Language Selection

புதிய ஜனநாயகம் 2006

03_2006.jpgஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் மும்பை பங்குச் சந்தை புள்ளிகள் 10,000ஐத் தாண்டி புதிய உயரத்துக்கு முன்னேறியது. அது மேலும் உயர்ந்து மேலே போய்க் கொண்டிருக்கிறது. ""பாய்ச்சல்; இதுவரை கண்டிராத வகையில் முரட்டுக் காளையின் மாபெரும் பாய்ச்சல்; பிப்ரவரி 6ஆம் தேதி, மும்பை பங்குச் சந்தையின் அதிருஷ்டநாள்!'' என்று பெரு முதலாளிகளும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் தரகர்களும் செய்தி ஊடகங்களும் குதூகலத்துடன் கொண்டாடினர். கோலாகலம், விருந்துகள், வாழ்த்துச் செய்திகள், பொருளாதார

 நிபுணர்களின் பேட்டிகள், எதிர்காலம் பற்றிய ஆரூடங்கள் என பங்குச் சந்தை சூதாடிகளும் பத்திரிகைகளும் ஒரு திருவிழாவையே நடத்தினர்.

 

""48 நாட்களில் 10,000 புள்ளிகளைத் தாண்டி பங்குச் சந்தை வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது; பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில் 8.1மூ பொருளாதார வளர்ச்சியை எட்டி விடுவோம்'' என்கிறார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். ""இல்லையில்லை; 10மூக்கும் மேலாக வளர்ச்சி இருக்கும் என்று கிளி ஜோசியம் சொல்கிறார், உலக வங்கி கைக்கூலியும் திட்டக் கமிசன் துணைத் தலைவருமான மான்டேக்சிங் அலுவாலியா.

 

பிப்ரவரியில் 10,000 புள்ளிகளைத் தாண்டி மும்பை பங்குச் சந்தை பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருந்தபோது, அதே மும்பை நகர் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்தில், கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்ட சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 300 பேரைத் தாண்டிக் கொண்டிருந்தது. மும்பை நகரில் மூடப்பட்ட சிறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியது. பட்டினியால் மகாராஷ்டிராவில் மாண்டுபோன பழங்குடியின குழந்தைகளின் எண்ணிக்கை 2850ஐத் தாண்டியது. வேலையிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை பல பத்தாயிரங்களாக அதிகரித்தது.

 

நாட்டின் உண்மை நிலவரம் இப்படியிருக்க, காங்கிரசு கயவாளிகளும் பங்குச் சந்தை சூதாடிகளும் முதலாளித்துவ மூதறிஞர்களும் நாட்டின் பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருவதாகக் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கின்றனர். தொழில் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்திற்கேற்ப பங்குகளின் விலை உயர்வு அமையும் என்பதற்கு மாறாக, தொழில் வளர்ச்சியே மந்த நிலையில் இருக்கும் போது பங்குகளின் விலை மட்டும் வீங்கிக் கொண்டே போகிறது. இதற்கான காரணத்தையும், இதனால் ஏற்படும் விபரீத விளைவுகளையும் மூடிமறைத்துவிட்டு, பங்குச் சந்தை பாய்ச்சலைக் காட்டி பொருளாதாரம் முன்னேறுவதாக இப்பாசிஸ்டுகள் நம்பச் சொல்கிறார்கள்.

 

பங்குச் சந்தையின் பிரமிக்கத்தக்க வளர்ச்சிக்கு முக்கிய காரணம், இந்திய பங்குச் சந்தை சூதாட்டத்தில் கோடிகோடியாய் அந்நிய நிதி முதலீடுகள் கட்டுப்பாடின்றி பாய்ந்திருப்பதேயாகும். கடந்த பத்தாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவந்த இந்த அந்நிய சூதாட்ட முதலீடுகள் இப்போது ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய முதலீடுகள் ரூ. 45,000 கோடிக்கும் மேலாக இந்தியப் பங்குச் சந்தைகளில் பாய்ந்ததால், பங்குகளின் விலையும் உயரத் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையில் 2005 முடிவில் 9400 ஆக இருந்த விலை புள்ளி கடந்த பிப்ரவரியில் 10,000ஐத் தாண்டி இன்னும் மேலே போய்க் கொண்டிருக்கிறது. இந்தியத் தொழில் நிறுவனங்களின் வியாபாரப் பெருக்கத்தாலோ, லாப அதிகரிப்பாலோ இந்தப் பாய்ச்சல் நிகழவில்லை. அந்நிய முதலீடுகளின் அதிகமான புழக்கத்தால் செயற்கையான கிராக்கி ஏற்பட்டு பங்குகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

 

மீன்காரனுக்கு தூண்டில் மிதவை மீதுதான் கண் என்பதைப் போல, மற்ற நாடுகளைவிட அதிக லாபம் கிடைக்கும் என்பதால் குறுகில் காலத்தில் கொள்ளையடிப்பையே குறியாக வைத்து அந்நிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையை நோக்கிப் படையெடுக்கின்றன. காலையில் பங்குகளை வாங்கி மாலைக்குள் விற்று முடித்து கோடிகோடியாய் லாபத்தை அள்ளுகின்றன. ஒருநாள் அல்ல, ஒரு சில நிமிடங்களிலேயே இந்த வியாபாரத்தை முடித்துக் கொண்டு, கிடைத்த லாபத்தோடு இந்த அந்நிய முதலீடுகளும் வெளியேறி விடுகின்றன.

 

ஒரு அந்நிய நிறுவனம் நேரடியாகவோ அல்லது இங்குள்ள தரகுப் பெருமுதலாளிகளை பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டோ ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்கினால் அது அந்நிய நேரடி முதலீடு எனப்படுகிறது. இது ஒப்பீட்டளவில் நீண்டகாலம் இங்கு நிலைத்திருக்கும் முதலீடாகும்.

 

ஆனால், பங்குச் சந்தையில் குவியும் சூதாட்ட முதலீடு அப்படிப்பட்டதல்ல. அந்நிய நிதி நிறுவன முதலீடு எனப்படும் இத்தகைய முதலீடுகளை குறுகிய கால முதலீடு என்றும் சூடான நிதி என்றும் குறிப்பிடுவர். அதாவது இந்தச் சூட்டை கையில் வைத்திருக்க முடியாமல் கைக்கு கை வேகமாக பணம் கைமாறும். நிமிடத்திற்கு நிமிடம் கைமாறும் இந்த சூடான பணம் உலகெங்கும் பங்குச் சந்தைகளில் வேகமாகச் சுழன்று பங்குச் சந்தை சூதாட்டத்தை ஊக்குவித்து உச்சாணிக்குக் கொண்டு சென்று பறந்துவிடும். காசோலை எழுதி அஞ்சல் செய்து அனுப்பக் கால தாமதமாகும் என்பதால், இந்தச் சூடான நிதியை காசோலை மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதில்லை. மின்னஞ்சல் (ஈ மெயில்) மூலம் இந்தப் பணம் புழங்குவதால் இதை ""ஈ பணம்'' என்றும் குறிப்பிடுவர்.

 

ஈ போல மொய்த்து உடனே பறந்துவிடும் இந்தச் சூதாட்ட முதலீடானது, பொருளாதாரத்தையே சூதாட்டமாக மாற்றிவிடுமளவுக்கு ஆபத்தானது. 1997இல் தென்கிழக்காசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் வெள்ளமென இத்தகைய அந்நிய சூதாட்ட முதலீடுகள் குவிந்ததும், அந்நாடுகளின் பங்குச் சந்தைகளின் விலைப்புள்ளிகள் கிடுகிடுவென உயர்ந்து விண்ணைத் தொட்டன. அதைக் காட்டி அந்நாடுகளை ""ஆசியப் புலிகள்'' என்று ஏகாதிபத்திய உலகம் பாராட்டிப் புகழ்ந்தது. பின்னர், இந்தச் சூடான சூதாட்ட முதலீடு வற்றத் தொடங்கியதும், அந்நாடுகளின் பொருளாதார அடித்தளமே ஆட்டங்கண்டு அதலபாதாளத்தில் வீழ்ந்தது. புலிப் பாய்ச்சலாக சித்தரிக்கப்பட்ட அந்நாடுகளின் பொருளாதாரம் எலிப் புழுக்கைகளாகி விட்டன.

 

தென்கிழக்காசிய நாடுகளின் வழியில் இப்போது இந்தியாவிலும் காட்டாற்று வெள்ளம்போல் அந்நிய சூதாட்ட முதலீடுகள் பல்லாயிரம் கோடிகளில் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக செயற்கையான கிராக்கியால் பங்குகளின் விலைகள் நீர்குமிழிபோல வீங்குகின்றன. விலைப்புள்ளிகள் யானைக் காலாக உப்புகின்றன. நம்பகமான வர்த்தகத்தின், வலுவான பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடுகளே இவை என்று சொல்லி ஏய்க்கிறது ஆளுங்கும்பல்.

 

உயரங்கள் எப்போதுமே குதூகலத்தைக் கொடுக்கும்; அதே நேரத்தில் அடிவயிற்றில் பயத்தையும் உருவாக்கும். எனவேதான், இந்தச் சூதாட்ட முதலீடுகளின் விபரீத விளைவுகளைப் பற்றி வாய் திறக்காமல், ""புத்திசாலித்தனமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யுங்கள்'' என்று பட்டும்படாமல் இந்திய மேட்டுக்குடியினரிடம் எச்சரிக்கிறார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். ""பயப்படாதீர்கள்; டாலர் அடிப்படையிலான முழு நாணய மாற்றுமுறை காரணமாகவே தென்கிழக்காசிய நாடுகளில் பங்குச் சந்தை சரிந்தது; நம் நாட்டில் முழு நாணய மாற்றுமுறை இல்லாததால், நமக்கு அத்தகைய நிலைமை ஏற்படாது'' என்று நம்பிக்கையூட்டுகின்றன, பங்கு வர்த்தக ஊக வணிக நிறுவனங்கள். கனவுகளில் மிதக்கும் நடுத்தர மேட்டுக்குடி வர்க்கத்திடம்,

 

""திறமை இருந்தால் நாமும் முன்னேறிவிடலாம்'' என்று ஆசை காட்டி, பங்குச் சந்தையில் சூதாட அழைப்பு விடுக்கின்றன.

 

ஆனால், அந்நிய நிதிநிறுவனங்களின் பங்குச் சந்தை முதலீடுகளும் பரிமாற்றங்களும் வெறும் சூதாட்டம் மட்டுமல்ல் அது நாட்டை மீண்டும் காலனியாக்கும் ஏகாதிபத்திய சதிகளின் ஓர் அங்கம் ஆகும். கடந்த 2004ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த மறுவாரத்தில், தனியார்மயம் தாராளமயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கு இடதுசாரிகளால் பாதிப்பு வரலாம் என்ற வதந்தி பரவியதும், அந்நிய நிதி நிறுவனங்கள் மும்பை பங்குச் சந்தையில் ரூ. 1,33,000 கோடிக்கு மேல் வீழ்ச்சியைத் தோற்றுவித்து காங்கிரசு கூட்டணி அரசை எச்சரித்தன. எங்களுக்குச் சாதகமாக மறுகாலனியாதிக்கக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தாவிடில் இந்தக் கதிதான் ஏற்படும் என்று மிரட்டின. அவற்றுக்குப் பணிந்து விசுவாசமாக காங்கிரசு அரசு வாலாட்டியதாலேயே இப்போது அவை பல லட்சம் கோடிகளை பங்குச் சந்தை சூதாட்டத்தில் குவித்து சூறையாடுகின்றன. புலி வாலைப் பிடித்தவன் கதையாக, இத்தகைய ஆபத்தான அந்நிய முதலீடுகளைக் கட்டுப்பாடின்றி அனுமதித்துக் கொண்டு, அதன் இழுத்த இழுப்புகளுக்கேற்ப காங்கிரசு கூட்டணி அரசு சென்று கொண்டிருக்கிறது; பொருளாதாரமோ பாதாளத்தை நோக்கி பாய்ச்சலுடன் முன்னேறுகிறது.

 

நாட்டை மறுகாலனியாக்கி, தொழிலையும் விவசாயத்தையும் மரணக் குழியில் தள்ளிவிட்டு, பங்குச் சந்தை பாய்ச்சலை கோலாகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது ஆளுங்கும்பல். இந்த வக்கிரத்தையும் திமிரையும் இனியும் உழைக்கும் மக்கள் சகித்துக் கொண்டிருந்தால், நாளைய வரலாறு நம்மைத்தான் இகழும்.

 

குமார்