02_2006.jpgஅக்டோபர் நவம்பர் மாதங்களில் பெய்த பேய் மழை புயலால், தமிழகமே வெள்ளக் காடாக மாறித் தத்தளித்தது. தமிழகத்திற்கு முன்பாக, ஒரே ஒருநாள் கொட்டித் தீர்த்த அடைமழையால், மும்பய் மாநகரமே மூழ்கிப் போனது. இந்த மழை வெள்ளம் பங்களாவாசிகளைக் கூட விட்டு வைக்காததால், அப்பெருமக்கள் அனைவரும் நாட்டின் அடிக்கட்டுமான வசதி பற்றி அங்கலாய்த்து வருகிறார்கள்.

 

இந்த நகர்ப்புற மேட்டுக்குடி வர்க்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம், ""ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புத்தாக்க செயல்முறைத்திட்டம்'' என்ற பெயரில், ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை மைய அரசு அறிவித்திருக்கிறது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 63 நகரங்கள்; சுற்றுலாவிற்கும், கடவுள் வழிபாட்டிற்கும் (இந்து மத புண்ணிய ஷேத்திரங்கள்!) பேர்போன 23 நகரங்கள் ஆக மொத்தம் 86 நகரங்கள், அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள், ஒரு இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், உலகத்தரம் வாய்ந்த நகரங்களாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சாலைகள் போடுவது; சாக்கடைகள் அமைப்பது என்பதோடு மட்டும் இந்தத் திட்டம் நின்றுவிடப் போவதில்லையாம்; நகர்ப்புற ஏழை மக்களுக்கு, அவர்களின் வாங்கும் சக்திக்கு ஏற்றவாறு வீடு கட்டிக் கொள்ளக் கடன் கொடுப்பது; இதன் மூலம் நகர்ப்புற சேரிகளை ஒழித்துக் கட்டுவது; இதன் விளைவாக, நகர்ப்புறக் குற்றங்கள்; சுகாதாரச் சீர்கேடு, சுற்றுப்புறச் சூழல் மாசடைவது போன்ற நகர்ப்புற பிரச்சினைகள் அனைத்தையும் ஒழித்துக் கட்டுவது என இந்தத் திட்டத்தின் மகாத்மியங்களை பிரதமர் மன்மோகன் சிங்கே, பத்திரிகையாளர்களிடம் அடுக்கித் தள்ளியிருக்கிறார்.

 

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட சூடு தணிவதற்குள்ளாகவே, தமிழகத்தைச் சேர்ந்த சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்களையும் 1,050 கோடி ரூபாய் செலவில் புத்தாக்கம் செய்யப் போவதாக அறிவித்துவிட்டார், ஜெயா. ஆளும் கும்பல் கூறுவது போல, இந்த நகரங்கள் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் உலகத் தரம் வாய்ந்ததாக மாறிவிடலாம். ஆனால், இப்படி மாற்றப்பட்ட நகரங்களில் ஏழைகளால் வசிக்க முடியுமா? ஏழைகளை வசிக்க விடுவார்களா என்பதுதான் மையமான பிரச்சினை.

 

உலகவங்கி மற்றும் ""யு.எஸ்.எய்ட்'' என்ற இரு ஏகாதிபத்திய நிறுவனங்களின் மூளையில் உதித்த இந்தத் திட்டம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்ற பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டு, காங்கிரசு கூட்டணி ஆட்சியில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்தத் திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல், அதன் ஒப்புதலைப் பெறாமல் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும்; பன்னாட்டு நிறுவனங்கள் கொடுத்த ஆலோசனைகள்தான் இந்தத் திட்டத்தின் விதிமுறைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அம்பலப்படுத்தியிருக்கிறார். மன்மோகன் சிங்கின் ஆட்சி, ஏகாதிபத்திய அடிவருடி ஆட்சி என்பதற்கு இந்தத் திட்டம் இன்னுமொரு எடுத்துக்காட்டு.

 

""சிங்கார சென்னை'', ""அழகு மும்பய்'', ""பசுமை தில்லி'' என்பது போன்ற பல்வேறு பெயர்களில், ""நகரங்களை அழகுபடுத்துவது'' என்ற உலக வங்கியின் திட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து, நகர்ப்புற ஏழைகளின் குடிசைகளும் ஒண்டுக் குடித்தன வீடுகளும் ஆக்கிரமிப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டு இடித்துத் தள்ளப்படுகின்றன் நடைபாதை சிறு வியாபாரிகள் அடித்துத் துரத்தப்படுகின்றனர். ""பொது இடத்தை ஆக்கிரமித்த இவர்கள் திருடர்கள்'' என நீதிபதிகள் நாக்கூசாமல் தீர்ப்பளிக்கின்றனர். ஏழைகளிடமிருந்து பிடுங்கப்படும் நிலம், ரியல் எஸ்டேட் அதிபர்களால் ஆக்கிரமித்துக் கொள்ளப்படுகிறது. நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்வதன் மூலம், இந்த ஆக்கிரமிப்பு சட்டபூர்வ அங்கீகாரமும் பெற்று விடுகிறது.

 

""நகரங்களை அழகுபடுத்துவது'' என்ற பெயரில் ஏழைகளை அடித்துத் துரத்தும் திட்டம்தான் இப்பொழுது நகரப் புத்தாக்கத் திட்டமாக ஊதியிருக்கிறது. இந்தத் திட்டத்தை தனியார் முதலாளிகளோடு கூட்டுச் சேர்ந்து நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ள மைய அரசு, இந்தத் திட்டத்தின் கீழ் மைய அரசிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கு மாநில அரசுகள், தங்களின் நகராட்சி நிர்வாகச் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்திருக்கிறது.

 

இந்த நகரப் புத்தாக்கத் திட்டம் என்பது குடிநீர், சாலை, போக்குவரத்து, கழிவுநீர் அகற்றுதல் போன்ற அடிக்கட்டுமான வசதிகளைச் செய்து தருவது மட்டுமல்ல் நல்ல நகர நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதையும் உள்ளடக்கியது என ஒளிவட்டம் போடப்படுகிறது.

 

உலக வங்கியின் மொழியில் நல்ல அரசாட்சி என்றால், அது மக்களுக்குப் பொறுப்பாக இருந்து, மக்களின் நலனுக்காகப் பணியாற்றக் கூடியது அல்ல. மாறாக, ""புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வெளிச் சந்தையில் கடனைத் திரட்டும் தகுதியினைப் பெறும் அளவிற்கு, உள்ளூர் நிர்வாகங்களைப் பொருளாதார ரீதியாக வசதியாக இருக்கும்படி மாற்றியமைப்பது'' தான் நல்ல நிர்வாகம் என்கிறது இந்தத் திட்டம்.

 

அதாவது, கஜானாவின் கனம்தான் நல்ல நிர்வாகத்தை அளக்கும் அளவுகோல். கஜானாவை எப்படி நிரப்புவது என்ற கேள்விக்கு, நகராட்சி வழங்கும் சேவைகளுக்கு நியாயமான கட்டணத்தை மக்களிடமிருந்து வசூலிக்க (பிடுங்க) வேண்டும் என்கிறது இந்தத் திட்டம். தண்ணீர், மின்சாரம், மருத்துவம், கழிவுநீர் அகற்றுதல், போக்குவரத்து போன்ற சேவைகள் இனி குறைந்த கட்டணத்தில் கிடைக்காது. ஊரை (மக்களை)க் கொள்ளையடித்து, நகராட்சி கஜானாவை நிரப்ப வேண்டும் என்பதுதான் நல்ல நிர்வாகத்தின் பச்சையான பொருள்.

 

""யு.எஸ்.எய்ட்'' என்ற அமெரிக்க நிறுவனம், உள்ளூராட்சி அமைச்சரவையுடன் இணைந்து, மாநகராட்சி ஃ நகராட்சி ஃ பஞ்சாயத்து நிர்வாகங்களில் என்னென்ன சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு, ""மாதிரி நகராட்சி சட்டத்தை'' உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இதன்படி,

 

நகர அடிக்கட்டுமான திட்டங்களை மேம்படுத்துவது, அவற்றை நிர்வகிப்பது ஆகிய பணிகளில் தனியார்துறையை அனுமதிக்க வேண்டும்.

 

நகராட்சிகள் வழங்கி வரும் சேவைகளின் கட்டணத்தை அரசாங்கமே தன்னிச்சையாகத் தீர்மானிக்காமல், அப்பொறுப்பை சுதந்திரமாக இயங்கக் கூடிய ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்து, அதனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

சொத்துக்களைப் பதிவு செய்யும் பொழுது செலுத்தக் கூடிய முத்திரைத் தாள் கட்டணத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், சொத்தின் மதிப்பில் ஐந்து சதவீதத்திற்குள் இருக்குமாறு குறைத்துவிட வேண்டும்.

 

நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தை அடியோடு நீக்க வேண்டும்.

 

தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வண்ணம் வாடகை கட்டுப்பாடு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.

 

குடிநீர் வழங்கும் சேவையை மேம்படுத்தும் வண்ணம், புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்.

 

ரியல் எஸ்டேட் வியாபாரம், கட்டுமானத்துறை தொடர்பான விதிமுறைகளைத் திருத்த வேண்டும்.

 

விவசாய நிலங்களை, விவசாயம் சாராத தொழில்களுக்குப் பயன்படுத்தும் வண்ணம் சட்டங்களை எளிமையாக்க வேண்டும்.

 

கட்டாய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நகராட்சி ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது; நகராட்சிப் பணிகளுக்குப் புதிதாக ஆளெடுப்பதற்குத் தடைவிதிப்பது போன்ற நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

 

சுருக்கமாகச் சொன்னால், நகர்ப்புற நிலங்களையும், கொழுத்த இலாபம் தரக் கூடிய நகர்ப்புற சேவைகளையும் தனியார் முதலாளிக்கு பட்டா போட்டுக் கொடுக்கும் ஏஜெண்டு சேவையைத்தான் இனி நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் செய்ய வேண்டும் என்பதைத்தான் ""மாதிரி நகராட்சி சட்டம்'' பூசி மெழுகிச் சொல்கிறது.

 

யு.எஸ்.எய்ட் பரிந்துரைத்துள்ள இந்த மாதிரிச் சட்டம், காகிதத்தோடு நின்றுவிடவில்லை. தில்லி யூனியன் பிரதேச அரசு, இப்பரிந்துரைகளின்படி, தில்லி நகராட்சி சட்டங்களைத் திருத்தியிருப்பதோடு, தில்லி குடிநீர் சேவையையும் (பகுதியளவு) தனியார்மயமாக்கி விட்டது. தமிழக அரசு, சென்னை மற்றும் மதுரை நகரங்களின் குடிநீர் சேவையை மேம்படுத்தவும், கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கவும் இத்திட்டத்தின் கீழ்தான் 651 கோடி ரூபாய் நிதி ஒதுக்க கோரியுள்ளது. எனவே, தில்லிக்கு அடுத்து தமிழகத்திலும் குடிநீர் சேவை தனியார்மயமாவதையும்; உள்ளூராட்சி சட்டங்கள் திருத்தப்படுவதையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

 

தனியார்மயம் தாராளமயத்தால் வேலையிழந்த கிராமப்புற விவசாயிகள், வேலை தேடி நகர்ப்புறங்களில் குவிகிறார்கள். இந்த வேலையில்லா பட்டாளத்தின் உழைப்பை, குறைந்த கூலிக்குச் சுரண்டிக் கொள்ளும் முதலாளிகள், அவர்கள் நகரத்தில் குடிசை போட்டுத் தங்கிக் கொள்வதை இந்த நகரப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் தடுக்கிறார்கள். ஏழைகளின் குடிசைகளை மட்டுமல்ல, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் சொந்த வீட்டுக் கனவையும் இந்தத் திட்டம் பறித்துவிடும். நகர்ப்புறங்களில் ஆலைகள் இருந்த இடம் அடுக்குமாடிக் குடியிருப்புகள், நட்சத்திர விடுதிகள், சூப்பர் மார்க்கெட்டுகளாக மாறிவிடும். நகர்ப்புறம், மேட்டுக்குடி கும்பலாலும், தனியார் முதலாளிகளாலும் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும். நகர புத்தாக்கத்தின் பின்னே இருக்கும் ஆபத்து இதுதான்!

 

மு செல்வம்