பொறுக்கிகளுக்கேயுரிய வகையில் எல்லா புலியெதிர்ப்பு கோஸ்ட்டிகளும் மக்களின் முதுகில் குத்துகின்றனர். மக்களை நம்பி, அவர்களைச் சார்ந்து எந்த அரசியலும் இவர்கள் செய்வது கிடையாது. மாறாக ஆயுதம் ஏந்திய குண்டர்களையும், ரவுடிகளையும், கூலிப்படைகளையும் சார்ந்து நின்று தான், இவர்கள் தமக்கேற்ற ஒரு 'ஜனநாயகத்தைப்" பேசுகின்றனர்.

 

 பாசிசத்தையே 'ஜனநாயகமாக" காட்டி, அதை நியாயப்படுத்துகின்ற இழிநிலையில் நின்று அரசியல் வேஷம் போடுகின்றனர். கிழக்கு மக்கள், தலித், ஜனநாயகம் என்ற போர்வையில் எத்தனை எத்தனை வேஷங்கள்.

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சார்பாக நின்று, அவர்களுடன் சேர்ந்து போராடுவது கிடையாது. மாறாக யார் அந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றனரோ, அவர்களை 'தேசியத்தின்" பெயரில், 'ஜனநாயகத்தின்" பெயரில் நியாயப்படுத்துகின்றனர். புலியெதிர்ப்பு இப்படித்தான் 'ஜனநாயக" அரசியல் செய்கின்றது.

 

எப்போதும் புலியுடனான ஓப்பீட்டை முன்வைத்து, புலியெதிர்ப்பு கூட்டம் பாசிசத்துக்கு கம்பளம் விரிக்கின்றனர். இவர்கள் ஜனநாயகம் என்று கருதுவதோ, தேர்தலில் வாக்குப் போடுவது தான். இதன் மூலம் தமது புலியெதிர்ப்பு பிழைப்புவாதத்தையே, நியாயப்படுத்தி விட முனைகின்றனர்.

 

தேர்தலை 'ஜனநாயக"த்துக்கான ஒன்று என்று கூறுவது, மாபெரும் சதி. தேர்தல் மக்களுக்கு ஒரு விடிவையும், மக்களுக்கான தீர்வையும் தருவதாக கூறுவதே, கடைந்தெடுத்த அரசியல் பொறுக்கித்தனமாகும். தேர்தல் மூலம் மக்கள் தம் சொந்த விருப்பை தெரிவிப்பதாக கூறுவது, அரசியல் மோசடியாகும்.

 

இது இவர்கள் விரும்புவது போல், அனைத்து மக்களையும் செயலற்ற பொம்மைகளாக்குகின்றது. வளர்ப்பு மந்தைகள் எப்படி போடுவதை மட்டும் தின்கின்றதோ, அதேபோல் தான் மக்களை வாக்கு போடக் கோரும் 'ஜனநாயக" அறிவுரைகளும். இவர்கள் மக்களுக்கு வழிகாட்டுவது எனப்படுவது, மக்களின் சொந்த விடுதலை மீதானது அல்ல. மக்களை அடக்கியாண்டு தின்ன விரும்புகின்ற புல்லுருவிகளை, வாழவைக்கும் வழிவகைளைத் தான் இவர்கள் 'ஜனநாயகம்" என்கின்றனர்.

 

இப்படி தேர்தல் மூலம் மக்களை அடிமைப்படுத்தி கொழுக்க விரும்புகின்றவர்களின் நலன்களை பாதுகாக்கத் தான், புலியெதிர்ப்பு அரசியல் உதவுகின்றது. எந்த மக்கள் நலனும், இதன் பின் ஒரு துளியும் இருப்பதில்லை. இப்படி மக்களுக்கு எதிரான மனித விரோத சிந்தனை முறையே, படுபிற்போக்கானது. இதுவே புலியெதிர்ப்பின் பெயரில் அரங்கேறுகின்றது.

 

இந்த அரசியல் மோசடியை அரங்கேற்ற நிகழும் வன்முறையை, இவர்கள் நியாயப்படுத்தும் விதமோ பாசிசத்தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நின்று, அதை செய்தவர்களுக்கு எதிராக இவர்கள் போராடுவது கிடையாது. மாறாக அதைச் செய்தவனை நியாயப்படுத்துகின்ற, அதை ஆதரிக்கின்ற அரசியல் தான் புலியெதிர்ப்பின் மொத்த முதிர்வாகின்றது.

 

இப்படி புலிக்கு எதிராக கட்டமைக்கும் பாசிசத்தையே 'ஜனநாயகம்" என்கின்றனர். அண்மையில் கிழக்கு மக்களுக்கு எதிராக நடந்த தேர்தலை நியாயப்படுத்த முனைந்தவர்கள், அந்த பாசிசத்தை ஆதரித்த விதம் வெட்கக் கேடானது. அதை அவர்கள்

 

1. ஒரு நாளில் மாற்றம் ஏற்பட்டு விடாது.
2. ஒரு பாசிச அமைப்பில் இருந்து வந்தவர்கள்.
3. வன்முறை இடபெறல் என்பது ஆச்சரியமானதல்ல.
4. வன்முறையற்ற தேர்தலை நாம் எதிர்பார்க்க முடியாது.
5. கடந்தகால தேர்தல் வரலாறுகளில் வன்முறை இருந்துள்ளது.
6. ஒப்பீட்டளவில் வன்முறை குறைவு.
7. ஜனநாயகத்தை அமுல்படுத்த தேர்தல் அவசியம்
8. ஜனநாயக நடைமுறையை இது கொண்டு வந்துள்ளது

 

இப்படி ஆளுக்கொரு காரணத்தைக் கூறிக் கொண்டு, பாசிசத்தை 'ஜனநாயக"மாக காட்டி ஆதரிக்கின்றனர். அன்றும் மக்கள் விரோத தேசியத்தையும் இப்படித் தான் நியாயப்படுத்தி, அதை பாசிசமாக வளர்த்தவர்களும் இவர்கள் தான்.

 

ஒன்றை மட்டும் இவர்கள் மூடி மறைக்கின்றனர். வன்முறைகளில் ஈடுபடுகின்ற புலியல்லாத கூலிக் குழுக்களின் அரசியல் என்ன? அது மக்களுடன் கொண்டுள்ள அரசியல் உறவு என்ன? இதுவே தான் அந்த குழுக்களின் ஜனநாயக பண்பை, அறிதலுக்கான அடிப்படையாகும். இதையா புலியெதிர்ப்புக் கும்பல் தனது அரசியல் அளவுகோலாக கொண்டு கருத்துரைக்கின்றது.. இல்லை. மாறாக புலியுடனான ஒப்பீட்டையே அரசியல் அளவீடாக கொள்கின்றது. உண்மையில் இப்படி புலியெதிர்ப்பு அரசியல் என்பது, புலி ஒழிப்பை அடிப்படையாக கொள்கின்றதே ஒழிய, மக்கள் நலனை அது முன்னிறுத்துவதில்லை. அது இயல்பாகவே மக்களுக்கு எதிராக இருக்கின்றது.

 

இப்படி கிழக்கு மக்களுக்கு எதிரான வன்முறையை, புலியை முன்னிறுத்தி நியாயப்படுத்தினர். இந்த பாசிசக் குழுக்கள் கொண்டிருந்த மக்கள் விரோத அரசியலை, கேள்விகளின்றி பாதுகாத்தனர். மக்களுடன் நிற்பதற்கு பதில், மக்களின் முதன்மை எதிரியுடன் நின்றே குலைத்தனர். புலியை முன்னிறுத்தியபடி, அனைத்தையும் ஓப்பீட்டைக் கொண்டு நியாயப்படுத்தினர்.

 

இதை அம்பலப்படுத்தும் போது, இதைப் பேசுபவர்கள் யாழ்ப்பாணிகள், கம்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து இருந்து புரட்சி பேசுபவர்கள், புலிக்கு வக்காலத்து வாங்குபவர்கள் என்று பலவிதமாக கூறி, தமது மக்கள் விரோத அரசியலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். கிழக்கு மக்களுடன் நிற்காது, என்னடா கூலிக் கும்பலுடன் நின்று இதைக் கூறுகின்றீhகள்? அதை முதலில் சொல்லுங்கள். முதலில் மக்களுடன் நில்லுங்கள். அதை விட்டுவிட்டு அரசின் சொறி நாய்களுடன் சேர்ந்து நின்று, மக்களை அடிமைப்படுத்துவது தானோ 'ஜனநாயகம்'.

 

புலிகள் 'தேசியம்" பேசுவது போலவே, புலியெதிர்ப்பு கூட்டம் 'ஜனநாயகம்" பேசுகின்றனர். இவர்கள் பேசும் 'தேசிய"மாகட்டும், 'ஜனநாயக"மாகட்டும், அவை மக்களுடன் கொண்டுள்ள சமூக அரசியல் உறவு என்ன? எந்த பொறுக்கிகளும் இதற்கு பதிலளிப்பதில்லை.

 

மாறாக ஆயுதம் ஏந்திய பாசிச வடிவத்துக்கு பதில், தேர்தல் வடிவிலான பாசிசத்தை ஆதரிக்கின்றனர். எப்போதும் புலிகளை ஒப்பிடுவதன் மூலம், தமது சொந்த பாசிச அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இந்த புலியெதிர்ப்பு பாசிட்டுகளை, புலியை மிஞ்சிய கடைந்தெடுத்த பொறுக்கிகள் என்று கூறுவது தான் மிகச் சரியானது.

 

பி.இரயாகரன்
14.05.2008