Language Selection

04_2006.gif

"ஜார்ஜ் புஷ்ஷை அமெரிக்காவின் மகாராஜாவாகவே கருதி உபசரித்தது இந்தியா'' என்று புஷ்ஷின் இந்திய வருகையைப் பற்றி எழுதியது ""நியூயார்க் டைம்ஸ்'' நாளேடு. புஷ் மகாராஜா என்றால் குறுநில மன்னன் அல்லது பாளையக்காரன் யார்? அது மன்மோகன் சிங்தான் என்பதை விளக்கத் தேவையில்லை. முன்னாள் உலக வங்கி அதிகாரியான மன்மோகன் சிங், தன்னுடைய எசமானிடம் கூனிக் குறுகிக் குழைந்து கும்பிடு போட்டுப் பல்லிளித்த காட்சியை நாடே தொலைக்காட்சியில் பார்த்தது. சும்மா ஒரு தோரணைக்காகக் கூட "தான் ஒரு நாட்டின் பிரதமர்' என்பதைக் காட்டிக் கொள்ளாமல்,

 மிகவும் இயல்பாக, ஒரு டவாலியைப் போல நடந்து கொண்டார் மன்மோகன். இந்தியாவும் இனி அமெரிக்க வல்லரசின் டவாலிதான் என்ற உண்மையை புஷ் வருகையின் போது கையெழுத்திடப்பட்ட அணுஆயுத ஒப்பந்தம் தெளிவாக நிரூபிக்கிறது.

            ஆனால், இந்தியா ஒரு அணு ஆயுத வல்லரசு என்பதை ஒப்புக் கொண்டு, கையெழுத்து போட வேண்டிய நிலைமை புஷ்ஷûக்கு ஏற்பட்டு விட்டதைப் போலவும், இந்தியா வல்லரசாகி வருகிறது என்ற உண்மைக்கு இது இன்னொரு சான்று என்பதாகவும் பிரச்சாரம் செய்கிறது காங்கிரசு அரசு. ஊடகங்களும் இந்தப் பொய்யை வழிமொழிகின்றன. எடுத்துக்காட்டாக, இவ்வொப்பந்தம் தொடர்பாக ""தினமணி'' நாளேடு வெளியிட்டுள்ள செய்திகள் மற்றும் தலையங்கத்தின் சாரம் பின்வருமாறு அமைந்துள்ளது.

            ""இந்தியா ஒரு அணு வல்லரசு என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுவிட்டது. அணு உலைகளில் சிவில் பயன்பாட்டுக்கானவை எவை, இராணுவப் பயன்பாட்டுக்கானவை எவையென்பதை இந்தியாதான் தீர்மானிக்கும். 14 சிவில் பயன்பாட்டு உலைகளை சோதனைக்குத் திறந்து விட்டிருப்பதால், இனி அணுசக்தி உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கியாக வேண்டும். தனது சொந்த தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியா உருவாக்கியிருக்கும் அதிவேக ஈனுலைகள் சோதனைக்குத் திறந்து விடப்பட மாட்டாது. இந்தியா அணுகுண்டு தயாரிக்க எந்தத் தடையும் இல்லை. அணு உலைகளை இனி இறக்குமதி செய்ய முடியுமென்பதால், இந்தியாவின் மின் உற்பத்தி பன்மடங்கு பெருகும்.''

 

            இந்தக் கூற்றுகள் அனைத்துமே பொய் என்பதையும் ஒப்பந்தத்தின் உண்மையான பின்னணியையும் சுருக்கமாகக் காண்போம்.

            இந்தியாவின் மின்சக்தித் தேவையை ஈடு செய்வதற்காக இந்திய அரசால் முன்மொழியப்பட்டதல்ல இந்த ஒப்பந்தம். ஈரானிடமிருந்து குழாய் மூலம் எரிவாயு பெறும் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட வேண்டுமென்றும், அதற்கு மாற்றாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளலாமென்றும், மார்ச் 2005இல் இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் கன்டலிசா ரைஸ் போட்ட உத்திரவின் விளைவுதான் மன்மோகன் அரசின் இந்த "அணுசக்திக் காதல்'.

 

               ஈரான்  பாகிஸ்தான்  இந்தியா  ரசியா  சீனா  மத்திய ஆசிய நாடுகளில் தொடங்கி தென்கிழக்கு ஆசியா வரையிலான அனைத்து நாடுகளும் எரிவாயுக் குழாய்களால் இணைக்கப்பட்டால் ஆசியா ஒரு சுயேச்சையான எரிவாயுச் சந்தையாக மாறும். எண்ணெய்  எரிவாயுச் சந்தையில் அமெரிக்க மேலாதிக்கம் ஆட்டம் காணும். எரிவாயுக் குழாய் இணைப்பின் மூலம் தவிர்க்கவியலாமல் ஏற்படும் அரசியல் ஒருங்கிணைவு, அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கத் திட்டத்திற்குத் தடையாக அமையும். ஈரானை ஆக்கிரமிக்கும் அமெரிக்க திட்டத்துக்கும் அது தடையை ஏற்படுத்தும் என்பன போன்ற காரணங்களால்தான் இந்த ஒப்பந்தத்தைத் திணிக்கிறது புஷ் அரசு.

            பெரும் முதலீட்டைக் கோருபவையும், அபாயங்கள் நிறைந்தவையுமான அணு மின் நிலையங்களை அமெரிக்க முதலாளிகளால் கடந்த 15 ஆண்டு காலமாக யாருக்கும் விற்க முடியவில்லை. அவற்றை இந்தியாவின் தலையில் கட்டுவதன் மூலம் கொள்ளை லாபமடிக்க இருக்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள்.

            விலை போகாத சரக்கை தலையில் கட்டும் வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்குவதுதான் வழக்கம். அமெரிக்காவோ அடுக்கடுக்காக நிபந்தனை விதிக்கிறது. யுரேனியத்தின் கழிவு, அணுகுண்டு செய்யப் பயன்படும் என்பதால் எல்லா அணுமின் நிலையங்களையும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறது புஷ் அரசு.

            உலகைப் பல நூறு முறை அழிப்பதற்குப் போதுமான அளவிற்கு அணுகுண்டுகளைத் தயாரித்து வைத்திருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள், மற்ற நாடுகளை மேலாதிக்கம் செய்வதற்காக உருவாக்கிய "அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்'  (Nககூ) எனும் ஒப்பந்தத்தில் இதுநாள் வரை இந்தியா கையெழுத்திடவில்லை என்பதுடன் அதனை எதிர்த்தும் வந்தது என்பதே வரலாறு.

            இந்திராவின் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட பொக்ரான் அணுவெடி சோதனையைத் தொடர்ந்து தாராப்பூர் அணுமின் நிலையத்துக்கான யுரேனியம் விற்பனையை அமெரிக்கா மறுத்தது. பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது அணுவெடி சோதனையைத் தொடர்ந்து அமெரிக்காவும் மேலை நாடுகளும் விதித்த பொருளாதாரத் தடை போன்ற நடவடிக்கைகள் வாசகர்கள் அறிந்ததே.

            மற்றெல்லா அரசியல் பொருளாதாரக் கொள்கைகளிலும் ஏகாதிபத்திய அடிமைகளாக நடந்து கொண்ட போதிலும், பாகிஸ்தானுக்கு எதிரான தேசிய வெறியைத் தூண்டுவதற்கும் தெற்காசியப் பகுதியில் ஒரு துணை வல்லரசாகத் தன்னை நிலைநாட்டிக் கொள்வதற்கும் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு அணு ஆயுதம் தேவைப்பட்டது. இந்தியாவின் யுரேனியம் இருப்பு குறைவென்பதால் தோரியத்திலிருந்து அணுமின்சக்தி தயாரிக்கும் ஆய்வும் ஹோமி பாபாவின் காலத்திலேயே துவங்கப்பட்டது. இன்று தோரியம் ஆய்வில் இந்தியா உலகிலேயே முதல் நிலை நோக்கி முன்னேறி வருவதாகக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். நம்முடைய சொந்த யுரேனியம் இருப்புகளைக் கொண்டே 2020க்குள் 10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியுமென்றும், 2040க்குள் தோரியத்தைக் கொண்டு ஆண்டுக்கு ஒரு லட்சம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யவியலும் என்றும் கூறுகிறது இந்திய அணுசக்தித் துறையின் அறிக்கை.

            இவ்வாறு இந்திய அணுசக்தித் துறையில் ஏற்பட்ட சுயசார்பான அறிவியல் முன்னேற்றம் அனைத்தையும் ஒரு நொடியில் அமெரிக்காவுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது உளவாளி மன்மோகன் சிங் அரசு. தன்னுடைய துரோகத்தை மறைக்க அடுக்கடுக்கான பொய்களைக் கூசாமல் நாடாளுமன்றத்திலேயே அவிழ்த்து விடுகிறார் மன்மோகன் சிங்.

            ""இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டுவிட்டது. எனவே, அவர்களுக்கு உள்ள உரிமை அனைத்தும் நமக்கும் உண்டு'' என்பது மன்மோகன் அவிழ்த்துவிட்ட முதல் பொய். சொல்லி வாய் மூடுமுன்னே அதை மறுத்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை இணைச்செயலர் பர்ன்ஸ். ""அணு தொழில்நுட்பத்தை வளர்த்து வரும் நாடு இந்தியா. அவ்வளவுதான். மற்றபடி, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற நாடுகளைப் போலத்தான் இந்தியாவும் கருதப்படும்'' என்று அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு விளக்கமளித்தார்.

            ""இந்தியாவில் உள்ள அணு உலைகளில் எவை மின்சாரத் தயாரிப்புக்கானவை  எவை ராணுவத் தேவைக்கானவை, எதை சோதனைக்குத் திறந்து விடலாம்  எதைத் திறந்து விடக்கூடாது என்பதை நாம்தான் தீர்மானிப்போம். வேறு யாரும் நமக்கு ஆணையிட முடியாது'' என்று நாடாளுமன்றத்தில் சவடால் அடித்தார் மன்மோகன். ""சிவில்  இராணுவ பிரிவினை செய்து இந்திய அரசு கொடுத்துள்ள பட்டியலை ஏற்க முடியாது'' என்று அமெரிக்க தூதர் முல்போர்டு, மன்மோகனின் முகத்திலடித்தார். மீண்டும் ஒரு பட்டியல் தயாரானது. அதையும் அமெரிக்கா நிராகரித்தது. பிறகு, மூன்றாவதாகத் தயாரிக்கப்பட்ட பட்டியலைத்தான் புஷ் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால், இதையும் அமெரிக்க நாடாளுமன்றம் இன்னும் ஏற்கவில்லை.

            ""இந்திய விஞ்ஞானிகளால் சயசார்பாக உருவாக்கப்பட்ட அதிவேக ஈனுலைகளை அமெரிக்க சோதனைக்குத் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை'' என்று வீரம் பேசினார் மன்மோகன். ""அது பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது'' என்று இப்போது மழுப்புகிறார்.

             ""14 போனாலென்ன, 8 உலைகள் நம் கைவசமிருக்கிறதே'' என்று ஜம்பமடிக்கிறது மன்மோகன் அரசு. ""அணு சக்தி ஆய்வென்பது அடிப்படையில் ஒன்றுதான். சிவில்இராணுவப் பிரிவினைகளைத் தாண்டி இனி எல்லாவற்றிற்குள்ளும் அமெரிக்கா நுழைந்துவிடும்'' என்கிறார்கள் இந்திய விஞ்ஞானிகள். ஈராக்கில் நடந்ததும் ஈரானில் நடந்து கொண்டிருப்பதும் அதுதான்.

            ""14 அணு உலைகளைத் திறந்துவிட்டதன் மூலம் ஆயுத உற்பத்திக்குத் தேவையான 65% டிரைடியத்தை இழந்திருக்கிறோம். சைரஸ் என்ற அணுஉலையை மூட ஒப்புக் கொண்டதன் மூலம் ஆயுத உற்பத்திக்குத் தேவையான 35% புளுட்டோனியத்தை இழந்துவிட்டோம். இராணுவ உற்பத்திக்குத் தேவையான கழிவுகளை ஒப்படைத்துவிடுவது (ஊடிண்ண்டிடூஞு ட்ச்tஞுணூடிச்டூ ஞிதt ணிஞூஞூ கூணூஞுச்tதூ) என்ற ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டிருப்பதால் இனி அணு ஆயுதம் தயாரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த ஆய்வுக்கென்றே ஒதுக்கப்பட்ட "துருவா' என்ற உலையும் போய்விட்டது. இதுகாறும் இராணுவ இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த நமது அணுசக்தித் திறன் குறித்த விவரங்கள் அனைத்தும் இப்போது அமெரிக்காவின் கைக்கு மாறிவிட்டன. ஆய்வகங்கள், அணு உலைகள், தொழில்நுட்பங்கள் என்பவை மட்டுமல்ல; அணு விஞ்ஞானிகளின் பட்டியலும் இப்போது அமெரிக்காவின் கைக்குச் சென்றுவிடும். அணு ஆயுதம் தயாரிப்பதற்கான நமது உரிமையை நிரந்தரமாக அடகு வைத்தாகிவிட்டது'' என்கிறார் முன்னாள் தேசியப் பாதுகாப்பு (துணை) ஆலோசகர், சதிஷ் சந்திரா.

            அணு விஞ்ஞானிகள் அனைவரது எதிர்ப்பையும் மீறி இப்படியொரு அவமானகரமான துரோக ஒப்பந்தத்தில் அவசரமாகக கையெழுத்திட வேண்டிய அவசியமென்ன? ""தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளுக்கும், கட்டி முடிக்கப்படவிருக்கும் அணு உலைகளுக்கும் தேவையான யுரேனியத்தைப் பெறுவதற்கும் இந்தியாவின் அணுசக்தித் தனிமைப்படல் நிலையத்தை (Nதஞிடூஞுச்ணூ டிண்ணிடூச்tடிணிண) முடிவுக்குக் கொண்டுவரவும் இதைத் தவிர வேறு வழியில்லை'' என்கிறார் மன்மோகன். ""இது பொய். இந்தியாவில் கிடைக்கும் யுரேனியத்தை வெட்டி எடுப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை 90களிலேயே ரத்து செய்தவர் அன்று நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங்தான். அதன் விளைவாகத் தோன்றியுள்ள தற்காலிக நெருக்கடியே இது'' என்கிறார் சதிஷ் சந்திரா.

            இவ்வொப்பந்தத்தின் விளைவாக இந்திய அணு உலைகளுக்கு வற்றாத ஜீவ நதியைப் போல யுரேனியம் பாய இருப்பதாக மன்மோகன் கூறுவது மிகப் பெரிய பித்தலாட்டம். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக இந்திய அணு உலைகளையும், ஆய்வுகளையும் சோதனைக்குத் திறந்து விடுவதாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியிடம் ஒப்புக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தை பெறுவதற்கு, இந்த ஏஜென்சியின் சிபாரிசுடன்தான் யுரேனியம் விற்கும் நாடுகளை இந்தியா அணுக வேண்டும். அவ்வாறு இந்த ஏஜென்சியை அணுகுவதற்கே கூட அமெரிக்காவின் ஒப்புதலை இந்தியா பெற வேண்டும் என்று கூறுகிறது தற்போதைய ஒப்பந்தம்.

            அதாவது, இனி அமெரிக்காவின் ஒப்புதலின்றி எந்த நாட்டிடமிருந்தும் இந்தியா யுரேனியத்தைப் பெற இயலாது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபின் ""தாராப்பூர் அணு உலைக்கு ரசியா யுரேனியம் வழங்கக் கூடாது'' என அமெரிக்கா ஆட்சேபித்ததும், ஆஸ்திரேலியப் பிரதமர் இந்தியாவுக்கு யுரேனியம் தர மறுத்ததும் இந்த அடிப்படையில்தான். அமெரிக்காவின் அணுஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் ஒரு சிறப்பு விதிவிலக்கு (ஙிச்டிதிஞுணூ) ஏற்படுத்தி இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவதா என்பதை அமெரிக்க அதிபர் ஆண்டுதோறும் முடிவு செய்வது'' என்ற அடிப்படையில்தான் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. இனி இந்தியாவின் அணு உலைகள் இயங்க வேண்டுமென்றால், ஆண்டுதோறும் அமெரிக்காவிடம் இந்தியா நன்னடத்தைச் சான்றிதழ் பெற்றாக வேண்டும். இனி அமெரிக்காவிடம் வாங்கவிருக்கும் அணு உலைகளுக்கு மட்டுமல்ல, ஏற்கெனவே சொந்தத் தொழில்நுட்பத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உலைகளுக்கும் இதுதான் கதி.

            அதாவது, நிபந்தனையற்ற முறையில் தனது அணுசக்தி நிலையங்களைத் திறந்து விட சர்வதேச அணுசக்தி ஏஜென்சியிடம் இந்தியா சட்டபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்காவோ, நிபந்தனைகளுக்கு உட்பட்டு யுரேனியமும் தொழில்நுட்பமும் வழங்க இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்துள்ளது.

            இவ்வொப்பந்தத்தைத் தொடர்ந்து 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 35,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அணு உலைகளை அமெரிக்க முதலாளிகளிடம் வாங்கப் போகிறது இந்தியா. ""எனவே, அமெரிக்காவின் அரசியல், இராணுவ நடவடிக்கைகளை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், நம் நாட்டின் மின்சார உற்பத்தியையே சீர்குலைக்க அமெரிக்காவால் இனி முடியும்'' என்கிறார் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர். ஏ.கோபாலகிருஷ்ணன். இது கற்பனையல்ல; பொக்ரான் சோதனையைத் தொடர்ந்து அமெரிக்கா யுரேனியம் வழங்க மறுத்துவிட்டதால், ரசியா, சீனா, பிரான்சு ஆகிய நாடுகளிடமிருந்துதான் இந்தியா யுரேனியத்தை இறக்குமதி செய்து வருகிறது.

            அது மட்டுமல்ல, அணுமின் உற்பத்தியில் தனியார் முதலாளிகள் அனுமதிக்கப்படும் வாய்ப்பையும் இந்த ஒப்பந்தம் வழங்குகிறது என்பதால் ரத்தன் டாடா மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். தங்களுடைய லாபவெறிக்காக ஆலைக் கழிவுகளைக் கூட சுத்திகரிக்காமல் நீர்நிலைகளில் விடும் முதலாளிகள், அணுமின் நிலையம் நடத்த அனுமதிக்கப்பட்டால் அதன் விளைவுகள் எப்படியிருக்கும்? எண்ணிப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகிறது.

            இந்திய அணு விஞ்ஞானிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், வல்லுநர்கள் போன்ற அனைவரது எதிர்ப்புகளையும் மீறி நாட்டின் மீது இந்த ஒப்பந்தத்தை மன்மோகன் கும்பல் திணிக்கக் காரணமாக இருக்கும் இரகசியம் என்ன? அமெரிக்க அரசின் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ராபர்ட் ஜோசப் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அளித்த பதிலில் இதற்கான விளக்கம் இருக்கிறது. ""மேலும் பல நிபந்தனைகளை விதிப்பதைவிட, இந்த ஒப்பந்ததில் இந்தியாவைப் பிணைத்துவிட்டு, அதன்பின் இந்திய  அமெரிக்க இராணுவ உறவு முன்னேறும் போக்கில் நமக்கு வேண்டியதை நாம் சாதித்துக் கொள்ளலாம்.''

 

            இதுதான் இரகசியம். நாடாளுமன்றத்திற்கே தெரியாமல், 2005 ஜூன் மாதம் பிரணாப் முகர்ஜி அமெரிக்காவில் கையெழுத்திட்ட பத்தாண்டுகளுக்கான இராணுவ ஒப்பந்தமும், ஜூலையில் மன்மோகன் புஷ்ஷûடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையும்தான் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படைகள். ""உலகெங்கும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா நடத்தும் போர்களில் இந்திய இராணுவத்தையும் ஈடுபடுத்துவது, அமெரிக்காவின் கடல் வழி ஆதிக்கத்திற்கு ஏவல் செய்ய இந்தியக் கடற்படையை அனுப்புவது, பயங்கரவாத எதிர்ப்பு  பேரழிவு ஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கூட்டணி, உளவுத்துறைக் கூட்டுச் செயல்பாடு, அமெரிக்க இராணுவம் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்வது'' என விரிந்து செல்கிறது அந்த சதித் திட்டம்.

            ஆசியாவுக்கான அமெரிக்க அடியாள் என்ற பதவியில நியமனம் பெற்றுவிட்டது இந்திய அரசு. ""அடிமைக்கு எதற்கய்யா அணு ஆயுதம்?'' என்பதுதான் டவாலி மன்மோகன் சிங் கேட்க விரும்பும் கேள்வி.

மு சூரியன்