Language Selection

02_2006.jpgகொக்கோ கோலா நிறுவனத்தின் ஆணவத்திற்கு முதலடி விழுந்திருக்கிறது. ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற கங்கைகொண்டான் கிராமசபைக் கூட்டத்தில் ""கோக் ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது. 9 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6,500 வாக்காளர்களைக் கொண்டது இந்தக் கிராமசபை. எமது செப்.12 மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, அக்.2 காந்தி ஜெயந்தியன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பெரும்பான்மை மக்கள் கோக் ஆலையை எதிர்த்ததால், தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் அன்று கிராமசபை, மாவட்ட நிர்வாகத்தால்

 கலைக்கப்பட்டது. ""அதிகமான மக்கள் கூடினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும்'' என்ற கூலிக்கூத்தான காரணத்தைக் கூறி நவம்பர் மாதம் நடைபெறவிருந்த கூட்டத்தை ரத்து செய்தார், ஆட்சியர்.

 

இந்தக் "குடியரசு' தினத்தன்று நடைபெற வேண்டிய கூட்டத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்தால் வேறெந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடியவில்லை. ""குடியரசு தினத்தன்று மக்களாட்சியின் மாண்பை நிரூபிக்க கூட்டத்தை நடத்த வேண்டும். அதேநேரத்தில் மக்கள் யாரையும் வரவிடாமல் செய்வதன் மூலம் கோக் எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற விடாமல் தடுக்கவும் வேண்டும்'' என்ற இரண்டு அம்சத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. ""கிராமசபைக் கூட்டத்தில் பெரிய கலவரம் நடக்கும், எனவே யாரும் வராதீர்கள்'' என்று ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தது, போலீசு.

 

போலீசின் கோக் எடுபிடித்தனத்தை அம்பலப்படுத்தி ""எல்லோரும் கிராமசபைக் கூட்டத்திற்குச் செல்லுங்கள்'' என்று கிராமம் கிராமமாகப் பிரசுரம் விநியோகித்தார்கள் எங்களது தோழர்கள். கூட்டத்திற்கு வந்த மக்களை மிரட்ட நூற்றுக்கணக்கில் போலீசு குவிக்கப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்கியவுடன் கோக் எதிர்ப்புத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. நடலிங்கம் (அ.தி.மு.க.), கருப்பையா (தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ) ஆகியோர் தலைமையிலான சிறு கும்பல் உடனே ஆத்திரம் அடைந்தது. குறைந்தபட்ச எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் (கோரம்) இல்லையென்பதால் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது எனக் கூச்சலிட்டது. ""உங்கள் ஆட்களைப் பெருமளவில் திரட்டி வந்து கோக் ஆதரவு தீர்மானம் போட வேண்டியதுதானே'' என்று அந்த எடுபிடிகளுக்கு நக்கலாகப் பதிலடி கொடுத்தனர் மக்கள். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ""எல்லோரும் கலைந்து செல்லுங்கள்'' என்று மக்களை விரட்டத் தொடங்கியது போலீசு. மக்கள் முழக்கமிடத் தொடங்கினார்கள். செப். 12ஆம் தேதியன்று நெல்லை ஜவகர் திடலில் நாங்கள் எழுப்பிய ""அமெரிக்க கோக்கே வெளியேறு!'' என்ற அந்த முழக்கம் ஜன.26 அன்று கங்கைகொண்டானில் எதிரொலித்தது. அவமானமும் ஆத்திரமும் அடைந்த கோக்கின் கைக்கூலிகள் அங்கிருந்து தப்பி வெளியேறினர். இரண்டு நாட்களுக்கு முன் இதே முழக்கத்தை சுவரில் எழுதியதற்காக எமது தோழர்கள் இருவரை சிறையில் அடைத்த போலீசு, அதே முழக்கம் நூற்றுக்கணக்கான மக்களின் குரலாகத் தம் கண் முன்னே வெடித்து வருவதைக் கண்டு செய்வதறியாமல் திகைத்தது. கோக் ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென்ற தீர்மானம் கிராமசபையால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு சட்டரீதியான தகுதி எதுவும் கிடையாது என்பது உண்மைதான். ஆனால், அப்பகுதி மக்கள் ஆலையை எதிர்க்கிறார்கள் என்ற உண்மை, தன்னால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பின் வழியாகவே வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக அரசு எந்திரம் செய்த தந்திரங்கள் எல்லாம் அன்று தவிடுபொடியானது. அந்த வகையில் இது கோக்கின் அதிகாரத் திமிர் மீது விழுந்த ஒரு அருமையான அடி.

 

இரண்டாவது அடி 27ஆம் தேதியே விழுந்தது. கோக்கை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி, அடுத்த சில நாட்களிலேயே மர்மமான முறையில் மரணமடைந்த கங்கைகொண்டான் பஞ்சாயத்துத் தலைவர் கம்சனின் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

 

ஆகஸ்டு 23ஆம் தேதியன்று கோக் எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றிய கம்சன் ஆக.29ஆம் தேதி இறந்தார். மறுநாளே சன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ""இந்த மரணத்தில் கோக்கிற்கு தொடர்பு இருக்கிறது'' என்று குற்றம் சாட்டி நாங்கள் நீதி விசாரணை கோரினோம். நெல்லை முழுவதும் பிரச்சாரம் செய்தோம். உடனே, ""ம.க.இ.க.வினரால் எங்கள் உயிருக்கு ஆபத்து'' என்று புகார் கொடுத்தார்கள் கோக் அதிகாரிகள். கம்சன் மரணத்தை விசாரிக்காத போலீசு எங்களை விசாரித்தது. மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (ஏகீகஇ) கொடுத்த புகாரையோ, அவர்களது உண்மை அறியும் குழு அளித்த அறிக்கையையோ மாவட்ட போலீசு பொருட்படுத்தவில்லை. போலீசு மற்றும் கோக்கின் மிரட்டலுக்கு அஞ்சாமல் நடந்த உண்மைகளைப் புகாராகத் தருமாறு கம்சன் குடும்பத்தினருக்கு தைரியமூட்டினர் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள். ""தனது கணவனின் மரணத்திற்கு கோக் அதிகாரிகளான லட்சுமிபதி, கண்ணன் ஆகியோரே பொறுப்பு'' என்று குற்றம் சாட்டி கம்சனின் மனைவி சந்தனமாரி புகார் கொடுத்தார். அதன் மீதும் போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின் ம.உ.பா. மையத்தின் முயற்சியில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

கம்சனுடைய மனைவியின் சார்பில் வழக்குரைஞர் லஜபதிராய் வாதாடினார். நீதிமன்றத்தில் கோக் அதிகாரிகளுடன் போலீசு அதிகாரிகள் தோளோடு தோள் நின்றனர். புகாரைப் பதிவு செய்யாததற்கு எவ்விதக் காரணமும் கூற முடியாத போலீசு, கடந்த 5 ஆண்டுகளாக கம்சன் மேற்கொண்ட மருத்துவம் குறித்த ஆவணங்களையெல்லாம் திரட்டி வந்து நீதிமன்றத்தில் காட்டியது. ""வழக்கே பதிவு செய்யாமல் இவ்வளவு ஆவணங்களைத் திரட்டியிருக்கிறீர்களே, இதில் உங்களுக்கு என்ன அவ்வளவு விசேட அக்கறை?'' என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி. ""நெல்லை போலீசு கோக்கின் எடுபிடியாகச் செயல்படுவதால் இவ்வழக்கை அவர்கள் விசாரிக்கக் கூடாது'' என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

 

குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. சட்டம் அவர்களைத் தண்டித்து விடும் என்ற மாயைக்கும் இடமில்லை. தமது கொலைக் குற்றங்களுக்காக ""கில்லர் கோக்'' என்று உலகப் புகழ் பெற்ற கொலைக் குற்றவாளிகள், தமது பணபலம் மற்றும் அதிகார பலத்தினால் கம்சனின் மரணம் குறித்த விசாரணையே நடைபெறாமல் தடுத்து, அவரது பிணத்தைக் குழி தோண்டிப் புதைத்து விடலாம் என்று இறுமாந்திருந்தார்களே, அந்த இறுமாப்புக்குத்தான் இந்தத் தீர்ப்பு ஒரு செருப்படி.

 

அடுத்த அடியை எதிர்பார்த்து எதிரி காத்திருக்கட்டும். இறுதி அடியை வழங்க நெல்லை மக்கள் கிளர்ந்தெழட்டும்!

 

போராட்டக் குழு,

ம.க.இ.க, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு.