Language Selection

06_2006.jpg

இந்திய நாட்டைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, மே 22ஆம் தேதி வழக்கம் போலவே விடிந்து, வழக்கம் போலவே முடிந்துபோன சாதாரண நாள். ஆனால், பங்குச் சந்தை தரகர்களோ அந்த நாளை, ""கருப்பு திங்கட்கிழமை'' என அழைக்கிறார்கள். அன்றுதான், வீங்கிப் போய்க் கொண்டே இருந்த மும்பய் பங்குச் சந்தை, 1,100 புள்ளிகள் சரிந்து விழுந்தது. பங்குச் சந்தை சூதாட்டத்தின் தலைநகராக விளங்கும் அகமதாபாத்தில் திவாலான பங்குச் சந்தை வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்வதைத்

 தடுக்க, அந்நகரிலுள்ள கங்காரியா ஏரியைச் சுற்றிலும் போலீசாரைக் குவிக்க வேண்டிய அளவிற்கு, இந்தச் சரிவு கடுமையாக இருந்தது. இந்தச் சரிவினால், முதலீட்டாளர்களுக்கு ஏறக்குறைய ஐந்து லட்சம் கோடி ரூபாய் நட்டமேற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

            வழக்கம் போலவே, பெரிய முதலைகள் யாரும் இந்தச் சரிவினால் போண்டியாகிவிடவில்லை. நேரடியாகவும், பரஸ்பர நிதி நிறுவனங்களின் மூலமும் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த நடுத்தர வர்க்கப் பேராசைக்காரர்களின் தலையில் தான் இந்த இடி இறங்கியது.

 

            மும்பய் பங்குச் சந்தையின் வீக்கத்திற்கு எந்த அந்நிய நிதி நிறுவனங்கள் காரணமாக இருந்தனவோ, அவையேதான் இந்தச் சரிவுக்கும் காரணமாக இருந்தன. அமெரிக்க நாட்டில் வங்கிகளின் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டதையடுத்து, இந்த நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் போட்டிருந்த முதலீட்டில் கணிசமான தொகையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு பறந்துவிட்டன.

 

            இது ஒருபுற மிருக்க, பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அந்நிய நிதி நிறுவனங்கள் தங்களின் இலாபத்தில் வெறும் 10 சதவீதத்தைத்தான் வரியாக கட்டி வருகின்றன. சிறு முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகையை (இலாபத்தின் மீது 10 சதவீத வரி) அந்நிய நிதி நிறுவனங்களும் அனுபவித்து வருவதை ஏற்றுக் கொள்ளாத மைய அரசின் நேரடி வரி விதிப்பு வாரியம், ""சிறு முதலீட்டாளர்கள் யார்?'' என்பதைக் கண்டுபிடிப்பதற்குப் புதிய வரையறைகளைத் தயாரித்து, அதனைச் சுற்றறிக்கையாக அனுப்பியிருக்கிறது.

 

            இந்த வரையறைகளின்படி அந்நிய நிதி நிறுவனங்கள் தினசரி வர்த்தகர்களாகக் கருதப்படுவதோடு, அந்நிறுவனங்கள் 30 சதவீதம் அளவிற்கு வரி கட்ட வேண்டியிருக்கும் என அந்தச் சுற்றறிக்கை சூசகமாகக் குறிப்பிட்டுள்ளதாம். இந்தச் சுற்றறிக்கைக்கு எதிர்வினையாக அந்நிய நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பங்குகளை விற்கத் தொடங்கியதையடுத்துதான் இந்தச் சரிவு ஏற்பட்டதாகப் பங்குச் சந்தை தரகர்களே கூறுகின்றனர்.

 

            இந்தச் சரிவை ஏற்படுத்திய அந்நிய நிதி நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நிதியமைச்சர் ப.சிதம்பரமோ, ""நேரடி வரி விதிப்பு வாரியத்தின் சுற்றறிக்கைக்கும், அந்நிய நிதி நிறுவனங்களுக்கும் சம்பந்தம் கிடையாது'' என அறிக்கைவிட்டு, இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்த அந்நிய நிதி நிறுவனங்களின் காலைப் பிடித்தார்.

 

            அந்நிய நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பங்குகளை விற்றதை, வெறும் வர்த்தக நடவடிக்கையாகப் பார்க்க முடியாது. அந்நிய நிதி நிறுவனங்களின் விருப்பத்திற்கு எதிராக எதையும் செய்யக் கூடாது என இந்திய அரசுக்கு அந்நிறுவனங்கள் வெளிப்படையாக விடுத்துள்ள மிரட்டல் இது. அன்று ஒரு கிழக்கிந்திய கம்பெனியின் மிரட்டலுக்கு அடிபணிந்து கிடந்த சுதேசி மன்னர்களைப் போல, இன்று அந்நிய நிதி நிறுவனங்களின் மிரட்டலுக்கு இந்த "சுதேசி' ஆட்சியாளர்கள் அடிபணிந்து கிடக்கிறார்கள்.

 

            மேலும், இந்த அந்நிய நிதி நிறுவனங்களின் விருப்பப்படி, ""முழு முதலீட்டு நாணய மாற்று'' என்ற நிதி சீர்திருத்தத்தை அமல்படுத்துவதற்கு மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் துடியாய்த் துடிக்கிறார்கள். இந்தச் சீர்திருத்தம் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்திருந்தால், இந்தப் பங்குச் சந்தை சரிவையடுத்து, இந்திய நாடே போண்டியாகக் கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கும். இந்த நிதிச் சீர்திருத்தத்தைப் பயன்படுத்திதான், 1997இல் தென் கிழக்காசி நாடுகளை, அந்நிய நிதி நிறுவனங்கள் போண்டியாக்கின. இப்பொழுது தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு தப்பியுள்ளது.

 

            மேல்தட்டைச் சேர்ந்த வெறும் 2 சதவீத இந்தியர்கள்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றனர். இவர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை, ஏதோ நாடே மூழ்கிவிட்டது போல, முதலாளித்துவ பத்திரிகைகள் துக்கம் தொண்டையை அடைக்க எழுதிக் குவித்தன. மும்பய் பங்குச் சந்தை சரிவதற்கு பன்னிரெண்டு நாட்களுக்கு முன்னதாக, மே 9ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் மட்டும், 10 பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள். இதனை எந்த "தேசிய' பத்திரிகைகளிலாவது நீங்கள் படித்ததாக நினைவு கூற முடியுமா?

 

            மைய அரசின் உணவுத்துறை அமைச்சர் சரத்பவார், 1998க்கும் 2003க்கும் இடைபட்ட ஐந்து ஆண்டுகளில் மட்டும், நாடெங்கிலும் ஒரு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். பங்குச் சந்தை சரிவைப் பற்றி, ப.சிதம்பரத்தைக் கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்ட பத்திரிகையாளர்களுக்கு, இந்தத் தற்கொலைச் சாவுகள் தீண்டத்தகாதவை ஆகிவிட்டன.

 

            மும்பய் பங்குச் சந்தை அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பகுதியில் மட்டும், கடந்த ஒரே ஆண்டிற்குள் (ஜூன் 2005 தொடங்கி மே 2006க்குள்) 520 பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அப்பகுதியில் கடந்த மூன்று மாதத்திற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 220. தாராளமயத்தின் பின், விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் பற்றிய புள்ளி விவரத்தில் சரிவே ஏற்படவில்லை.

 

            மும்பய் பங்குச் சந்தையின் சரிவைத் தடுத்து நிறுத்த, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கஜானாவைத் திறந்து வைத்திருப்பதாக அறிவித்தார், ப.சிதம்பரம். தங்கள் இலாபத்தின் மீது கூடுதல் வரி விதிக்கக் கூடாது என்ற பன்னாட்டு நிறுவனங்களின் மிரட்டலுக்கு, இந்திய அரசு உடனடியாக அடிபணிந்தது.

 

            ஆனால், சாவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ள இந்திய விவசாயிகள், ""தங்களுக்குக் குறைந்த வட்டியில் அரசாங்கம் கடன் கொடுக்க வேண்டும்; விதைகள், உரம், பூச்சி மருந்து ஆகிய உள்ளீடு பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும்; விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்'' எனக் கடந்த பதினைந்து ஆண்டுகளாகக் கோரி வருவது மட்டும் இந்தச் ""செவிடர்களின்'' காதில் விழவில்லை.

 

            விதர்பா பகுதியைச் சேர்ந்த 22 இலட்சம் விவசாயிகளுக்கு வங்கிகள், கூட்டுறவு சொசைட்டிகள் மூலம் கடன்தரப் போவதாக கடந்த ஆண்டு மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. இந்த ஆண்டோ, விதர்பா பகுதியைச் சேர்ந்த 12 இலட்சம் விவசாயிகளுள் 8 இலட்சம் விவசாயிகளுக்கு அரசாங்கக் கடன் தரப்போவதாக அறிவித்திருக்கிறது. மீதமுள்ள 4 இலட்சம் விவசாயிகள் யாரிடம் போய் கடன் வாங்குவது என்பது ஒருபுறமிருக்க, அரசாங்கமே 10 இலட்சம் பருத்தி விவசாயிகளை மாயமாய் மறையச் செய்துவிட்டது. அரசாங்கம் அறிவிக்கும் கடன் திட்டங்களே, பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கந்துவட்டிக் கும்பலிடம் மாட்டி விடுகிறது என்பதே உண்மை.

 

            விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவிடும் கந்துவட்டியை ஒழிக்க, மகாராஷ்டிரா அரசு புதிய சட்டமொன்றைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டம் உள்ளூர் அளவில் கடன் கொடுக்கும் சிறிய லேவாதேவிக்காரர்களை வளைத்துப் பிடித்ததே தவிர, பெரிய முதலைகளைக் கண்டு கொள்ளவேயில்லை. அதேசமயம், பருத்தி விவசாயிகளுக்கு அரசாங்கக் கடனும் கிடைக்காமல் போகவே, அவர்கள் புதிய வகையான கந்துவட்டிக் கும்பலிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள்.

 

            பருத்தி விவசாயிகளின் வீடு தேடி வந்து கடன் கொடுக்கும் இக்கந்து வட்டிக் கும்பலை, விவசாயிகள் ""அண்ணா'' என அன்போடு அழைக்கிறார்கள். ஆனால், இந்த ""அண்ணன்மார்கள்'' கடனை வசூலிப்பதில் தங்கள் ""தம்பிகளிடம்'' எள்ளளவும் கருணை காட்டுவதில்லை. பருத்தி விதைப்பு தொடங்கும் ஜூன் மாதத்தில், இந்த அண்ணன்களிடம்

 

ரூ. 10,000/ கடன் வாங்கினால், அடுத்த ஆறு மாதத்திற்குள் ரூ. 15,000/ திருப்பித் தரவேண்டும். இல்லையென்றால், இந்த அண்ணன்மார்கள், விவசாயிகளின் நிலத்தையோ, உழவு மாடுகளையோ, வீட்டையோ  தங்க ளுக்குப் பிடித்திருப்பது எதையோ, அதை விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்துவிடுவார்கள்.

 

            இப்படி ஒரு கடன்காரக் கும்பலிடமிருந்து தப்பிக்க இன்னொரு கடன்கார கும்பலிடம் மாட்டிக் கொண்டு சாக வேண்டிய நிலைக்குப் போய்விட்டது, விவசாயிகளின் வாழ்க்கை. கடனில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது என்ற பெயரில், அவர்களைப் பிச்சைக்காரர்களைப் போல அவமானப்படுத்துகிறது, மகாராஷ்டிர மாநில அரசு. கோல்ஜாரி கிராமத்தைச் சேர்ந்த துளசிராம் சவான் என்ற விவசாயிக்குக் கிடைத்த நிவாரணம் 78 ரூபாய்தான். இந்தக் கிராமத்தில் வெறும் ஐந்து ரூபாயை நிவாரணமாகப் பெற்ற விவசாயிகள் கூட இருக்கிறார்கள் என்கிறார், அவர். இந்த "நிவாரணத்தை'க் கூட அரசாங்கம் தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுக்கவில்லை. விதர்பா விவசாயிகளிடமிருந்து பருத்தியைக் கொள்முதல் செய்தபொழுது பிடித்துக் கொண்ட பணத்தில் இருந்து கொடுத்துவிட்டு, தன்னைத் தர்மவானாகக் காட்டிக் கொள்கிறது, ஆளும் கும்பல்.

 

            விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த அற்ப நிவாரணத்தோடு, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் அரசாங்கம் கொடுக்கும் வரிச் சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். அப்பொழுதுதான் இந்திய ஜனநாயகத்தின் உண்மை முகத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.

 

            பங்குச் சந்தை, தங்க நாற்கரணச் சாலை, மேம்பாலங்கள், தகவல்  தொழில் நுட்ப பூங்காங்கள் ஆகியவற்றின் மினுமினுப்பில் விவசாயிகளின் துயரம் நிறைந்த வாழ்க்கை மூடிமறைக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் கடன் வாங்கி, அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் விவசாயிகளின் துயரம், அவர்களது சொந்தத் துயரம் போலவும்; மேட்டுக்குடி  பங்குச் சந்தை சூதாட்டக்காரர்களுக்கு ஏற்படும் நட்டம் தேசியத் துயரம் போலவும் சித்தரிக்கப்படுவதைவிட, மோசடித்தனம் வேறெதுவும் இருக்க முடியுமா?

 

மு குப்பன்