மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துப் போட வேண்டும் என்று மக்களுக்கு உபதேசிக்கும் ஆளும் கும்பல், எகாதிபத்திய நாடுகளின் கழிவுகளை அமெரிக்க டாலருக்காக இறக்குமதி செய்து, இந்தியாவைக் குப்பைத் தொட்டியாக்குகின்றது
பிரெஞ்சு ஏகாதிபத்தியம் இந்தியாவிற்குப் புத்தாண்டு பரிசு ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறது. அந்தப் பரிசின் பெயர் ""கிளெமோன்ஸோ'' என்ற பழைய விமானம் தாங்கி போர் கப்பல். பிரெஞ்சு கப்பற்படையில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டுவிட்ட இந்தப் போர் கப்பல், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள ஆலங்துறைமுகத்தில் உடைக்கப்படுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆலங் துறைமுகத்தில் இந்தக் கப்பல் உடைக்கப்பட்ட பின் 30 கோடி ரூபாய் பெறுமான பழைய இரும்பு கிடைக்கும். எனினும், இந்தக் கப்பல் வெறும் மூன்று கோடி ரூபாய்க்குதான் விற்கப்பட்டுள்ளது. வியாபார அளவுகோலின்படி பார்த்தால், பழைய இரும்புக்காக இந்தக் கப்பலை வாங்கிய நிறுவனத்திற்கு கொழுத்த இலாபம்தான். ஆனால், இந்தக் கப்பல் ஆலங் துறைமுகத்தில் கப்பலை உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்களுக்கும்; அத்துறைமுக வட்டாரத்தின் சுற்றுச்சூழலுக்கும் என்னென்ன கேடுகளை விளைவிக்கும் என்பதை இப்பொழுது கூற முடியாது. ஏனென்றால், இந்தக் கப்பலை உடைக்கும் பொழுது, நெஞ்சகப் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஆஸ்பெஸ்டாஸ் (கல்நார்) தகடுகள், நூற்றுக்கணக்கான டன் அளவில் கழிவாகக் கிடைக்கும். இந்தக் கல்நார் கழிவை அறிவியல் ரீதியாக அப்புறப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் ஆலங் துறைமுகத்தில் இல்லாததால், இந்தக் கல்நார் கழிவு இக்கப்பலை உடைக்கும் கூலித் தொழிலாளர்களையும்; அத்துறைமுக வட்டாரச் சுற்றுச்சூழலையும் மோசமாகப் பாதிக்கும் எனப் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன.
கல்நார் தகடுகள் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இதனைத் தொழிற்துறையிலோ, வீட்டு உபயோகத்திற்கோ பயன்படுத்துவது பிரான்சு நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் பிரெஞ்சு அரசுக்குச் சொந்தமான இந்தக் கப்பலை, பிரான்சிலேயே உடைக்காமல், இந்தியாவின் தலையில் கட்டியுள்ளனர். ஆனால், இந்திய அரசோ அந்நியச் செலாவணி வருமானம் என்ற கண்ணாடியை மாட்டிக் கொண்டு, இந்தக் கப்பலின் வருகையைப் பார்க்க வேண்டும் என நியாயப்படுத்துகிறது.
பிரான்சில் இருந்து கடந்த ஆண்டின் கடைசி நாள் (டிச.31) இரவில் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டுவிட்ட இந்தக் கழிவுக் கப்பல், பிப்ரவரி இரண்டாவது வாரம் ஆலங் துறைமுகத்தில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ""இந்தக் கப்பலை இந்தியாவிற்கு அனுப்பக் கூடாது; பிரான்சிலேயே உடைக்க வேண்டும்'' என பிரான்சு உள்ளிட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் நடத்திவரும் போராட்டங்களையடுத்து, இந்திய உச்சநீதி மன்றம், இந்தக் கப்பல் இந்தியாவின் கடல் எல்லைக்குள் நுழைய இடைக்கால தடை விதித்திருக்கிறது. மேலும், இந்தக் கப்பலில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் அபாயகரமான கழிவுகள் எவ்வளவு உள்ளன என்ற விவரத்தைத் தருமாறு பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசிடம் கேட்டிருக்கிறது.
தில்லியின் அழகுக்காகத் தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டு, அவர்கள் நகரை விட்டுத் துரத்தியடிக்கப்பட்டபொழுது; வனப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஆதிவாசிகள் காடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பொழுது, எந்த நீதிமன்றம் அவர்கள் தரப்பு நியாயத்தைக் கேட்க முன்வந்தது? இந்தக் கழிவுக் கப்பல் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்குச் சொந்தம் என்பதால், உச்சநீதி மன்றத்தின் ""நடுநிலையான நியாய உணர்ச்சி'' விழித்துக் கொண்டுவிட்டது.
இந்தக் கப்பலில் வெறும் 45 டன் கல்நார் கழிவுகள்தான் இருப்பதாகவும்; எஞ்சியவற்றை இந்தியாவிற்கு அனுப்பும் முன் பிரான்சிலேயே அப்புறப்படுத்திவிட்டதாகவும் பிரெஞ்சு அரசு கூறுகிறது. ஆனால், இந்தக் கப்பலில் இருக்கும் கல்நார் கழிவுகளை அகற்ற பிரெஞ்சு அரசால் ஒப்பந்தம் செய்யப்பட்ட, ""டெக்னோப்யூர்'' என்ற பிரான்சு நிறுவனம், பிரெஞ்சு அரசு கூறுவதை மோசடி என்கிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் தங்களின் சொந்த செலவில் இந்தியாவிற்கு வந்து உச்சநீதி மன்றத்தில் அளித்துள்ள சாட்சியத்தில், ""இந்தக் கப்பலில் இன்னும் 500 டன்னுக்கு மேல் கல்நார் கழிவுகள் இருப்பதாக'' வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தக் கப்பலில் பல ஆண்டுகள் வேலை பார்த்து, அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரெஞ்சு கப்பற்படையைச் சேர்ந்த எடினி லீ குலிசெர், லீடஃப் என்ற இரு முன்னாள் ஊழியர்கள், ""இந்தியாவிற்கு வரும் அந்தக் கப்பலில் வெறும் 45 டன் கல்நார் கழிவுதான் இருக்கும் என்பது கேலிக்குரியது'' என ""தி இந்து'' நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளனர்.
இந்த உண்மைகள் ஒருபுற மிருக்க, புவியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள பேசல் மாநாட்டு ஒப்பந்தம், சுற்றுச் சூழலை மாசடையச் செய்யும் அபாயகரமான கழிவுப் பொருட்களை ஒருநாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியாவும், பிரான்சும் இந்த விதிமுறைகளை மயிரளவுக்கு கூட மதிக்கவில்லை.
உச்சநீதி மன்றம் பேசல் ஒப்பந்தத்தைக் காட்டியே, இந்தக் கழிவுக் கப்பல் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடை செய்திருக்க முடியும். ஆனால், மாண்புமிகு நீதிபதிகளோ, தாங்கள் விதித்துள்ள இடைக்காலத் தடையைச் செல்லாக் காசாக்கும் வண்ணம், ""வேண்டுமானால் எண்பது கோடி ரூபாயை பிணைத் தொகையாகக் கட்டிவிட்டு இந்தக் கப்பல் இந்தியாவிற்குள் நுழையலாம்'' என்ற சலுகையை பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு அளித்துள்ளனர்.
இந்தக் கழிவுக் கப்பல் ஏற்றுமதியை நியாயப்படுத்துவதில், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தைவிட, இந்திய ஆளுங்கும்பல்தான் முன்னணியில் நிற்கிறது. ""குஜராத் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அடிக்கட்டுமானம் நிறுவனம் பிரான்சுக்கே சென்று, இந்தக் கப்பலை ஆய்வு செய்திருப்பதாக'' குஜராத் கடல்சார் வாரியம் கூறியிருக்கிறது. இந்தக் கப்பலை உடைப்பதற்கு ஏலம் எடுத்துள்ள சிறீராம் நிறுவனத்தின் சகோதர நிறுவனம்தான் குஜராத் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அடிக்கட்டுமானம் நிறுவனம் வேலிக்கு ஓணான் சாட்சி.
குஜராத்தில் உள்ள ஆலங் துறைமுகத்தில் கப்பலை உடைக்கும் அபாயகரமான பணியில் ஈடுபடுத்தப்படும் ஒரிசாவையும், பீகாரையும் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், தலைக்கவசம் கூட இல்லாமல், சுத்தியலையும், ஆக்ஸா பிளேடையும், காலாவதியாகிப் போன வெல்டிங் மிஷின்களையும் கொண்டு, தினந்தோறும் மரணத்தோடு போராடி, வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். உடைந்த கப்பல்களில் இருந்து அவர்கள் எடுத்துவரும் பிளாஸ்டிக் ஷீட்டுகள்தான், அவர்கள் வீட்டுக் கூரைகள். அவசரத்திற்கு ஒதுங்குவதற்கு கழிப்பறைகூட அத்துறைமுகத்தில் கிடையாது.
ஒரு கப்பலை உடைக்கும் பொழுது ஒரு தொழிலாளி மரணமடைவது நிச்சயம். கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்குள், குஜராத் ஆலங் துறைமுகத்திலும், வங்காள தேசத்திலும் (கப்பலை உடைக்கும் பொழுது) 110 கூலித் தொழிலாளர்கள் பலியாகிவிட்டதாகச் சுற்றுப்புறச் சூழல் அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. கை கால்களை இழந்து முடமாகிப் போனவர்களின் எண்ணிக்கை கணக்கிலேயே வராது.
கப்பலை உடைத்து எடுக்கப்படும் பழைய இரும்புக் கழிவுகளுக்குத் தரும் மதிப்பைக் கூட, இந்தத் தொழிலாளர்களுக்கு முதலாளிகள் தருவதில்லை. ஒரு சராசரித் தொழிலாகக் கூட அங்கீகரிக்க முடியாத இந்தக் கப்பல் உடைப்பை, ஒரு தொழிற்துறையாக அங்கீகாரம் அளித்திருக்கிறது, இந்திய ஆளும் கும்பல்.
இந்திய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம், ""பிரெஞ்சுக் கப்பலில் உள்ள கல்நார் கழிவுகளை சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அகற்றும் தொழில்நுட்பம் ஆலங் துறைமுகத்தில் இருப்பதாகவும்; அனைத்தும் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே நடப்பதாகவும்'' அறிக்கைவிட்டு, இந்தக் கப்பல் பேரத்தை நியாயப்படுத்தியிருக்கிறது.
ஏழை நாடான துருக்கி கூட, இந்த பிரெஞ்சு கழிவுக் கப்பலை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டது. ஆனால், ஏழை நாடுகளின் தலைவனாகவும், வருங்கால ""வல்லரசாகவும்'' தன்னைப் பீற்றிக் கொள்ளும் இந்திய ஆளும் கும்பலோ வலியப் போய், இந்த அபாயகரமான கழிவை தள்ளிக் கொண்டு வருகிறது. ஓரங்கட்டப்பட்ட கப்பல்கள் மட்டுமின்றி, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் நுகர்ந்து தள்ளும் பிளாஸ்டிக் பொருள்கள், கணினி இயந்திரங்கள் தொடங்கி அணுக் கழிவுகள் வரை, எல்லாவிதமான கழிவுகளையும் அந்நியச் செலாவணிக்காக இறக்குமதி செய்து, இந்திய நாட்டின் நிலத்தையும், நீரையும், சுற்றுச்சூழலையும் நஞ்சாக்கி வருகிறது. 2020இல் இந்தியா ""வல்லரசாக'' மாறப் போவதில்லை; மேற்குலகின் குப்பைத் தொட்டியாகத்தான் மாறப்போகிறது!
மு ரஹீம்