03_2006.jpgகோபாலன்; திருப்பூரைச் சேர்ந்த புற்றுநோயாளி; திருவனந்தபுரத்திலுள்ள வட்டார புற்றுநோய் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை தொடர்ந்து கொண்டிருந்த வேளையில், ஒரு புதிய மருந்து வெளிநாட்டிலிருந்து வந்துள்ளதாகக் கூறி மருத்துவர்கள் அம்மருந்தை அவருக்குச் செலுத்தினர்.

 

அந்தப் புதிய மருந்தை அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் பேராசிரியரான டாக்டர் ரூ சிய் {ஹவாங் என்பவர் கண்டுபிடித்திருந்தார். எனினும் மிருகங்கள் மீது செலுத்தி அம்மருந்தின் செயல்திறன், பக்கவிளைவுகள், உயிரியல் சாத்தியப்பாடு சமன்நிலை பற்றி அவர் பரிசோதனையை நிறைவடையச் செய்யவில்லை. இந்நிலையில் ""பயோக்யூர்'' எனும் மருந்துக் கம்பெனி இப்பல்கலைக்கழகத்துடன் கூட்டுச் சேர்ந்து இப்புதிய மருந்துக்குக் காப்புரிமை பெற்று, பல்லாயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்து, இம்மருந்தைத் தயாரித்து உலகெங்கும் விற்பனை செய்யத் துடித்தது. அதற்கு முன் மனிதர்கள் மீது பரிசோதனை நடத்திப் பார்க்க உலகெங்குமுள்ள ஒப்பந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிடம் பேரங்களை நடத்தி முடித்தது.

 

திருவனந்தபுரத்திலுள்ள புற்றுநோய் மருத்துவ மையம் ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் பெற்றுக் கொண்டு இந்தப் பரிசோதனையை நடத்த முன் வந்தது. 2001ஆம் ஆண்டில் 25 நோயாளிகளுக்கு இப்புதிய புற்றுநோய் மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. மருத்துவர்களை தெய்வமாகக் கருதிய அந்நோயாளிகளுக்கு தங்களுக்கு அங்கீகாரமற்ற ஒரு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுவதைப் பற்றித் தெரியாது. அம்மருந்தினால் தமக்கு ஏற்படும் விபரீத விளைவுகள் பற்றியும் தெரியாது. அந்நோயாளிகளில் ஒருவர்தான் கோபாலன்.

 

ஒரு அந்நிய மருந்துக் கம்பெனியின் ஆதாயத்துக்காக, சட்ட விரோதமான முறையில் மருத்துவ அறிவியல் கோட்பாடுகளுக்கு எதிரான வகையில் மனித உரிமைக்கு எதிரான வகையில், ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த மருத்துவப் பரிசோதனை பற்றி திருவனந்தபுரம் மருத்துவ மையத்தைச் சேர்ந்த சில மருத்துவர்களே அம்பலப்படுத்தியதும் நாடே அதிர்ச்சிக்குள்ளானது. புற்றுநோய் சிகிச்சை பெற்றுவந்த கோபாலனும் இதர நோயாளிகளும் மாநில மனித உரிமை ஆணையத்திடம் இக்கொடுஞ்செயலுக்கு எதிராக முறையிட்டனர். திருவனந்தபுரம் புற்றுநோய் மருத்துவ மையத்தின் மருத்துவர்களும் ஊழியர்களும் நோயாளிகளை பரிசோதனைக் கூட எலிகளாக மாற்றும் கொடுஞ்செயலை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து மைய அரசு விசாரணைக் குழுவை நிறுவியது. அதன்பிறகு விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கோபாலனும் இதர நோயாளிகளும் இப்போது எந்த நிலையில் உள்ளனர் என்றும் தெரியவில்லை. ஆனால், கோபாலனைப் போல, பல்லாயிரக்கணக்கானோரை பரிசோதனை மனிதர்களாக்கும் சதிகள் நாடெங்கும் வேகமாக நடந்து வருகின்றன.

 

ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விலங்கின் மேல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு மருந்தின் செயல்திறன், பக்கவிளைவுகள், உயிரியல் தேவை உயிரியல் சமன் மற்றும் மருந்தின் இதர குணாதிசயங்களை அறிந்து கொள்ள மனிதர்களின் மேல் செலுத்தி பரிசோதனை செய்யப்பட வேண்டும். இந்த பரிசோதனை நான்கு கட்டங்களாக மனிதர்களின் மேல் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நான்காவது கட்ட பரிசோதனையின் முடிவுக்கு ஏற்ப மருந்து முழுமையாக சந்தைக்கோ அல்லது பயன்பாட்டுக்கோ வருகிறது.

 

தற்போது பெரும்பான்மையான புதிய மருந்து மூலக்கூறுகளை வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் கண்டுபிடிக்கின்றன. சமீபகாலம் வரை இந்நிறுவனங்கள் கண்டுபிடிக்கும் மருந்துகளை தங்கள் நாட்டின் மக்கள் மேல் பரிசோதனை செய்து வந்தன. ஏகாதிபத்திய நாடுகளில் இப்படிப்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள, உடலில் மருந்து செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதிக்கும் நபர்களின் நலனைப் பாதுகாக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கின்றன. இந்த விதிமுறைகளை பன்னாட்டு மருந்து கம்பெனிகள் கறாராக பின்பற்ற வேண்டும். பரிசோதனை செய்யும் நிறுவனங்கள் பங்கேற்பவர்களுக்கு மருந்தை பற்றிய விபரங்கள், பக்கவிளைவுகள் பற்றித் தெளிவாக முழுமையாக கூறி பங்கேற்பவர்களின் ஒப்புதலைப் பெறவேண்டும். பரிசோதனையில் பங்கேற்பவர்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஊதியம் முதல் காப்பீடு வரை அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும். மேற்குறிப்பிட்ட விதிமுறைகளிலிருந்து சிறிது தவறினாலும் மருந்து கம்பெனிகளைக் குற்றவாளி கூண்டில் ஏற்றலாம். மேற்குறிப்பிட்ட நியாயமான விதிமுறைகளை கடைப்பிடிப்பதனால், ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் செலவில் ஏறத்தாழ 40 சதம் பரிசோதனைக்காகவே செலவாகிறது. அதாவது, பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 33,600 முதல் 42,000 கோடி ரூபாய் வரை பரிசோதனைக்காக செலவு செய்கின்றன. இந்தச் செலவைக் குறைத்து இலாபத்தை உயர்த்த, பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் சில ஆண்டுகாலமாக மருந்துப் பரிசோதனையை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளன.

நம் நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கையின் தொடர் தாக்குதலால் வாழ்விழந்த எண்ணற்ற மக்கள், இதன் விளைவாக குடும்பத்தையும் மானத்தையும் காப்பாற்ற உடலையும் உயிரையும் இழக்கத் தயாராக இருக்கும் சூழல் ஒருபுறம்; அவர்களின் அறியாமையின் விளைவாக, மருந்துப் பரிசோதனைக்கு குரங்குகளைவிட மனிதர்கள் மலிவான விலையில் உள்ள சூழ்நிலைகள் மறுபுறம்; மருந்து பரிசோதனையை மேற்கொள்ள குறைவான கூலியில் மருத்துவர்கள், நுண்ணுயிரியல் உயிரி தொழில் நுட்ப வல்லுனர்கள் மற்றும் பரிசோதனை கட்டுப்பாட்டுக்கு பெயரளவிலான விதிகள் ஆகியவை இன்னொருபுறம். இவையனைத்தும் மருந்துப் பரிசோதனைக்கு ஏற்ற களமாய் இருப்பதால், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வலையை விரிக்கின்றன.

 

நீலச்சிலுவை சங்கம், விலங்குகள் துயர் துடைப்பு சங்கம் விலங்குகான மக்கள்; விலங்குகள் மீதான சோதனைகளை கட்டுப்படுத்தல் மற்றும் தடை செய்தலுக்கான குழு போன்ற அமைப்புகளின் விருப்பத்திற்கு இணங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் விலங்குகளின் மேல் நடத்தப்படும் ஆய்வு மற்றும் நலன் காக்க பல்வேறு கமிட்டிகள் உருவாக்கியும், ஆணை பிறப்பித்தும் வருகின்றன. இப்படி நாய்க்கும், குரங்குக்கும், பூனைக்கும் ஒப்பாரி வைக்கும் அரசு, இந்திய தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, மனிதர்களின் மேல் நடக்கும் மருந்துப் பரிசோதனைகளைக் கட்டுப்படுத்துவதற்காக வைத்திருந்த அரைகுறையான விதிகளையும் தளர்த்திவிட்டது. (டெக்கான் கிரானிகல், அக்.29, 2005)

குரங்கைவிட மலிவான விலையில் பரிசோதனைக்கான மனிதர்கள், குறைந்த கூலியில் வல்லுனர்கள் மற்றும் தளர்த்தப்பட்டு இருக்கும் அரசின் விதிமுறைகள் இவற்றின் காரணமாக பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளும், ஒப்பந்த மருந்துப் பரிசோதனை நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்களின் உயிரைச் சூறையாட ஆரம்பித்துள்ளன. நம் நாட்டில் மருந்துப் பரிசோதனையை மேற்கொள்வதன் விளைவாக பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு, ஒவ்வொரு மருந்துக்கும் சராசரியாக 1115 கோடி ரூபாய் கூடுதல் இலாபமாக கிடைக்கிறது. தற்சமயம் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் நேரடியாகவோ அல்லது பன்னாட்டுதரகு முதலாளித்துவ ஒப்பந்த மருந்துப் பரிசோதனை நிறுவனங்கள் மூலமாகவோ இத்தகைய சோதனைகளைச் செய்து வருகின்றன. கிளாக்ஸோ, ரோச், பைஷர், நோவோ நோர்டிஸ்க், அவென்டிஸ், இலி லில்லி, நோவார்டிஸ் போன்ற மருந்து கம்பெனிகள் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளன.

 

இன்னொருபுறம் பன்னாட்டு ஒப்பந்த பரிசோதனை நிறுவனங்களான பயோகான், குயுன்டில்ஸ், ஆம்னிகேர், பார்ம்ஓல்ம், பார்ம்நெட் மற்றும் இந்திய தரகு முதலாளித்துவ நிறுவனங்களான விப்ரோ, ரிலையன்ஸ், டாடா, லோட்டஸ் லேப்ஸ், விம்டா லேப்ஸ், ஜிஎஸ்கே, சிரோ ஆகியவை மருந்துப் பரிசோதனைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்குச் செய்து தருகின்றன. கூடுதலாக அரசு ஆய்வு நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் மற்றும் கணக்கிலே வராமல் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் திருட்டுதனமாக பரிசோதனையை மேற்கொள்ளும் நிறுவனங்களும் இத்தகைய பரிசோதனைகளைச் செய்து வருகின்றன. அதிகாரபூர்வ தகவல்படி, இந்தியாவில் தற்சமயம் 300க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மனிதர்கள் மேல் மருந்துகளைச் செலுத்தி ஆய்வு செய்கின்றன. இப்பரிசோதனையில் பங்கேற்பவர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்புமில்லை; அதிகபட்சமாக ஒவ்வொரு மருந்து பரிசோதனைக்கும் ரூ.5000 கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் இந்நிறுவனங்கள் கணிசமான இலாபத்தைச் சுருட்டுகின்றன.

 

இந்தப் பின்னணியில் தகவல் தொழில்புரட்சிக்கு அடுத்தபடியாக உயிரிதொழில் நுட்பவியல் புரட்சி வரப்போவதாக ஆளும் வர்க்கம் அவ்வப்பொழுது கூறிக்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பெங்களூரில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்குக்கு (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்த இடம்) இணையாக ஆந்திர மாநில அரசு மரபியல் பள்ளதாக்கை ஐதராபாத்தில் அமைத்துள்ளது. தமிழக அரசு தன் பங்கிற்கு உயிரிதொழில் நுட்பவியல் பூங்காவை அமைத்துள்ளது. பல்வேறு மாநிலங்கள் மேற்குறிப்பிட்ட உயிரிதொழிற் நுட்பவியல் பூங்காவை அமைத்துக் கொண்டு வருகின்றன. இந்த வகைப்பட்ட பூங்காங்கள் பள்ளத்தாக்குகளில் நூற்றுக்கணக்கான பன்னாட்டு மற்றும் இந்திய தரகு முதலாளிகளின் ஒப்பந்த ஆய்வு நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த ஒப்பந்த ஆய்வு நிறுவனங்களில் பெரும்பான்மையானவை ஒப்பந்த மருந்து பரிசோதனை நிறுவனங்கள் ஆகும். பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணா, ""மேற்குறிப்பிடப்பட்ட ஒப்பந்த மருந்துப் பரிசோதனை நிறுவனங்கள் 2010இல் இந்திய தகவல் தொழில்நுட்ப துறையை விட கூடுதலான வருமானத்தை ஈட்டி கொடுக்கும்'' (பிசினஸ் லைன், செப்.22, 2005) என்று கூறுகிறார். இந்த ஒப்பந்த மருந்துப் பரிசோதனை நிறுவனங்கள் 2001இல் வெறும் 129 கோடி ரூபாயை வருமானமாக கொண்டிருந்தன் 2003இல் இது 520 கோடி ரூபாயை எட்டியது. 2010இல் இது குறைந்தபட்சம் 8600 கோடி ரூபாயை எட்டும் என்று வர்த்தக ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன.

 

""இந்நிறுவனங்கள் ஏழைஎளிய மக்களின் வாழ்க்கையைச் சூறையாடுகிறது; உயிர் மேல் பணம் பார்க்கிறார்கள்'' என்று கண்டன குரல்கள் வரும் பொழுதெல்லாம் இந்நிறுவனங்களும் அரசும் ""இந்தியர்களும் புதிய மருந்து கூறுகளைக் கண்டுபிடிப்பதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்; வெறும் ஐரோப்பியர்களை மட்டும் ஏன் பலிகடா ஆக்கவேண்டும்?'' என்று எதிர்கேள்வி வைக்கின்றன. மேலும், இம்மருந்துப் பரிசோதனையின் மூலம் இந்திய மக்களும் பயனடையப் போகிறார்கள் என்கின்றன. ஆனால், யதார்த்தமோ வேறு. டாக்டர் சந்தரா குல்காட்டி என்பவர், ""இங்கு நடக்கும் பெரும்பான்மையான மருந்துப் பரிசோதனைகள் மூலம் பயன்பாட்டுக்கு வரும் மருந்துகள் இந்திய மக்களின் நோய்களுக்கு பயன் தராது. மேலும், இம்மருந்துகள் இந்திய சந்தைக்கே வராது; அப்படி மீறி வந்தாலும், சாமானியப் பட்ட மக்கள் வாங்கும் விலையில் விற்காது'' என்கிறார்.

 

இன்னொருபுறம் இந்நிறுவனங்கள் தங்களது தேவைக்கேற்ப தளர்த்திக்கொண்ட அரசு விதிகளை மயிரளவுக்குக்கூட மதிப்பதில்லை. விலங்குகளின் மேல் சோதனையை முடிப்பதற்கு முன்பே மனிதர்களின் மேல் சோதித்துப் பார்க்கின்றன. பரிசோதனையில் பங்கேற்பவர்களுக்கு மருந்தைப் பற்றி கூட விவரிப்பதில்லை. சோதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள் என்று தெரியப்படுத்துவதில்லை; பல இடங்களில் தங்கள் உடல் சுகவீனத்திற்குத்தான் மருந்து செலுத்தப்படுகிறது என்று நம்ப வைக்கப்படுகிறார்கள். இப்படி பல்வேறுபட்ட குறுக்கு வழிகள் மூலம் குறுகிய காலத்தில் சோதனையை முடித்து இந்நிறுவனங்கள் கோடி கோடியாய் இலாபத்தைச் சுருட்டுகின்றன.

 

இவர்களின் கோடிகளுக்கான இரைகள் யார்? தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் விளைவாக வாழ்க்கையின் விளிம்புக்குத் தள்ளப்படும் பாட்டாளி வர்க்கம்தான். நிக்கோலஸ் பிரமால் என்ற இந்திய நிறுவனம், ஒரு இங்கிலாந்து நிறுவனத்துடன் கூட்டு வைத்துக் கொண்டு புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இழுத்து மூடப்பட்ட நெசவாலைகள் இருக்கும் மத்திய மும்பய் பகுதியில் மையமாக செயல்படுகிறது. வெல்குவிஸ்ட் என்ற நிறுவனத்தில் பெரும்பான்மையாக, வேலையிழந்த நெசவு ஆலைகளின் தொழிலாளிகள்தான் பரிசோதனைக்கான மனிதர்கள். சென்னை அடையாரில் செயல்படும் விம்டாஸ் லேப்ஸ் என்ற நிறுவனத்திற்கு வில்லிவாக்கம் விடுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்களும் "பரிசோதனைக்கான மனிதர்கள்'. இப்படி நாடு முழுவதும் செயல்படும் ஒப்பந்த மருந்துப் பரிசோதனை நிறுவனங்களுக்கு நகர்புறத்தில் இருக்கும் வேலையில்லாப் பட்டாளம் அல்லது வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள்தான் பரிசோதனைக்கான மனிதர்கள்.

 

நிலமும் நீரும் வாழ்வும் ஏகாதிபத்தியங்களால் சூறையாடப்பட்டு வருவதைப் போலவே, இயற்கையின் உன்னத படைப்பான மனிதனும் ஏகாதிபத்தியங்களின் லாபவெறிக்காகச் சூறையாடப்பட்டு வருகிறான். வேட்டுச் சத்தம் எதுவுமில்லாமல் இரகசியமாக ஒரு பயங்கரவாதப் போர் ஏழை நாடுகளின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த ஏகாதிபத்திய பயங்கரவாதிகளுக்கெதிரான விடுதலைப் போரைத் தொடங்குவது ஒன்றுதான், ஏழை நாடுகளும் மக்களும் சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான ஒரே வழி!

 

செஞ்சுடர்