திருப்பூர் சாயப்பட்டறை முதலாளிகள் அமெரிக்க டாலரைச் சம்பாதிப்பதற்காக நொய்யல் ஆற்றையே சாக்கடையாக மாற்றி, நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயத்தை அழித்ததை நாம் அறிவோம். நொய்யல் ஆற்றைப் போலவே, பவானி நதியும் துணி ஆலை அதிபர்கள், காகித ஆலை முதலாளிகளின் இலாபத்திற்காகச் சூறையாடப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி ஆறு தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குள் பாய்ந்து, மீண்டும் தமிழக எல்லைக்குள் நுழையும் ஆணைக்கட்டிப் பகுதியில் மேல்பவானி என அழைக்கப்படுகிறது. பவானி சாகர் அணைக்குக் கீழ் பகுதியில் கீழ்பவானி என அழைக்கப்படுகிறது. பவானி ஆறு தமிழகத்திற்குள் நுழையும் தலைப்பகுதியிலேயே மாசுபடத் தொடங்கி விடுகிறது.
அத்திக்கடவு பகுதியில் இயங்கிவரும் சர்வால் காகித ஆலை, சி.சி.கம்பெனி, கே.ஜி. டெனிம், சாரதா டெர்ரி பிளிச்சிங் ஆகிய நிறுவனங்களும்;
மேட்டுப்பாளையம், ஆலங்கெம்பு, சிறுமுகை பகுதிகளில் இயங்கிவரும் சவுத் இண்டியன் விஸ்கோஸ், யுனைடெட் பீளிச்சர்ஸ், டேன் இண்டியா, சுதர்சன் பேப்பர் மில் மற்றும் சர்க்கரை ஆலைகளும் ஒருபுறம் பவானி ஆற்று நீரைத் தங்களின் தேவைக்கு உறிஞ்சுக் கொண்டு, இன்னொருபுறம் ஆலைக் கழிவை பவானி ஆற்றிலேயே கொட்டி, மேல்பவானி ஆற்றை மாசுபடுத்தி வருகின்றன.
பவானி சாகர் அணையில் இருந்து சத்தியமங்கலம் நகருக்கு வரும் 15 கி.மீ தொலைவுக்குள் அமைந்துள்ள பத்துக்கும் மேற்பட்ட காகிதத் தொழிற்சாலைகள் கீழ்பவானி ஆற்றை மாசுபடுத்துவதில் முன்னணியில் உள்ளன.
இந்தக் காகித ஆலைகள் ஆலைக் கழிவை மழைநீர் சேகரிப்பு குட்டைகளில் தேங்க விடுவதோடு, பவானி ஆற்றிலும் கழிவைக் கொட்டி, அந்நதியை இரசாயன நச்சுத் தன்மையுள்ளதாக மாற்றி வருகின்றன. காகித ஆலைகள் கழிவைத் திறந்தவெளி சாக்கடையைப் போல, பவானியை நோக்கித் திறந்துவிடுவதால், இந்தப் பகுதியின் பூமியே உவராக மாறி வருகிறது. நிலமும், நீரும் மௌ;ள மௌ;ள நஞ்சாக்கப்படுவதால், இந்தப் பகுதியில் நடந்துவரும் நெல், கரும்பு, மஞ்சள் விவசாயம் அழிந்து போகும் ஆபத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
காகித ஆலைக் கழிவால் கொத்தமங்கலம், ராஜன் நகர், புதுப்பீர்கடவு, இக்கரைநெகமம்புதூர் ஆகிய பஞ்சாயத்துக்களில் உள்ள நிலத்தடி நீரும், கிணற்று நீரும் நஞ்சாக மாறி விட்டதாகவும்; இந்தப் பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டதாகவும்; கால்நடைகள் மலட்டுத்தன்மை அடைவதாகவும் இந்தப் பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
கீழ்பவானியைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த பத்தாண்டுகளாகவே, காகித ஆலைக் கழிவுகள் பவானியில் கொட்டப்படுவதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கீழ்பவானியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்கள் அனைத்திலும் ஊர் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அக்கமிட்டிகள் சார்பாக உண்ணாவிரதப் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் கடந்த ஓராண்டாக மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்தப் பிரச்சினையில் அதிகார வர்க்கம் எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ஒரேயொரு உதாரணம் போதும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ""மனுநீதி நாள்'' நடத்தப்பட்ட பொழுது, அம்முகாமிற்கு வந்த சத்தியமங்கலம் நீதிபதியிடம் கீழ்பவானி பொதுமக்கள், ஆலைக் கழிவுகளால் ஏற்பட்டு வரும் ஆபத்து குறித்த அனைத்து விவரங்களையும் புகைப்பட ஆதாரங்களோடு புகாராகக் கொடுத்தார்கள். இப்புகாரைப் பரிசீலித்த அந்த நீதிபதி, கொடுத்த ஆவணத்திற்கும், காகித ஆலை இயங்கும் இடத்திற்கும் சம்பந்தமேயில்லை என மட்டை அடியாக அடித்துப் புகாரைத் தள்ளுபடி செய்தார்.
அதிகார வர்க்கம் காகித ஆலை முதலாளிகளின் கைக்கூலிகளாக இருப்பதைப் புரிந்து கொண்டுவிட்ட கொக்கிரக்குண்டி கிராம மக்கள், கீழ்பவானி மாசுபடுத்தப்படுவதைத் தடுக்கும் நேரடி நடவடிக்கைகளில் இறங்கி விட்டனர். இக்கிராமத்தையொட்டி இயங்கி வரும் அக்ஷரா காகித ஆலையில் இருந்து லாரிகள் மூலம் கழிவுகள் வெளியேற்றப்படும் பொழுதெல்லாம், அக்கிராம பொதுமக்கள், ஆலையின் முன் திரண்டு அந்த லாரிகள் ஆலையை விட்டு ஒரு அடி கூட நகர முடியாமல் மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தங்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் இம்மக்களை கிரிமினல் குற்றவாளிகள் என அவதூறு செய்து வருகிறது அக்ஷரா நிர்வாகம். கோபிசெட்டிப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நிர்வாகம் சார்பாக ""பிரைவேட் பெட்டிஷன்'' போட்டு, அந்நீதிமன்றத்தின் அனுமதியோடு, இப்போராட்டத்தை முன்னின்று நடத்தும் 18 பேரின் மீது கிரிமினல் வழக்கை நடத்தி வருகிறது.
இக்காகித ஆலைகள் பவானி நதியை மாசுபடுத்துவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. காகிதம் தயாரிப்பதற்குத் தேவைப்படும் மூலப் பொருளான மரங்களை, சத்தி வனப்பகுதியில் இருந்து கடத்திக் கொண்டு வருவது; மின்சாரம் திருடுவது எனப் பல வழிகளில் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்து வருகின்றன.
அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இந்தக் கொள்ளைக் கும்பலுக்குத் துணை நிற்கின்றன. சட்டசபை தேர்தலுக்காக இம்முதலாளிகளிடம் நன்கொடை கறக்க வேண்டியிருப்பதால், எந்தவொரு ஓட்டுக் கட்சியும் மக்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் 1.5 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசன நீரை வழங்கும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் வாய்க்கால்கள் பவானி நதியைத் தான் நம்பியுள்ளன.
பவானி நதிநீரை ஆதாரமாகக் கொண்டிருக்கும் அத்திக்கடவு குடிநீர் திட்டம் மூலம்தான், கோவை நகரின் ஒரு பகுதிக்கும்; பல்லடம், அவிநாசி, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும், ஈரோடு மாவட்டத்திற்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே, பவானி நதிநீரை மாசுபடுத்துவது, பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்துவதாகும்.
நீரின்றி அமையாது உலகு என்பது எல்லோருக்கும் தெரிந்த அறிவியல் உண்மை. ஆனால், தாராளமயத்தின் பின் தமிழகத்தின் நீர் ஆதாரங்களைத் தனியார் முதலாளிகள் சூறையாடுவது கேள்வி கேட்பாரின்றி நடந்து வருகிறது. தமிழகத்தின் ஒரே ஜீவ நதியான தாமிரவருணியை, கொக்கோ கோலா சோடா கம்பெனிக்கு பட்டா போட்டுக் கொடுத்துவிட்டது, தமிழக அரசு. அதை எதிர்த்து திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட மக்கள் போராடி வருகிறார்கள். தமிழகத்தின் வடபகுதியில் பாயும் பாலாற்றை, மணற் கொள்ளையர்கள் சூறையாடுவதை எதிர்த்துப் பல கிராமங்களில் தன்னெழுச்சியாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பவானி, தாமிரவருணி, பாலாறு உள்ளிட்டு, நீர் ஆதாரங்களின் மீது சமூக உரிமையை நிலைநாட்டுவதற்காகத் தமிழக மக்கள் நடத்தி வரும் இப்போராட்டங்கள் இணைக்கப்பட்டு, அதனை மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டமாக வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பு.ஜ. செய்தியாளர்,
கோவை.