03_2006.jpgநார்வே தூதரின் ஏற்பாட்டின்படி, சுவிஸ் நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தைகள் கடந்த பிப்ரவரி இறுதியில் நடந்துள்ளது. மூன்று ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமுமின்றி முடங்கிக் கிடந்த நிலையில் தற்போது நடக்கும் பேச்சுவார்த்தை பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

 

புதிய அதிபர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் அமைந்துள்ள சிங்களபௌத்த இனவெறி பாசிசக் கூட்டணி அரசு, இனப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண விழையும் என்று எதிர்பார்ப்பது கேழ்வரகில் நெய் வடிந்த கதைதான். இருப்பினும் அமெரிக்கா உள்ளிட்டு ஏகாதிபத்திய நாடுகளின் நிர்ப்பந்தத்தால், இலங்கை அரசும் புலிகளும் ஏற்றுக் கொண்டு இப்பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்துகின்றனர். அமைதித் தீர்வு காண விழைவதாகக் கூறிக் கொண்டாலும், சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து போர் தயாரிப்புகளுக்கே முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது அமலில் உள்ள போர் நிறுத்த உடன்பாட்டில் திருத்தம் செய்து தமது கையை மேலோங்கச் செய்ய முயற்சிக்கிறது.

 

மகிந்தா ராஜபக்சே பதவியேற்ற அடுத்த சில நாட்களிலேயே சிங்கள இராணுவம் ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடத்தியது. சுனாமி நிவாரணப் பணியாளர்கள் சிங்கள இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்டனர். இவற்றுக்குப் பதிலடியாக, புலிகள் கண்ணி வெடித் தாக்குதலை நடத்தி 80க்கும் மேற்பட்ட சிங்கள சிப்பாய்களைக் கொன்றொழித்தனர். இலங்கையில் மீண்டும் போர் மூளுமோ என்று அஞ்சி ஈழ மக்கள் தமிழகத்தை நோக்கி அகதிகளாக ஓடி வந்தனர்.

 

புலிகளை ஆத்திரமூட்டி மீண்டும் போரைத் திணித்து இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காணும் உத்தியுடன் பாசிச ராஜபக்சே அரசு செயல்படுகிறது. அதற்குப் பக்கபலமாக இந்தியாவும் அமெரிக்காவும் வெளிப்படையாகவே ஆதரவளித்து நிற்கின்றன. தமிழீழக் கோரிக்கையை முற்றாக நிராகரிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சே கடந்த டிசம்பர் இறுதியில் இந்தியாவுக்கு வந்தபோது, இலங்கையின் இராணுவத்தை வலுப்படுத்த போர்க் கருவிகளும் பயிற்சியும் தொடர்ந்து அளிக்கப்படும் என்று இந்திய அரசு உறுதியளித்துள்ளது. பன்னாட்டு பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக விடுதலைப் புலிகளைப் பட்டியலிட்டுள்ள அமெரிக்கா, ""இலங்கையில் போர் மூண்டால் நாங்கள் இராணுவ உதவி செய்து புலிகளை ஒடுக்குவோம்'' என்று தனது இலங்கைத் தூதர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ""தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு எதிரான சக்தி'' என்று தலைப்பிட்டு இந்து நாளேடு இந்திய அரசை உசுப்பிவிட்டு தலையங்கம் தீட்டுகிறது.

போர் நிறுத்தம் பேச்சு வார்த்தை அமைதித் தீர்வு ஆகிய வழிமுறைகளில் நம்பிக்கை வைத்துள்ள இலங்கை மக்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்து வரும் இச்சதிகளை முறியடிக்கும் வகையில், மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டியமைக்கும் முன்முயற்சியின்றி அரசியல் ரீதியில் புலிகள் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சாதிய பிராந்திய வேறுபாடுகளால் கருணா தலைமையிலான புலிகளின் விலகல், ஈழத்தில் உள்ள இதர ஜனநாயக சக்திகளை முடமாக்கியதால் அரசியல் போராட்டங்களைக் கட்டியமைக்க முடியாத அவல நிலை, மலையகத் தமிழருடன் ஐக்கியமற்ற நிலை, தெற்கே முஸ்லீம் தமிழருடன் இணக்கமற்ற சூழல், சிங்கள உழைக்கும் மக்களுடன் ஐக்கியப்பட்டு இனவெறி பாசிச கும்பலைத் தனிமைப்படுத்த முன்முயற்சியின்மை முதலானவற்றால் அரசியல் ரீதியில் புலிகள் முன்கை எடுக்கவோ, போராடவோ முடியாதபடி பின்னடைவுக்குள்ளாகி நிற்கின்றனர். தமது இராணுவ சாகசத்தாலும் ஏகபோக ஆதிக்கத்தாலும் சிங்கள இனவெறி பாசிஸ்டுகளை வீழ்த்திவிட முடியும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

 

இந்தியாவின் தெற்கேயுள்ள இலங்கையில் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இந்தியாவின் வடக்கேயுள்ள நேபாளத்தில் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஆனால், அங்கே நிலைமை வேறாக உள்ளது.

 

தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மற்ற கட்சிகள் வேலை செய்வது பற்றி மாவோயிஸ்டுகள் அஞ்சுவதில்லை. மன்னராட்சிக்கு எதிராக இதர ஜனநாயக சக்திகளுடன் கூட்டாகப் போராட்டங்களை நடத்த முதலில் அழைப்பு விடுத்தவர்களும் மாவோயிஸ்டுகள்தான். மேலும், ஐ.நா. மன்றத்தின் மனித உரிமை அமைப்புகளுக்கும் செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் வந்து தங்கி பார்வையிடவும், தமது கட்சிக் கிளைகளுடன் விவாதிக்கவும், தாம் சிறைப்படுத்தியுள்ள மன்னரது இராணுவத்துடன் பேசவும் எவ்விதத் தடையுமில்லை என்று அறைகூவல் விடுக்கின்றனர். தமது தவறுகளை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, மீண்டும் அத்தகைய தவறுகள் நிகழாதிருக்க உத்தரவாதம் தருவதன் மூலம் மாவோயிஸ்டுகள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். மாவோயிஸ்டுகளைப் புறக்கணிக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக இதர கட்சிகளின் அணிகளே அவர்களது நியாயமான போராட்டத்தையும் அரசியல் முடிவுகளையும் அங்கீகரித்து ஆதரிக்கின்றனர்.

 

இத்தகைய அரசியல் முன்முயற்சியும் அரசியல் மேலாண்மையும் புலிகளிடம் இல்லாததற்கு, அதன் சந்தர்ப்பவாத சித்தாந்தமும் பாசிசத் தலைமையுமே காரணமாகும். ஈழ விடுதலைக்கு சிங்கள பாசிச பேரினவாதிகள் மட்டுமின்றி, இந்திய துணை வல்லரசும் அமெரிக்க மேல்நிலை வல்லரசும் கூட எதிரிகளாக நிற்பதை யதார்த்த நிலைமை எடுப்பாக உரைக்கிறது. ஆனால், அமெரிக்க மேல்நிலை வல்லரசை எதிர்த்து நிற்காமல், அமெரிக்க ஆணைப்படி ஈழ விடுதலைக்குக் குழிபறிக்கும் இந்தியத் துணை வல்லரசை எதிர்த்து நிற்காமல், அவற்றின் நிழலில் நின்று கொண்டு, ஈழத்தமிழர்களை அடக்கி ஒடுக்கி வரும் சிங்கள இனவெறி பாசிச அரசை முறியடிக்க முடியாது. ஈழ விடுதலைக்கு உண்மையான ஆதரவு சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டாமல், புலிகளின் ஏகபோக பாசிசத் தலைமையால் ஈழ விடுதலையைச் சாதிக்க முடியாது என்பதை வரலாறு மீண்டுமொருமுறை நிரூபிக்கும்.


• மனோகரன்