அண்மையில் எனது சொந்த கிராமத்துக்குச் சென்ற போது, ""டவுன்ல பொன்னி அரிசியப் பொங்கித் திங்கிற உங்களுக்கு தங்கமணி, சீரகச்சம்பா, குதிரவாலி, கிச்சடி சம்பா அரிசியெல்லாம் தெரியுமா தம்பி?'' என்று கேட்டார் எங்கள் கிராமத்து முதிய விவசாயி.
ஆச்சரியமாகப் பார்த்த என்னிடம், தமிழ்நாட்டில் 30,000க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்த உண்மைக் கதையை ஆர்வத்தோடு சொன்னார். மணம் வீசும் அரிசி, இரண்டே மாதங்களில் அறுவடையாகும் அரிசி, மருத்துவ குணம் கொண்ட அரிசி, 4 மி.மீ நீளமுடைய மிகச் சிறிய அரிசி, 14 மி.மீ நீளமுடைய பெரிய அரிசி, ஒரு நெல்மணி ஓட்டுக்குள் இரண்டு அரிசிகள் உள்ள அதிசய ரகங்கள் பற்றி அவர் சொல்லச் சொல்ல எனக்கு வியப்பு மேலிட்டது. மண்வளம், தட்பவெப்பநிலை மற்றும் இயற்கைச் சூழலுக்கு ஏற்பவும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்பவும் தமது பாரம்பரிய தொழில்நுட்பத்துடன் இந்திய விவசாயிகள் அரிய வகை நெல் ரகங்களை உருவாக்கிச் சாகுபடி செய்த வரலாறு எனக்குப் பெருமிதமாக இருந்தது.
""ஆனால், இந்த அரிய வகை நெல் ரகங்கள் எல்லாம் இன்று பயிரிடப்படுவதில்லை; அவற்றின் விதை நெல்லும் விவசாயிகளிடம் இல்லை'' என்று அவர் வேதனையோடு சொன்னார். ""ஏன் இப்படி ஆயிற்று?'' என்று நான் கேட்டபோது, ""40 வருஷத்துக்கு முந்தி பசுமைப் புரட்சின்னு கொண்டு வந்தாங்க; அவ்வளவுதான்; பாரம்பரிய விவசாயம் ஒழிஞ்சுது; வீரிய நெல் ரகங்கள் வந்தது; உரம்பூச்சி மருந்துகள அள்ளிக் கொட்டுனாங்க; நிலம் விஷமாகிப் புதுப்புது பூச்சிங்க பெருகிச்சு; விவசாயமும் நாசமாகிப் போனது; விவசாயிங்க பாலிடாலக் குடிச்சு செத்தாங்க; தங்கமணியும் சீரக சம்பாவும் காணாமல் போயிடுச்சு'' என்று பசுமைப் புரட்சியால் ஏற்பட்ட பயங்கர விளைவுகளை வேதனையோடு குறிப்பிட்டார், அவர்.
பன்னாட்டு உரம்பூச்சி மருந்துக் கம்பெனிகளின் கொள்ளைக்காகவும், அமெரிக்காவின் ஆதாயத்துக்காகவும் கொண்டு வரப்பட்ட பசுமைப் புரட்சி இந்திய விவசாயத்தை நாசமாக்கியது போதாது என்று இப்போது ""இரண்டாவது பசுமைப் புரட்சி'' இல்லையில்லை, ""நீடித்த நிரந்தர பசுமைப் புரட்சி''யைக் கொண்டுவரப் போவதாக ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். அண்மையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, அமெரிக்காவும் இந்தியாவும் இத்தகைய "புரட்சி'யைச் செய்ய இரகசியமாக ஒரு சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளன.
விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வியில் அறிவார்ந்த முன்முயற்சியைக் கட்டவிழ்த்து விடுவதாக இத்திட்டம் அமையும் என்றும், குறிப்பாக, உயிரி தொழில்நுட்பவியல், மரபீணி மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் உணவுகளில் கவனத்தைச் செலுத்துவதாக இத்திட்டம் அமையும் எனவும் இதன் சூத்திரதாரிகள் அறிவித்துள்ளனர். இத்திட்டப்படி, அமெரிக்க விவசாய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா விதித்துள்ள அற்பமான கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நீக்கிவிடுமாறு அமெரிக்கா கோரியுள்ளது. அதை மன்மோகன் சிங் அரசும் விசுவாசமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இதன் விளைவாக, இனி அமெரிக்காவிலிருந்து மரபீணி மாற்றம் செய்யப்பட்ட (எஞுணஞுtடிஞிச்டூடூதூ Mணிஞீடிஞூடிஞுஞீ) விவசாய உற்பத்திப் பொருட்களும் உணவுப் பொருட்களும் இந்தியாவில் வந்து குவியும். உலகின் பல நாடுகளில் மரபீணி மாற்றம் செய்யப்பட்ட பொருட்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை விற்க முடியாமல் அமெரிக்கா திண்டாடுகிறது. அமெரிக்காவும் இந்தியாவும் இந்தியாவில் நடத்தப் போகும் "பசுமைப் புரட்சி'யானது, அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சந்தையை உருவாக்கிக் கொடுத்துள்ளது. மரபீணி மாற்றம் செய்யப்பட்ட விவசாயப் பொருட்களால் மனித இனத்துக்கு விபரீத விளைவுகள் ஏற்படும் என்று அறிவியல் உலகம் எச்சரித்துள்ள போதிலும், எவ்விதக் கட்டுப்பாடுமின்றி அவை இந்திய மக்களின் மலிவான உணவுப் பொருட்களாக இனி அமெரிக்காவிலிருந்து வந்து குவியப் போகிறது.
மேலும், இந்தப் "பசுமைப் புரட்சி'க்கான விவசாய ஆராய்ச்சிக்கு அமெரிக்கா சல்லிக்காசு கூடச் செலவிடப் போவதில்லை. இந்தியா தற்போது ஏறத்தாழ ரூ. 400 கோடி முதலீடு செய்யத் தீர்மானித்துள்ளது. இதில் ரூ. 300 கோடித் தொகை மரபணு தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கும், உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கும் அதன் வழியிலான விவசாய உற்பத்திக்கும் செலவிடப்படும்.
அதாவது, அமெரிக்க விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வந்து இத்தொழில்நுட்பத்தைக் கற்றுத் தரவும் அதேபோல இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்காவுக்குச் சென்று பயிற்சி பெறவும் இத்தொகை செலவிடப்படும். இத்தகைய ஆராய்ச்சியில் புதிய வீரிய ரக விதை உருவாக்கப்பட்டால் அது இந்தியாவில் உருவாக்கப்பட்டால், அதன் அறிவுசார் சொத்துரிமை (கூகீஐககு) இந்தியாவுக்குச் சொந்தம்; அமெரிக்காவில் உருவாக்கப்பட்டால், அதன் அறிவுசார் சொத்துரிமை அமெரிக்காவுக்குச் சொந்தம். அதாவது, இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்கா சென்று அங்கு புதிய ரக விதையை உருவாக்கினால், அது அமெரிக்காவுக்கே சொந்தம். அந்த விதைக்கான அறிவுசார் சொத்துரிமையின் மூலம் அமெரிக்கா உலகெங்கும் ஆதிக்கம் செலுத்த முடியும்.
சுருக்கமாகச் சொன்னால், நான் உமி கொண்டு வருகிறேன்; நீ அவல் கொண்டு வா; இரண்டு பேரும் ஊதி ஊதித் தின்னலாம் என்கிறது அமெரிக்கா. ஆகா; அமெரிக்காவின் தயாள குணமே அலாதியானது என்று மெச்சிப் புகழ்கிறது மன்மோகன் சிங் கும்பல்.
வெறும் விவசாய ஆராய்ச்சிக் கல்வி மட்டுமல்ல; கல்வி, பல்கலைக்கழகப் பாடத்திட்டம், அறிவுசார் சொத்துரிமை; உயிரியல் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, உணவு பதப்படுத்தல், அறுவடைக்குப் பிந்திய நிர்வாகம், உணவுச் சந்தை, மண்வள நிர்வாகம், மனிதவள நிர்வாகம் என அனைத்தையும் கட்டுப்படுத்தி, நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத்தின் மீதும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த இந்தப் "பசுமைப் புரட்சி'த் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வால்மார்ட் என்பது உலகெங்கும் பல நாடுகளின் சில்லறை வணிகத்தைத் தனது இரும்புப் பிடியில் வைத்திருக்கும் மிகப்பெரிய அமெரிக்கப் பகாசுர கம்பெனி. மான்சாண்டோ என்பது உலகின் மிகப் பெரிய விதைபூச்சி மருந்துக் கம்பெனி. பி.டி.காட்டன் எனும் மரபீணி மாற்றம் செய்யப்பட்ட பருத்தி மூலம் உலகெங்கும் விவசாயிகளின் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள நச்சு விதைக் கம்பெனி. இவ்விரு அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகள்தான் இந்த நிரந்தரப் பசுமைப் புரட்சித் திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளன. இந்திய விவசாயத்திலும் விவசாயச் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தும் வலுவான இடத்திற்கு இவ்விரு அமெரிக்க நிறுவனங்களும் அதிகாரபூர்வமாக வந்துவிட்டன. பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளின் இப்"பசுமைப் புரட்சி'த் திட்டத்தைச் செயல்படுத்தும் தலைவராக உலகவங்கியின் கைக்கூலியும், திட்டக்கமிசனின் துணைத் தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.
"நிரந்தர பசுமைப் புரட்சி'க்கான தலைமைக் குழுவில் உள்ள இவ்விரு அமெரிக்க நிறுவனங்கள்தான், இனி இந்திய விவசாய ஆராய்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும். இந்திய விவசாய ஆராய்ச்சிக் கூடங்கள், விவசாயப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை வரையறுக்கும். அதாவது, விவசாயப் பல்கலைக்கழகங்களில் எதைப் படிக்க வேண்டும், எதில் ஆராய்ச்சி செய்ய வேண்டும், என்னென்ன பாடதிட்டங்கள் என்று அனைத்தையும் தீர்மானிக்கப் போகிறவர்கள் இந்தியக் கல்வியாளர்கள் அல்ல; இரண்டு அமெரிக்கப் பகாசுரக் கம்பெனிகள்!
உயிரி தொழில்நுட்பம், உயிரியல் மூலாதாரங்கள், அறிவுசார் சொத்துரிமை ஆகியவையே இப்"பசுமைப் புரட்சி'த் திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். ஒன்றொடொன்று தொடர்புடைய இம்மூன்று துறைகளில் ஆதிக்கம் செலுத்தவும் அதன்மூலம் நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் அமெரிக்கா துடிக்கிறது. விவசாய உற்பத்தியானது மக்களின் உணவுக்கானதாக அல்லாமல் சந்தைக்கானதாக, இலாபத்துக்கானதாக மாற்றப்பட வேண்டும் என்பதையே இப்பசுமைப் புரட்சி மூலம் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் திசையில், இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் மேற்கூறிய மூன்று துறைகளில் ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகளில் பல்லாயிரக்கணக்கான ரகங்களைக் கொண்ட அரிசி, கோதுமை மற்றும் பிற உணவு தானியங்களின் விதைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்திய அரிய வகை ரகங்களின் மரபணுக்களை வைத்து ஆராய்ச்சி செய்து, புதிய வீரியரக உணவு தானிய ரகங்களைக் கண்டறிந்து, அறிவுசார் சொத்துரிமையின்படி அதற்குக் காப்புரிமை பெற்று, விதை நெல்லுக்கு இந்திய விவசாயிகளைத் தன்னிடம் கையேந்த வைப்பதுதான் இந்த அமெரிக்கப் "பசுமைப் புரட்சி'யின் சதித்திட்டம். மேலும், உலக வர்த்தகக் கழகத்தின் (ஙிகூO) உணவு மற்றும் விவசாயத்துக்கான பயிர் மூலாதார ஒப்பந்தப்படி, எந்தவொரு நாடும் நிறுவனமும் மரபணு மூலாதாரங்களைப் பரிமாறிக் கொள்ளவும் மேம்படுத்தவும் அனுமதிக்க வேண்டும். உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பு நாடாக உள்ள இந்தியா இதை மீறவும் முடியாது.
மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனிமாநிலமாகியுள்ள சட்டிஸ்கார், இந்தியாவின் பாரம்பரிய நெற்களஞ்சியங்களில் ஒன்றாகும். மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக இருந்த டாக்டர் ரிச்சாரியா மற்றும் அவரது குழுவினரின் பெருமுயற்சியால் ராய்ப்பூரிலுள்ள விதைக் கருவூலத்தில் ஏறத்தாழ 22,000 வகையான நெல் ரகங்களின் விதை நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இக்கருவூலமானது உலகின் இரண்டாவது பெரிய சேமிப்புத் திரட்டாகும். சதிகார "பசுமைப் புரட்சி'யானது இம்மரபணுக் கருவூலத்தையே பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளின் காலடியில் சமர்பித்துவிட்டது.
நமது முன்னோர்களான விவசாயிகள் உருவாக்கிய அரியவகை நெல், கோதுமை ரகங்களின் மரபணுக்களைக் களவாடி, அதைக் கொண்டு மரபணு மாற் றம் செய்யப்பட்ட புதிய ரகங்களை உருவாக்கி அவற்றுக்கும் காப்புரிமை பெற்றுவிட்டால், அதன் பிறகு மான்சாண்டோ கம்பெனியிடம் மட்டுமே விதையை வாங்க வேண்டும். இந்த விதைகள் ஒருபோகம் மட்டுமே மகசூல் தரக்கூடிய மறுமுளைப்புத் திறனற்ற மலட்டு விதைகளாகவே இருக்கும். எனவே, அடுத்த பருவத்தில் விதைக்காக மீண்டும் மான்சாண்டோவிடம்தான் கையேந்த வேண்டும். விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகள் வால்மார்ட் மான்சாண்டோவின் கட்டுப்பாட்டில் வந்துவிடுவதால், விதைகளிலிருந்து மொத்த விவசாயத்தையும் வர்த்தக மேலாதிக்கத்தையும் அவை நிலைநாட்டிக் கொண்டுவிடும்.
"இரண்டாவது பசுமைப் புரட்சி' என்பது வெறுமனே விவசாய விவகாரமல்ல; நாட்டின் அரசியல் சமூக பொருளாதாரம், உயிரியல் பன்முகத்தன்மை, உணவுப் பாதுகாப்பு, மரபணுச் செல்வம் உள்ளிட்ட அனைத்தையும் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செய்யும் அமெரிக்க காலனியாதிக்கத்தின் ஓர் அங்கம். எனவேதான், நாட்டுக்கோ மக்களுக்கோ தெரியாமல் மிகவும் ரகசியமாக சதித்தனமான முறையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய விவசாய அறிவியல் கழகம், இந்திய அறிவியல் கழகம், விவசாய அமைச்சகம், பிரபல விஞ்ஞானிகள், அரசுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுகள் என யாருக்குமே தெரிவிக்கப்படாமல், விவாதிக்கப்படாமல் இம்மறுகாலனிய சதித்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வேட்டுச் சத்தம் ஏதுமின்றி ஆக்கிரமிப்புப் போர் தொடங்கிவிட்டது.
நெல்லும் கரும்பும் கடலையும் பயிரிட்டு வந்த விவசாயிகள், இனி கள்ளியும் கற்றாழையும் காட்டாமணக்கும் பயிரிட்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியதுதானா? அரிசிக்கும் கோதுமைக்கும் இனி அமெரிக்காவிடம் கையேந்தி நிற்க வேண்டியதுதானா? பல கோடி டன் உணவு தானியங்களைக் கையிருப்பாக சேமிப்பில் வைத்துள்ள இந்திய உணவுக் கழகம் இனி என்னவாகும்? கேள்விகள் என் நெஞ்சைத் துளைத்தன.
அன்று வெள்ளைக்காரனின் காலனியாதிக்கத்தின்போது, நெல்லுக்குப் பதிலாக அவுரிச் செடியை நீலச்சாயச் செடியைக் கட்டாயமாகப் பயிரிடுமாறு விவசாயிகள் வதைக்கப்பட்ட வரலாறு என் நெஞ்சில் நிழலாடியது. இன்று அமெரிக்கா தலைமையிலான மறுகாலனியாதிக்கத்தின்கீழ், இந்திய பாரம்பரிய விவசாயமும் விவசாயிகளும் நாசமாக்கப்படும் பயங்கரத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நெல் விளைந்த பூமியில் இன்று கற்றாழை செழித்தோங்கி நிற்பதைப்போல, மாவீரன் பகத்சிங் பிறந்த பஞ்சாப் மண்ணிலிருந்து மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவாலியா எனும் இரு ஏகாதிபத்திய கைக்கூலிகள் கிளம்பியிருப்பதை எண்ணும்போது எனக்குக் கோபம் கொப்பளித்தது. அன்று நம் முன்னோர்களான விவசாயிகள் அவுரிச் செடி பயிரிட மறுத்து, காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய வீர வரலாறு என் நெஞ்சில் விடியலின் கீதமாய் எதிரொலித்தது. அமெரிக்க மேலாதிக்கவாதிகளின் இரண்டாவது பசுமைப் புரட்சி அல்ல; காலனியாதிக்கத்தை வீழ்த்தும் சிவப்புப் புரட்சிதான் இன்று நாட்டுக்கும் விவசாயிகளுக்கும் உடனடித் தேவை என்ற உணர்வே என் சிந்தனையை ஆக்கிரமித்தது.
மு மனோகரன்