கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொண்டு பத்திரிகைகள் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளிக்கும் "தீவிரவாதி'களைப் பார்த்திருக்கிறோம். அவர்களைப் போல, அடையாளம் தெரியாதபடி தமது முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு, போராடும் சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பேட்டியளிப்பதைக் கண்டு தமிழகமே அதிர்ச்சியடைந்தது.
""கல்லூரி நிர்வாகம் "பறக்கும்படை' என்ற பெயரில் ஒரு குண்டர் படையை வைத்திருக்கிறது. அவர்கள் மாணவர்களைக் கண்காணிப்பார்கள். போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கண்டுபிடித்து "டார்க் ரூம்' எனப்படும் கொட்டடியில் அடைத்து வைத்து ஆபாச வசவுகளுடன் காட்டுமிராண்டித்தனமாக அடிப்பார்கள். போராடிய குற்றத்திற்காக இதுவரை 80 மாணவர்களை நிர்வாகம் "சஸ்பெண்ட்' செய்துள்ளது. இத்தகைய பழிவாங்கலிலிருந்து தப்பிக்கவும் போராட்டத்தைத் தொடரவும் நாங்கள் எங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறோம்'' என்று பேட்டியளித்தார்கள், போராடும் மாணவர்கள். தனியார் சுயநிதிக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மோசடிபகற் கொள்ளையையும் கிரிமினல் கொட்டங்களையும் மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டது, கடந்த இரு மாதங்களாகத் தொடரும் மாணவர் போராட்டம்.
நாடு முழுவதும் பொறியியல் கல்வியை முறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ), கடந்த பிப்ரவரியில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. இக்கவுன்சிலின் அனுமதியின்றி பொறியியல் கல்வி வகுப்புகளைத் தொடங்கக் கூடாது; பொறியியல் பாடப் பிரிவுகளுக்கு கட்டாயம் கவுன்சிலின் அங்கீகாரம் பெறவேண்டும் என்பதுதான் அந்த அறிக்கையின் சாரம். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும் கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெறாமல் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் நடத்தும் படிப்புகள் செல்லாது என்றார். கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து நிகர்நிலைப் பல்கலைக் கழக முதலாளிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகளைத் தொடுத்தனர்.
இதற்கிடையே தங்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட அச்சத்தில், இத்தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, மழுப்பலான திமிர்த்தனமான பதில்தான் கிடைத்தது. ""நாங்கள் கொடுக்கும் சான்றிதழே போதுமானது. தொழில்நுட்பக் கவுன்சிலிடம் அங்கீகாரம் பெறத் தேவையே இல்லை. வீண் வதந்தியால் உங்கள் எதிர்காலத்தைப் பாழடித்துக் கொள்ளாதீர்கள்'' என்று உபதேசம் செய்து நிர்வாகம் எச்சரித்தது. ஆனால், அண்மையில் சென்னையில் நடந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்ற பன்னாட்டுஉள்நாட்டு தொழில் நிறுவனங்கள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழ்கள் தரமற்றவை என்று நிராகரித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஹெச்.சி.எல். நிறுவனமும் இத்தகைய தரமற்ற சான்றிதழ்களைக் கொண்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட தனது ஊழியர்களை வெளியேற்றியுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலும் தன்னிடம் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் எவையெவை என்பதை இணையதளத்தின் மூலம் பகிரங்கமாக வெளியிட்டது.
இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டி தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியும் முறையான விளக்கம் தரப்படாததால், லட்ச லட்சமாகக் கொட்டிக் கொடுத்து படிக்கும் மாணவர்கள் தமது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட பீதியில், வேறு வழியின்றி போராட்டத்தில் குதித்தனர். எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தொடங்கிய போராட்டம், ஜேப்பியாரின் சத்தியபாமா, எம்.ஜி.ஆர். பாரத் முதலான பல்கலைக் கழகங்களிலும், ஏன், காஞ்சி மட சங்கராச்சாரியின் சந்திரசேகரரேந்திர விசுவமகா வித்தியாலயாவிலும் காட்டுத் தீயாகப் பற்றிப் படர்ந்தது. வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என போராட்டங்கள் தொடர்ந்தன. பீதியடைந்த இப்பல்கலைக் கழகங்களின் முதலாளிகள், குண்டர்களை வைத்து போராடும் மாணவர்களை அடித்து நொறுக்கினர். மாணவர்களை பகிரங்கமாக மிரட்டுவது, சான்றிதழ் தரமாட்டோம் என்று அச்சுறுத்துவது, போராடும் முன்னணியாளர்களைக் கண்டுபிடித்து இடைநீக்கம் செய்வது, போலீசை ஏவி கைது செய்து பொய் வழக்கு சோடிப்பது, குண்டர்களை வைத்து கல்லூரியைச் சேதப்படுத்திவிட்டு பழியை மாணவர்கள் மீது போடுவது என்பதாக கல்வி வியாபாரிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடியது. மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து இந்நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் காலவரையற்று மூடப்பட்டன.
ஜேப்பியாரின் சத்தியபாமா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி பயின்று வந்த ராபின்வாஸ் என்ற மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, ""உன் தந்தையிடம் சொல்லி சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பி விடுவேன்'' என்று முன்னாள் சாராய வியாபாரியும் இந்நாள் கல்வித் "தந்தை'யுமான ஜேப்பியார் மிரட்டியுள்ளார். அதனால் மனமுடைந்த ராபின்வாஸ் மார்ச் 3ஆம் நாளன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனாலும் ராபின்வாஸை தற்கொலைக்குத் தள்ளிய கொலைக் குற்றவாளி ஜேப்பியார் இன்றுவரை கைது செய்யப்படவில்லை.
""தனியார் மோசடி நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்! ஜேப்பியாரை கொலைக் குற்றத்தின் கீழ் சிறையி லடை!'' என்ற முழக்கங்களுடன் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களது பெற்றோர்கள் மார்ச் 2ஆம் நாளன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து தங்கள் பிள்ளைகளை கல்லூரி நிர்வாகம் அடியாட்களை வைத்து தாக்குவதாகவும் மிரட்டுவதாகவும் கண்ணீர் மல்க பேட்டியளித்தனர். நெல்லை பி.எஸ்.என். கல்லூரி மாணவர்கள், நிர்வாகம் தங்களிடம் பல லட்சம் நன்கொடை பிடுங்கி மோசடி செய்ததையும் குண்டர்களை வைத்து தாக்கியதால் ஏற்பட்ட காயங்களையும் காட்டியும் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரிடம் புகார் கொடுத்தனர். இப்பல்கலைக் கழகங்கள், வரும் கல்வியாண்டில் மாணவர்களைச் சேர்க்க தடை விதிக்கக் கோரி பொது நலவழக்குகள் தொடரப்பட்டன. அரசாங்கம் தலையிட்டு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டதும் குண்டர்களின் தாக்குதலை முறியடித்து மாணவர்கள் தொடர்ந்து போராடினர்.
ஆனால், தனியார் கல்விக் கொள்ளையர்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ள உச்சநீதி மன்றம், அரசாங்கம் இத்தனியார் கல்லூரி நிர்வாகச் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது என்று கடந்த ஆகஸ்டில் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையை மேற்பார்வையிட நிறுவப்பட்ட சுப்பிரமணியன் கமிட்டியும், கல்விக் கட்டணங்களைப் பரிசீலிக்க நிறுவப்பட்ட இராமன் கமிட்டியும் உச்சநீதி மன்றத் தீர்ப்புக்குப் பிறகு முடமாகிவிட்டன.
தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களை எந்த அடிப்படையில் சேர்ப்பது, எந்தத் தேர்வு முறையைப் பின்பற்றுவது, எவ்வளவு கட்டணம் வசூலிப்பது, எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வது என்பதற்கு எந்த வரையறையும் கிடையாது. தனியார் கல்வி முதலாளிகள் இட்டதுதான் சட்டம்; வைத்ததுதான் திட்டம் என்கிற தனிகாட்டு தர்பார்தான் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் நடக்கிறது. தொழில்நுட்ப கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற ஏன் இந்த பல்கலைக் கழகங்கள் தயங்குகின்றன, ஏன் நீதிமன்றங்களுக்குப் படையெடுக்கின்றன என்ற கேள்வியே அவற்றின் மோசடியையும் கொள்ளையும் நிரூபித்துக் காட்டுகின்றன.
எஸ்.ஆர்.எம்; ஜேப்பியாரின் சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் முதலானவை விதிவிலக்கானவை என்று சிலர் கருதலாம். விதிவிலக்காக இருந்தாலும் இதற்கு சட்டப்படி தீர்வு கண்டு நிவாரணம் வழங்கும் இடம் எது? இந்தக் கேள்வி ஜேப்பியார் கல்லூரிக்கு மட்டுமின்றி, பகற்கொள்ளையடிக்கும் அனைத்து தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.
அண்மையில் சென்னை ஏற்றுமதித் தொழில் வணிக வளாகத்தில் (Mகஉஙூ) கொத்தடிமைகளாக உழலும் தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்கள் இந்தியத் தொழிற்சட்டங்களை மதித்து நடக்கக் கோரி போராட்டம் நடத்தி கைதாகினர். தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழக மாணவர்கள் தொழில்நுட்பக் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெறக் கோரி போராட்டம் நடத்தி அடக்குமுறையைச் சந்தித்துள்ளார்கள். அங்கே தனியார்அந்நிய தொழில் முதலாளிகள்; இங்கே தனியார் கல்வி முதலாளிகள். இரு தரப்புமே சட்டங்களை மதிப்பதில்லை. பகற்கொள்ளையையும் கொத்தடிமைத் தனத்தையும் அடக்குமுறையையும் நிறுத்துவதில்லை. நீதிமன்றமோ அரசாங்கமோ தலையிட்டு தடுத்து நிறுத்துவதுமில்லை. இதுதான் தனியார்மயத்தின் மகிமை!
சுயநிதி கல்வி நிறுவனங்கள் வைத்து நடத்துவதென்பது ஓட்டுக் கட்சி அரசியல் போலவே கோடி கோடியாய் பணம் கொழிக்கும் தொழில். எனவேதான் அரசியல் கிரிமினல்கள், சாராய ரௌடிகள், கருப்புப் பண முதலைகள் நடிகர்கள், ஓட்டுக்கட்சி பிர முகர்கள் மட்டுமின்றி சங்கரமடமும் மேல்மருவத்தூர் பீடமும் சுயநிதி கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன. எனவேதான் எல்லா ஓட்டுக் கட்சிகளும் இவ்வளவு போராட்டங்களுக்குப் பின்னரும் தனியார் கல்வி வியாபாரம் குறித்து வாய் திறக்க மறுக்கின்றன.
இந்நிலையில், மாணவர் ராபின்வாஸ் மரணத்துக்குக் காரணமான ஜேப்பியாரைக் கைது செய்து சிறையிலடைப்பது, தொழில்நுட்பக் கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத எஸ்.ஆர்.எம் சத்தியபாமா முதலான நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை அரசே ஏற்று நடத்துவது, அனைத்து தனியார் சுயநிதிக் கல்லூரிகளையும் அரசுடைமையாக்குவது ஆகிய உடனடிக் கோரிக்கைகளுடன் மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் ஜனநாயக இயக்கங்களும் போராட வேண்டும். ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, தனியார்மயத்துக்கு எதிரான போராட்டமாக இதை வளர்த்தெடுக்கவும் வேண்டும்.
— பு.மா.இ.மு. உதவியுடன்
பு.ஜ. செய்தியாளர்கள்.