04_2006.gif

"துரோகி விஜயன் ஒழிக! காட்டிக் கொடுக்கும் நவீன "யூதாஸ்' விஜயன் ஒழிக! "பூர்ஷ்வா' விஜயன் ஒழிக!''  என்று முழங்கிக் கொண்டே பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் கடந்த மார்ச் மூன்றாவது வாரத்தில் கேரள மாநிலத்தில் ஆங்காங்கே வெடித்துக் கிளம்பின. கேரள மாநில சி.பி.எம். செயலாளரான பினாரயி விஜயனின் கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன.

 

            இவற்றைச் செய்தவர்கள் சி.பி.எம். கட்சியின் எதிரிகள் அல்ல; சி.பி.எம். கட்சி ஊழியர்கள்தான் தமது கட்சிச் செயலாளருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். கேரள சி.பி.எம். கட்சி செயலாளர் பினாரயி விஜயன் கோஷ்டிக்கும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் கோஷ்டிக்குமிடையே நாற்காலி பதவிக்காக நடக்கும் நாய்ச்சண்டையானது தீப்பந்த ஊர்வலம், திருவனந்தபுரத்திலுள்ள சி.பி.எம். கட்சித் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி. பவன் முன்பு முற்றுகைப் போராட்டம் என பகிரங்க தெருச்சண்டையாக முற்றி மாநிலமெங்கும் சந்தி சிரித்தது.

 

            கேரளத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆளுங்கட்சி வீழ்த்தப்பட்டு, எதிர்க்கட்சி ஆட்சிக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. இதன்படி, தற்போது ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரசு வீழ்த்தப்பட்டு, சி.பி.எம். தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி அணிகளிடம் நிலவியது. கேரளத்தில் முன்னாள் சி.பி.எம். முதல்வர் ஈ.கே. நாயனாரின் மறைவுக்குப் பிறகு, முதல்வர் பதவிக்கான வேட்பாளர் தகுதி மூத்த தலைவரான வி.எஸ். அச்சுதானந்தனுக்குக் கிடைக்கும் என்றும் கேரளத்தின் சி.பி.எம். நிறுவனத் தலைவர்களில் ஒருவர், கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், ஊழல் கறைபடியாதவர், கீழ்மட்டத் தொண்டர்களின் ஆதரவைப் பெற்றவர். எளிமையானவர், மூத்த தோழர் என்றெல்லாம் சித்தரிக்கப்படும் அச்சுதானந்தன் அடுத்த முதல்வராக இத்தேர்தலில் போட்டியிடுவார் என்றும் ஊகமும் நம்பிக்கையும் நிலவியது.

 

            ஆனால், சி.பி.எம். கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அச்சுதானந்தன் பெயரே இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அவரது விசுவாசிகளும் அபிமானிகளும் கட்சித் தலைமைக்கு எதிராக, குறிப்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பினாரயி விஜயனுக்கு எதிராக பகிரங்கமாக போராட்டங்களை நடத்தினர். விஜயன் ஆதரவாளர்களுக்கும் அச்சுதானந்தன் ஆதரவாளர்களுக்குமிடையே கைகலப்பு நடக்குமளவுக்கு இந்த கோஷ்டி சண்டை கேரள மாநிலமெங்கும் நாறியது.

 

            சி.பி.எம். கட்சியின் கேரள மாநிலக்குழு, கட்சி செயலாளர் பினாரயி விஜயனின் இறுக்கமான பிடியில் உள்ளது. இதர ஓட்டுக் கட்சிகளைப் போல, சி.பி.எம். கட்சியை பெருந்தொழில் நிறுவனம் போல மாற்றியமைத்ததில் முக்கிய பங்காற்றியவர்தான் விஜயன். ஏறத்தாழ ரூ. 4000 ÷டி சொத்து மதிப்புடைய சி.பி.எம். கம்பெனியின் தலைமை ""பாஸ்'' ஆக உள்ள விஜயன், தானே ஒரு அதிகாரபீடமாகி தனக்கென ஒரு விசுவாச கோஷ்டியை உருவாக்கி நிலைநாட்டியுள்ளார்.

 

            ""கைரளி டி.வி.'', ரப்கோ கூட்டுறவு கழகம், மலபார் மனமகிழ்ச்சி கிளப், மறைந்த கட்சித் தலைவர்களின் பெயரால் தனியார் மருத்துவமனைகள், தகவல்தொழில்நுட்ப மையங்கள் எனப் பல நிறுவனங்களை கட்சி மூலம் நடத்தி கோடீஸ்வர கட்சியாக சி.பி.எம்.ஐ மாற்றியமைத்தவர்தான் முதலாளித்துவ "காம்ரேடு' விஜயன். அவர் முந்தைய ஈ.கே. நாயனார் ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்தபோது, கனடா நாட்டு நிறுவனத்துடன் முறைகேடாக போட்ட ஒப்பந்தம்  அதனால் மாநில அரசுக்குக் கோடிக்கணக்கில் ஏற்பட்ட இழப்பும் பற்றி மையப் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் விசாரணை அறிக்கை வெளியானால், சி.பி.எம்.க்கும் பினாரயி விஜயனுக்கும் பின்னடைவு ஏற்படும் என்பதால், அவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கட்சி தீர்மானித்தது. இதனால், அச்சுதானந்தனே முதல்வர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி அணிகளிடம் நிலவியது. ஆனால், செயலாளர் விஜயனோ, தனக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பில்லாத நிலையில், அச்சுதானந்தனுக்கு ஆப்பு வைத்து வேட்பாளர் பட்டியலில் அவர் பெயரே இல்லாமல் செய்துவிட்டார்.

 

            நம்ம ஊரு நல்லகண்ணுவைப் போல கேரள போலி கம்யூனிஸ்டு தலைவரான அச்சுதானந்தன், எளிமையான  மூத்த தலைவராக இருக்கிறார்; பினாரயி விஜயன் புதிய தலைமுறையைச் சேர்ந்த முதலாளித்துவ காம்ரேடாக இருக்கிறார் என்பதைத் தவிர இருதரப்புக்குமிடையே கொள்கை  சித்தாந்த வேறுபாடு எதுவும் கிடையாது. நீண்டகாலமாக உள்ள மூத்த தலைவர் என்பதாலும் மக்களிடம் கணிசமான செல்வாக்குமிக்கவர் என்பதாலும் ஓட்டுப் பொறுக்க அச்சுதானந்தனும் தேவை; கட்சியை முதலாளித்துவ கம்பெனியாக மாற்றிய விஜயனும் தேவை என்பதால், சி.பி.எம். தலைமை இரு தரப்பையும் சமரசப்படுத்த முயற்சித்தது.

 

            ஆனால், சொத்தும், பதவியும் முறையாக பகிர்ந்தளிக்கப்படாததால், "உட்கட்சி ஜனநாயகத்தை' வலியுறுத்தி, கேரள மாநில சி.பி.எம். மாநாட்டுக்கு முன்பிருந்தே கோஷ்டி சண்டைகள் வெடித்துக் கிளம்பின. இப்போது அது பகிரங்க தெருச்சண்டையாக முற்றிவிட்டது. சி.பி.எம். கட்சியின் அகில இந்திய செயலாளரான காரத் ஓடோடி வந்து, சமரசப்படுத்த முயற்சித்து தோல்வியடைந்தார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு அவசரமாகக் கூடி, கோஷ்டி சண்டையை நிறுத்தக் கோரி விதித்த கட்டுப்பாடுகளும் ஆலோசனைகளும் செல்லாக் காசாகிப் போயின. கேரளாவில் கட்சியே உடைந்து போய்விடுமோ என்ற பதற்றமான நிலையில், பீதியடைந்த சி.பி.எம். தலைமை வேறு வழியின்றி அச்சுதானந்தனை தேர்தலில் போட்டியிட அனுமதித்துள்ளது. தேர்தலில் சி.பி.எம். கூட்டணி வெற்றி பெற்றுவிட்டால், அதன்பிறகு முதல்வர்  அமைச்சர் பதவிகளுக்கான நாய்ச்சண்டை தொடரக் காத்திருக்கிறது.

 

            கட்டுப்பாடுமிக்க கட்சி, உழைக்கும் மக்களுக்கான கட்சி, லட்சிய உணர்வு கொண்ட புரட்சிக் கட்சி என்றெல்லாம் எவ்வளவுதான் மாய்மாலங்கள் செய்தாலும், சி.பி.எம். கட்சியானது சட்டமன்ற  நாடாளுமன்ற சாக்கடையில் விழுந்து புரளும் இன்னுமொரு ஓட்டுக் கட்சிதான். ஓட்டுக் கட்சிகளின் பாரம்பரியத்துக்கேற்ப அக்கட்சியானது ஏற்கெனவே முதலாளித்துவ கம்பெனியாகி விட்டது; கோஷ்டிச் சண்டைகள் பகிரங்க தெருச்சண்டைகளாக முற்றிவிட்டன. ஓட்டுக் கட்சிகளின் பொறுக்கி அரசியல் கலாச்சாரப்படி, இந்தக் கோஷ்டிச் சண்டையால் பாதிக்கப்பட்ட ஒரு சி.பி.எம். தொண்டர் கோழிக்கோட்டில் தற்கொலை செய்து கொண்டு "தியாகி'யாகி விட்டார். நல்ல முன்னேற்றம்தான்!

 

மு  குமார்