"தாமிரவருணி எங்கள் ஆறு! அமெரிக்க "கோக்'கே வெளியேறு! தாமிரவருணியை உறிஞ்சவரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்!'' என்ற முழக்கத்தின் கீழ் நெல்லை கங்கைகொண்டானில் மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் இணைந்து நடத்திய போராட்டம், ஒரு மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது.
மறுபுறம், நெல்லை கங்கை கொண்டானில் கோக் ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டு, ""மாஸா ஸ்பிரைட்'' எனும் குளிர்பானம் தயாரிக்கப்படுகிறது. கோக் ஆலையில் உள்ளூர்காரர்கள் எவருக்கும் வேலை தரப்படவில்லை. சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த ஒரு சிலருக்கே, தற்காலிக வேலை கிடைத்துள்ளது. அதுவும் பாட்டில் கழுவுவது, புல் வெட்டுவது, கழிவுகளை அள்ளுவது முதலான வேலைகள்தான். இந்த வேலையைச் செய்பவர்கள் கைநாட்டுப் பேர்வழிகள் அல்ல; படித்த பட்டதாரிகள்! இந்தக் கேவலத்தைத்தான் கோக் விசுவாசிகள், வேலை வாய்ப்பு பெருகும் என்று மாய்மாலம் செய்கின்றனர்.
கோக் எதிர்ப்பு சவடால் அடித்துவந்த போலி கம்யூனிஸ்டுகளும் தன்னார்வக் குழுக்களும் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு அடங்கிப் போய்விட்ட நிலையில், புரட்சிகர அமைப்புகள் மட்டுமே தொடர்ந்து மக்கள் மத்தியில் பணியாற்றி வருகின்றன. கிராமப்புறங்களில் இந்தப் பணி நடைபெற்று வருகின்ற அதேவேளையில், மாநிலம் தழுவிய அளவில் கோக் எதிர்ப்பாளர்களை ஓரணியில் திரட்டும் நோக்கத்துடன் இப்புரட்சிகர அமைப்புகளின் ஆதரவுடன் ""கோக் எதிர்ப்புப் போராட்டக் குழு'' உருவாக்கப்பட்டுள்ளது.
நெல்லை வழக்குரைஞர் சங்கத் தலைவர் திரு. தங்கசாமி அவர்களைத் தலைவராகவும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர் முகுந்தனை ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நெல்லை மாவட்டத் தலைவர் திரு. க.முருகேசன், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் தோழர் இராமச்சந்திரன், மானூர் ஒன்றிய கவுன்சிலர் திரு. சி.எஸ்.மணி மற்றும் கோக் எதிர்ப்பு கிராமக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் தோழர் கல்யாணசுந்தரம் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். மாநிலம் முழுவதுமுள்ள கோக் எதிர்ப்பாளர்களையும் பல்வேறு ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டத்தை விரிவாக்க இக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
கோக் ஆலையிலிருந்து கழிவுநீர் எவ்வாறு வெளியேற்றப்படுகிறது. அதில் என்னென்ன வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றால் எவ்வகையான பாதிப்புகள் ஏற்படும், தாமிரவருணி ஆற்றுநீர் எவ்வளவு லிட்டர் கோக்கினால் உறிஞ்சப்படுகிறது. இவற்றை யார் கண்காணிக்கிறார்கள் முதலான விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்; மேலும், கோக் ஆலையின் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிக்க சுற்றுப்புற கிராமத் தலைவர்கள், அறிஞர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூகஆர்வலர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுவை நிறுவ வேண்டும் என்றும் பத்திரிகையா ளர் சந்திப்பில் இப்போராட்டக் குழுவினர் கோரியுள்ளனர்.
கேவலம் ஒரு அமெரிக்க சோடா கம்பெனிக்காக இறையாண்மையை இழக்கின்ற மாநில அரசையும் நெல்லை மாவட்ட நிர்வாகத்தையும் கோக் அடியாளாகச் செயல்படும் போலீசையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, தாமிரவருணியைப் பாதுகாக்கவும் கோக்கை விரட்டியடிக்க நெல்லை மக்களை அணிதிரட்டிப் போராடவும் கோக் எதிர்ப்புப் போராட்டக்குழு உறுதியேற்று, அடுத்த கட்ட போராட்டங்களுக்கு ஆயத்தமாகி வருகிறது.
பு.ஜ. செய்தியாளர்கள்
கடந்த ஆண்டு செப்.12 அன்று இப்புரட்சிகர அமைப்புகள் அமெரிக்க கோக்கிற்கு எதிராக நடத்திய பேரணி, ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் பிரச்சாரம், அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் நெல்லைதாழையூத்தில் கோக் எதிர்ப்பு தண்ணீர் தனியார்மய எதிர்ப்பு கருத்தரங்கம் மற்றும் ஓவியக் கண்காட்சியையும் நடத்தின. அதன்பிறகு கடந்த ஏப்ரல் 12, 13, 14 தேதிகளில் மூன்று உட்புற கிராமங்களில் இத்தகைய கருத்தரங்குகள் நடத்தத் தீர்மானித்து ஏற்பாடுகள் தொடங்கியதும், அனைவரையும் கைது செய்யப் போவதாக கோக்கின் அடியாளாகச் செயல்படும் நெல்லை போலீசு அச்சுறுத்தியது. அதையும் மீறி 250 பெண்கள் உள்ளிட்ட 400 பேர் 12ஆம் தேதியன்று நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று ஆதரித்தனர். பீதியடைந்த போலீசு ஊர் நாட்டமைகளை மிரட்டி, 1314 தேதிகளில் நடைபெறவிருந்த கருத்தரங்குகளைத் தடுத்துள்ளது. ஆனாலும், புரட்சிகர அமைப்புகளின் தொடர்ச்சியான பிரச்சார இயக்கத்தால், கோக் எதிர்ப்புணர்வு மக்களின் நெஞ்சில் ஆழமாக வேரூன்றியுள்ளது.