Language Selection

03_2006.jpg

விருத்தாசலம் அருகில் உள்ள ஆலிச்சிக்குடி, க.இளமங்கலம் கிராமங்களின் விவசாயிகளுக்கு ஊருக்குத் தெற்கே, கருங்குழி காட்டோடைக்குத் தென்புறம் சுமார் 1000 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயிகள் இந்த நிலங்களில் நெல்லும் கரும்பும் பயிரிட்டிருந்தனர்.

 

 

இந்த ஆண்டு வந்த பெருவெள்ளத்தில் அழிந்ததுபோக எஞ்சிய பயிரை விவசாயிகள் அறுவடை செய்ய முனைந்தபோது, வனத்துறையினர் காட்டுப்பாதை வழியே விவசாயிகள் நிலங்களுக்குச் செல்லக்கூடாது எனத் தடுத்தனர்; மீறிச் சென்றால், மரம் கடத்தியதாக வழக்குப் போடுவோம் என்று மிரட்டினர். விவசாயிகளுக்குத் தங்கள் நிலங்களுக்குச் செல்ல வேறு வழியேதும் இல்லாததால் வனத்துறையினரின் மிரட்டலையும் மீறிச் சென்றனர்.

 

இத்தருணத்தில் இக்காட்டைப் பார்வையிட வந்த மாவட்ட வன அதிகாரியிடம் விவசாயிகள் இப்பிரச்சினையை முறையிட்டனர். மாவட்ட வன அதிகாரியோ, ""தங்கள் அலுவலர்கள் சொன்னது சரிதான், மீறிச் சென்றால் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்'' என்று மிரட்டியதோடு, 1.2.2006 முதல் அப்பாதையை முற்றாக மூடினார். இதனால் விளைச்சல், நிலத்திலேயே நாசமாகும் நிலை ஏற்பட்டது. சொற்ப விளைச்சலையும் இழந்து விடுவோமோ என்று அச்சத்தில் உழன்ற விவசாயிகளிடம் பேரத்தில் இறங்கியது மாவட்ட வன அதிகார வர்க்க கும்பல். ""எங்கள் உயரதிகாரிகள் காட்டைப் பார்வையிட வரும்போது, அவர்களுக்கு லாட்ஜ், சாப்பாடு, தண்ணி, பலானதெல்லாம் எங்கள் சம்பளத்தில் செலவு செய்ய முடியுமா?'' என்று பேரத்தை பச்சையாக வெளிப்படுத்தியது, வனத்துறை கும்பல்.

 

விவசாயிகள் இப்பகுதியில் இயங்கும் விவசாயிகள் விடுதலை முன்னணியிடம் முறையிட்டு, அதன் தலைமையில் கிராம கூட்டத்தைக் கூட்டினர்.

 

அதில், வனத்துறையின் அநீதியான செயலை எதிர்த்து போராட்டக்குழு அமைக்கப்பட்டது. அறுவடையைத் தடுத்து நிறுத்திய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், விவசாயிகளுக்குப் பாதுகாப்புத் தருமாறும் கோரியதோடு, 13.2.2006 அன்று பாரம்பரிய காட்டுப்பாதையை மீட்கும் போராட்ட அறிவிப்பும் குறிப்பிடப்பட்டு மாவட்ட சிவில் நிர்வாகத்துக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டன. வனத்துறையினரின் அநீதியை எதிர்த்து வீச்சான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

 

மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம், வனத்துறையின் பொய் வழக்கு மிரட்டல் மக்களிடமும் அரசு எந்திரத்திடமும் அம்பலப்படுத்தப்பட்டது. பணம் கேட்டு காட்டுப் பாதையை மறித்த வனத்துறையின் செயல் பகுதி முழுக்க சந்தி சிரித்தது. அதிலும் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் பெற்றுத் தருவதோடு, "மாமா' வேலையும் செய்யும் அலுவலர்களின் செயலை பிரசுரத்தில் வெளியிட்டதை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்தனர். காட்டுப்பாதையை மறிக்கும் தமது அடாவடிச் செயலை கைவிட்டு, பின்வாங்கி ஓடினர். போராடிய விவசாயிகளிடம் சமரசத்திற்குத் தூது விட்டனர். தெரிந்தவர்களிடத்திலெல்லாம் புலம்பித் திரிந்தனர்.

 

இவ்வாறு மாறிய, புதிய நிலைமைகளைப் பரிசீலிக்க மீண்டும் விவசாயிகளின் கூட்டம் கூட்டப்பட்டது. எதிர்பார்த்ததிற்கும் மேலாக வனத்துறையினரின் அடாவடிச் செயல்கள் அம்பலமாகி நாறுவதாலும், இதனால் போராட்டத்திற்கு முன்னரே கோரிக்கை நிறைவேறியதாலும், மீண்டும் பிரச்சினையின்றி அறுவடை தீவிரமாக நடைபெறுவதாலும் போராட்டம் நடத்துவது தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆயினும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு மைய அரசின் ஒப்புதல் மூலமே கிடைக்கும் என்பதால், இப்பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்குரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 

வி.வி.மு.வின் முறையான, போர்க்குணமான நடவடிக்கைகளின் மூலம் சில நாட்களிலேயே கிடைத்த இந்த வெற்றியால் அமைப்பின் மீதான விவசாயிகள் நம்பிக்கை மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் ஓட்டுக்கட்சிகளின் பிரதிநிதிகளும், அரசு எந்திரத்தின் கையாளாகச் செயல்படும் ஆலிச்சிக்குடி ஊராட்சி மன்றத் தலைவரும் விவசாயிகளிடம் அம்பலப்பட்டுப் போயினர்.

 

தகவல்:

விவசாயிகள் விடுதலை முன்னணி,

விருத்தாசலம் வட்டம்.