மே நாள் அரசியல் ஆர்ப்பாட்ட நாள் என்பதை மறைத்து, கோலாகலத் திருவிழாவாக ஆண்டுதோறும் ஓட்டுப் பொறுக்கிகள் கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டு தேர்தல் திருவிழா காரணமாக அந்த மே நாள் கொண்டாட்டத்தைக் கூட புறக்கணித்து விட்டனர். இந்நிலையில் ""தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் பாசிச கருப்புச் சட்டங்களை முறியடிப்போம்! தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்துவோம்! உலக மேலாதிக்கப் போர்வெறி பிடித்த அமெரிக்க மேல்நிலை வல்லரசைத் தகர்த்தெறிவோம்!'' என்ற
மைய முழக்கங்களுடன் தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் மே நாள் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டங்கள் மூலம் புரட்சிகர அரசியலை மக்களிடம் பிரச்சாரம் செய்தன.
ஓட்டுப் பொறுக்கிகளின் தேர்தல் திருவிழாவைக் காட்டி மே நாள் ஊர்வலம் நடத்தக் கூட அனுமதி மறுத்து பல பகுதிகளில் போலீசு அடாவடித்தனம் செய்தது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று பல பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்து திமிர்த்தனமாக நடந்து கொண்டது. இந்த உரிமை பறிப்புக்கு எதிராக விடாப்பிடியாகப் போராடி வாய்ப்புள்ள இடங்களில் மட்டுமே இப்புரட்சிகர அமைப்புகள் மே நாள் நிகழ்ச்சிகளை நடத்தின.
தஞ்சையில் தோழர் இராவணன் தலைமையில் சிவகங்கை பூங்காவிலிருந்து செங்கொடிகள் விண்ணில் உயர எழுச்சிமிகு முழக்கங்களுடன் புறப்பட்ட ஊர்வலம் பனகல் கட்டிடத்தின் அருகே முடிவடைந்தது. அங்கு தோழர் பரமானந்தம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மறுகாலனியாக்கத்தை வீழ்த்த புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு போராட வேண்டிய அவசியத்தை விளக்கி முன்னணியாளர்கள் சிறப்புரையாற்றினர்.
சென்னையில், நகருக்குள் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், செங்கற்சூளை அரிசி ஆலைத் தொழிலாளர்கள் நிறைந்த புறநகரான செங்குன்றத்தில் பு.ஜ.தொ.மு. தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் ஊர்வலமும், பேருந்து நிலையம் அருகே தெருமுனைக் கூட்டமும் நடந்தது. உழைக்கும் மக்கள் ஆர்வத்தோடு திரண்ட இக்கூட்டத்தில் தோழர் தங்கராசு மற்றும் தொழிற்சங்க முன்னணியாளர்கள் சிறப்புரையாற்றினர்.
திருச்சியில், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கத்தின் தோழர்கள் மே நாளன்று காலை முதலே ஒவ்வொரு ஆட்டோ நிறுத்தத்திலும் செங்கொடி ஏற்றி முழக்கமிட்டு தெருமுனைக் கூட்டங்களை நடத்தினர். ஒவ்வொரு நிறுத்தத்திலிருந்தும் முழக்க அட்டைகள் செங்கொடிகளுடன் ஆட்டோக்கள் ஊர்வலமாக அணிவகுத்து வந்த காட்சியும் உணர்வுபூர்வமாக நடந்த தெருமுனைக் கூட்டங்களும் உழைக்கும் மக்களை ஈர்ப்பதாக அமைந்தது. அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் முன்னணியாளர்களும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இராசுவும் சிறப்புரையாற்றினர்.
மதுரையில், மே நாள் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஒத்தகடை அருகில் பு.மா.இ.மு. தோழர் இராமலிங்கம் தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர், அன்று மாலை அதே பகுதியில் நடந்த தேர்தல் புறக்கணிப்பு விளக்கப் பொதுக்கூட்டத்தில் மறுகாலனியாக்கத்தின் கீழ் தொழிலாளர் உரிமை பறிபோவதைப் பற்றியும் புரட்சிக்கு அணிதிரள வேண்டிய அவசியத்தை விளக்கியும் தோழர்கள் காளியப்பன், சிவகாமு ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதன்பிறகு நடைபெற்ற ம.க.இ.க. மையக் கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி, போராட்ட உணர்வுக்குப் புது ரத்தம் பாய்ச்சியது.
கடலூரில், போலி கம்யூனிஸ்டுகள் மே நாளன்று கொடியேற்றுவதைக் கூட பறக்கணித்துவிட்டு ஓட்டுப் பொறுக்கிக் கொண்டிருந்தபோது, கட்டிடத் தொழிலாளிகள் கூலித் தொழிலாளிகள் நிறைந்த கருமாரப்பேட்டை பகுதியில் பு.மா.இ.மு. தோழர்கள் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி கொடியேற்றியதோடு அந்நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக தெருமுனைக் கூட்டங்களை நடத்தி புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்தனர்.
கோவையில், மே நாள் ஊர்வலம் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தடையை மீறி பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கான தோழர்கள் செங்கொடி ஏந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் கண்ணப்பன் நகரிலிருந்து கணபதிவேலன் திரையரங்கம் வரை ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தை இடைமறித்து கலைந்து செல்லுமாறு எச்சரித்த போலீசாரிடம், ""மே நாளில் ஊர்வலம் நடத்துவது தொழிலாளர்களின் உரிமை'' என்று வாதிட்டு உறுதி குலையாமல் ஊர்வலமாகச் சென்ற தோழர்கள், ஊர்வலத்தின் நிறைவாக ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். தடையை மீறி நடந்த இந்த எழுச்சிமிகு ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் பகுதிவாழ் தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
பு.ஜ. செய்தியாளர்கள்