மும்பையில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள், ஒரு பண்ணை வீடு உள்ளிட்ட ரூ. 45 கோடி மதிப்புடைய சொத்துக்கள்; விஷால் டிராவல்ஸ் என்ற பெயரில் சொகுசுப் பேருந்துகள்; மனைவி பெயரில் சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பு; துபாயில் நடன விடுதி கொண்ட நட்சத்திர ஓட்டலின் பங்குதாரர்; மனைவி பெயரில் கோடிகளைப் பரிமாற்றம் செய்யும் சீட்டுக் கம்பெனி; 4 வங்கிக் கணக்குகள் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 13 கோடிக்கு மேல் ரொக்கப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர்களுக்குக் கோடிக் கணக்கில் கடன் கொடுக்கும் பைனான்சியர்....
இப்படி கணக்கற்ற சொத்துக்கு அதிபதியாக இருப்பவர் பெரு நிலப்பிரபுவோ, தரகுப் பெருமுதலாளியோ அல்ல் மாதம் ரூ. 9000 சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண போலீசு உதவி ஆய்வாளர். அதிசயம்; ஆனால் உண்மை! இந்தத் துணை ஆய்வாளரின் சொத்து மதிப்பு ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள், ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
இவரைச் சாதாரண போலீசு உதவி ஆய்வாளர் என்று குறுக்கிச் சுருக்கி விட முடியாது. ஏனெனில், இவர் 80க்கும் மேற்பட்டோரைச் சுட்டுக் கொன்று நாடெங்கும் புகழ் பெற்ற ""மோதல் கொலை'' சூரப்புலி. அதாவது, ""என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட்!'' அவரது வீரதீர பராக்கிரமங்களை வைத்து சில இந்தி திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. கடந்த பத்தாண்டுகளாக செய்தி ஊடகங்களால் வீரதீர நாயகனாகச் சித்தரிக்கப்பட்ட இவர், இப்போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த போலீசு வீரநாயகன்தான் தயானந்த் நாயக்!
மும்பையில் தரகுப் பெருமுதலாளிகள், வீட்டு மனைத் தொழிலதிபர்களின் போட்டா போட்டியில், எதிர்த்தரப்பை முடக்க கிரிமினல் கும்பல்களைப் பயன்படுத்துவது அதிகரித்து, பின்னர் இந்தக் கிரிமினல் கும்பல்கள் மிகப் பெரிய மாஃபியா கும்பல்களாக வளர்ந்து விட்டன. மும்பையை ஆதிக்கம் செய்வதில் பால்தாக்கரே, தாவூத் இப்ராஹிம், அருண் காவ்லி, சோட்டா ஷகீல் முதலான மாஃபியா கும்பல்களுக்கிடையே போட்டா போட்டி தாக்குதல்களும் கொலைகளும் தொடர்ந்தன. இரகசிய உலக மாஃபியா கும்பல்களை ஒழித்துக் கட்டுவது என்ற பெயரில் சிறப்பு போலீசுப் பிரிவு நிறுவப்பட்டு போலீசாருக்கு எல்லையற்ற அதிகாரமும் வழங்கப்பட்டது. இந்தச் சமயத்தில், தயாநாயக் மும்பை போலீசுத் துறையில் சேர்ந்து தனது சூரத்தனத்தைக் காட்டத் தொடங்கினார்.
போலீசு என்பதே சட்டபூர்வ கிரிமினல் கும்பலாக இருக்கும்போது, அது எப்படி ரகசிய உலக மாஃபியா கிரிமினல் கும்பல்களை ஒழிக்க முடியும்? போலீசுக்கும் கிரிமினல்களுக்கும் இடையிலான மாமன்மச்சான் உறவை உறுதிப்படுத்தி, தனது வேட்டையில் கொழுத்த ஆதாயமடைந்தார், சூரப்புலி தயாநாயக். ஒரு தாதா கும்பலுக்கு எதிராக இன்னொரு தாதா கும்பலைச் சேர்ந்தவர்களைத் தீர்த்துக் கட்டி விட்டு அதற்கு கப்பம் வசூலிப்பது; அல்லது ஒரு தாதா கும்பலை சுட்டுக் கொல்லாமல் விட்டு வைப்பதற்காக கப்பம் வசூலிப்பது; இரகசிய உலகப் பேர்வழி என்று முத்திரை குத்தி, அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றுவிட்டு அரசாங்கத்திடம் பரிசும் பாராட்டும் வெகுமதிகளையும் பெறுவது என்று தயாநாயக் இரண்டு மேடைகளில் இரு வேறு பாத்திரங்களில் நாடகமாடினார். சோட்டா ஷகீல் தலைமையிலான மாஃபியா கும்பலுடன் திரைமறைவுக் கூட்டணி கட்டிக் கொண்டு, இதர மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்களைச் சுட்டுக் கொன்றும் மிரட்டியும் கோடிகோடியாய் குவித்தார். மறுபுறம், மாஃபியா கும்பல்களின் கொட்டம் தற்காலிகமாக ஒடுக்கப்பட்டதைக் கண்டு அரசாங்கமும் செய்தி ஊடகங்களும் அவரை வீராதிவீரனாகச் சித்தரித்து புகழ் பாடின.
கோடிகோடியாய் பணமும், புகழும், அதிகாரமும் பெருகப் பெருக போலீசுத்துறையை விட உயர்ந்த, அதையே இயக்கும் தலைமைப் பீடமாக தயாநாயக் தலைமையிலான குற்றவியல் பிரிவு போலீசு கும்பல் வளரத் தொடங்கியது. போலீசு கமிஷனர், இயக்குனர்களின் அதிகார பூர்வ முடிவுகளைவிட, தமது சொந்த ஆதாயத்துக்கான முடிவுகளையே செயல்படுத்தியது. தெல்கியின் போலி முத்திரைத்தாள் ஊழல் விவகாரம் முதல் பஞ்சாப் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழல் வரை அனைத்திலுமே மும்பை குற்றவியல் பிரிவு போலீசும் உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று பத்திரிகைகளே அம்பலப்படுத்துகின்றன. ஒட்டுமொத்த போலீசுத்துறையே சமூக விரோதக் குற்றங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் தயாநாயக்கின் கொட்டமும் கொள்ளையும் கேள்வி முறையின்றித் தொடர்ந்தது.
மாதுரி சாக்சேனா என்ற விளையாட்டு வீராங்கனைக்கு வழங்கப்பட்ட அர்ஜுனா விருது தொகையை, தனது ஓஜோஸ் வீட்டுமனை நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்து, அதற்கீடாக பஞ்சாபில் பெட்ரோல் விற்பனை மையம் நடத்த ஏற்பாடு செய்த ஊழல் விவகாரம், தனது பினாமிகளின் ""தேவ் பெயிண்ட்ஸ்'' நிறுவனத்தின் மூலம் கருப்புப் பணத்தை முதலீடு செய்த விவகாரம், இரகசிய உலகப் பேர்வழி சோட்டா ஷகீலின் கூட்டாளியான பாஹிமிடமிருந்து ரூ. 5 கோடி கையூட்டாகப் பெற்ற விவகாரம், இரும்புக் கழிவு வியாபாரியை சுட்டுக் கொன்று விடப் போவதாக மிரட்டி லட்சக்கணக்கில் கப்பம் வசூலித்த விவகாரம் என சூரப்புலி தயாநாயக்கின் மகாத்மியங்கள் அடுத்தடுத்து கசியத் தொடங்கின. மும்பையின் புலனாய்வுச் செய்தியாளரான கேத்தன் திரோத்கர், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ரகசிய உலகப் பேர்வழிகளுடன் சேர்ந்து தயாநாயக் செய்த ஏராளமான குற்றங்களைப் பட்டியலிட்டு வாக்குமூலம் அளித்தார். ஆனாலும் மும்பை போலீசு உயரதிகாரிகள் அவற்றைப் பரிசீலிக்கக் கூட முன்வராமல் அனைத்தையும் மூடிமறைத்தனர்.
இப்போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த விவகாரம் மெதுவாக வெளிவந்து ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்களே தவிர, ரகசிய உலகப் பேர்வழிகளுடன் சேர்ந்து சூரப்புலி தயாநாயக் நடத்திய சதிகள், கொலைகள், பேரங்கள், ஆதாயங்கள் பற்றி எந்த விசாரணையுமில்லை. தயாநாயக்கை கைது செய்து விசாரிக்கக் கூடாது என மும்பை போலீசே முட்டுக்கட்டை போட்டுள்ளதோடு, தயாநாயக்கின் வழக்குரைஞர் மூலம் உச்சநீதி மன்றத்தில் தடையாணையும் பெற்றுக் கொக்கரிக்கிறது.
சட்டத்திற்கு அப்பாற்பட்ட தனி அதிகாரமாகக் கொட்டமடித்த தயாநாயக்கை வீரதீர நாயகனாகச் சித்தரித்ததைப் போலவே, இங்கேயும் தேவாரம், விஜயகுமார், வெள்ளைத்துரை என அரசு பயங்கரவாதிகள் சூரப்புலிகளாக செய்தி ஊடகங்களாலும் ஆட்சியாளர்களாலும் புகழப்படுகிறார்கள். பரிசும், பதவியும், பதக்கங்களும், சிறப்புச் சலுகைகளும் இப்பயங்கரவாதப் போலீசு கும்பலுக்கு வாரியிறைக்கப்படுகின்றன. அவர்களது ""என்கௌண்டர் கொலைகள்'' எவ்வித விசாரணையுமின்றி நியாயப்படுத்தப்படுகின்றன.
நாடு எத்தகையதொரு அரசு பயங்கரவாத கிரிமினல் கும்பலிடம் சிக்கிக் கொண்டுள்ளது என்பதற்கு தயாநாயக் விவகாரம் இன்னுமொரு சாட்சியம். வழக்கு, விசாரணை, பதவிநீக்கம் முதலானவற்றால் இந்தப் பயங்கரவாதக் கும்பலைத் தண்டித்துவிட முடியாது. அரசு பயங்கரவாத போலீசு அமைப்பையே கலைப்பதற்கான மக்கள் போராட்டங்களாலும், அப்போராட்டக் களத்தில் கட்டியமைக்கப்படும் மக்கள் நீதிமன்றங்களாலும்தான் இப்பாசிச பயங்கரவாதக் கும்பலைத் தண்டிக்க முடியும்.
தனபால்