இந்நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்ட பஞ்சாப் விவசாயிகள், இந்நிறுவனமும் மோசடி செய்வதைக் கண்டு குமுறுகிறார்கள். பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டம், கும்மான்கலான் கிராமத்தைச் சேர்ந்த குர்சரண் சிங் என்ற விவசாயி, பஞ்சாப் உணவு தானியக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அந்நிறுவனத்திடமிருந்து ""ஹயோலா'' எனப்படும் வீரிய ரக கடுகு விதையை வாங்கிப் பயிரிட்டõர். ஒப்பந்தப்படி ஒரு குவிண்டால் கடுகை ரூ. 1,700 வீதம் வாங்கிக் கொள்வதாக இந்நிறுவனம் கூறியது. அதன்படி, விளைந்த கடுகை உணவு தானியக் கழகத்திடம் கொடுத்தபோது, அதில் ஈரப்பதம் அதிகம் உள்ளதாக இந்நிறுவனம் வாங்க மறுத்தது. குர்சரண் சிங் அவற்றை மீண்டும் நன்கு காயவைத்து கொண்டு சென்றார். அப்போதும் இந்நிறுவனம் ஈரப்பதம் அதிகமாக உள்ளதாக நிராகரித்தது. இப்படி மூன்று முறை அவர் அலைக்கழிக்கப்பட்டார். வெறுத்துப்போன குர்சரண் சிங். அக்கடுகை வெளிச்சந்தையில் குவிண்டால் ரூ. 1500 வீதம் விற்றுவிட்டு, உணவு தானியக் கழகத்தின் ஒப்பந்தத்தைத் தீயிட்டுக் கொளுத்தி தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளார். ""இது ஒரு மோசடி ஒப்பந்தம். என்னைப் போல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அரசாங்க நிறுவனமே இப்படி மோசடி செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்று வேதனைப்படுகிறார் குர்சரண் சிங்.

 

பஞ்சாப் உணவு தானியக் கழகம் பொதுவில் உணவு தானியக் கொள்முதலை நிறுத்திவிட்டது. ஒப்பந்த விவசாயத்துக்கான முகமையாளர் என்ற முறையில், ஒப்பந்த விவசாயக் கொள்முதலையும் ஏதேனும் பொய்க் காரணங்களைக் கூறி நிராகரிக்கிறது. கடந்த ஆண்டில் பஞ்சாப் உணவு தானியக் கழகம் மூலம் "ஹயோலா' எனப்படும் வீரிய ரக கடுகு விதை விற்கப்பட்டு, ஏறத்தாழ 4,400 ஏக்கரில் விவசாயிகள் கடுகு சாகுபடி செய்தனர். இதன் விளைச்சல், 36,000 குவிண்டாலுக்கு மேலாக இருந்தது. ஆனால், பஞ்சாப் உணவு தானியக் கழகம் 3,500 குவிண்டால் மட்டுமே கொள்முதல் செய்தது.

 

ஏதாவது ஒரு பொய்க் காரணத்தைக் கூறி இந்நிறுவனம் கொள்முதலை நிராகரித்ததால், விவசாயிகள் வெளிச்சந்தையில் அற்ப விலைக்கு விற்க நிர்பந்திக்கப்பட்டனர். இதனால், வெளிச்சந்தையில் உபரி அதிகமாகி மேலும் கடுகு விலை குறைந்தது. இந்நிலையில், பன்னாட்டுக் கம்பெனிகள் விலை மலிவான இத்தானியங்களைக் கொள்முதல் செய்து கொண்டு, பிறகு தமக்குள் கூட்டணி கட்டிக் கொண்டு இதே தானியங்களை அதிக விலைக்கு விற்று ஆதாயமடைகின்றன. ஒருபுறம் விவசாயிகளை மோசடி செய்து வெளிச்சந்தையில் விலை வீழ்ச்சியைத் தோற்றுவித்து கொழுத்த ஆதாயமடையும் இக்கம்பெனிகள், பின்னர் விலையேற்றம் செய்து மக்களையும் கொள்ளையடிக்கின்றன. ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட ஒப்பந்த விவசாயத்தால் பன்னாட்டுக் கம்பெனிகளும் தரகுப் பெரு முதலாளித்துவ நிறுவனங்களும்தான் கொழுக்கின்றன. விவசாயிகளோ மீண்டும் கடனாளியாகி போண்டியாகி நிற்கிறார்கள். பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் ஒப்பந்த விவசாயத்தின் யோக்கியதை இதுதான்.

 

2004 இறுதியில் பஞ்சாப் விவசாயப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின்படி, ஏறத்தாழ 70மூ ஒப்பந்த விவசாயிகள், இனி ஒப்பந்த முறையிலான விவசாயமே செய்யப் போவதில்லை என்றும், தாங்கள் மோசடி செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர். ஒப்பந்த விவசாய நிறுவனங்களுக்கும் அதன் ஏஜெண்டாகச் செயல்படும் பஞ்சாப் உணவுக் கழகத்துக்கும் எதிராகப் போராட்டங்களை நடத்தப் போவதாக பாரதிய கிசான் சங்கம் எச்சரித்துள்ளது.

 

இருப்பினும், தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்கப் போவதாக அறிவித்துள்ள பாசிச ஜெயா அரசு தனது விவசாயக் கொள்கை அறிக்கையில், பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை, எண்ணெய் வித்துக்கள், காட்டாமணக்கு, வெனிலா, இறைச்சிக் கோழி முதலானவற்றை ஒப்பந்த முறையில் உற்பத்தி செய்ய தாராள அனுமதியும், சலுகையும் அளித்துள்ளது. பஞ்சாப் வழியில் தமிழக விவசாயிகளும் போண்டியாக்கப்படுவதற்கான ஏற்பாடுதான் இது. அன்றைய காலனியாதிக்க ஆட்சியைப் போலவே, இன்றைய மறுகாலனியாதிக்கத்தின் கீழ் விவசாயம் நாசமாக்கப்பட்டு, ஏகாதிபத்தியங்களின் நலனுக்கேற்ப ஒப்பந்த விவசாயம் வேகமாகத் திணிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப் தரும் படிப்பினைகளை உணர்ந்து நாடெங்குமுள்ள விவசாயிகள் ஒப்பந்த விவசாயத்துக்கும் மறுகாலனியாதிக்கத்துக்கும் எதிராகப் போராட அணிதிரள வேண்டியது அவசர அவசியமாகி விட்டது.

 

மு தனபால்