05_2006.jpg

மக்களுக்காகப் போராடும் ஒரே கட்சி, உழைக்கும் மக்களின் கட்சி என்றெல்லாம் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு, ""அரசியல சாக்கடை சாக்கடைன்னு சொல்லிகிட்டு இருந்தா, அப்புறம் யார்தான் அத அள்றது? நாமதான் தோழர்களே தூர் வாரணும்! எனவே கம்யூனிஸ்டு கட்சிக்கு வாக்களிக்க வாருங்கள்!'' என்று ""ஆனந்த விகடன்'' இதழில் அழைப்பு விடுத்திருந்தார்.

 

            இந்த ஓட்டுப் பொறுக்கித் திருவிழாவில் அடிதடி  வெட்டு குத்து  வேட்டி கிழிப்பு, கொலை மிரட்டல், குண்டு வீச்சு, கட்சித் தாவல், ஹீரோ  ஹீரோயின்  காமெடியன்களின் கொள்கை விளக்கப் பிரச்சாரம் முதலானவற்றுக்கு மத்தியில், சாக்கடையைத் தூர்வாரி ஓட்டைப் பொறுக்க ""காம்ரேடுகள்'' என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தோம். முடைநாற்றம் தாங்க முடியாமல் நமது மூக்கே நம்மைத் திட்டுகிற அளவுக்குக் குமட்டி விட்டது. சாக்கடையில் புரண்டு எழுந்து ""காம்ரேடுகள்'' செய்து கொண்டிருக்கும் "புரட்சி' நம்மைப் புல்லரிக்கச் செய்து விட்டது.

            சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளரான வரதராஜன், தனது பெயர் மட்டும் வரத"ராஜா'வாக இருந்தால் போதாது; தோற்றமும் ராஜாவைப் போல் இருக்குமாறு செய்ய வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு ஆணையிட்டுள்ளார் போலும். திண்டுக்கல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் அசத்திவிட்டார்கள். மன்னர் பரம்பரையில் வந்த வாரிசு போல ஆளுயர மலர் மாலை, மலர்கிரீடம், கிரீடத்தின் உச்சியில் கட்சியின் சின்னம் சூட்டிக் கொண்டு பல்லைக் காட்டிக் கொண்டு அவர் தரிசனம் தந்துள்ளார். கையிலே செங்கோல் மட்டும் தான் பாக்கி! அதையும் அடுத்த கூட்டங்களில் ஏந்தி நிற்பார் என்று எதிர்பார்க்கலாம்.

            உலகில் எந்த நாட்டிலும் போலி சோசலிஸ்டுகள் கூட இப்படி கிரீடம் தரித்துக் கொண்டு கொண்டாடி மகிழ்வதில்லை. இதர ஓட்டுப் பொறுக்கிகளும், சங்கராச்சாரிகள்  ஆதீனங்களும், சாதி  மதவெறியர்களும், ""தாதா''க்களும் கருப்புப் பண பேர்வழிகளும்தான் இப்படி ஆளுயர மலர் மாலை, கிரீடம், பொன்னாடை, வீரவாள் அணிந்து கொண்டு, துதிபாதிகளை வைத்து பாராட்டு விழா நடத்தி வக்கிரமாக சுய இன்பம் காண்கிறார்கள் என்றால், அவர்களுக்கு எங்கள் கட்சி சற்றும் சளைத்ததல்ல என்று மார் தட்டுகிறார் சி.பி.எம். "ராஜா'வான வரதராஜன்.

            மாநிலச் செயலாளரே இப்படியென்றால், மத்தியக் கமிட்டி உறுப்பினர் இன்னும் ஒருபடி முன்னேறியிருக்க வேண்டும் அல்லவா? எனவேதான் திருவாளர் சீத்தாராம் யெச்சூரி, தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் ரூபாய் நோட்டு மாலை அணிந்து கொண்டு, தைரியமாக போட்டோவுக்கு ""போஸ்''  கொடுத்து அசத்துகிறார். இப்போதைக்கு ரூபாய் நோட்டு மாலை; எதிர்காலத்தில் டாலர் நோட்டு மாலையாக அது மாறலாம். ரூபாயைவிட டாலருக்குத்தான் மதிப்பு அதிகம் என்பது ""காம்ரேடு''களுக்குத் தெரியாதா என்ன?

 

            மலர்கிரீடம், ரூபாய் நோட்டு மாலை... இன்னும் என்ன பாக்கியிருக்கிறது? பரிவட்டம், பூர்ணகும்ப மரியாதை, கற்பூரம் கொளுத்தி ஆரத்தி, நல்ல நேரத்தில் வேட்பு மனு தாக்கல்... அவற்றையும் செய்து விட்டால் சி.பி.எம். கட்சி உண்மையான "மக்கள்' கட்சியாகி விடும். ஏற்கெனவே 2005இல் நடந்த கேரள உள்ளாட்சித் தேர்தலின் போது சி.பி.எம். வேட்பாளர்கள் வாஸ்து சாஸ்த்திர முறைப்படி தமது பெயர்ராசிக்கு ஏற்ற வண்ணத்தில் சிவகாசியில் சுவரொட்டிகளை அச்சிட்டு "புரட்சி' செய்துள்ளார்கள். அதிருஷ்டம் கை கொடுக்கும்போது, அதையும் பயன்படுத்திக் கொள்ள தமிழக ""காம்ரேடுகள்'' வாஸ்து போஸ்டர்கள் அச்சிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

            இந்தக் கூத்துக்கள் இருந்தால் மட்டும் போதுமா? கோஷ்டிச் சண்டைகள் இருந்தால்தானே ஓட்டுக் கட்சி அரசியல் களை கட்டும்! அதிலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று திருப்பரங்குன்றம் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் வெங்கடேசனுக்கு எதிராக அதிருப்தி கோஷ்டியினர் கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள். ""கட்டுப்பாடு மிக்க கட்சி என்கிறீர்களே, இங்கேயும் கோஷ்டி சண்டைதானா?'' என்று நாம் முகத்தைச் சுளித்தால், ""இது கோஷ்டி சண்டை அல்ல தோழரே! உட்கட்சி ஜனநாயகத்துக்கான உரிமைக் குரல்'' என்று சித்தாந்த விளக்கமளிக்கிறார்கள் இப்போலி கம்யூனிஸ்டுகள்.

            ""காம்ரேடு''களின் ஜனநாயகத்துக்கான உரிமைக் குரல் மே.வங்கத்தில் எப்படி இருக்கிறது என்று எட்டிப் பார்த்தோம். உரிமைக்காகப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் சி.பி.எம். கட்சி, அங்கே ஜனநாயக உரிமையைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் திணறும் பரிதாபக் காட்சி, கோமாளிக் கூத்தாக முடிந்துள்ளது.

            தேர்தல் ஆணையம், எந்தக் கட்சியும் சுவரில் எழுதிப் பிரச்சாரம் செய்யக் கூடாது, டிஜிட்டல் பேனர் வைக்கக் கூடாது, இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி வைத்து பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சர்வாதிகாரமாக உத்தரவு போடுகிறது. எல்லா ஓட்டுக் கட்சிகளும் இச்சர்வாதிகாரத்தை எதிர்க்காமல் மேல்வாயையும் கீழ்வாயையும் மூடிக் கொண்டு கிடக்கின்றன. மற்ற கட்சிகள்தான் பூர்ஷ்வா கட்சிகள்; ஜனநாயகத்துக்காகக் குரலெழுப்பும் சி.பி.எம். கட்சி, தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடலாமே?

 

            "அப்படிச் செய்தால் மக்களிடம் கலக உணர்வு பிறந்துவிடும்; அப்புறம் இந்த மோசடி ஜனநாயகத் தேர்தல் முறையையே மக்கள் எதிர்க்கக் கிளம்பிவிடுவார்கள். அப்புறம் நம்ம பொழப்பும் கந்தலாகிவிடும் தோழரே!' என்று தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரத்தைச் சகித்துக் கொண்டு அடங்கிப் போனார்கள். இந்த மோசடி ஜனநாயகத்தையே உலகின் மாபெரும் ஜனநாயகம் என்று இப்போலி கம்யூனிஸ்டுகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது தேர்தல் ஆணையமோ, தனது வானளாவிய அதிகாரத்தைக் கொண்டு, சி.பி.எம். அலுவலகத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்று ""ரெய்டு'' நடத்தி அடாவடித்தனம் செய்கிறது. ஆனாலும் இந்த "ஜனநாயகக் காவலர்கள்' தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரத்தையோ, அடாவடி  அத்துமீறல்களையோ எதிர்த்துப் போராட முன்வரவில்லை. மாறாக, தேர்தல் ஆணையத்துக்கு இப்படிச் செய்ய அதிகாரம் உண்டா, இல்லையா என்று மயிர் பிளக்கும் வாதங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.

            ""ஏன் இப்படி?'' என்று கேட்டால், ""இதெல்லாம் ஒரு டேக்டிக்ஸ் (தந்திரம்) தோழரே! நாங்கள் அமைதியாக இருப்பதாகத் தோன்றினாலும் வேறு வழியில் போராடி தேர்தல் ஆணையத்தின் முகத்தில் கரிபூசி விட்டோம் தோழரே!'' என்கிறார்கள் சி.பி.எம். கட்சிப் பிரமுகர்கள். அப்படி என்ன போராட்டம் நடத்தியுள்ளார் என்று பார்த்தால், தமது கோழைத்தனம் அம்பலப்படாமல் இருக்க, தாங்கள் ஏதோ தந்திரமாகப் போராடுவதாகக் காட்டிக் கொண்டு ஊர் முழுக்க இருக்கிற ஆடு, மாடு, கோழி, நாய் என்று ஒரு பிராணியையும் விடாமல் விரட்டிப் பிடித்து தமது தேர்தல் சின்னத்தை வரைந்து தள்ளிவிட்டார்கள். ""பார்த்தீங்கள, இப்ப தேர்தல் கமிஷனால என்ன பண்ண முடி யும்?'' என்று பெரு மிதம்   கொள்கிறார்கள்.

            கட்சித் தொண்டர்களோ தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் தமது தலைமுடியை கட்சி சின்னம் கொண்டதாக ""கிராப்'' வெட்டிக் கொண்டு கால்நடையாகத் திரிகிறார்கள். பாமர மக்களிடம் கட்சியின் தேர்தல் சின்னத்தைப் பிரபலப்படுத்தும் நூதனப் பிரச்சாரம் என்று கட்சித் தலைவர்கள் இதை வரவேற்று ஆதரிக்கிறார்கள். ஆனாலும் எந்த சி.பி.எம். தலைவரும் இப்படி ""கிராப்'' வெட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை. தொண்டர்களுக்கு மட்டும்தான் இப்படி கோமாளித்தனமாகத் திரிவதற்கு கட்சியில் "சுதந்திரம்' வழங்கப்பட்டுள்ளது.

            மக்களின் கரங்களில் அதிகாரத்தைக் குவிக்கும் ஜனநாயகத்துக்காக, நேபாளத்தில் கம்யூனிஸ்டுகள் மக்களைத் திரட்டி வீதிகளிலே போராடுகிறார்கள். மே.வங்கத்திலோ ஓட்டுச் சீட்டு ஜனநாயகத்துக்காக சி.பி.எம். கட்சியினர் ""கிராப்'' வெட்டிக் கொண்டு கோமாளித்தனமாகத் திரிகிறார்கள். இதிலே யார் கம்யூனிஸ்டுகள் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

            இதர ஓட்டுக் கட்சிகளைப் போலவே பணநோட்டு மாலை, மலர்கிரீடம், கோஷ்டிச் சண்டை, கட்சிச் சின்னம் கொண்ட ""கிராப்'', தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரத்துப் பணிந்துபோகும் கோழைத்தனம் என எல்லாவற்றிலும் ஒன்பது பொருத்தமுள்ள இப்போலி கம்யூனிஸ்டுகளுக்கும் மற்ற ஓட்டுப் பொறுக்கி பிழைப்புவாதிகளுக்கும் அப்படி என்னதான் வேறுபாடு இருக்கிறது  செங்கொடியைத் தவிர?

 

மு பாலன்