05_2006.jpg

அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!'' என்று ஒரு குரல், உறுதியான குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஒன்றில்லாவிட்டால், மற்றொரு கட்சிக்கோ, அணிக்கோ ஓட்டுப் போடுவதற்குப் பதில் ஒட்டு மொத்தமாகத் தேர்தல்களையே புறக்கணிக்கக் கோருகிறது. ஏன் இப்படி வித்தியாசமான குரல், தனித்த குரல்? அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை இழந்து, ஆத்திரம் பொங்கி, வெறும் விரக்தியால்? அரசியல் கட்சிகளும் அரசும் கூறுவதைப் போல வேலையற்றவர்களின் வெறும் தீவிரவாத முழக்கமா? இல்லை, ஓட்டுக் கேட்டு வரும் அரசியல் கட்சிக்காரர்களைப் போல, ஏதாவது ஆதாயம் தேட முன்வைக்கப்படும் முழக்கமா?  ""தவறாமல் ஓட்டுப் போடுங்கள்'' என்று அரசு பிரச்சாரம் செய்வதிலாவது ஒரு உள்நோக்கம் இருக்கிறது. ஒருமுறை ஓட்டுப் போட்டு விட்டால், உங்கள் சம்மதத்தோடுதான் இந்த அரசு செயல்படுகிறது என்று எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்து கொள்ளலாம். ""எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்'' என்று அரசியல் கட்சிகள் கேட்பதிலாவது அவற்றுக்கு ஆதாயம் இருக்கிறது.

 எழுப்பப்படும் முழக்கமா

            ஆனால், ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!'' என்ற முழக்கம் ஆழ்ந்த சிந்தனை, அறிவியல்பூர்வமான ஆய்வு அடிப்படையிலான, ஆக்கபூர்வமான அரசியல் முழக்கமாகும். ""போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!'' என்ற அரசியல் முழக்கத்தின் சுருக்கம்தான் ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!'' என்ற அறைகூவல். தேர்தல்கள், தில்லுமுல்லுகளும் முறைகேடுகளும், சந்தர்ப்பவாதங்களும் மோசடிகளும், ஆடம்பர ஆபாசத்தனங்களும் ஊதாரித்தனங்களும் நிறைந்ததாகி விட்டது என்கிற காரணத்துக்காக மட்டும் அவற்றைப் புறக்கணிக்கச் சொல்லவில்லை. தற்போதைய ஆட்சி, அரசமைப்பை ஜனநாயகம் என்று சொல்வதே போலித்தனமானது; தேர்தல்கள் இந்த உண்மையை மூடி மறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கவர்ச்சித் திருவிழாதான். ஜனநாயகம்  மக்களாட்சி என்று கருதக்கூடிய அளவுக்கு ஆட்சிஅரசமைப்பில் மக்களுக்கு ஏதாவது அதிகாரமோ, உரிமையோ, பங்கோ இருக்கிறதா? மனு தரலாம், வழக்குப் போடலாம், அவ்வளவுதான்!

            வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ""பிரதிநிதி''களுக்குத்தான் எந்த அளவுக்கு அதிகாரமும் உரிமையும் இருக்கிறது? உள்ளூராட்சி முதல் சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள்வரை சட்டதிட்டங்களுக்கும் வரவு செலவுகளுக்கும் கைதூக்கி ஆதரவு, மறுப்பு தெரிவிக்கலாம்; முறைகேடுகள் செய்து பொறுக்கித் தின்னலாம். மக்களுக்கு எந்த வகையிலும் கட்டுப்படாத அதிகாரவர்க்கம், போலீசு, நீதிபதிகளுக்குத்தான் எல்லா நிர்வாக அதிகாரங்களும் இருக்கின்றன. இவர்களையும் பண்ணை நில முதலைகள், தரகு அதிகார முதலாளிகள் மற்றும் பன்னாட்டுத் தொழிற்கழகங்கள், உலகவங்கி  உலக வர்த்தகக் கழகம் முதலிய ஏகாதிபத்திய நிறுவனங்கள்தாம் இயக்குகின்றன. நடப்பது இந்த ஆதிக்க  சுரண்டல்காரர்களின் சர்வாதிகாரம்தானே தவிர, உண்மையான ஜனநாயகமோ மக்களாட்சியோ அல்ல.

            மின்னணு இயந்திரத்தின் பொத்தானை அழுத்திவிட்டு, மக்கள் தமது சிந்தனையையும் செயலையும் சிறைப்படுத்திக் கொண்டு, அதிகாரிகள்அரசியல்வாதிகளின் தயவிற்காக காத்திருக்க வேண்டியதில்லை. அவற்றுக்கு மாறாக, ஒரு புதிய உண்மையான மக்கள் ஜனநாயக அரசமைப்பை உருவாக்குவது சாத்தியமானதுதான் என்று பல உலக நாடுகளின் அனுபவங்கள் காட்டியுள்ளன. ஒவ்வொரு கிராமவட்டார அளவிலும் மக்கள் சபைகள் நிறுவப்பட்டு, அக்கிராமவட்டார நிர்வாகிகளைத் தேர்வு செய்வதும், அவர்களே நீதிநிர்வாகம், உடைமைஉரிமை, காவல் பணிகளை மேற்கொள்வதும் அதேபோல் நகர்ப்புறங்களில் பகுதிகள் மற்றும் தொழிலகங்கள் அடிப்படையில் மக்கள் சபைகளும் நிர்வாக அமைப்புகளும் நிறுவிக் கொள்வதும் சாத்தியமே. இவற்றைத்தான் மக்கள் சர்வாதிகார மன்றங்கள்உண்மையான ஜனநாயக அமைப்புகள் என்று கருதமுடியும். இவற்றின் மூலம் உள்ளூர் அளவிலும் இவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட மாநில, மத்திய மன்றங்களும் நிர்வாக அமைப்புகளும் நிறுவிக் கொள்வதும் சாத்தியமே.

            தேர்தல்களைப் புறக்கணித்துவிட்டு வேறு என்ன செய்வது? இன்றைய ஆட்சி, அரசமைப்பு இல்லாமல் நிர்வாகம் எப்படி நடக்கும் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். வெறுமனே தேர்தல்களை புறக்கணிப்பது மட்டுமல்ல, தற்போதைய ஆட்சிஅரசமைப்பு, நிர்வாகம் அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டுதான் மக்கள் சர்வாதிகார அரசமைப்புகளை நிறுவ முடியும். இதுவும் ஒரு மாபெரும் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலமாக சாத்தியமாகும். இந்த மக்கள் சர்வாதிகார அரசமைப்பை உடனடியாக நிறுவ முடியாது என்பது உண்மைதான். என்றாலும், அதற்கான கருத்துருவாக்கம் முதற்பணி என்கிற முறையில்தான் தேர்தலைப் புறக்கணிக்கும் இயக்கத்தினூடாக மக்களை அணிதிரட்ட வேண்டியிருக்கிறது. இதற்காகத்தான் ""போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!'' என்ற முழக்கம், இயக்கம் முன்வைக்கப்படுகிறது.