02_2006.jpgகுப்புறத் தள்ளிய குதிரை, குழியையும் பறித்த கதையாக, தனியார்மய தாராளமயத்தால் கோடிக்கணக்கான மக்களை வறுமையில் தள்ளிவிட்டுள்ள காங்கிரசு ஆட்சியாளர்கள், இப்போது ரேஷனுக்காக ஒதுக்கப்படும் உணவு மானியத்தையும் குறைத்து நாட்டைப் பட்டினிச் சாவுக்குத் தள்ளிவிட்டுள்ளார்கள். கடந்த ஜனவரி 6ஆம் தேதியன்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம், ரேஷனுக்காக ஒதுக்கப்பட்ட மானியத்தை மேலும் குறைத்து பட்ஜெட்டுக்கு முன்னதாகவே ரூ.4524 கோடியை ஏழைகளிடமிருந்து வழிப்பறி செய்யக் கிளம்பியுள்ளது.

 

இதன்படி, அந்த்யோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் (வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களில் ஏழைகளிலும் ஏழைகளுக்கான மத்திய அரசின் உணவுத் திட்டத்தின் கீழ்) வழங்கப்பட்டுவரும் 35 கிலோ உணவு தானியம் 30 கிலோவாகக் குறைக்கப்படும். ரேஷன் மூலமாக வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உணவு தானியம் 35 கிலோவிலிருந்து 30 கிலோவாகக் குறைக்கப்படும். வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள மக்களுக்கு வழங்கப்படும் உணவு தானியத்தின் அளவு 35 கிலோவிலிருந்து 20 கிலோவாகக் குறைக்கப்படும்.

 

இது மட்டுமின்றி, வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள மக்களுக்கு மாநில அரசு ஒதுக்கீடு செய்யும் ரேஷன் அரசியின் விலையை கிலோவுக்கு 85 பைசா வீதமும் கோதுமையின் விலையை கிலோவுக்கு 95 பைசா வீதமும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதோடு, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் உணவு தானியங்களின் விலையையும் உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

 

இதன் விளைவாக, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 8 கோடி குடும்பங்களும், வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் 9.5 கோடி குடும்பங்களும் அந்த்யோதயா திட்டத்தின் கீழ் வரும் 2.5 கோடி குடும்பங்களும் மேலும் வறுமைக்கும் பட்டினிக்கும் தள்ளப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக, நாட்டின் 80மூ மக்களின் வாழ்நிலை மேலும் மோசமடைந்து இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

 

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் மதிப்பீடுகளின்படி, ஓராண்டுக்கான நபர்வாரி தானிய நுகர்வு குறைந்தபட்சம் 157 கிலோவாக இருக்க வேண்டும். 1947லிருந்து இன்றுவரை எந்தவொரு காலகட்டத்திலும் எந்தவொரு அரசும் ரேஷன் விநியோகத்தின் மூலம் இந்தத் தேவையை நிறைவு செய்ததில்லை. 1998ஆம் ஆண்டில் நபர்வாரி தானிய நுகர்வு 145 கிலோவுக்கும் கீழே போனது. இப்போது அது மேலும் படுபாதாள நிலைக்குக் குறைந்துவிட்டது. பெரும்பான்மையான மக்கள் மிகக் குறைந்தபட்ச அளவு தானியத்தைக் கூட நுகர முடியாமல், காலனிய ஆட்சியில் நிலவிய வங்காளப் பஞ்சத்தின் கோரத்தைப் புதுப்பிப்பதாக நிலைமை உள்ளது என்று முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களே எச்சரிக்கின்றனர்.

 

ஒரே நேரத்தில் மொத்தமாக வாங்க வேண்டியிருப்பதால்,வறுமையின் காரணமாக 11 கோடி ஏழைக் குடும்பங்கள் ரேஷன் பொருட்களையே வாங்க முடிவதில்லை. நாட்டின் 50மூக்கும் மேற்பட்ட குழந்தைகள் போதிய உணவின்றி எலும்பும் தோலுமாக உள்ளன. 70மூக்கும் மேலான குழந்தைகள் புரதச் சத்து பற்றாக்குறையுடன் பிறந்து அடிக்கடி நோய் தாக்கி அவதிப்படுகின்றன. 60மூக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களிடம் ரத்தசோகை நோய் பரவலாக உள்ளது. இவையெல்லாம் முந்தைய பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் நீடித்த அவலநிலைமை. இதுதவிர, தாராளமயத்தால் விவசாய நெருக்கடியும் வேலையின்மையும் நாடெங்கும் நீடித்தது.

 

வறுமையை ஒழித்து ஏழைகளுக்கு நல்வாழ்வு அளிக்கப் போவதாக வாக்குறுதி அளித்து காங்கிரசுக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. ஆனாலும் வறுமை ஒழியவில்லை; வறியவர்கள்தான் ஒழித்துக் கட்டப்பட்டனர். ஆந்திராவிலும் ராசஸ்தானிலும் பட்டினிச் சாவுகள் தொடர்கின்றன. 2005 ஜனவரியிலிருந்து ஜூலைக்குள் பழங்குடியினப் பகுதிகளில் 2814 குழந்தைகள் பட்டினியால் மாண்டு போயுள்ளதாக மகாராஷ்டிரா அரசு அம்மாநில உயர்நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டது.

 

சுற்றுச்சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான மையத்தின் 2005ஆம் ஆண்டின் ஆய்வின்படி, ராசஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் 99மூ தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் கொடிய வறுமையிலும் பட்டினியிலும் பரிதவிக்கின்றனர். ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்பவர்கள் 25மூக்கும் மேலாக உள்ளனர்.

 

ஒரிசாவின் ரயாகடா மாவட்டத்தில் பட்டினியால் பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் மாங்கொட்டைப் பருப்புகளை வேகவைத்து உண்கிறார்கள். ராசஸ்தானின் பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த சஹரியா பழங்குடியின மக்கள் சாமா என்னும் காட்டுப் புல் விதைகளை வேகவைத்து பசியாறுகிறார்கள். ஜார்கண்ட் மாநிலத்தின் பலாமு மாவட்டத்திலும், மத்தியப்பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்திலும் பட்டினியால் தவிக்கும் மக்கள் காட்டுக் கீரைகளையும் கிழங்குகளையும் வேகவைத்து உண்டு குற்றுயிருடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் நீடித்த இந்த அவலம் காங்கிரசு ஆட்சியிலும் இன்னமும் தொடர்ந்து நீடிப்பதோடு, இன்னும் பல பகுதிகளுக்குப் பரவி வருகிறது.

 

பெரும்பாலான நாடுகளில் இத்தகைய நிலைமை ஏற்பட்டால், தேசிய அவசரநிலை பிறப்பித்து போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடக்கும். ஆனால் காங்கிரசு கயவாளிகளின் ஆட்சியில் ரேஷனில் கொடுக்கப்படும் உணவு தானியத்தின் அளவு குறைக்கப்பட்டு, ரேஷன் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு கோடிக்கணக்கான மக்களைப் பட்டினிச் சாவுக்குத் தள்ளும் சதி வேகமாக நடந்து வருகிறது.

 

சில நேரங்களில் உண்மைகள், கற்பனைக் கதைகளைவிட விநோதமாக இருக்கும் என்பார்கள். மாங்கொட்டை பருப்பையும், கிழங்குகளையும், புல்பூண்டு இலை தழைகளையும் தின்று உயிர்வாழும் நிலையிலுள்ள குடிமக்களைக் கொண்டுள்ள ஒரு நாடு, உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறது என்றால், அதை என்னவென்று சொல்வது? அந்தப் "பெருமைக்குரிய' நாடு இந்தியாதான்! உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி, கடந்த ஐந்தாண்டுகளில் ஏறத்தாழ 1.5 கோடி பேர் புதிதாக பட்டினிப் பட்டாளத்தில் சேர்ந்துள்ள நிலையில், 2 கோடி டன் உணவு தானியங்களை ரேஷன் கடையைவிடக் குறைவான விலைக்கு ஏற்றுமதி செய்து "சாதனை' படைத்துள்ள நாடும் இந்தியாதான்! இதுதான் பொருளாதார வளர்ச்சிக்கான பாதை, வல்லரசாக வளர்வதற்கான பாதை என்று முதுகில் தட்டிக் கொடுக்கும் உலக வங்கி, இந்தப் பாதையில் முன்னேற வேண்டுமானால், உணவு உற்பத்தியைக் குறைக்க வேண்டும்; ரேஷன் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு போடுகிறது.

 

இந்திய விவசாயத்தின் "வளர்ச்சிக்கு' பல வழிகளில் "உதவி' செய்து வரும் உலக வங்கிதான் இப்போது உணவு உற்பத்தியை நிறுத்தச் சொல்கிறது; உணவு மானியத்தை நிறுத்தி ரேஷன் கடைகளை மூடச் சொல்கிறது. ஏனெனில், ஏகாதிபத்திய நாடுகளில் ஏராளமான உணவு தானியங்கள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த நிலைமையில் இந்தியா எதற்கு உற்பத்தி செய்ய வேண்டும்; அப்படித் தேவைப்பட்டால் அமெரிக்காவிடம் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்கிறது உலக வங்கி.

 

ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமையின் உற்பத்திச் செலவு அமெரிக்காவை விட இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி அவை மிகவும் மலிவாக இந்தியாவில் விற்பனையாகின்றன. இந்த இழப்பை ஈடுகட்டுவதற்கு அரசு மானியங்கள் வேறு கொடுக்கப்படுகின்றன. ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய தொழில்களுக்கு மானியம் கொடுத்தால் அது "வளர்ச்சி'க்கு உதவும்; விவசாயத்திற்குப் போய் அள்ளித் தருவதா என்று பொருமுகிறது உலக வங்கி.

 

ஏழை நாடுகளின் உணவுச் சந்தையைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்த ஏகாதிபத்திய நாடுகளின் உணவு வர்த்தகக் கழகங்கள் நீண்டகாலமாக முயற்சித்து வருகின்றன. நுகர்பொருட்களை ஏழை நாடுகளில் கொண்டு வந்து கொட்டி பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகள் ஆதிக்கம் செய்வதைப் போலவே, உணவு தானியங்களையும் ஏழைநாடுகளில் இறக்குமதி செய்து ஆதிக்கம் செய்வதில் அவை குறியாக இருக்கின்றன.

 

இந்தியா போன்ற சில ஏழை நாடுகளில் அரசாங்கம் உணவு தானியக் கொள்முதல் செய்வதும், ரேசன் விநியோக முறையும் நீண்ட காலமாக இருந்து வந்தது. அரசாங்கம் கணிசமான அளவுக்கு உணவு தானியங்களைக் கையிருப்பில் வைத்திருந்ததும், விலை உயர்வு கடுமையாக இருக்கும் காலங்களில் அரசாங்கக் கிடங்குகளிலிருந்து ஒரு பகுதியை சந்தையில் இறக்கியதும், விவசாய உற்பத்திக்கும் வர்த்தகச் சூதாட்டத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுவதாக இருந்தன. இத்தகைய நடைமுறையானது, பன்னாட்டு ஏகபோக உணவு வர்த்தகக் கம்பெனிகளின் இலாப வேட்டைக்கு ஒரு தடைக்கல்லாக இருந்தது. எனவேதான், இந்தியா போன்ற பெரிய ஏழை நாடுகளின் உணவு உற்பத்தியை நிர்பந்தமாகக் குறைக்கச் செய்யவும், உணவுப் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒழித்துக் கட்டவும் ஏகாதிபத்தியங்கள் ஏராளமான சதிகளைச் செய்து வருகின்றன.

 

உள்நாட்டு சோடா கம்பெனிகளை ஒழித்தால்தான் கோகோ கோலா ஆதிக்கம் செலுத்த முடியும். அதேபோல, உள்நாட்டு விவசாய உற்பத்தியையும் உணவுப் பாதுகாப்பையும் ஒழித்தால்தான், பன்னாட்டு உணவு வர்த்தகக் கழகங்கள் ஆதிக்கம் செலுத்த முடியும்; ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வைத்து கொள்ளை இலாபத்தைச் சுருட்ட முடியும்.

 

இந்த நோக்கத்தோடுதான் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதும், ரேஷன் விநியோக முறையின் மீதும் உலக வங்கி தாக்குதலை நடத்தியது. உலக வங்கியின் கட்டளைப்படி, 199192 இல் ரேஷன் கோதுமையின் விலை ஒரு கிலோவுக்கு ரூ. 2.34லிருந்து ரூ. 4.02க்கு உயர்த்தப்பட்டது. அரிசியின் விலை ரூ. 2.89லிருந்து ரூ. 5.37க்கு உயர்த்தப்பட்டது. இந்தத் தாக்குதல் போதாதென்று 1997 2000வது ஆண்டுகளில் இன்னுமொரு கொடிய தாக்குதல் ஏவிவிடப்பட்டது. முதலாவதாக ரேஷன் விநியோகத் திட்டத்தின் கீழுள்ள மக்கள், ""வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்கள்'' என்றும், ""வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள்'' என்றும் இரு வகையாகப் பிரிக்கப்பட்டனர். அடுத்ததாக, வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கான ரேஷன் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டன.

 

ஏழைகள், தாங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதை நிரூபித்து அதிகாரிகளிடம் அத்தாட்சி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இதன் மூலம் கோடிக்கணக்கான ஏழைகள் ரேஷன் விநியோகத் திட்டத்திலிருந்து விரட்டப்பட்டனர். சொந்த வீடு வைத்திருந்தாலோ, டி.வி. பெட்டி, மோட்டார் சைக்கிள் வைத்திருந்தாலோ அத்தகைய குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவையாகச் சித்தரிக்கப்பட்டன. இந்தியாவின் மிகப் பெரிய சேரிப் பகுதியான 5 லட்சம் ஏழைகளைக் கொண்ட மும்பையிலுள்ள தாராவியில் வெறும் 365 குடும்பங்களுக்கு மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் என ரேஷன் அட்டை தரப்பட்டது. 1990ஆம் ஆண்டில் மறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 151 குடும்பங்கள்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளதாக பின்னர் குறைக்கப்பட்டது. இப்படி பல மாநில அரசுகள் வௌ;வேறு உத்திகளுடன் கோடிக்கணக்கான ஏழைகளை ரேஷன் விநியோகத் திட்டத்திலிருந்து விரட்டியடித்தன.

 

இது ஒருபுறமிருக்க, வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள மக்களுக்கான ரேஷன் தானியங்களின் விலைகளை மைய அரசு இரு மடங்காக உயர்த்தியது. இவ்வாறாக, 2000மாவது ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கான மானியங்கள் அறவே ஒழிக்கப்பட்டன. அடுத்த கட்டமாக, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கான ரேஷன் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டன. இதனால், பல வண்ணங்களில் தரப்படும் ரேஷன் அட்டை வெறும் அடையாள அட்டை என்பதற்கு மேல் வேறெந்தப் பயன்பாடும் இல்லாமல் போய் விட்டது.

 

இத்தனையும் போதாதென்று இப்போது இன்னுமொரு கொடிய தாக்குதலை உலக வங்கி கைக்கூலிகள் ஏவிவிட எத்தணித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகள் முணுமுணுக்கத் தொடங்கியதும் இந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவு அமைச்சர் அறிவித்துள்ளார். ""நிறுத்தி வைப்பது என்றால் அந்த முடிவின் செயலாக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றே பொருள். இந்த முடிவு திரும்பப் பெறப்பட்டதாகவோ, அல்லது ரத்து செய்யப்பட்டதாகவோ மத்திய அரசு அறிவிக்கவில்லை'' என்று பாசிச ஜெயாவே பகிரங்கமாக காங்கிரசு அரசின் நயவஞ்சகத்தை அம்பலப்படுத்துகிறார்.

 

சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, ""தமிழக ஏழைகளின் நலன் கருதி ரேஷனில் விநியோகிக்கும் உணவுப் பொருட்களின் விலை உயராது'' என்று அறிவிக்கிறார் ஜெயலலிதா. ஜெயாவின் சவடாலும் மைய அரசின் தற்காலிக நிறுத்தி வைப்பும் வரும் சட்டமன்றத் தேர்தலுடன் காலாவதியாகி விடும். தேர்தலுக்குப் பின் யார் ஆட்சிக்கு வந்தாலும் உலக வங்கி உத்தரவுப்படியும் மைய அரசின் முடிவின்படியும் ரேஷன் கடைகளை ஒழித்துக் கட்டும் வேலை வேகமாக நடந்தேறும்.

 

எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளும் நாட்டை மீண்டும் காலனியாக்கி கோடிக்கணக்கான மக்களைப் பட்டினிச் சாவுக்குத் தள்ளும் இச்சதிக்கு உடந்தையாகவே நிற்கின்றன. ""உணவு மானியத்தைக் குறைக்காதே!'' என்று வீரவசனம் பேசும் போலி கம்யூனிஸ்டுகள், வெட்கமின்றி காங்கிரசு கூட்டணி அரசுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகமயத்தை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே, விவசாயத்தில் அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்று ஆதரிக்கிறார்கள்.

 

நாட்டின் மீதும் மக்களின் மீதும் ஒரு போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இது ஏகாதிபத்தியங்களின் காலனியாதிக்கப் போர். போரை போரால்தான் முறியடிக்க முடியும். ஓட்டுக்கட்சிக ளைப் புறக்கணித்து புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் பஞ்சைப் பராரிகள் திரண்டு, போர் தொடுக்காவிடில் இக்காலனியாதிக்கத்தை வீழ்த்த முடியாது; இந்தியா, இன்னுமொரு எத்தியோப்பியாவாக, சோமாலியாவாக மாறுவதைத் தடுக்கவும் முடியாது.

 

மு மனோகரன்