04_2006.gif

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி தூக்கு மேடையேறிய தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் எந்தக் காலனியாதிக்கத்தை முறியடிக்கவும் அடிமைத்தனத்தை ஒழித்துக் கட்டவும் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தார்களோ, அந்தக் காலனியாதிக்கம் இன்றும் புதிய வடிவில் தொடர்கிறது. அன்றைய காலனியாதிக்கத்தைவிட தற்போதைய மறுகாலனியாதிக்கம்; கொடூரமானது. தனியார்மயம்  தாராளமயம்  உலகமயம் என்ற பெயரில் வந்துள்ள ஏகாதிபத்தியக் கொள்ளையையும் மறுகாலனியாதிக்கத்தையும் வீழ்த்தவும் விடுதலைப் போருக்கு அணிதிரளவும் அறைகூவி மாவீரன் பகத்சிங்கின் 75வது நினைவுநாளில் (மார்ச் 23) கோக் மற்றும் பன்னாட்டு நிறுவனப் பொருட்களை எரிக்கும் போராட்டத்தை ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் அறிவித்தன.

 மிகவும் சதித்தனமானது

            ""காட்'' ஒப்பந்தம் கையெழுத்தானபோதே நாட்டை அடிமைப்படுத்தும் இத்துரோகத்தை எதிர்த்து முதல்குரல் கொடுத்து ரயில் மறியல் போராட்டம் நடத்திய இவ்வமைப்புகள், தொடர்ச்சியாக ஏகாதிபத்தியமறுகாலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக, தாமிரவருணியை உறிஞ்சும் அமெரிக்க கோக்கிற்கு எதிராகவும் தண்ணீர் தனியார்மயத்துக்கு எதிராகவும் தமிழகமெங்கும் மிக விரிவான அளவில் பிரச்சார இயக்கத்தையும் போராட்டத்தையும் நடத்திய இவ்வமைப்புகள், அதன் தொடர்ச்சியாக இப்போராட்டத்தை அறிவித்து கடந்த மூன்று மாதங்களாக காலனியாதிக்க எதிர்ப்பு அரசியல் பிரச்சாரத்தையும் நாட்டுப்பற்றுணர்வையும் உழைக்கும் மக்களிடம் வீச்சாகக் கொண்டு சென்றன.

            இப்போராட்டத்தை அறிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் சுவரெழுத்துக்கள், பல்லாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்கள், தட்டிகள், சுவரொட்டிகள், செஞ்சட்டையில் ""தாமிரவருணி எங்கள் ஆறு! அமெரிக்க கோக்கே வெளியேறு!'' என்ற முழக்கத்துடன் அந்நியப் பொருட்கள் எரிப்புப் போராட்டத்தை விளக்கி கிராமங்கள், நகரங்கள், சந்தைகள், ஆலைகள், கல்லூரிகள், பேருந்துகள், ரயில்கள் என வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் இவ்வமைப்பினர் தொடர்ச்சியாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். நாட்டுப்பற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலும் போராட்ட விதையாக தமிழக மக்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்தது.

            கடந்த பிப்ரவரி 26ஆம் தேதியன்று நெல்லை  தாழையூத்தில் கோக் எதிர்ப்பு மற்றும் தண்ணீர் தனியார்மய எதிர்ப்பு கருத்தரங்கமும் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது. நெல்லையில் கடந்த ஆண்டு செப்.12 அன்று இப்புரட்சிகர அமைப்புகள் அமெரிக்க கோக்கிற்கு எதிராக நடத்திய பேரணி, ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, கோக் எதிர்ப்பு பிரச்சாரம் அனைத்திற்கும் தடைவிதித்து கோக்கின் அடியாளாகவே செயல்பட்டது நெல்லை போலீசு. போலீசின் அச்சுறுத்தல்களையும் கெடுபிடிகளையும் மீறி நெல்லை  கங்கை கொண்டான் பகுதிவாழ் மக்கள் பங்கேற்ற இக்கருத்தரங்கில், கோக்கினால் நாசமாக்கப்பட்ட கேரளத்தின் பிளாச்சிமடாவைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பாதுகாப்புக் குழு தோழர் தங்கமணி, பிளாச்சிமடா கோக் எதிர்ப்புப் போராட்டக்குழு நிறுவனர் விளயோடி வேணுகோபாலன் ஆகியோர் அமெரிக்க மேலாதிக்கத்தின் அங்கமான கோக்கை இந்தியாவிலிருந்தும் உலகிலிருந்தும் விரட்ட வேண்டிய அவசியத்தையும் கேரள மக்களின் போராட்ட அனுபவங்களையும் தமது சிறப்புரையில் குறிப்பிட்டனர். நெல்லை மாவட்ட வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் முருகேசன், கோக் ஆலை அமைந்துள்ள மானூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் செல்வி விஜயா ஆகியோர் பங்கேற்று உரையாற்றிய இக்கருத்தரங்கமும் ஓவியக் கண்காட்சியும் கோக் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டியடிக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கு அறைகூவுவதாக அமைந்தன.

            நெல்லையைத் தொடர்ந்து சென்னை, வேலூர், ஆம்பூர், உளுந்தூர்பேட்டை, கோவை, திருச்சி, ஓசூர் முதலான இடங்களில் கோக் மற்றும் பன்னாட்டு நிறுனப் பொருட்கள் எரிப்புப் போராட்ட விளக்க கருத்தரங்குகள் நடைபெற்றன. மருத்துவர்கள், தொழிற் சங்க முன்னணியாளர்கள், வழக்குரைஞர்கள், வணிகர் சங்கப் பேரவையின் பிரமுகர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றிய கருத்தரங்குகளும் அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சியும் பார்வையாளர்களை போராட அறைகூவி அழைப்பதாக அமைந்தன.

            ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி  தியாகத் தோழர் பகத்சிங் 75வது நினைவு நாளான மார்ச்ச 23ஆம் நாளன்று இப்புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் பேரணி  ஆர்ப்பாட்டத்தோடு கோக் மற்றும் பன்னாட்டு நிறுவனப் பொருட்கள் எரிப்புப் போராட்டத்துக்கு முறையாக அனுமதி பெற்றிருந்த போதிலும் திடீரென 23ஆம் தேதியன்று இப்போராட்டத்துக்கு தமிழகமெங்கும் தடைவிதித்து, தன்னை ஏகாதிபத்திய அடியாள் என்பதை நிரூபித்துக் காட்டியது, தமிழக போலீசு. பல பகுதிகளில் முன்னணித் தோழர்கள் முதல் நாளே கைது செய்யப்பட்டனர். அனுமதி மறுப்பினால் பல பகுதிகளில் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்த இயலாத நிலையில், தடையை மீறி இப்போராட்டம் பல்வேறு பகுதிகளில் எழுச்சியோடு நடந்தது. வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த தோழர் பகத்சிங்கின் படங்களை ஏந்தி, செங்கொடிகள் விண்ணில் உயர, அத்தியாகத் தோழருக்கு வீரவணக்கம் செலுத்தி, அவர் காட்டிய வழியில் ஒரு தீரமிக்க சுதந்திரப் போருக்கு நாட்டு மக்கள் மீண்டும் கிளர்ந்தெழ அறைகூவி அழைப்பதாக இப்போராட்டம் நடந்தது.

            நாமக்கல் நகரில் போலீசு தடையை மீறி, பேருந்து நிலைய வாயிலில் விண்ணதிர முழக்கங்களுடன், மாலை 6 மணியளவில் பன்னாட்டு நிறுவனப் பொருட்கள் எரிக்கப்பட்டன. முன்னணித் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ஓசூரில் தடையை மீறி லேலண்டு ஆலை முன்பாக மாலை 5 மணியளவில் அன்னியப் பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் திரளான தொழிலாளர்களின் ஆதரவோடு நடந்தது.

            கோவில்பட்டியில், போலீசு விதித்த திடீர் தடையை மீறி பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம், நூற்றுக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்து, உலக வர்த்தகக் கழக ஆட்சியை வீழத்த அறைகூவுவதாக அமைந்தது. சிவகங்கையில், அரண்மனை வாயிலருகே தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில், பெண்கள்குழந்தைகளுடன் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 130 தோழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மதுரை, உசிலம்பட்டி, திருச்சி, தஞ்சை நகரங்களில் ஆர்ப்பாட்டத்திற்காக தோழர்கள் அணிதிரளும்போதே கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூரில், 5 அடி உயரத்துக்கு கோக் பாட்டில் உருவப் பொம்மையுடன் முழக்கமிட்டபடியே ஊர்வலமாக வந்த தோழர்களும் போராட்டத்தில் பங்கேற்க, கிருஷ்ணகிரி  வேலூர் மாவட்டங்களிலிருந்து அணிஅணியாகத் திரண்டு வந்த தோழர்களும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

            ஏகாதிபத்திய கைக்கூலி மன்மோகன்சிங் ஆட்சியில் நாடு வேகவேகமாக அடிமைப்படுத்தப்பட்டு வரும் சூழலில், இப்போராட்டம் மேலும் முக்கியத்துவம் பெற்றதோடு உழைக்கும் மக்களிடம் புதிய நம்பிக்கையை ஊட்டுவதாகவும் அமைந்தது. இடதுவலது கம்யூனிஸ்டு கட்சிகளிலுள்ள மூத்த தோழர்கள் பலர், ""இதுதான் உண்மையான, புரட்சிகர போராட்டம்; நீங்கள்தான் உண்மையான புரட்சியாளர்கள்'' என்று போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களைக் கட்டித் தழுவி வாழ்த்தினர். இப்போராட்டத்தை விளக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்களைப் பாராட்டி, சென்ற இடமெல்லாம் உழைக்கும் மக்கள் உணவும் தேநீரும் நன்கொடையும் அளித்து ஆதரித்தனர்.

     தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் கோக் மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பொருட்களை எரிக்கும் இப்போராட்டத்தை நடத்துவது முதன்முறையல்ல. ஏற்கெனவே 2001ஆம் ஆண்டில் இதே போராட்டத்தை விரிவான பிரச்சாரத்துடன் இவ்வமைப்புகள் நடத்தியபோது, பல பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். இப்போது மீண்டும் அதே போராட்டத்தை நடத்தும்போதும் தடை விதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பது உலக வர்த்தகக் கழகத்தின் நாட்டாமை; நாடாள்வதோ பன்னாட்டுக் கம்பெனிகள் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

 

         ஆனால், நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளால் மூட்டப்பட்டுள்ள இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புத் தீயை கைதுகள்தடைகளால் ஒருக்காலும் அணைத்துவிட முடியாது. இது சுதந்திரப் போராட்டத்தீ! அது காட்டுத் தீயாக நாடெங்கும் பற்றிப் படர்ந்து மறுகாலனியாதிக்கத்தைச் சுட்டுப் பொசுக்கி சாம்பலாக்காமல் ஓயாது.

 பு.ஜ. செய்தியாளர்கள்.